நோயில் வீழ்ந்து நீயும்
பாயில் படுத்திருந்தால்
கோவில் தெய்வத்தைக் கூட்டிவந்து காத்திருப்போம்
வாயில் ஒரு வார்த்தை வருவதற்கு முன்னாலே
மாயம் நடந்ததுவோ மையிருட்டுக் கவிந்ததுவோ !
இம்மாதம் 2ம் திகதி காலை மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அமிதா சுந்தரராஜ்ஜின் மட்டக்குளி பார் ம் வீதியிலுள்ள வீட்டிற்குள் நுழைந்த போது அங்கே ஆரம்பத்தில் நிலவிய மௌனத்தை மொழிபெயர்த்திருப்பதாயி ன் இப்படித்தான் எழுதியிருப்பேன்.
அன்றையதினம் கடும் வேகத்தில் வந்த சிறியரக லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்தில் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டிகள் இரண்டின் மீது மோதியதில் மூவர் உயிரிழந்திருந்தனர். அந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான அமிதா சுந்தரராஜ் தனது 33வயதில் கல்வித்துறையிலும் தொழிலும் தொட்டுவிட்ட உயரங்கள் குடும்பத்தை தாண்டி சமூகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பென்பதை அவரது தகைமைகளைப் பார்த்தபோது உணர்ந்துகொள்ளமுடிந்தது.
விபத்து நடந்ததற்கு சில நாட்கள் நடந்த விடயங்களை தந்தை சுந்தரராஜ் பகிர்ந்துகொள்கையில், “ஒகஸ்ட் மாதம் 31ம் திகதி ஹப்புத்தளயில வெரகல கருமாரி அம்மன் எங்கட கோவிலில் திருவிழா ஒன்று இருந்தது அதுக்கு முழுக்குடும்பமும் போயிருந்தோம்.போய் இரண்டு நாள் அங்கே இருந்து பூஜையெல்லாம் செய்து முடித்து விட்டு செப்டெம்பர் முதலாம் திகதி இரவு 7.30க்கு அங்கிருந்து புறப்பட்டு கிட்டத்தட்ட 2ம் திகதி அதிகாலை 1.30 மணி ஆகிட்டு. அன்று காலை முக்கியமான வேலையிருக்கு ஒபிஸுக்கு போகணும் என்று மகள் கேட்டார். அம்மாவும் நானும் சொன்னோம் வேணாம் வேணாம் இன்றைக்கு ரெஸ்ட் எடுத்துப்போட்டு நாளைக்கு போகலாம் என்று கூறினோம். இல்லை கண்டிப்பாக போயே ஆகணும் என்று 8.15 ல இருந்து 8.30 வரைக்கும் Uberருக்காக ரைபண்ணிப்பார்த்தா .ஊபர் கிடைக்காத படியால .பரவாயில அம்மா நான்கொண்டு வந்து உங்கள ட்ரொப் பண்|ணுறன் என்று காரை எடுத்துக்கொண்டு போக என்னக்கொணந்துவிடவேண்டாம் நீங்க டயடாக இருப்பீங்க என்னைக் கொண்டுபோய் ஒரு திரிவீல் ஸ்டாண்டில விடுங்க என்றாக அது வீட்டுக்கு பக்கதிலேயே இருக்கு அங்க கொண்டு போய் இறக்கி விட்டுவிட்டு நான் வந்தேன்.வந்து பத்தே நிமிசத்தில அந்த சம்பவம் நடந்துமுடிந்துவிட்டது. வீட்டில இருந்து கிட்டத்தட்ட 200 மீற்றர்ஸ் கூட கிடையாது அதுக்குல போறத்துக்கு இடையில இந்த சம்பவம் நடந்துவிட்டது. “என்று கண்கலங்கினார் தந்தை .
ஹப்புத்தள பயணத்தை பற்றி அம்மா ஜெயலட்சுமி மேலும் விளக்குகையில், ‘ மகளின் திருமணம் ஜுன் 5ம் திகதி நடைபெறுவதாக இருந்தது. மணமகன் பிரித்தானியாவில் இருப்பதால் கொரோனாவால் வரமுடியாதபடியால் திருமணம் தள்ளிபோய்க்கொண்டே வந்தது. மகளுக்கு விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக பூஜைகளையும் நடத்தியிருதோம் . மாப்பிள்ளையின் அம்மா முன்னின்று இதில் எம்மோடு கலந்துகொண்டிருந்தார்”
மத்திய வங்கியில் நிரந்தர பதவியில் இருந்துகொண்டே வங்கியின் பரிந்துரையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் International Monetary Fund (IMF )வதிவிட பொருளாதார நிபுணராக பணியாற்றியிருந்தார் அமிதா. மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவி பணிப்பாளர் என்ற தரத்தில் இருந்தவர் இவ்வருடம் நவம்பர் மாதத்துடன் IMF ல் இருந்து மத்திய வங்கிக்கே மீண்டும் திரும்ப இருந்துள்ளார். விபத்துசம்பவித்த 2ம் திகதி ல் தனது இடத்திற்கு தகுதியான ஒருவரை நேர்காணல் செய்வதற்கே பயணக்களைப்பையும் மீறி சென்றதாக பெற்றோர்கள் கூறினர்
வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் கா.பொ.த சாதரண தரம் வரை படித்த அமிதா ,உயர்தரத்தை கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் கற்றிருந்தார்.
பாடசாலைக்கல்வியில் அவர் பெற்ற சிறப்பான பெறுபேறுகள் அவருக்கு இந்தியாவில் படிப்பதற்கான புலமைப்பரிசில் கிடைக்க வழிகோலியது. இதன்படி கோயம்புத்தூரிலுள்ளடொக்டர் என்.ஜீ.பி ஆர்ட் அன்ட் சயன்ஸ் கல்லூரியில் கணனி விஞ்ஞானத்துறையில் இளமானிப்பட்டத்தை பூர்த்திசெய்த அமிதாவைப் பற்றி பேசும் போது பிரிவால் ஏற்பட்ட கவலையை மேவி அவரது தந்தை சுப்பையா பிள்ளை சுந்தரராஜ்ஜின் உள்ளம் மகளின் பெருமையால் பீறிட்டது."கல்வியில் எப்போதுமே முதலாவது "என்று சோகத்தின் நடுவிலும் கம்பீரமாகக்கூறினார்.i
அமிதா தனது விரும்பின் படியே மத்திய வங்கிக்கு விண்ணப்பித்து வேலையையும் பெற்றிருந்தார். தொழிலைப் புரிந்துகொண்டே கொழும்பு பல்கலைக்கழகத்தில் Masters in Financial Economics நிதியியல் பொருளாதாரத்தில் முதுமானிப்பட்டத்தைப் பெற்றுள்ளார். அதன்பின்னர் நியுயோர்க்கிலுள்ள உலகின் முதல்நிலை பல்கலைக்கழகங்களில் ஒன்றான Columbia University கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பொதுஜன நிர்வாகத்துறையில் Masters in Public Administration Aமற்றுமொரு முதுமானிப்பட்டத்தையும் பெற்றுள்ளார்.
'நியுயோர்க்கிலபடிப்ப முடித்துவிட்டு இங்கவந்து மூன்று வருடமாக International Monetary Fund வில் ஒரு வதிவிட பொருளாதார நிபுணராக பணியாற்றியவர். 'என அடுக்கிக்கொண்டே போனார் அமிதாவின் அப்பா.
'எங்கட மகள் இவ்வளவு பேரும் புகழும் தேடித்தந்துவிட்டு ஒரு செக்கன்ல போயிட்டா எங்களை விட்டு ' என கண்ணீர் பெருக்கெடுக்க ஜெயலட்சுமி சுந்தரராஜ் மகளின் பெருமையைப் பகிர்ந்துகொண்டார்.
மகளின் சடுதியான பிரிவு அம்மா ஜெயலட்சுமியை கவலையில் ஆழ்த்தியிருந்தபோதும் அவர் சாதித்த சாதனைகள் புளகாங்கிதத்தை அவர் பேச்சிலே கொண்டுவந்தது. " என்னுடைய மகள் திறமையானவர் என்று எனக்கு நல்லாதெரியும் தொழிலுக்கு மட்டுமல்ல வீட்டிற்கும் கெட்டிக்காரி என்று நல்லா புரிஞ்சிருந்தேன். அவ எல்லாவிடத்திலேயும் எங்களோட ஒத்துப்போவா. அவள் எடுக்கிற எல்லா முடிவும் சரியாகத்தான் இருக்கும் . தெளிவா எடுப்பா எம்மை தெளிவுபடுத்துவா. எல்லாவற்றிற்கும் ஆதரவாக இருந்தோம். எங்களுக்கு இதைப்படிக்கப்போறேன் என்று கூறும் போது நல்லது என்று நாங்கள் உறுதுணையாக இருந்தோம்' என்று கூறிய அம்மா ஆரம்பத்தில் மகள் ஆசைப்பட்டு நடக்காத விடயத்தை கவலையோடு பகிர்ந்துகொள்ளத்தவறவில்லை. " ,ஒரு விமானியாக வரவேண்டும் என்பதற்காக ஏரோனோடிகல் இன்ஜினியர் ஆகவேண்டும் என்று மகள் மிகுந்த ஆர்வமாக இருந்தபோதும் அப்போது இருந்த பொருளாதார சூழ்நிலை கைகொடுக்கவில்லை. இந்தியாவிற்கு புலமைப்பரிசில் கிடைத்து சென்றபோது அந்த கல்லூரியில் கூட இந்த துறையிலேயே படிக்க முடியுமா என்று கேட்டுப்பார்த்தபோதும் அங்கு அது இருக்கவில்லை ."
விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு என்ற கருதுகோளின் படி தனது மத்திய வங்கித் தொழிலை நேசித்த அமிதா குறுகிய காலத்திலேயே மத்திய வங்கியின் சிரேஸ்ட உதவி பணிப்பாளர் என்ற உயர் பதவியை பெறும் அளவிற்கு திறமையானவராக விளங்கினார்.
"உள்ளதைக் சொல்லப்போனால் இவளிடம் இவ்வளவு பெரிய திறமைகள் உள்ள விடயத்தை அவர் இறந்தப் பின்னர் தான் எங்களுக்குத் தெரியும் . அவள பார்க்க வந்தவங்க எவ்வளவு பெரிய பெரிய ஆட்கள் மத்திய வங்கியில மாத்திரம் குறைந்தது 300 - 400 பெரிய அதிகாரிகள் வந்திருந்தாங்க. எங்களால நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவரோட பழகினவங்க , இல்லாத டிபார்ட்மென்றில இருந்தவங்க அவளைப்பற்றி பெருமையா பேசும் போது அவ எவ்வளவு சாதனை செய்திருக்கின்றார் எங்களால நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்ன செய்கிறதென்று எங்களுக்கு தெரியவில்லை அதனை நினைக்கும் போது வாழ்க்கையே ஒரு சூனியமாகப் போய்விட்டது எங்களைப் பொறுத்தவரைக்கும்" என்று கண்கலங்கினார் தந்தை சுந்தரராஜ்.
பொறுப்பற்ற வாகனச் சாரதிகளின் செயற்பாடுகளால் இலங்கையில் வீதிவிபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது வேதனையானது. 2019ம் ஆண்டில் ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 20 ஆயிரத்து 458 வீதிவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,927 பேர் பலியாகியுள்ளனர். இந்த 2020 ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஓகஸ்ட் மாத இறுதிவரை 15, 402 வீதிவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,418 பேர் பலியாகியுள்ளனர். ஒவ்வொரு உயிர்களும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சார்ந்தவர்களுக்கும் முக்கியமானது .அதிலும் அமிதாவைப் போன்ற ஆற்றல் மிக்கவர்களின் உயிர் என்பது குடும்பத்தை தாண்டி சமூகத்திற்கும் நாட்டிற்கும் எவ்வளவோ நன்மைகளைக் செய்யக்கூடியது என்பதை அனைவராலும் உணர்ந்துகொள்ளமுடியும்.
தனது மகள் பலியானதை விதி எனக் கூறும் தந்தை சுந்தரராஜ் ' 'ஆட்டோ சாரதியிலோ மகளிலேயோ எந்தக் குறையுமில்லை. நீங்கள் சி.சி.டி.வீ கமராவில் பார்க்கமுடியும். ஒரு பொறுப்பில்லாத ட்ரைவர் லைசன்ஸ் கூடக் கிடையாது அதுமட்டும் இல்லாமல் அவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் கூறுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் அந்த ரோட்டில எந்த ஸ்பீட்டுக்கு போகக்கூடாதோ அந்த ஸ்பீட்டுல வந்து முழுவதுமாக கொன்ரோலை இழந்து இன்று மூன்று உயிர் ஸ்பொட்டிலேயே போயிருக்கு இந்த மூன்று உயிரும் எவ்வளவு பெறுமதியான உயிரென்று தெரியுமா?
இதற்கு அரசாங்கமோ எமது நீதிமன்றமோ என்னவிதமான தண்டனைகளை கொடுக்கப்போறீங்க இவர் ஒரு மாசமோ இரண்டுமாசமோ கோர்ட்டுல இருந்துவிட்டு வெளியே வரப்போகிறார். இவருக்கு என்னமாதிரி தண்டனை கொடுக்கப்போறீங்க இந்தமாதிரி இனிமேல் நடக்கக்கூடாது நான் இழந்தது நான் பட்ட கஸ்டம் இன்னுமொரு பெற்றோர் இழக்கக்கூடாது இன்றைக்கு அந்தப் பிள்ளை எவ்வளவு பெரிய உயரத்திற்கு போக வேண்டிய பிள்ளை இந்தக் குறுகிய காலத்தில கிட்டத்தட்ட 100 வயதில சாதிக்க வேண்டிய சாதனையை தன்னுடைய 33 வயதில சாதித்தவ .இன்னமும் எவ்வளவு விடயத்தை அவரிடம் எதிர்பார்த்திருந்தோம் நாங்க கடைசியா ஒன்றுமில்லாம ஒரே செக்கன்ல அவருடைய உயிர் போயிட்டு நீதிமன்றம் தான் இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்கவேண்டும் "என்று ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
மகளின் எதிர்பாராத பிரிவு சுந்தரராஜின் குடும்பத்தை நிலைகுலையவைத்துள்ளது உண்மையே. ஆனால் நூறு வயதில் சாதிக்கவேண்டிய விடயத்தை இந்தச் சிறியவயதில் சாதித்து வருகின்ற சந்ததியினருக்கு எல்லாம் முன்னுதாரணமாக திகழுகின்ற அமிதாவின் வாழ்க்கை காலகாலத்திற்கும் கொண்டாடப்படவேண்டியது என்றால் மிகையல்ல.
ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதன்
To watch the video
No comments:
Post a Comment