Sunday, February 7, 2021

வடமாகாணத்தில் சீனாவிற்கு 'சக்தி' திட்டங்களை வழங்கியமைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

 


வடக்கு மாகாணத்திலுள்ள நெடுந்தீவு அனலைதீவு மற்றும் நைனாதீவில்  மூன்று புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீன நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தத்தை வழங்கியமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துள்ளது.

 கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக இலங்கை இரத்துச்செய்ததையடுத்து தனது எதிர்பை அதுதொடர்பாக பதிவுசெய்யுமுன்னரே இந்த புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டம் சீனாவிற்கு வழங்கப்பட்டமைக்கான எதிர்ப்பை இந்தியா பதிவுசெய்திருந்தாக கொழும்பிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில பத்திரிகை தெரிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி 18ம் திகதி தகவல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டிருந்த அமைச்சரவைத் தீர்மானங்களில் இந்த புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே இந்தியாவின் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சீன நிறுவனத்திற்கு இந்த திட்டங்களை வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்ற கரிசனைகளின் அடிப்படையிலேயே இந்தியா அதன் எதிர்ப்பை பதிவுசெய்திருந்ததாக அந்தப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

 தற்போது சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நெடுந்தீவு அனலைதீவு மற்றும் நைனாதீவு ஆகியன இந்தியாவில் இருந்து மிகவும் அண்மையாக உள்ளதுடன் ஒடுங்கிய பாக்கு நீரிணையாலேயே பிரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 நெடுந்தீவு இந்தியாவின் கடற்கரை நகரான இராமேஸ்வரத்தில் இருந்து வெறுமனே 48 கிலோமீற்றர்கள் தூரத்திலேயே அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

No comments:

Post a Comment