ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லே வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை நிராகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்மன்பில இன்று தெரிவித்துள்ளார்.
30 /1 மற்றும் 40/ 1 தீர்மானங்களை மீறும் வகையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆணையாளரது அறிக்கை 17 பக்கங்களைக் கொண்டிருப்பதுடன் அதில் 2 பக்கங்கள் மாத்திரமே மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட கம்மன்பில அறிக்கையில் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு நம்பகரமான ஆதாரங்கள் ஏதுமில்லை எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை இது தொடர்பாக எழுத்துமூலமாக ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதாகவும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பேசும் போது இலங்கையின் நிலைப்பாடு பகிரங்கப்படுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை இலங்கை மீது சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஐ.நா மனித உரிமை அமர்வில் மிகச் சிறப்பாக முகங்கொடுக்கும் வல்லமை இலங்கைக்கு இருக்கிறது. குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதில்களை உரிய நேரத்தில் வழங்க இருக்கிறோமென அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்திருந்தார்.
அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானபூர்வமாக இவற்றுக்கு பதில் வழங்கப்படும். அமெரிக்காவின் இணை அனுசரணையுடன் கடந்த அரசில் முன்வைத்த யோசனையின் பலனை இன்று அனுபவிக்கிறோமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று zoom தொழில்நுட்பத்துடன் நடைபெற்றது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
ஐ.நா மனித உரிமை அமர்வில் பங்கேற்கும் இலங்கை குழு தொடர்பில் இதுவரை இறுதி முடிவு செய்யப்படவில்லை. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் இக்குழு அமைய வாய்ப்புள்ளது. இராஜதந்திர மட்டத்தில் பதில் வழங்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பிரித்தறிவது முக்கியம். ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு அரசியல் குறிக்கோள்கள் இருக்கின்றன. எமக்கிருக்கும் அழுத்தம் தொடர்பில் தெரிந்து வைத்துள்ளோம். உரிய பதிலை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
2015 இல் வந்த நல்லாட்சி அரசு அமெரிக்காவுடன் கொண்டுவந்த யோசனையின் பலனை தான் இன்று அனுபவிக்கிறோம்.
இந்த தவறுக்கான சரியான பதிலை அன்றைய அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்த திலக் மாரப்பன வழங்கியிருந்தார்.யோசனையிலிருக்கும் சில விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரண் என்பதை அவர் வலியுறுத்தியிருந்தார்.இந்த யோசனையிலிருந்து விலகுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.
யுத்த சமயத்தில் நடந்ததாக கூறப்படும் வீடியோக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை வேறுநாடுகளில் நடந்தவற்றை இணைத்து தயாரிக்கப்பட்டவையென்று கூறப்படுகிறது.
எம்மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்படுகின்றன. பிரிட்டன் உயர்ஸ்தானிகரலாயம் அன்று முன்வைத்த கருத்தும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்தும் முரணானவை.
குற்றச்சாட்டுகளுக்கு விஞ்ஞானபூர்வமான பதில் வழங்க நாம் தயாராக இருக்கிறோமென்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment