Friday, February 5, 2021

6 மாத காலத்தில் இலங்கையில் இரண்டு பாரிய அபிவிருத்தித்திட்டங்களை இழந்த ஜப்பான்: என்ன நடந்தது?

 


கொழும்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்ததை முன்னெடுக்க முடியாது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் இந்தியத் தரப்பை எந்தளவிற்கு அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளதென்பதை வெளிப்படும் பிரதிபலிப்புக்கள் உணர்த்திநிற்கின்றன. இந்திய தரப்பை போன்று அன்றேல் அதனைவிடவும் அதிகமாக அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியுள்ள தரப்பாக ஜப்பான் மாறியுள்ளது என்றால் மிகையல்ல.



 நீண்டகால பேச்சுக்களை அடுத்து இந்து சமூத்திரப்பிரதேசத்தில்  கேந்திர ஸ்தானமான உள்ள இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் பிரசன்னத்திற்கு கடிவாளம் போடும்  திட்டங்களில் ஒன்றாக கொழும்பு துறைமுக கிழக்கு முனையத் திட்டம் பார்க்கப்பட்டது. இலங்கையுடன் இணைந்து இந்தியாவும் ஜப்பானும் இதனை முன்னெடுக்க  தீர்மானித்திருந்தன. இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் 2019ம் ஆண்டு மே மாதத்தில் கைச்சத்திடப்பட்டிருந்தது. ஆனால்  இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக இந்த ஒப்பந்தததை கைவிட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்தபோது இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவர் அகிரா சுகியாமா  இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் ' ஒருதலைப்பட்சமானதும் வருந்தத்தக்கதும் ' என தமது எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தார். 

திங்களன்று  நடைபெற்ற கபினட் அமைச்சரவை சந்திப்பின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அறிவிப்பு தொடர்பாக விரிவான விபரங்களை எதிர்பார்த்திருப்பதாக புதுடில்லியிலுள்ள ஜப்பானியத்தூதரக அதிகாரியொருவர் இந்துப்பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். 

                                            இலகு ரயில் திட்டம்


கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் ஜப்பானிய நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவந்த இலகு ரயில் திட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்திருந்தார். 



அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ஜப்பானுக்கு கிழக்கு முனைய அறிவிப்பு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கின்றது என்பதை அவர்களது கருத்துக்களில் இருந்து உணர்ந்துகொள்ள முடிகின்றது. 

ஜப்பான் இலங்கையின் நீண்ட கால நட்பு நாடாகவும் அபிவிருத்திப்பங்காளராகவும் திகழ்ந்துவரும் நிலையில் அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சீனா பக்கமாக நகர்வதை நன்கு புலப்படுத்துகின்றன. சீனா போன்றன்றி ஜப்பான் இலங்கைக்கு வழங்கும் கடன்கள் மிகக்குறைந்த வட்டி வீதத்தைக் கொண்டவை என பொருளாதார நிபுணர்கள் பலதடவைகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதுவரைக்கும் 1.1 ரில்லியன் யென்கள் பெறுமதியான கடனுதவியையும் 300 மில்லியன் யென் பெறுமதியான மானிய உதவிகளையும் இலங்கைக்கு ஜப்பான் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment