இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் வினோத் கே. ஜேக்கப் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் கருணா என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தலைமையிலான தூதுக்குழுக்களை நேற்று செவ்வாய்க்கிழமை தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாக அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவதன் ஊடாகவே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யமுடியும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை மீள வலியுறுத்தியதாக அறியமுடிகின்றது.
1987ம் ஆண்டு கைச்சத்திடப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையின் விளைவாகவே பிராந்தியங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையிலான மாகாண சபை முறைமை ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
13வது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் என்ற விடயத்தோடு இலங்கையுடனான நீண்டகால அபிவிருத்தி பங்காளராக செயற்பாடும் உறுதிப்பாட்டையும் இந்தச்சந்திப்புக்களின் போது இந்திய துணைத்தூதுவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் போது போரினால் கைம்பெண் ஆனவர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்தித்தரும் விடயத்தில் எதிர்காலத்தில் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை முன்னெடுக்கமுடியும் என கருணா அம்மான் குறிப்பிட்டதுடன் புலமைப்பரிசில்கள் அடங்கலாக கல்வித்துறையிலும் இணைந்து செயற்படமுடியும் என சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment