Thursday, December 31, 2020

இலங்கையில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள்: மொத்த எண்ணிக்கை 204 ஆக உயர்வு

 


இலங்கையில் நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் Covid-19 காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 592 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43,299 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் 7,595 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 706 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில்,தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,329 ஆக உயர்வடைந்துள்ளது.

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம் கூறுவதென்ன?

 


சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடும் சுகாதார வழிமுறைகளின் கீழ் இலங்கையின் சகல பிரஜைகளினதும் குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம் தெரிவித்துள்ளது.

உடல்களை அடக்கம் செய்வதால் கொரோனா தொற்று பரவும் நிலைமை அதிகரிப்பதாக உறுதியான ஆதாரங்கள் இல்லை என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு, நோய்த் தடுப்பு மத்திய நிலையம் மற்றும் ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் நிர்வாக மத்திய நிலையத்தால் Covid-19 -இனால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய உரிய வழிமுறைகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த உரிய வழிமுறைகளின் பிரகாரம் உடல்களை அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ முடியும் என இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம் குறிப்பிட்டுள்ளது.

2020 ஆண்டு வரலாற்றில் மிகவும் மோசமான ஆண்டா?

 



விடைபெறும் 2020ம் ஆண்டு என்கிறபோதும் முதலில் நினைவிற்கு வருவது கொவிட்-19  தான். எளிமையாக கூறுவதானால் கொரோனா வைரஸ் எம் நினைவுகளை  எம் அன்றாட வாழ்க்கையை அதிகமாக ஆக்கிரமித்தது  ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல . உலகமே நாமறிந்த வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு கொரோனாவால் முடங்கியிருந்த காலப்பகுதியிலும் முக்கியமான பல நிகழ்வுகள் நடந்தேறியிருந்தன. அவற்றை இங்கே தருகின்றோம். 



2020  ஜனவரி

ஜனவரி 2: அவுஸ்திரேலியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கிய காட்டுத்தீயால் இலட்சக்கணக்கான வன உயிரினங்கள் உயிரிழந்தன. இந்த காட்டுத்தீயால் அவுஸ்திரேலியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

ஜனவரி 3: அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலின் உச்சபட்சமாக ஈரானின் புரட்சிப்படைத் தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஜனவரி 7: அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட காசிம் சுலைமானியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் ஈரானின் கேர்மென் நகரில் நடைபெற்றன. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 8: காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் வகையில் ஈராக் நாட்டில் அமெரிக்க படையினர் தங்கியுள்ள 2 படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதில் சில அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர்.

காசிம் சுலைமானி கொல்லப்பட்டதால், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உச்சபட்ச பதற்றம் நிலவி வந்தது. ஈரானின் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டின் விமானத்தின் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அமெரிக்க போர் விமானம் என நினைத்து தவறுதலாக ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 176 பயணிகள் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 9: நைஜீரியாவில் இராணுவத் தளத்தை குறிவைத்து போகோஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நைஜீரிய பாதுகாப்பு படையினர் 89 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 16: அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் வகையிலான விசாரணை செனட் சபையில் தொடங்கியது.

ஜனவரி 18: ஏமன் உள்நாட்டுப் போரில் நடந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 111 பேர் உள்பட மொத்தம் 116 பேர் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 23: கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் வுகான் நகரில் 76 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஜனவரி 30: 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரானா வைரஸால் சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்தது.

பெப்ரவரி

பெப்ரவரி 11: சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸிற்கு COVID-19 என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்தது.

பெப்ரவரி 23: குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் இந்தியாவின் டெல்லியில் 53 பேர் உயிரிழந்தனர்.

அனைத்து வகை பொதுப்போக்குவரத்தையும் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதியளித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை லக்சம்பர் நாடு பெற்றது.

பெப்ரவரி 29: ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கொண்டு வரும் நோக்கத்தோடு தலிபான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடத்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மார்ச்

மார்ச் 9: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்தாலியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

*கொரோனா பரவல், ரஷ்யா-சவுதி இடையேயான வர்த்தகப் போட்டி காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 30 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.

மார்ச் 11: கொரோனா வைரஸ் ஒரு ’பெருந்தொற்று’ என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

மார்ச் 13: கொரோனா பரவல் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுவதற்கு நேபாள அரசு தடை விதித்தது.

மார்ச் 24: கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஜப்பானில் நடைபெறவிருந்த 2020 ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.

மார்ச் 26: உலக அளவில் கொரோனா பரவியவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது. பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கியது.

* கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் சீனாவை அமெரிக்கா முந்தியது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திற்கு வந்தது.

* கொரோனா பரவலால் உள்நாட்டு சண்டையை நிறுத்துமாறு ஐ.நா பொதுச்செயலாளர் விடுத்த அழைப்பை சிரியா, ஏமன், லிபியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள போராளிகள் குழுக்கள் ஏற்றுக்கொண்டன.

ஏப்ரல்

ஏப்ரல்1: எந்த வித அறிகுறியும் இன்றி முதல் முறையாக சீனாவில் 130 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பரவலை கருத்திற்கொண்டு ஏமன் அரசு 470 சிறைக்கைதிகளை விடுதலை செய்தது.

ஏப்ரல் 2: உலக அளவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது.

ஏப்ரல் 5: மனிதர்களைத் தாண்டி முதல் முறையாக நியூயார்க் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஏப்ரல் 7: கொரோனா காரணமாக ஜப்பானில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

ஏப்ரல் 8: கொரோனா காரணமாக சீனாவின் வுகான் நகரில் அமுலில் இருந்த ஊரடங்கு 76 நாட்களுக்கு பின்னர் முதல் முறையாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

* ஐ.நா-வின் முயற்சியால் சவுதி கூட்டுப்படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏமனில் நடந்துவரும் உள்நாட்டு போர் கொரோனாவை கருத்திற்கொண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஏப்ரல் 10: உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது.

ஏப்ரல் 14: கொரோனா பரவல் குறித்த தகவலை மறைத்ததாக 14 ஆம் திகதி உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சுமத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்பிற்கு வழங்கிவந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்தார்.

ஏப்ரல் 19: கனடாவின் நோவா ஸ்காட்யா நகரில் கேப்ரியல் வார்ட்மென் என்ற நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கேப்ரியலை பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.

மே

மே 7: இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலம் விசாகபட்டினத்தில் இரசாயன நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு காரணமாக 11 பேர் உயிரிழந்தனர்.

மே 9: எல்லையில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

மே 10: பயிற்சியின் போது ஈரான் கடற்படை போர் கப்பல் மற்றொரு ஈரான் பயிற்சி கப்பல் மீது தவறுதலாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.

மே 21: இந்தியாவில் உருவான அம்பன் புயல் இந்திய-வங்காளதேச கடல் எல்லையில் கரையை கடந்தது. இந்த புயலால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மே 22: பாகிஸ்தான் எயார்லைன்ஸ் விமானம் கராச்சியின் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 99 பேர் உயிரிழந்தனர்.

மே 25: அமெரிக்காவில் பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது ஜோர்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நிறவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.



மே 27: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த சீன நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அதிக ஆதரவு கிடைத்தது.

மே 27: கொரோனா வைரஸிற்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது.

ஜூன்

ஜூன் 3: ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள அம்பர்நயா ஆற்றில் 20 ஆயிரம் தொன் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதையடுத்து, அதிபர் புதின் அவசரநிலை பிரகடனம் செய்தார்.

ஜூன் 15: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40 வீரர்கள் உயிரிழந்தனர் அல்லது படுகாயமடைந்தனர்.

ஜூன் 28: உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்தது.

ஜூன் 30: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த சீனா ஒப்புதல் அளித்தது.

ஜூலை
ஜூலை 2: மியான்மர் நாட்டில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 174 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 10: துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஹேகியா சோபியா வரலாற்று அருங்காட்சியகத்தை இஸ்லாமிய மத வழிபாட்டுத்தலமான மசூதியாக மாற்ற அந்நாட்டு அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார்.

ஜூலை 12: சீனாவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 141 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 15 : இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, மைக்ரோசொஃப்ட் தலைவர் பில் கேட்ஸ் உள்பட உலகின் மிகவும் பிரபலமான நபர்களின் ட்விட்டர் கணக்குகள் மர்ம நபர்களால் ஊடுருவப்பட்டு முடக்கப்பட்டது.

ஜூலை 19: பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தியா மற்றும் நேபாளத்தில் மொத்தம் 189 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 25: வட கொரியாவில் 1 நபருக்கு கொரோனா பரவல் இருப்பதாக சந்தேகம் எழுந்ததாகவும், அது தொடர்பாக அதிபர் கிம் அவசர கூட்டத்தை கூட்டியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுவே தங்கள் நாட்டில் கொரோனா பரவியுள்ளது என உறுதி செய்ய வடகொரியாவில் இருந்து வெளியான முதல் செய்தியாகும். இதற்கு முன்னதாக தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா பரவவில்லை என வட கொரியா தெரிவித்து வந்தது.

ஆகஸ்ட்

ஆகஸ்ட் 4: லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. துறைமுக பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் ஏற்பட்ட வெடி விபத்தில் 220 பேர் உயிரிழந்தனர். 3 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர். பெய்ரூட் நகரமே நிலைகுலைந்தது.

ஆகஸ்ட் 7: இந்தியாவின் கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் எயார் இந்தியா விமானம் தரையிறங்க முற்பட்டபோது, ஓடுதளத்தை விட்டு விலகி சென்று விபத்திற்குள்ளானது. 191 பேர் பயணம் செய்த அந்த விமானத்தில் விபத்து காரணமாக 19 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 9: பெலாரஸ் நாட்டில் அதிபர் தேர்தலில் அலெக்ஸாண்டர் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக முதல் முறையாக எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெறத் தொடங்கியது.

ஆகஸ்ட் 11: உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு (ஸ்புட்னிக் V) ரஷ்யா அனுமதி அளித்துள்ளதாக அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆகஸ்ட் 13: இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவை சுமூகமாக்க அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.

ஆகஸ்ட் 18: 1,000 தொன் கச்சா எண்ணெயை ஏற்றிவந்த ஜப்பானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மொரிசீயல் தீவு பகுதியில் விபத்திற்குள்ளானது. கப்பலில் இருந்த கச்சா எண்ணைய் கடலில் கலக்கத்தொடங்கியது.

ஆகஸ்ட் 28: உடல் நலத்தை கருத்திற்கொண்டு ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்.

செப்டம்பர்:

செப்டம்பர் 4: கொசோவா – செர்பியா நாடுகளுக்கு இடையே பொருளாதார ரீதியில் சுமூக உறவு ஏற்பட்டது என அறிவிக்கப்பட்டது. இந்த இரு நாடுகளும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் வகையில் தங்கள் நாட்டு தூதரகங்களை ஜெருசலேமிற்கு மாற்ற சம்மதம் தெரிவித்தன.

* இஸ்ரேல் – பக்ரைன் இடையே அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது.

செப்டம்பர் 16: ஷின்சோ அபே பதவி விலகியதையடுத்து, ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுஹா பொறுப்பேற்றுக்கொண்டார்.

செப்டம்பர் 27: நகோர்னா – கராபாக் மாகாணத்தை மையமாகக் கொண்டு அர்மீனியா – அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது.

ஒக்டோபர்:

ஒக்டோபர் 10: அர்மீனியா-அசர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஒக்டோபர் 17: நியூசிலாந்து தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் கட்சி மீண்டும் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஜெசிந்தா ஆர்டன் நியூசிலாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒக்டோபர் 23: இஸ்ரேல் – சூடான் இடையேயான உறவை சுமூகப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது.

ஒக்டோபர் 29: செனகல் நாட்டின் கடல் பரப்பில் அகதிகள் படகு கவிழ்ந்து 140 பேர் உயிரிழந்தனர்.

ஒக்டோபர் 30: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 81 பேர் உயிரிழந்தனர்.

நவம்பர்

நவம்பர் 4: பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியது.

நவம்பர் 7: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 8: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது.

நவம்பர் 9: மூன்றாம் கட்ட பரிசோதனையில் Pfizer நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவிகிதம் செயற்திறன் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.

* ரஷ்யா தலைமையில் அர்மீனியா – அசர்பைஜான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த போரில் அசர்பைஜானிடம் அர்மீனியா தோல்வியடைந்தது.

நவம்பர் 11: ரஷ்யாவின் ஸ்புட்னிக் – V கொரோனா தடுப்பூசி 92 சதவிகிதம் செயற்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 12: ஹாங்காங் பாராளுமன்றத்தில் இருந்து ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்தனர்.

நவம்பர் 15: இந்தியா வெளியேறிய ஆசிய-பசிபிக் நாடுகளின் வர்த்தக ஒப்பந்தம் சீனா தலைமையில் கையெழுத்தானது.

நவம்பர் 15: மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவிகிதம் செயற்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 18: அனைத்து கட்ட பரிசோதனைகளும் முடிவடைந்ததையடுத்து Pfizer நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயற்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 23: இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா , ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 70 சதவிகிதம் செயற்திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டது. தடுப்பூசியின் செயற்திறனை 90 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 26: இந்தியாவின் மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.

நவம்பர் 27: ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தெஹ்ரான் நகரில் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நவம்பர் 30: தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி கோரி மாடர்னா நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் விண்ணப்பித்தது.

* இந்தியாவில் பஞ்சாப், அரியானா விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நோக்கி தங்கள் பேரணியை தொடங்கினர். அதன் பின்னர் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

டிசம்பர்:

டிசம்பர் 1: ஐரோப்பாவில் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்க கோரி ஐரோப்பிய சுகாதார அமைப்பிடம் Pfizer நிறுவனம் விண்ணப்பித்தது.

டிசம்பர் 3: Pfizer நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இங்கிலாந்து அனுமதி அளித்தது. கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதியளித்த முதல் நாடு இங்கிலாந்து ஆகும்.

டிசம்பர் 5: ரஷ்யாவில் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணி தொடங்கப்பட்டது.

டிசம்பர் 8: உலகின் முதல் நாடாக இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

டிசம்பர் 10: இஸ்ரேல்-மொரோக்கோ நாடுகளுக்கு இடையே சுமூக உறவு ஏற்பட்டது.

டிசம்பர் 12: இஸ்ரேல் – பூட்டான் இடையே தூதரக உறவு சுமூகமாக ஏற்பட்டது.

டிசம்பர் 14: பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

டிசம்பர் 15:

அமெஸன் நிறுவனத் தலைவரின் விவாகரத்து பெற்ற மனைவி மெக்கன்ஸி ஸ்கொட் உலகில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரேநேரத்தில் 4 பில்லியன் அமெரிக்க டொலார்களை 384 இலாப நோக்கமற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். 

டிசம்பர் 16:

உலகின் 2வது மிகப் பெரிய நிலக்கரி ஏற்றுமதியாளரான அவுஸ்திரேலியாவிடமிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக  சீனா அறிவித்தது. 

டிசம்பர் 17:

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

டிசம்பர் 18:

நைஜீரியாவின் வடபகுதியில் பாடசாலையில் இருந்து  கடத்திச்செல்லப்பட்ட 300ற்கு மேற்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

டிசம்பர் 18:

மொடர்னா நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்த அவசர அனுமதி வழங்கப்பட்டது. 

டிசம்பர் 20:

பிரித்தானியாவில் வீரியமிக்க விரைவாக பரவக்கூடிய உருமாறிய கொவிட்-19  பரவத்தொடங்கியதையடுத்து பிரித்தானியாவுடனான எல்லைகளை மூடுவதாக  ஐரோப்பிய நாடுகள் அறிவித்தன.

டிசம்பர் 21:

மொடர்னா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அமெரிக்காவில் ஆரம்பம்



2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோயின் ஆதிக்கம் நிறைந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸால் உலக மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்தனர். ஆனாலும், வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், 2021 ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையும், புதிய முன்னேற்றத்தையும் கொடுக்கும் ஆண்டாக மாறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் பறிக்கும் கும்பல் தொடர்பாக பொலிஸார் எச்சரிக்கை

 



Facebook, Whatsapp போன்ற  சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகளை அனுப்புவதன் ஊடாக பண மோசடியில் ஈடுபடுவோரிடம் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பரிசுத் தொகை அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதாக இன்றைய தினம் (31) சமூக வலைத்தளங்கள் ஊடாக கூறப்படும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தீர்மானம் மிக்கதான இன்றைய நாளில், வௌிநாடுகளிலுள்ள நண்பர்கள் புதுவருட பரிசுப் பொதிகளை அனப்பியுள்ளதாக, பரிசுப் பொதிகளை அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அல்லது குறிப்பிட்ட இடங்களில் பரிசுப் பொதிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி பணத்தை வைப்பிலிடுமாறு Facebook, Whatsapp, Viber, imo ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் கிடைக்கலாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.



இவ்வாறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அறிமுகம் இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிடுவதை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலா விசாக்கள் மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ள வௌிநாட்டவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா விசாக்களில் வருகை தந்து இவ்வாறான பண மோசடி செயல்களில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜைகள் 24 பேர் கடந்த காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய பிரஜை ஒருவர் சமூக வலைத்தளத்தினூடாக பெண் ஒருவரிடம் இருந்து கிட்டத்தட்ட 3 கோடி பணத்தை மோசடி செய்த சம்பவம் ஒன்று கடந்த வாரத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தேக நபர்களிடம் சிக்காது இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.



மாவை முன்னெடுக்கும் நகர்வுகள் தொடர்ந்தும் தோல்வியில் முடிவதேன்?

 அரசியலில் எதுவுமே விபத்தாக நேரிடுவதில்லை. ஒன்று நடக்குமாக இருந்தால் அது அந்தவகையில் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்பதை உறுதிபடக்கூறமுடியும்

                                                                                                  -ஃபிராங்லின் டி ரூஸ்வேல்ட்






அரசியல் வாழ்வில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத்தவறினால் என்ன நடக்கும் என்பதற்கு அண்மைக்காலத்தில் நல்ல உதாரணமாக மாறியிருக்கிறார் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா .

குடும்ப வாரிசு அரசியலில் இருந்தன்றி தனது  அர்ப்பணிப்புமிக்க ,தியாகம் நிறைந்த அரசியல் செயற்பாடுகளால்  தமிழ் தேசிய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தவர் மாவை

.தனது 19 வயதிலேயே  இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 ம் ஆண்டு இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தார். 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தமை அவரது தியாகத்திற்கு சான்று பகர்கின்றது. மாவை கடந்த காலத்தில் செய்த அர்ப்பணிப்புக்களுக்காகவும் தியாகங்களுக்காகவும் தான்  அவரது பிதற்றல்களுக்கும் சொதப்பல்களுக்கும்  மத்தியிலும்  2000 ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடைபெற்ற ஐந்து பாராளுமன்றத்தேர்தல்களில் தொடர்ந்தும் அவரை மக்கள் தேர்ந்தெடுத்து நன்றிக்கடன் செய்தார்கள். 

ஆனால் அதற்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய சகலதையும் உதறித்தள்ளி, பன்றியுடன் சேர்ந்த பசுவாகி தீயனவற்றை மட்டுமே பதவிமோகத்தால் சிந்திக்கலானவராகி தன் கூடவே தீயவர்களையும் துஷ்டர்களையும், கெட்டவர்களையும் கொண்டு செயற்பட்டார்.

யார் யாரை காப்பாற்ற நினைத்தாரோ, எந்தத் தகுதியுமில்லாமல் அன்றேல் தகுதி இழந்தும் தனது அரசியல் பிழைப்பு வாதத்திற்காக தனக்குப் பிடித்தவரை முன்னிறுத்தினாரோ அவர்களும் தொடர்ந்தும் தோல்விகளைச் சந்தித்துவருவது தமிழர் அரசியல் கணிப்பீட்டிலிருந்து மாவையின் காய்நகர்த்தல்கள்  இலக்குத்தவறி செல்வதைப் பறைசாற்றுகின்றன. 

எதை எங்கு பேச வேண்டும், எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், தீர்மானங்களை எப்படி எடுக்கவேண்டும் என்ற விடயங்கள் எல்லாம் அரசியல் என்று வந்த பின்னர் முக்கியமானது.



கடந்த சில ஆண்டுகளாக மாவையின் நீண்ட உரைகளை செவிமடுத்திருந்தால்  அவரது சிந்தனை கட்டுக்குள் இல்லை என்பது புரிந்துகொள்ளலாம். . உரைகளின் பெரும் பகுதி பிதற்றல்களது பெட்டகமாகவே காணப்பட்டன. அதுபோன்றே மாவையின் நகர்வுகளும் தீர்மானங்களும்  தெளிவற்றதாக அமைந்திருக்கின்றன. பிதற்றும்  மாவை இன்று எடுப்பார் கைப்பிள்ளையாய் அவர் மாறிவிட்டதே இதற்கு காரணம்.  அரசியலில் அதுவும் துணிவும் சாணக்கியமும்  மிகவும் அவசியமாக தேவைப்படும் தமிழர் அரசியலில்  சிந்தனைத் தெளிவை இழந்துவிட்ட மாவை கடந்த காலத்தில் தன் தியாகங்களாலும் அர்ப்பணிப்புக்களாலும் கட்டியெழுப்பிய பெயரை  இதற்கு மேலும் பாழடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதே சாலச்சிறந்தது. 

மாவை முதுமை அடைந்துவிட்டதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறவரவில்லை மாறாக தனது தனிப்பட்ட குடுப்ப நலன்களைத் தாண்டி  சமூகத்திற்காக சிந்திக்கும் ஆற்றலையும்  திட்டவட்டமாக தீர்மானமெடுத்து செயற்படும் சாணக்கியத்தையும் இழந்துவிட்டமைக்காகவே அவர் கௌரவமாக ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.இல்லையேல் காலம் அவரை ஒதுக்கிவிடும். ஆனால் கட்டிக்காத்த கௌரவம் காற்றில் பறக்க நேரும்.


மாகாண சபைகளை இல்லாதொழிப்பதென்பது நெருப்போடு விளையாடுவதற்கு ஒப்பானது





 மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திலுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீர சேகர போன்றோர் கூறிவரும் நிலையில்  மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பது  நெருப்புடன் விளையாடுவது போன்று ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.  தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

மாகாண சபை தொடர்பாக  ஏதேனும் தீர்மானத்தை எடுக்க முன்னர்  இந்தியா வுடன் கலந்துரையாடவேண்டும் அன்றேல் பிரச்சனைகளை மீண்டும் எதிர்நோக்க நேரிடலாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாரிறி ஜயசேகர தெரிவித்திருந்தை ஆமோதிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள் அமைந்துள்ளன. 

"13வது திருத்தம் என்பது 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய உடன்படிக்கையின் விளைவாக  ஏற்பட்டது. மாகாணசபை முறைமை என்பது 13வது திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டது.  மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பது என்பது இலகுவானதல்ல என நான் அறிவேன். நாம் முற்றுமுழுதாக 13வது திருத்தத்தை இல்லாமல் செய்தால் இந்தியா எம்மோடு சிறிது அதிருப்திகொள்ளக்கூடும்.  எமது இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவுடனான நட்புறவு இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து அரசாங்கங்களும் இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பது இன்றியமையாதது. மாகாண சபைகளை இல்லாதொழிப்பதென்பது  நெருப்புன் விளையாடுவதற்கு ஒப்பானது"  என ஹிந்து பத்திரிகைக்கு மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இதேவேளை மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்திய 30 வருடகால அனுபவத்தில் இருந்து நாட்டின் அனைத்துப்பாகங்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்கமானது எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளைத் தரவில்லை எனச்சுட்டிக்காட்டியுள்ள சிறிசேன, மாவட்ட அபிவிருத்தி சபைகளை வலுவூட்டுவதே  இதற்கான தீர்வு எனத்தாம் கருதுவதாகவும் மைத்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கையில் 200ஐ நெருங்கிய கொரோனா மரணங்கள்

 



இலங்கையில் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது. 

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதன்கிழமை பின்னிரவில் அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 195 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 மரணங்களுடன் இலங்கையில் இதுவரை 199 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்றும் (30) ஏனைய மூவரும் நேற்றும் (29) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

196ஆவது மரணம்

மட்டக்களப்பு  பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நியூமோனியா மற்றும் மெனினஜைடிஸ் நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.


197ஆவது மரணம்

கொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் உக்கிர ஈரல் தொற்று மற்றம் கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட குருதி விஷமடைவினால் ஏற்பட்ட அதிர்ச்சி நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

198ஆவது மரணம்

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹோமாகாம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட உக்கிர சிறுநீரக தொற்று மற்றும் அதிக இரத்த அழுத்தத்துடன் ஏற்பட்ட இருதய நோய் நிலைஇ என அறிவிக்கப்பட்டுள்ளது.


199ஆவது மரணம்

கொழும்பு 15 (மட்டக்குளி/முகத்துவாரம்) பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர்இ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று மற்றும் உக்கிரமான நீரிழிவு நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு என்பது இந்த அரசாங்கத்தின் அழிவின் ஆரம்பமா?

 

ஒரு வைரஸ் தொற்றுக்காலத்தில் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு சிறிய தேசிய இனத்துக்கு எதிராக திருப்பியிருக்கிறது. இதனால் முஸ்லிம் மக்கள் முழுக்கமுழுக்க தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதன் விளைவாகவே தங்களை மோசமாக நடத்தும் ஓர் அரசாங்கத்துக்கு மேலும் அதிகாரத்தைக் குவிக்கும் 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆதரித்து வாக்களித்தார்கள்அது ஒரு மோசமான சரணாகதி.




ராஜபக்ஷக்களின் ஆட்சியை ஒரு தென்னிலங்கை விமர்சகர் மெரிடோகிரசி (Meritocrazy) என்று அழைப்பார். கொழும்பு டெலிகிராப் இணையத் தளத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மெரிட்டோகிரசி என்பது 'மெரிட்' அதாவது தகமை அடிப்படையில் அல்லது தகுதி அடிப்படையில் ஒருவர் ஆட்சியைப் பிடிப்பது. தகுதி என்றால் என்ன? யுத்தத்தை வென்றதால் கிடைத்த தகுதிதான். அதுதான் யுத்த வெற்றி வாதம். அது சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் 2009இற்குப் பின்னரான புதுப்பிக்கப்பட்ட வடிவம். யுத்த வெற்றிதான் ராஜபக்ஷக்களின் அரசியல் முதலீடு. அதை வைத்தே கோட்டாபய ஜனாதிபதியாக வந்தார்.

2018 ஈஸ்டர் குண்டுவெடிப்பு அவர்களுக்கு வேறு ஒரு தகுதியைப் பெற்றுக்கொடுத்தது. என்னவெனில் அதுபோன்ற குண்டுவெடிப்புக்களைத் தடுப்பதற்கு யுத்தத்தை வென்ற இரும்பு மனிதர்கள் தேவை என்ற ஒரு கூட்டு உணர்வை கூட்டு அபிப்பிராயத்தை அது சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

எனவே, ஒரு இரும்பு மனிதரை சிங்கள மக்கள் ஜனாதிபதியாக தெரிந்தெடுத்தார்கள். அதாவதுஇ யுத்த வெற்றி வாதம் 2018 ஈஸ்டர் குண்டு வெடிப்போடு தன்னை 2018, 2019 இற்கு உரியதாக புதுப்பித்துக் கொண்டது.

அதன்பின்னர் கொவிட்-19 அதுவும் ஓர் உலகளாவிய அனர்த்தம். அதை வெற்றி கொள்வதற்கு அதிகாரங்களைத் தன்வசம் குவித்து வைத்திருக்கும் ஓர் இரும்பு மனிதர் தேவை என்று சிங்கள மக்களில் பெரும்பகுதியினர் நம்பினார்கள். எனவே மறுபடியும் ராஜபக்ஷக்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக் கொடுத்தார்கள்.

யுத்த வெற்றி வாதம் கொவிட்-19இன் பெயரால் தன்னை 2020 இற்கு புதுப்பித்துக் கொண்டது. இவ்வாறு யுத்தம், குண்டுவெடிப்பு, பெரும் தொற்று நோய் போன்றவற்றை  வெற்றி கொண்டதன் மூலம் தமது தகைமையை நிரூபித்து அதன்மூலம் ஓர் அரசனுக்கு நிகரான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கும் விதத்தில் 20ஆவது திருத்தத்தையும் அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள்.

ஆனால், இவ்வாறு தொடர்ச்சியாக தாம் பெற்ற வெற்றிகளின் மீது அவர்கள் கட்டியெழுப்பிய அரசாங்கம் இப்பொழுது சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. எவையெல்லாம் அவர்களுக்கு முதலீடுகள் ஆகியனவோ அவையெல்லாம் இப்பொழுது பூமராங் ஆக திரும்பி வரத் தொடங்கிவிட்டன.

கொவிட்-19 இரண்டாவது தொற்றலை ப்ரன்டிக்ஸ் தொழிற்சாலையில் தொடங்கியபோது அதைத் தொடர்ந்து எல்லா ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களையும் அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தொடங்கியது.

இதன் விளைவாக ஏழைத் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள். தொற்றாளர் என்று சந்தேகிக்கப்பட்ட ஏழைத் தொழிலாளிகள் மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் அதாவது, பத்து நிமிடத்துக்குள் வீட்டை காலி செய்துகொண்டு தனிமைப்படுத்தல் நிலையத்துக்குச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டார்கள்.

அரசாங்கம்  நோய்த் தொற்று சந்தேகநபர்களைக் குற்றவாளிகள் போல கையாளத் தொடங்கியது. இதுதொடர்பாக அந்த ஏழை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் கருத்துக்களைத் திரட்டி மரிசா டீ சில்வா என்ற மனித உரிமை செயற்பாட்டாளர் கிரவுண்ட் வியூஸ் இணையத் தளத்தில் ஆங்கிலத்திலும் மாற்றம் இணையத் தளத்தில் தமிழிலும் ஒரு செய்திக் கட்டுரையை பிரசுரித்திருந்தார்.

அதில் பாதிக்கப்பட்ட ஏழை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் இந்த அரசாங்கத்தைப் பற்றியும் படைத்தரப்பு பற்றியும் கூறும் தகவல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. எந்தப் படைத் தரப்பின் வெற்றியைக் குறித்து அவர்கள் கிரிபத் சமைத்து கொண்டாடினார்களோ அதே படைத்தரப்பு தங்களை எவ்வளவு இழிவாகவும் கேவலமாகவும்  நடத்தியது என்று அவர்கள் அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்கள். இந்த அரசாங்கத்தின் வெற்றிக்காக அவர்கள் பாடுபட்டார்கள், வாக்களித்தார்கள்.  இப்பொழுது அதே அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பிவிட்டார்கள்.

அரசாங்கம் நோயாளர்களைக் குற்றவாளிகள் போல நடத்துகிறது என்ற அபிப்பிராயம் பரவலாக உண்டு. தென்னிலங்கையில் ஒரு நோய் தொற்றுச் சந்தேகநபர் தப்பி ஓடிவிட்டார். அவரை அரசு அலுவலர்களும் காவல்துறையும் கையாண்ட விதம் சமூக வலைத்தளங்களில் காணொளியாக பரவலாகப் பகிரப்பட்டது. அது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

நோய் முறியடிப்பு நடவடிக்கைகளில் ஒரு படைத் தரப்பை இறக்கினால் அதுவும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அதிக பலம் பெற்றிருக்கும் ஒரு படைத்தரப்பை இறக்கினால் அது நோயாளிகளை பயங்கரவாதிகள் போலவே நடத்தும் என்று பல மாதங்களுக்கு முன்னரே ஒரு சிங்கள ஊடகவியலாளர் ருவிற்றரில் பதிவிட்டிருந்தார். அதுதான் இப்பொழுது நாட்டில் நடக்கிறது.

கொவிட்-19 தொற்றிய புதிதில் அது ஒரு புது ஆபத்து என்பதனால்  நோயாளிகளையும் நோய் தொற்று சந்தேகநபர்களையும் அரசாங்கம் கடுமையாகக் கையாண்ட பொழுது ஏனையவர்களுக்கு அது ஒரு பாரதூரமான பிரச்சினையாகத் தெரியவில்லை. நோய்க் காவிகளை அவ்வாறு கடுமையாகக் கையாண்டால்தான் ஏனையவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று ஒரு கூட்டு அபிப்பிராயம் இருந்தது. முழுச் சமூகமும் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டது.

இக்கூட்டுத் தற்காப்பு உணர்வை அச்சத்தை அரசாங்கமும் அதிகாரிகளும் முழுமையாகப் பயன்படுத்தினார்கள். அந்தக் கூட்டுத் தற்காப்பு உணர்வானது இரும்பு மனிதர்கள் தேவை என்ற ஒரு தற்காப்பு நிலைப்பட்ட கூட்டு முடிவாக மாறியது. அதை அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிட்டவாக வெற்றிகளைப் பெற்றது.

முதலாவது, நோய்த் தொற்றலையின் போது தம்மைத் தற்காத்துக்கொண்ட பெரும்பாலானவர்கள் இரண்டாவது நோய்த் தொற்றலையின்போது அதைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசாங்கத்துக்கு எதிராக மாறத் தொடங்கி விட்டார்கள். இரும்பு மனிதர்களால் வைரஸைக் கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை நொறுங்கத் தொடங்கிவிட்டது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல முதலாவது தொற்றலையின் போது சொன்னார், புலிகளைத் தோற்கடித்த எமக்கு வைரஸ் ஒரு பிரச்சினை அல்ல என்று. ஆனால் புலிகளும் வைரஸும் ஒன்றல்ல என்பதனை கடந்த சில மாதங்கள் நிரூபித்திருக்கின்றன.

எனவே எந்த வைரஸை வெற்றிகொண்டதாக அரசாங்கம் மார்தட்டிக் கொண்டதோ அது முழுமையான வெற்றி அல்ல என்பதை கடந்த சில மாதங்கள் நிரூபித்து விட்டன. இது முதலாவது.நோய்த்தொற்று சிறைச் சாலைகளுக்குள் பரவியபொழுது மகர சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிங்களக் கைதிகள் கொல்லப்பட்டார்கள். அங்கேயும் பூமராங் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பியது.

சிறைச்சாலை வாசலில் பொலிசாரின் காலடிகளில் விழுந்து கதறும் ஏழைச் சிங்களத் தாய்மாரின் கண்ணீர் அரசாங்கத்தின் வைரசுக்கு எதிரான வெற்றிகள் யாவும் தோல்விகளாக மாறுவதை காட்டும் ஒரு குறியீடு எனலாமா? இது இரண்டாவது.

மூன்றாவது யுத்த வெற்றி வாதத்தை முதலீடாகக் கொண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின்னர் தனிச்சிங்கள வாக்குகளால் அரசை அமைப்போம் என்று திட்டமிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய ராஜபக்ஷக்கள் தமிழ் மக்களை மட்டுமல்லாது முஸ்லிம் மக்களையும் முழுமையாக தற்காப்பு நிலைக்குத் தள்ளினார்கள்.

கடந்த ஓராண்டு காலமாக இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. ஆனால், இப்போதிருக்கும் அரசாங்கத்தின் நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம்தான். அவர் கடந்த வாரம் கூறினார், 'இப்படியே நிலைமை போனால் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதத்தை நாட வேண்டிவரும்' என்ற தொனிப்பட. ஒரு நீதியமைச்சர் அவ்வாறு கூற வேண்டி வந்திருக்கிறது.


முஸ்லிம்களின் பண்பாட்டு உரிமைகளில் ஒன்றாகிய இறந்தவர்களை அடக்கம் செய்யும் உரிமையை ஏற்றுக் கொள்ளாத ஒரு அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அவர். இந்த அரசாங்கத்தின் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் பெருமளவுக்கு சிங்கள பௌத்தர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலானவை.

கொவிட்-19 நோயால் இறந்தவர்களின் உடல்களை உலகின் மிகப்பெரிய ஜனநாயக  நாடுகளில்கூட எரிக்காமல் புதைக்கிறார்கள். உலகில் இவ்வாறு எரிக்கப்படும் தொகையை விடவும் புதைக்கப்படும்  தொகையே அதிகம். ஆனால் இலங்கை அரசாங்கமோ முஸ்லிம்களை அவ்வாறு புதைக்க முடியாது என்று கூறுகிறது.

ஒரு வைரஸ் தொற்றுக்காலத்தில் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் ஒரு சிறிய தேசிய இனத்துக்கு எதிராக திருப்பியிருக்கிறது. இதனால் முஸ்லிம் மக்கள் முழுக்கமுழுக்க தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதன் விளைவாகவே தங்களை மோசமாக நடத்தும் ஓர் அரசாங்கத்துக்கு மேலும் அதிகாரத்தைக் குவிக்கும் 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆதரித்து வாக்களித்தார்கள்.

அது ஒரு மோசமான சரணாகதி. அப்படி சரணடைந்தது அரசாங்கத்தின் நன்மதிப்பைப் பெறலாமா, நம்பிக்கையை வென்றெடுக்கலாமா என்று அவர்கள் முட்டாள்தனமாக சிந்தித்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. முடிவில் பிறந்து 20 நாட்களேயான ஒரு குழந்தையைப் புதைக்கக் கூடாது என்று கூறி அரசாங்கம் இம்மாதத் தொடக்கத்தில் எரித்தபோது முஸ்லிம்களின் கூட்டு உணர்வு அதற்கு எதிராகத் திரும்பியது.

அங்கேயும் முதலில் எதிர்ப்பைக் காட்டியது சிங்கள முற்போக்கு சக்திகள்தான். கனத்தை மயானத்தின் மதிலில் அவர்கள் கபன் துணியைக் கட்டினார்கள். இவ்வாறு கபன் துணியைக் கட்டும் போராட்டம் மிக வேகமாக நாடு முழுவதும் விரிவடைந்தது. உடல்களைக் கட்டாயமாக தகனம் செய்வதற்கு எதிராக முதலில் எதிர்ப்புக் காட்டியதும் சிலாபத்தை சேர்ந்த ஒரு சிங்கள கத்தோலிக்கத் தாய்தான். சவஅடக்க உரிமைக்காக போராடலாம் என்ற துணிச்சலான முதலாவது முன்னுதாரணம் அந்தத் தாய்தான்.

அதைத்தொடர்ந்து முஸ்லிம்கள் கபன் துணிகளை சிறு முடிச்சுகளாக கட்டத் தொடங்கினார்கள். அந்தச் சிறிய வெள்ளைத் துண்டுகளை யாரோ இரவுகளில் அகற்றி வருகிறார்கள். ஆனாலும் கொவிட்-19 சூழலுக்குள் மிகவும் படைப்புத் திறனோடு சிந்திக்கப்பட்ட ஒரு போராட்டம் அது.

தென்னாசியப் பிராந்தியத்தில் ஏற்கனவே இந்திய விவசாயிகள் வேளாண் சட்ட வரைபுக்கு எதிராக டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது சவஅடக்க உரிமைகளுக்காக கபன் துணிப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். கபன் துணிப் போராட்டம் எனப்படுவது அரசாங்கத்தின் வெற்றிகள் பூமராங்காக திரும்பத் தொடங்கியிருப்பதன் குறியீடு எனலாமா?

மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது.

யுத்த வெற்றிகளை அரசியல் வெற்றிகளாக மாற்றத் தயாரற்ற ராஜபக்ஷக்கள் அதன் விளைவுகளை ஜெனிவாவில் அறுவடை செய்யத் தொடங்கினார்கள். இனிமேலும் வரும் மார்ச் மாதம் அவர்கள் புதுப்பிக்கப்பட்ட விளைவுகளை அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.


அதேபோல வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர்களால் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை என்பது தெரியத் தொடங்கிவிட்டது. ராஜபக்ஷக்களின் பலம் யுத்த வெற்றிதான். அதேசமயம் அவர்கள் அந்த வெற்றியின் கைதிகளும்கூட. அந்த வெற்றிகளைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியாது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான தனிச் சிங்கள வாக்குகளுக்காக அவர்கள் உசுப்பிவிட்ட பூதத்தை அடக்குவது கடினம். ஒருபுறம் கொவிட்-19 சூழலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் பரவலான அதிருப்தி.

இரண்டாவதாக கொவிட்-19 சூழலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள். மூன்றாவதாக சீனசார்பு வெளியுறவுக் கொள்கையால் ஏற்பட்டிருக்கும் வெளியுறவு நெருக்கடிகள்.

இவை எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு இந்த ஆண்டைக் கடப்பது சவால் மிகுந்ததாகவே இருக்கும் என்பதைத்தான் மனோ கணேசன் '2021ஆம் ஆண்டு என்பது இந்த அரசாங்கத்தின் அழிவின் ஆரம்பம்' என்று கூறினாரா?


அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் எழுதிய இந்தக்கட்டுரை மக்களுக்கு சமகால விடயங்கள் குறித்து தெளிவூட்டும் நோக்கில் குளோப் தமிழில் பதிவேற்றம் செய்துள்ளோம். 


Wednesday, December 30, 2020

பிரித்தானியா ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி

 



ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை தமது நாட்டில் பயன்படுத்தவதற்கு பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது.

50 மில்லியன் மக்களுக்காக பிரித்தானியாவினால் 100 மில்லியன் மருந்துகளுக்கு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதமளவில் கொரோனா தடுப்பு மருந்தினை தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்தன.

இந்த தடுப்பு மருந்து பாதுப்பானதும் தரமிக்கதும் என நிபுணர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா எனும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் கோவிஷீல்டு எனும் பெயரில் இந்த தடுப்பூசி இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் பயன்பாட்டு அனுமதிக்கு இந்திய அரசிடம் சில நாட்களுக்கு முன்புதான் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா விண்ணப்பித்துள்ளது என இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கான ஒப்புதலை இந்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரிட்டனில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை உருவாக்கும் பணி தொடங்கியது. ஏப்ரல் மாதம் முதல் முறையாக தன்னார்வலர்கள் உடலில் இது செலுத்தப்பட்டது.

பின்பு பல்லாயிரம் தன்னார்வலர்கள் உடல்களில் செலுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஏற்கனவே பிரிட்டனில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இதுவரை சுமார் 6 லட்சம் பேருக்கு அந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மலிவானது மற்றும் அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கும் இருப்பு வைப்பதற்கும் எளியது என்பதால் பிரிட்டனில் மேலும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும்.

ஃபைசர் தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிதீவிர உறை நிலையில் இருப்பு வைக்கவேண்டும். ஆனால் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியை வழக்கமான குளிர்சாதனப் பெட்டியிலேயே இருப்பு வைக்க முடியும்.

இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வைரஸ் தொற்றும் வாய்ப்பை 70 சதவீதம் கட்டுப்படுத்தும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தின் அளவை இன்னும் சரியாகக் கணித்துக் கொடுத்தால், இந்த மருந்து 90% வரை பாதுகாப்பளிக்கும் என்கின்றன இந்த மருந்தை வைத்து செய்யப்பட்ட சோதனைகளின் தரவுகள்.

சிம்பன்சி வகை மனிதக் குரங்குகளுக்கு சளி பிடிக்கக் காரணமான வைரஸ் (common cold virus) ) நுண்மியை செயலிழக்கச் செய்து அதில் இருந்து இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நுண்மி மனித உடலில் நுழைந்ததும் தொற்றாக மாறி பல்கிப் பெருகாத வகையில் அதன் தன்மை மாற்றப்பட்டு தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.



மாற்றத்தை வலியுறுத்திய பெண் செயற்பாட்டாளருக்கு சவுதியில் சிறைத்தண்டனை

 



 மாற்றத்தை வலியுறுத்தி குரல் கொடுத்து வந்த பெண் செயற்பாட்டாளர் லுஜேன் அல் ஹத்லூலுக்கு சவுதி அரேபியாவில் 5 ஆண்டுகளும் 8 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய நீதிமன்றம், அவருக்கான தண்டனையை 2 ஆண்டுகள் 10 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டடை ஆழமான சங்கடத்தை தருவதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த பெண் செயற்பாட்டாளர் தடுப்புக்காவல் என்ற பெயரில் இரண்டரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார்.

சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் உரிமைக்கான கோரிக்கையை எழுப்பிய அந்நாட்டின் பிரபல செயற்பாட்டாளர்களில் குறிப்பிடத்தக்கவர் லுஜேன் அல் ஹத்லூல்.

31 வயதான ஹத்லூல், 2018 ஆம் ஆண்டில், அரசுக்கு எதிரான அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது விடுதலையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.


இந்த நிலையில், பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சவுதி அரேபிய சிறப்பு குற்றவியல் நீதிமன்றம், தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு ஆதரவாக செயற்படல் உள்ளிட்ட ஹத்லூல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதாகக் கூறி அவருக்கு தண்டனை விதித்து திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, ஹத்லூல் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளனர். சிறையில் ஹத்லூல் சித்ரவதை செய்யப்பட்டதாக அவர்கள் முறையிட்டனர். ஆனால்இ அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமையைப் பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், 2018 ஆம் ஆண்டில் ஹத்லூல் கைது செய்யப்பட்டார். ஆனால்இ அதற்கும் ஹத்லூல் தடுத்து வைக்கப்பட்ட வழக்கிற்கும் தொடர்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிறைவிற்கு வரும் வேளையிலும் அழிவைத் தொடரும் 2020: குரோஷியாவின் நகரை நிர்மூலமாக்கிய நிலநடுக்கம்

 



2020ம் ஆண்டு நிறைவிற்கு வரும் வேளையிலும் அழிவுகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. ஐரோப்பிய நாடான குரேஷியாவில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நில அதிர்வை கண்டுபிடிக்கும் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குரேஷியாவில் நடக்கும் மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்று அமெரிக்காவின் புவியியல் அமைப்பான யுஎஸ் ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்துள்ளது. இதே அளவிலான நிலநடுக்கம் ஒன்று குரேஷிய தலைநகர் ஜாக்ரெப் அருகே 1880ல் நிகழ்ந்துள்ளது.

பெட்ரீனியா எனுமிடத்தில் ஒரு 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என்று செவ்வாய்க்கிழமைஇ அங்கு அந்த நகரத்திற்கு சென்ற அந்நாட்டின் பிரதமர் ஆண்ட்ரே ப்லென்கோவிட்ச் தெரிவித்துள்ளார்.

அதன் அருகே உள்ள க்ளினா எனும் நகரத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்று துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.



ஜாஜினா எனுமிடத்தில் தேவாலயத்தின் கட்டட இடிபாடுகளுக்கு இடையே இன்னொருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

பாதி நகரம் அழிந்துவிட்டதாகவும் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் பெட்ரீனியா நகரின் மேயர் தெரிவித்துள்ளார். இந்த நகரத்தில் சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர்.

குரேஷியாவின் தலைநகர் ஜார்ஜெப்பிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

பெட்ரீனியாவில் உள்ள நகரவையின் இடிபாடுகளிலிருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதாக குரேஷிய நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்டை நாடுகளான போஸ்னியா மற்றும் செர்பியாவில் மட்டுமல்லாது இத்தாலி வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஸ்லோவேனியா மற்றும் குரேஷியா ஆகிய நாடுகளுக்கு சொந்தமான கர்ஷ்கோ அணுமின் நிலையமும் ஸ்லோவேனியாவால் மூடப்பட்டுள்ளது.



பெட்ரீனியா மக்களுக்கு பேரிடி


நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரதுக்குள் குரேஷியாவின் பிரதமர் மற்றும் அதிபர் ஆகியோர் பெட்ரீனியா நகரில் ஏற்பட்ட சேதங்களைச் சென்று பார்வையிட்டனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சண்டையில் பெரிதும் அழிந்த ரஷ்ய பிரதேசமான செசன்யாவின் தலைநகர் க்ரோஸ்னி உடன் பெட்ரீனியா நகரின் சேதத்தை ஒப்பிட்டார் அதிபர் ஜோரான் மிலன்கோவிட்ச்.

பெட்ரீனியா நகரம் மனிதர்கள் வாழ இனிமேலும் பாதுகாப்பானது அல்ல என்றும் பிரதமர் ஆண்ட்ரே ப்லென்கோவிட்ச் தெரிவித்துள்ளார்.

ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது; இங்கு இருப்பது பாதுகாப்பானதல்ல என்பதால் மக்கள் இங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.



1990களில் நடைபெற்ற குரேஷிய விடுதலை போருக்குப் பின்பு பெட்ரீனியா நகர மக்கள் தங்கள் நகரை மீண்டும் கட்டியெழுப்ப முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உண்டான அழிவு அவர்களுக்குப் பேரிடியாக இருக்கும்.

பாரம்பரிய தொழில் துறை சரிவால் சமீபத்தில் உண்டான பொருளாதார நெருக்கடியையும் அவர்கள் எதிர்கொண்டு வந்தனர்.

மறு கட்டுமானங்களை மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கப்படும் என்று குரேஷிய தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

ஆனால் பெட்ரீனியா மக்கள் தங்கள் புத்தாண்டை தற்காலிக முகாம்களில்தான் கழிக்க வேண்டியிருக்கும். அவர்கள் விரைவில் வீடு திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஒரு மழலையர் பள்ளி இடிந்து விழுந்தது. ஆனால் அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.