Sunday, February 14, 2021

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் : நாடுதழுவிய ரீதியில் முடக்கநிலையை கொண்டுவருவதா? ஆராய நாளை விசேட சந்திப்பு

 





உருமாறிய புதிய கொரோனா வைரஸின் அதிதீவிர பரவலுக்கு மத்தியில் நாடுதழுவிய முடக்கநிலையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றபோதிலும் நாளையதினம் கொரோனா தடுப்பு பற்றிய தேசிய செயற்பாட்டு நிலையம் சந்திக்கும் போது இதுபற்றி ஆராயப்படும் என சண்டே டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது. 

'நாடுதழுவிய  முடக்கநிலையைக் கொண்டுவருவது தொடர்பாக எந்தவிதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு  நிலையம் நாளையதினம் கூடும் போது இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படும்'என பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோயியல் பிரிவு தற்போதைய நிலைமையை ஆராய்ந்துவருவதாவும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பாக தீர்மானிக்கும் எனவும் பொதுச் சுகாதார சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 

கடந்த டிசம்பர் மாதம் 14ம் திகதி கணக்கெடுப்பில் இலங்கையில் 33 472 கொரோனா தொற்றாளர்கள் மொத்தமாக இனங்காணப்பட்டிருந்தனர். அது முதல் இன்றையதினம் பெப்ரவரி 14ம் வரையான இரண்டுமாத காலப்பகுதியில் பதிவான மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 40,000 ஆயிரத்தால் அதிகரித்து இதுவரை இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 74, 852 ஆக அதிகரித்திருக்கின்றது. 

இலங்கையில் ஒருபகுதி பாடசாலைகளை நாளை பெப்ரவரி 15ம் திகதிமுதல் மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தபோதும் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிவருவதன் காரணமாக அந்த தீர்மானம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் Covid-19 வைரஸின் புதிய வகை இலங்கையிலும் பல பகுதிகளில்  அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் இலங்கைக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?



இது தொடர்பாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகேவுடன்  நியூஸ்ஃபெஸ்ட் மெய்நிகர் நேர்காணலொன்றை நடத்தியிருந்தது.

சில இடங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. பாரியளவில் இல்லை. எனினும், முன்னைய வைரஸை விட இதற்கு வேகமாகப் பரவும் இயலுமை இருப்பதாக பல நாடுகள் தெரிவிக்கின்றன என நீலிகா மலவிகே தெரிவித்தார்.

இந்த புதிய வகை வைரஸ் உள்நாட்டில் உருவாவதற்கான வாய்ப்புள்ள போதும், வௌியில் இருந்தே வந்திருக்க முடியும் என தாம் கருதுவதாக நீலிகா மலவிகே கூறினார்.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் தவறுதலாக பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய வகை Covid-19 வைரஸ் கொழும்பு, அவிசாவளை, பியகம, வவுனியா ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டதால், அங்கு மாத்திரமே தொற்று இருப்பதாக அர்த்தப்படாது. இந்த வைரஸ் தொடர்பான தேசிய வேலைத்திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது இனங்காணப்பட்டுள்ள வைரஸ் தவிர மேலும் பல வகையான வைரஸ்கள் நாட்டில் பரவியிருக்கின்றனவா, இல்லையா என்பதை தற்போதைக்கு கூற முடியாது எனவும் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.


No comments:

Post a Comment