Monday, February 1, 2021

உடன்பாட்டின் படி கொழும்பு துறைமுக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துங்கள்- இலங்கையிடம் இந்தியா கோரிக்கை

 


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக ஏற்கனவே எட்டப்பட்ட புரிந்துணர்வு மற்றும் உறுதிமொழிகளுக்கு அமைவாக தொடர்ந்தும் நடக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வதற்காக 2019ம் ஆண்டு மே மாதம், இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே  கைச்சாத்திடப்பட்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒத்துழைப்பு உடன்படிக்கையை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பாக உள்ளதென இந்திய உயர்ஸ்தானிராலயப் பேச்சாளரொருவர் குளோப் தமிழிடம் தெரிவித்தார். 

இந்த உடன்படிக்கை தொடர்பான உறுதிப்பாடு  தலைமைத்துவ மட்டம் உட்பட இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பல தடவைகள் இந்தியாவிற்கு  வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மூன்று மாதங்களின் முன்னர் இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததையும் அவர் நினைவுபடுத்தினார். 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் 100% வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையினாலேயே இயக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவித்திருந்த நிலையிலேயே இந்திய தூதரகப் பேச்சாளரின் அறிக்கை வெளியாகியுள்ளது. 


No comments:

Post a Comment