Thursday, February 4, 2021

ஆயுத இராணுவ பெருமைபேசுவதால் பாதுகாப்பை உறுதிசெய்யமுடியாது என்பதை உணருமா இலங்கை அரசு?

 


73வது சுதந்திர தின வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றிய உரை, அங்குள்ள நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் வர்ணனை ,பாதுகாப்பு படைத்தளபதிகளின் தோரணை, நிகழ்வில் பங்கேற்ற படையணிகள் கனரக ஆயுத வாகனங்களின் பேரணியின் போது விபரிக்கப்பட்ட விடயங்களை நோக்கும் போது இலங்கை அரசு இன்னமும் 2009ம் ஆண்டு போர் வெற்றி கால மனோநிலையிலிருப்பது துலாம்பரமாகின்றது.  இந்த கனரக வாகனம் தான் புலிகளின் இலக்குகளை நிர்மூலமாக்கியது . இந்த விமானங்கள் தான் குண்டுத்தாக்குதல்களை நடத்தியது போன்ற வர்ணனைகளை பார்த்தபோது நாம் இப்போது 2021ம் ஆண்டில் இல்லாமல் 2010ம் ஆண்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 



இலங்கையில் லட்சக்கணக்கான படையினர் இருந்தாலும் ஆயுதங்கள் கனரக வாகனங்கள் போர் விமானங்கள் கடற்படைக்கலன்கள் இருந்தாலும் நாட்டில் வாழும் இனங்களுக்கிடையே உண்மையான நல்லிணக்கம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் அனைத்துமக்களும் சுபீட்சத்துடனும் சமாதானத்துடனும் வாழமுடியுமா ? என்று அரசாங்கம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். 

ஆயிரக்கணக்கான வீரர்களுடன் கடற்படையையும் விமானப்படையையும் ஆட்டிலறிகள் கனரக ஆயுதங்களையும் தம்மகத்தே கொண்டிருந்த விடுதலைப்புலிகளை அழித்தொழித்து விட்டதாக பெருமைகொண்ட இலங்கை அரசு கடந்த 2019ம் ஆண்டு  மிலேச்சத்தனமான கொள்கைகளைக்கொண்ட வெறுமனே விரல்விட்டெண்ணக்கூடிய பயங்கரவாதிகளின் செயற்பாடுகளால் ஏறத்தாழ ஸ்தம்பித்துப் போனதைப் பார்க்கும் போது ஆயுதங்களும் படையணிகளும் மாத்திரம் ஒரு நாட்டிற்கு உண்மையான பாதுகாப்பையும் அமைதியையும் வழங்கமாட்டாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளமுடியும். 



கொவிட்-19 க்கு மத்தியில் இலங்கை திக்கித்திணறிக்கொண்டிருக்கும்  நிலையில் அனைத்து இன மக்களுக்கும் மத்தியில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கிப்பயணிப்பதே நோக்கமாக இருக்கவேண்டும். 

இலங்கைக்கு இன்றைய காலத்தில் சவாலாக இருப்பது இங்கு வாழும் தமிழ் முஸ்லிம் மக்களா? உண்மையில் சிறுபான்மையினர் நாட்டின் எதிரிகளா? என்ற கேள்விகளுக்கு அரசாங்கத்திலுள்ளவர்கள் உண்மையாக விடைதேட முயற்றுள்ளனரா? 



தற்போது இலங்கை எதிர்நோக்கியிருக்கும் சவால்  நாட்டிற்குள் இல்லை மாறாக வெளியிலே இருக்கின்றது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துள்ளார்களா? புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபடும் வல்லரசுகள் இந்துசமுத்திரத்தில் தமது நலன்களை உறுதிசெய்வதற்கு கேந்திர ஸ்தானத்திலுள்ள இலங்கையில் வெளிப்படையாகவே முட்டிமோதிக்கொள்வதை இன்னமும் ஆட்சியாளர்கள் உணரவில்லையா? அன்றேல் நடப்பதை நன்கு  உணர்த்தும் நிலைமை கைநழுவிச்சென்றுகொண்டிருப்பதை உணர்ந்து   அப்பாவி உள்நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப திரும்பத்திரும்ப பழைய போரை நினைவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றதா அரசு?



கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் திக்கித் திணறிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் முக்கிய வல்லரசுகளுடனான இலங்கையின் உறவுநிலை மோசமாகிக்கொண்டிருக்கின்றது. கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விடயத்தில் இலங்கை  ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை இரத்துச்செய்த விடயம் இந்தியா மற்றும் ஜப்பானை கடும் அதிருப்தி நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது. மூத்த ஊடகவியலாளர் சாந்தனி கிரிந்தே தனது டுவிட்டர் பக்கத்தில்  கூறும் போது இந்தியாவுடனான உறவை சரிவர கையாளாவிட்டால் 1987ம் ஆண்டில் இடம்பெற்றதைப் போன்று பருப்பு பொதியைப் போடுவதுடன் மாத்திரம் இந்தியாவின் பதிலடி இருந்துவிடாது அதனைவிட மோசமாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். 

சீனாவிற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வழங்கினார்கள். கொழும்பு துறைமுக நகரத்தை அமைக்க அனுமதிதந்தார்கள்.கொழும்பு துறைமுகத்திலுள்ள முக்கிய கொள்கலன் முனையமான கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தின் 85 சதவீத பங்குகளை வழங்கினார்கள். ஆனால் இந்தியாவின் நிலை? எக்தா உடன்படிக்கையை கைச்சாத்திட இந்தியா முனைந்தபோது அதனை எதிர்த்து நிறுத்தினார்கள்.  தற்போது கிழக்கு முனையம் தொடர்பாக ஏற்கனவே கைச்சாத்திட்டிருந்த உடன்படிக்கையையும் இரத்துச்செய்து இந்தியாவை நோகடித்திருக்கின்றார்கள். இலங்கை தொடர்பாக இந்தியா நீண்டகாலமாக காண்பித்துவரும் நல்லெண்ணப்பான்மையை இவ்வாறு அடிக்கடி சோதித்துக்கொண்டிருக்கின்றனர் இலங்கை ஆட்சியாளர்கள்.  இந்தியாவின் பொறுமை ஒருகட்டத்தில் முடிவிற்கு வந்து இலங்கை தொடர்பாக கடும் நிலைப்பாட்டை எடுக்கத்தொடங்கினால் அவர்களது ஆயுதப்பலத்திற்கு முன்பும்  படையணிப்பலத்திற்கு  முன்பும் இலங்கையால் தாக்குப்பிடிக்க முடியுமா?

ஆயுதங்களால் அன்றி உண்மையான நல்லிணக்கத்தால் தான் நாட்டின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும் என்பதற்கு  இலங்கை ஆட்சியாளர்களுக்கு நல்ல உதாரணமொன்றை இங்கே வழங்குகின்றேன். அமெரிக்காவும் கனடாவும் ஒருகாலத்தில் பகைமை நாடுகள் . ஆனால் இன்று மிகச்சிறந்த நட்புறவு இருநாடுகளுக்கும் உள்ளது. இதன்காரணமாகவே ஆயிரக்கணக்கான மைல்கள் நீளமான இருநாடுகளுக்கும் இடையிலான எல்லையை காப்பதற்கு ஒருசில ஆயிரம் படையினரே பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். மறுமுனையில் வடகொரியாவும் தென்கொரியாவும் தற்போதும் பகைமை நாடுகள். இருநாடுகளுக்கு இடையில் 250 கிலோமீற்றர்கள் நீளமான எல்லையே உண்டு என்கிற போதும்  இதனைப்பாதுகாக்க இருதரப்பிலும் இரு பக்கத்திலும் லட்சக்கணக்கான துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இது எதனை உணர்த்துகின்றது. ?நல்லிணக்கம் இல்லாவிட்டால் பெருந்தொகையான படையினரையும் வளங்களையும் நாம் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த நேரிடும். நாட்டின் பொருளாதாரம் மோசமடையும். 

எனவே ஆயுதங்களிலும் படைப்பலத்திலும் நம்பிக்கை வைப்பதைத் தவிர்த்து உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை நிலைநாட்டி நாட்டில் பொருளாதார சுபீட்சத்தையும் நிரந்தர அமைதியையும்   ஏற்படுத்த அரசாங்கம்  முன்வரவேண்டும். 


ஆக்கம்- அருண் ஆரோக்கியநாதர்

No comments:

Post a Comment