Sunday, February 7, 2021

இலங்கை அரசாங்கம் எந்தவொரு இனத்தினரையும் பழிவாங்கவில்லை-வெளிவிவகார அமைச்சர்

 


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்பை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர்இ ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏதாவது இடம்பெற்றால் நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய மாத்திரமே அது குறித்து செயற்பட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை கொரோனா பரவல் காரணமாக இணையவழி காணொளி முறையில் முன்னெடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ கண்டியில் வெளிவிவகார அமைச்சின் கண்டி உதவி தூதரகத்தையும் நேற்று அமைச்சர் திறந்து வைத்தார். இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அவை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக விளக்கி, அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தங்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்ததாக கூறினார்.


மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த மாதம் 22 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், கோவிட் காரணமாக பிரதிநிதிகள் ஒன்றுகூடாமல் முதல் முறையாக இலக்ரோனிக் ஊடகங்கள் மூலம் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த அறிக்கை இலங்கைக்கு மட்டுமல்ல, மேலும் 10 நாடுகளுக்கும் தண்டனை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைகுழு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அத்தகைய முறையில் செயல்பட ஆணைகுழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும் இதுஇ 'ஐ.நா பொதுச் சபை மூலமே செயற்படுத்தப்பட வேண்டியதொன்றாகவும் அவர் வலியுறுத்தினார் .

மேலும் இதனை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாகவும், அதனுடன் இணைந்த நாடுகளுடன் தற்பொழுது கலந்துரையாடி வருவதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாத கட்டுப்பாட்டுக்குள் இருந்த மூன்று இலட்சம் அப்பாவி பொதுமக்களை விடுவித்த பின்னர், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் மேலும் எல்.ரீ.ரீ.ஈ இராணுவத்தினருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு , அவர்கள் இப்போது சொந்த கிராமப்புறங்களில் நன்றாக வாழ்ந்து வருகின்றனர் எனவும் தெரிவித்த அமைச்சர் , இலங்கை அரசாங்கம் எந்தவொரு இனத்தினரையும் பழிவாங்கவில்லையெனவும் பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர் அவர்களின் அபிலாசைகள் வடக்கு மக்களால் தோற்கடிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில், நாட்டிற்குள் நடக்கும் எதையும் தொடர்பாக நாட்டின் அரசியலமைப்பின் படி செயல்பட அதிகாரம் உள்ளது. முந்தைய அரசாங்கம் வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து வந்து ஆவணங்களில் கையெழுத்திட ஒப்புக்கொண்ட போதிலும், இது முற்றிலும் அரசியலமைப்பிற்கு முரணான செயல். இந்த விவகாரம் தொடர்பாக உள் விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதியால் ஒரு ஆணைகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை , கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் வசந்தயாப்பா பண்டார. எம்.பி வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே. பணிப்பாளர் ஜெனரல் விஸ்வநாத் அகேஷ்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
============================================
முன்னைய செய்தி

ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள்  மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள யோசனைகள் தொடர்பில் உறுப்பு நாடுகளை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அதற்கிணங்க உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு அது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன  தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் சிலரை சந்தித்து அது தொடர்பில் தெளிவுபடுத்தி வருகின்றார். இலங்கை தொடர்பான ஜெனிவா தீர்மானம் தொடர்பாக முக்கியமாக செயற்படும் நாடுகளின் Core Group on Sri Lanka at the UNHRC பிரதிநிதிகளுடனான சந்திப்பை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இன்று  நடத்தவுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இந்தச்சந்திப்பு நடைபெறவிருந்த போதும் பின்னர்  இன்று திங்கட்கிழமைக்கு இது பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜெனிவா தீர்மானத்திற்கு  இணை அனுசரணை வழங்குவதா இல்லை மாற்று தீர்மானத்தைக்கொண்டுவருவதா என்பது தொடர்பாக இதுவரை முக்கிய நாடுகளுக்கு இலங்கை இன்னமும் அறிவிக்கவில்லை. இருந்தபோதிலும் ஜெனிவாவில் 46வது கூட்டத்தொடருக்கு இன்னமும் இரண்டு வார காலமே உள்ள நிலையில் இணக்கப்பாடான ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கான காலம் நழுவிப் போயுள்ளதாக இது தொடர்பாக அறிந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதேவேளை இலங்கை அரசாங்கத்துடன் கடந்த காலங்களில் இணைந்து செயற்பட்ட நட்பு நாடுகளிடமிருந்து மேற்படி விடயத்திற்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் கடந்த ஜெனீவா கூட்டத்தொடரில் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே முடிவெடுத்தது.

அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உள்ளக பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்த நிலையில் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்கான ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ள நிலையில் அதன் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச். எம்.டி. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 ஏற்கனவே மனித உரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க அதன் அறிக்கையும் காணாமல் போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையும் மேற்படி ஆணைக்குழுவினால் விரிவாக ஆராயப்பட உள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவிடம் இராஜதந்திர ரீதியில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment