மைத்திரி-ரணில் 'நல்லாட்சி'யின் போது தேசிய கீதத்தை சிங்களத்துடன் தமிழ் மொழியிலும் பாடுவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு கடந்தாண்டைப் போன்று இம்முறையும் மறுக்கப்பட்டிருக்கின்றது.
இன்றைய வைபவத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல. ஒருவாரத்திற்கு முன்னரே இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன இம்முறை தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்படும் என அறிவித்திருந்தார். 1949ம் ஆண்டின் பின்னர் 67 ஆண்டுகளுக்கு பிறகு 2016ம் ஆண்டில் முதன்முறையாக தேசிய சுதந்திர தின வைபவத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. இது தொடர்ந்தும் 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ஸ 2019நவம்பர் தேர்தலில் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் தமிழில் தேசிய கீதம் பாடுவது தடுக்கப்பட்டது. கடந்தாண்டின் தொடர்ச்சியான கொள்கையே இந்த ஆண்டிலும் கோட்டா அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை விளங்கிக்கொள்ளமுடியும்.
சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியல்யாப்பாக பார்க்கப்படும் சோல்பெரி யாப்பில் தேசிய கீதம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இருந்தபோதிலும் 1949ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி சுதந்திர தின வைபவத்தில் தற்போதுள்ளதைவிட சிறிது மாறுபட்டிருந்த தேசிய கீதம் சிங்களத்திலும் தமிழிலும் இசைக்கப்பட்டது. இலங்கை அரசாங்கம் 1951ம் ஆண்டிலேயே தேசிய கீதத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து 1952ம் ஆண்டு சுதந்திர தின வைபவத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பானது தமிழ்ப் பிரதேசங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது. 1972ம் ஆண்டு அரசியல்யாப்பில் தேசியகீதம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்கிறார் எழுத்தாளர் ஹர்சன குணசேன கூறுகின்றார். 1978ம்ஆண்டு அரசியல் யாப்பிலேயே தேசிய கீதம் தொடர்பாக தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அரசியல்யாப்பின் அத்தியாயம் 1ல் உறுப்புரை 7ல் ' இலங்கைக் குடியரசின் தேசிய கீதம் ' ஸ்ரீலங்கா தாயே' என்பதாக இருத்தல் வேண்டும். அதன் சொற்களும் இசையமைப்பும் மூன்றாம் அட்டவணையில் தரப்பட்டவாறாக இருத்தல் வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கீதம் சிங்களத்தில் எவ்விதம் இசைக்கப்பட வேண்டும் தமிழ் மொழியில் எவ்விதம் இசைக்கப்பட வேண்டும் என்பதை 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பாச்லே அம்மையார் தனது அறிக்கையில் இலங்கையிலுள்ள சிறுபான்மையினரது உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என வலியுறுத்திய நிலையில் அரசியலமைப்பிலுள்ள உரிமையான தமிழில் தேசிய கீதம் பாட இடமளிக்கும் விடயத்திற்கு கோட்டாபய அரசாங்கம் இம்முறை இடமளிக்கலாம் என ஏற்பட்ட எதிர்பார்ப்பு பாதுகாப்புச் செயலாளரின் அறிவிப்பால் தகர்ந்துபோனது.
2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2020ம் ஆண்டு சுதந்திர தின தேசிய வைபவத்தின் போது தமிழில் தேசிய கீதத்தை இசைக்க தடைவிதிப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் கூறியபோதே இந்த அரசாங்கத்தின் மனோநிலை வெளிப்பட்டது.
பிபிசிக்கு வழங்கியிருந்த பேட்டியின் போது நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும் அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால் இரண்டு இனங்கள் என்ற பொருளை வெளிப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையில் சிங்களம்இ தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் ஒரே இனம் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தேசிய கீதத்தை இரண்டு தடவைகள் பாடுவதிலேயே நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியிருந்ததுடன் இந்தியாவிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை அவர் இதன்போது நினைவூட்டியிருந்தார்.
ஆனால் தென் ஆபிரிக்கா கனடா உட்பட பல நாடுகளிலும் தேசிய கீதம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் இசைக்கப்படுவதை அவர் அறிந்திருக்க வில்லையா அன்றேல் அறிந்தும் அறியாதவர் போன்று கருத்துவெளியிட்டாரா என்பது நமக்குள்ள கேள்வியாகும்.
இலங்கையின் 2020ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம், தமிழ் மொழியில் பாட மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரிய பாதிப்பான விடயம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார்.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் தேசிய மற்றும் உத்தியோகப்பூர்வ மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் இலங்கை அரசியலமைப்பின் 16ஆவது திருத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இன்றையதினமும் மனோ கணேசன் தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்காமை தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் "இந்நாடு எமக்கும் உரித்தானது என்ற உணர்வை தமிழ் பேசும் மக்களிடம் ஏற்படவே, 1949ம் ஆண்டோடு கைவிடப்பட்ட சுதந்திர தினத்தில் சிங்களம்இ தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடும் வழமையை 2016ம் ஆண்டு நாம் மீண்டும் கொண்டு வந்தோம். இன்று இவ்வரசு நாட்டை மீண்டும் இருளுக்குள் கொண்டு செல்கிறது. " என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற நம்பிக்கையின் வெளிபாடாகவும் அந்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதாகவுமே தமிழில் தேசிய கீதம் பாட இடமளிக்கப்படவில்லை" என்கிறார் தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா.
கலாநிதி .பாக்கியசோதி சரவணமுத்து"இலங்கை ஒரே நாடு இங்கு ஒரே மொழியே தேசிய மொழி என்ற எண்ணத்தை அரசாங்கம் கொண்டிருப்பதன் காரணமாகவே தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் இங்கு இரண்டு தேசிய மொழிகள் உள்ளன. ஒரே மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு அபத்தமானது. ஏனெனில் தென் ஆபிரிக்காவை எடுத்துக்கொண்டால் அங்கு ஐந்துமொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது." ' என்கிறார் மாற்றுக்கொள்கைக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி .பாக்கியசோதி சரவணமுத்து
தேசிய கீதம், நாட்டில் மாறுபடுகின்ற அரசாங்கங்களின் கொள்கைக்கு அமையவே இசைக்கப்படும் என சிரேஷ்ட சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதீப மஹானாமஹேவா பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். பிரதீப மஹானாமஹேவா
"இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் 26வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமையாக மொழி உரிமை காணப்படுகின்றது. ஒருவரின் ஐந்து விரல்களை போலவே இலங்கையர்களின் தாய் மொழியாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் காணப்படுகின்றன. அதேபோன்று, நிர்வாக மொழி, நீதிமன்ற மொழி, தேசிய மொழிஇ அரச மொழி ஆகிய அனைத்து இடங்களிலும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு அரசியலமைப்பில் அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.இலங்கையில் ஆங்கில மொழி தொடர் பாடல் மொழியாக மாத்திரமே காணப்படுகின்றது.அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைய இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட போதிலும்இ தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் . வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்க கடமைகளின் போது, தமிழ் மொழியிலேயே அவை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சிங்கள மொழியில் பிரதிகள் மாத்திரமே வெளியிடப்பட வேண்டும் . இவ்வாறான நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படுவது என்பது அரசாங்கத்தின் கொள்கைக்கு அமையவே முன்னெடுக்கப்படும் ஒன்று என அவர் கூறுகின்றார். தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுமா இருந்தால், அது எந்தவித பிரச்சினையும் கிடையாது." என தெரிவித்துள்ளார் பிரதீப மஹாநாமஹேவா.
இலங்கை தேசிய கீதம்
இலங்கை சுதந்திரமடைந்த சந்தர்ப்பத்தில், பி.பி.இலங்கசிங்க மற்றும் லயனல் எதிரிசிங்க ஆகியோரால் எழுதப்பட்ட ''ஸ்ரீலங்கா மாதா பல யச மஹிமா' என ஆரம்பிக்கும் பாடல் 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி முதல் முதலாக வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
இந்த தேசிய கீதத்தில் சில சர்ச்சைகள் எழுந்த பின்னணியில், ஆனந்த சமரகோனினால் இசைக்கப்பட்ட ''நமோ நமோ' மாதா தேசிய கீதம் பின்னரான ஓரிரு ஆண்டுகள் இசைக்கப்பட்டு, 1950ம் ஆண்டு காலப் பகுதியில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 1951ம் ஆண்டு இந்த தேசிய கீதத்திற்கு முறையாக அங்கீகாரத்தை பெற்று, ஆனந்த சமரகோன் அதற்கு இசை அமைத்திருந்தார். இதன்படி, இலங்கையின் 4வது சுதந்திர தின நிகழ்வில் முதல் முறையாக தற்போதைய சிங்கள மொழியிலான தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழ்ப் புலவரான மு.நல்லதம்பிஇ சிங்கள மொழியிலான தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மொழி பெயர்ந்துள்ளார்.
ஆனந்த சமரகோன்
இலங்கையின் தேசிய கீதத்தை ஆனந்த சமரகோன் (1911-1962) இசையமைத்தார். பாடலாசிரியர், பாடகர், பள்ளி ஆசிரியர் என பன்முகத்தன்மைக் கொண்டவர் இந்த சமரகோன் .
சமரகோன் ஒரு கிறிஸ்தவராகப் பிறந்தார். அவரது பிறப்புச் சான்றிதழில் "Egodahage George Wilfred Alwis Samarakoon''என்று பெயர் பதிவிடப்பட்டுள்ளது.
மிகச் சிறந்த சிங்கள ஆசிரியர்களில் ஒருவராகக் கருதப்படும் டி.சி.பி கம்லத்தின் வழிகாட்டுதலின் கீழ் சமரகோன் சிங்களத்தில் கல்வி கற்றார்.
இரவீந்தரநாத் தாகூர் இசையில் ஆர்வம் காட்டிய சமரகோன், அதன் நுட்பங்களை தெரிந்து கொள்வதற்காக இந்தியா பயணித்தார். சாந்தி நிகேதனில் கிழக்கத்திய பாரம்பரிய இசை, இந்திய செம்மொழி இசை ஆகியவற்றில் உயர் படிப்பைத் தொடர்ந்தார். பிறகு, பௌத்த மதத்தை தழுவி, 'ஆனந்த சமரகோன்' என்ற தனது பெயரை மாற்றினார்.
1951ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி சேர் எட்வின் விஜய ரட்ன தலைமையிலான குழுவினரால் ஆனந்த சமரகோனால் இசையமைக்கப்பட்ட பாடல் இலங்கையின் தேசிய கீதமாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இலங்கை கல்வி அமைச்சகத்தின் கூற்றுப்படி,தேசிய கீதத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டாலும், அதற்கு எதிராக சில வாதங்களும் எழுப்பப்பட்டன. குறிப்பாக, தேசிய கீதத்தின் முதல் வரியை 'ஸ்ரீ லங்(க்)கா மா(த்)தாஅ(ப்)ப ஸ்ரீ... லங்(க்)கா' என்று மாற்றுவதற்கான முடிவை சமரகோன் வரவேற்கவில்லை என்று தெரிவிக்கின்றது.
1962ம் ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி ஆனந்த சமரக்கோன் தனது 51 ஆவது வயதில் அளவிற்கதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக பதிவிடப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் தனது அனுமதியின்றி தேசிய கீதத்தின் வரிகளில் மாற்றங்களை மேற்கொண்டமையே என சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதர்
நன்றி: பிபிசி ( சட்டத்தரணி பிரதீப மஹாநாமஹேவாவின் நேர்காணல் உட்பட சில பகுதிகள் பிபிசியில் இருந்து எடுக்கப்பட்டவை)
No comments:
Post a Comment