இலங்கையின் Covid-19 இற்கான பதிலளிப்புக்கு உதவ அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 200 வென்டிலேட்டர்களை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் சுகாதார அமைச்சரிடம் அன்பளிப்புச் செய்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கத்தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு
முக்கியமாக தேவைப்படும் பொருட்களுக்கான ஜனாதிபதி ட்ரம்பின் சலுகை மற்றும் Covid-19 இற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவுதலின் அடிப்படையில் வழங்கப்படும் 200 புத்தம் புதிய அதிநவீன வென்டிலேட்டர்களை (மூச்சுக்காற்றூட்ட கருவி) சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது. இந்த வென்டிலேட்டர்களானது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸினால் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டன.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த வென்டிலேட்டர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. அவை கச்சிதமானவை மற்றும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியவை என்பதுடன், இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இலங்கைக்கு நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும்.
'இலங்கையர்களின் நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் அமெரிக்கா நீண்டகால உறுதிப்பாடொன்றைக் கொண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா இலங்கைக்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சுகாதார உதவிகளை வழங்கியுள்ளது. எமது நீடித்த உதவியானது அமெரிக்க மக்களிடமிருந்தான இன்னுமொரு அன்பளிப்புடன் தொடர்கிறது. அமெரிக்க புத்தாக்கங்கள் மற்றும் தனியார் தொழில்துறையின் சக்தியை பயன்படுத்துவதன் மூலம், Covid-19 இற்கு எதிராக போராடுவதற்கும் உயிர்களை காக்க உதவுவதற்கும் இந்த அதிநவீன வென்டிலேட்டர்களை இலங்கைக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்,' என்று தூதுவர் டெப்லிட்ஸ் தெரிவித்தார்.
Covid-19 தொற்றுப் பரவலினால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான சேவைகளை வழங்கிய இலங்கைக்கான 6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான Covid-19 உதவிக்கு மேலதிகமானதாகவே இந்த வென்டிலேட்டர் அன்பளிப்பு அமைந்துள்ளது. பூரணப்படுத்தல் பயிற்சி மற்றும் பராமரிப்பு உதவியும் இதில் அடங்கும். எதிர்மறையான பொருளாதார தாக்கங்களை மட்டுப்படுத்துவதற்கும் அதேபோல், பதிலளிப்பு மற்றும் தயார்நிலைக்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை ஈடுபடுத்தல், அபாயநிலை தொடர்பாடல்களை நடத்துதல், மற்றும் சுகாதார ஸ்தாபனங்களில் தொற்று நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவுவதற்கும் அமெரிக்க நிதியளிப்பு உதவி வருகிறது.
1956 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதுடன், அனைத்து இலங்கையர்களினதும் வாழ்க்கையை மேம்படுத்த 2 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் விட அதிகமான முதலீடுகளை செய்துள்ளது. பல தசாப்தங்களாக சுகாதாரம் தொடர்பில் உலகின் மிகப்பெரிய இருதரப்பு உதவி வழங்குநராக அமெரிக்கா இருந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க மக்கள் உலகம் முழுவதிலும் சுகாதார உதவியாக 100 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையையும் மனிதாபிமான உதவியாக சுமார் 70 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாராளமனப்பான்மையுடன் நிதியுதவியாக அளித்துள்ளனர்.
முதலீடுகளுக்கான முன்னுரிமை விடயப்பரப்புக்களை அடையாளம் காண்பதற்கு இலங்கை அரசாங்கத்துடனும் ஏனைய பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதன் மூலம் All-of-America அணுகுமுறை ஊடாக உயிர்காப்பு உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது.
No comments:
Post a Comment