Wednesday, September 16, 2020

1,900 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட Lotus Tower திறக்கப்பட்டு ஒருவருடமாகியும் மக்கள் பாவனைக்குட்படுத்த முடியாதிருப்பதேன்?

 



தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரமாக அடையாளப்படுத்தப்படும் Lotus Tower தாமரைக் கோபுரம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டு இன்றுடன் சரியாக ஒருவருடம் பூர்த்தியாகின்றபோதும் அதனை இன்னமும் மக்கள் பாவனைக்காக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. 

2019ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ம் திகதி தாமரைக் கோபுரம்  மக்கள் பாவனைக்காகக் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  திறந்துவைக்கப்பட்டது.

கோலாகலமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு ஒருவருடமாகியும் ஏன் இன்னமும் இது பயன்பாட்டிற்கு வரவில்லை என இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத்தலைவர்  லுவோ சொங்கிடம் வினவியபோது " சீனத்தரப்பினர் கோபுரத்தின் நிர்மாணப்பணிகளை பூர்த்திசெய்து  நீண்டகாலமாகிவிட்டது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கோபுரத்தை இலங்கை தரப்பிடம் கையளிக்க சீனத்தரப்பு தயாராகவே உள்ளது'எனத் தெரிவித்தார். 

இலங்கைத்தொலை தொடர்புகள் ஆணைக்குழு இந்தக் கோபுரத்தின் மிக உயர் தொழில்நுட்பத்தைக் கையாள்வதற்கான பயிற்சிகளை தற்போது வழங்கிவருகின்றதெனவும் இவ்வருட இறுதிக்குள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் எனக் கருதுவதாகவும் அவர்  தெரிவித்தார். 



தாமரைக் கோபுரம், உலகின் உயரமான கோபுரங்களின் வரிசையில் இது 19ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ​

356.3 மீற்றர் உயரம் கொண்ட தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 104.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.இலங்கை நாணயத்தில் இது  1, 928 கோடி ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 67 மில்லியன் டொலர் சீன வங்கியொன்றிடமிருந்து பெறப்பட்டுள்ளதுடன்இ எஞ்சிய தொகை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் செலவிடப்பட்டுள்ளது. 

சுழலும் வர்த்தக நிலையங்கள், வர்த்தகக் கட்டடத் தொகுதி, கலை நிகழ்வுகளுக்கு பயன்படுத்தக்கூடிய விசேட அரங்குகள் ஆகியவற்றை தாமரைக் கோபுரம் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்தக் கோபுரத்திற்குள் 6 அதிசொகுசு அறைகள் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

தாமரை மலரின் இதழ் போன்ற பகுதியில் 8 மாடிகள் அமைந்துள்ளதுடன் அதில் 6 மற்றும் ஏழாம் மாடிகள் வானொலி மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாட்டின் தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிகள் தமது ஔி/ஒலிபரப்பை மேல் மாகாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தாமரைக் கோபுரத்திற்கு மேலிருந்து கொழும்பு மாநகரின் அழகை ரசிக்கும் அரிய வாய்ப்பு  மக்களுக்கு கிட்டும் என கூறப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகியும் இன்னமும் மக்கள் அதற்கு உள்ளே பிரவேசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது

 அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயர்ப்பலகையில் தனது பெயரைப் பொறித்துப் பெருமை தேடிக் கொள்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக பூர்த்தியாகுமுன்னர் அதனைத் திறந்துவைத்தாரா ? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் உள்ளது. 

No comments:

Post a Comment