பிரித்தானிய காலனித்துவத்தின் கீழிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற 73வது வருட தினத்தை கொண்டாடுவதற்கு இலங்கை அரசாங்கத்தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் நாளையதினம் கொண்டாடப்படுவது சுதந்திர தினமா ? அன்றேல் வெசாக் தினமா? என்ற கேள்விக்கணைகளுடனான பதிவுகளைக் காணமுடிகின்றது.
இதற்கு காரணமாக அமைந்தது சமூக செயற்பாட்டாளர் மரிஸா டி சில்வா டுவிட்டரில் நேற்று இட்ட பதிவாகும். கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கப்பகுதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள விதத்தை படங்களுடன் பதிவிட்டிருந்தார். பௌத்த கொடிகளால் நிறைந்து அந்தப்பகுதி காணப்படுகின்றதை படங்கள் புலப்படுத்தின.
இதனையடுத்து அவரது டுவிட்டின் கீழ் பதிவிட்டவர்களில் சிலர் இது சுதந்திர தின விழாவா ? அன்றேல் வெசாக் தினவிழாவா என கேள்வியாகவும் கேலியாகவும் பதிவுகளை இட்டிருந்தனர்.நேற்றையதினம் பிரித் பௌத்த சடங்கு நடைபெற்றதாக தாம் கேள்விப்படுவதாகவும் இதனை வருடாந்த பிரித் நிகழ்வு என சிலர் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் தாம் அறிந்த வரையில் சுதந்திர சுதுக்கம் இவ்வாறாக பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் மரிஸா தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் சுதந்திர சுதுக்கத்தை முற்றுமுழுதாக பௌத்த கொடிகளால் அலங்கரித்துள்ளமையானது அரசாங்கத்தின் இனவாத முகத்தை அப்பட்டமாக துகிலுரித்துக்காட்டுவதாக சமூக செயற்பாட்டாளார் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இந்த அரசாங்கத்தின் அப்பட்டமான தோல்வியை திசைதிருப்புவதற்கான செயற்பாடு எனவும் கருத்துவெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment