சுற்றாடல் அழிப்பு தொடர்பான பல பதிவுகள் அண்மைக்காலமாக வெளிவரும் நிலையில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முன்னொருபோதும் இடம்பெறாத வகையில் சுற்றாடல் அழிக்கப்படுவதாக பொய் வதந்திகள், கட்டுக் கதைகளை சமூகமயப்படுத்தும் நடவடிக்கை கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காடுகளை தீயிட்டு அழிப்பதாகவும் இயற்கையாக காடுகளில் உள்ள மரங்களை வெட்டுவதாகவும் இந்த பொய்யான செய்திகளினால் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் எக்காலத்திலும் இவ்வாறான சுற்றாடல் அழிவுகள் நடைபெறவில்லை எனவும் அரசாங்கம் அவ்வாறன சட்டவிரோத செயல்களில் கண்டும் மௌனம் காப்பதாகவும் குறிப்பிட்டு செய்திகளை பரப்ப முயற்சிக்கப்படுவதாக ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அழிவுகள் தொடர்பாக கூறப்படுகின்ற பொய்யான செய்திகள் விசேடமாக சமூக ஊடகங்களில் மற்றும் ஒரு சில அச்சு ஊடகம், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளிலும் பிரசாரம் செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறாக வெளியிடப்படுகின்ற செய்திகள் பொய்யானவை என்பது தகுந்த ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்படும்போது அவை சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பொய்யான செய்திகளை பரப்புவதாகவும் அவர்களின் கூட்டங்கள் ஊடக அறிக்கைகள் மற்றும் நேர்காணல்களின் போது பொய்யான செய்திகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 'H' வலயத்தின் அனுராதபுரம் – இஹலதலாவ குளத்தை புனர்நிர்மாணம் செய்யும்போது பாரிய காடழிப்பு இடம்பெறுவதாக குற்றஞ்சுமத்தி கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி ஔிபரப்பு செய்யப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment