கடந்த நவம்பர் 3ம்திகதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் எத்தனை முறைதான் வெற்றிபெற்றதாக அறிவிப்புக்கள் வெளியாகும் நாங்களும் அதனைக் கொண்டாடுவது என டுவிட்டர் தளத்தில் சிலர் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தனர். ஒரு வழியாக நேற்றையதினம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் மன்றக் கல்லூரி உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்களின் விருப்பம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்தல் சபையின் அறிவிப்பு வெளியான பின்பு உரையாற்றிய அவர், 'அமெரிக்க ஜனநாயகம் தள்ளப்பட்டது, பரிசோதிக்கப்பட்டது மற்றும் அச்சுறுத்தப்பட்டது,' ஆனால், அது 'மீண்டு வரக்கூடியது உண்மையானது மற்றும் வலிமையானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது ' என்றும் தனது உரையில் குறிப்பிட்டார் பைடன்.
2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு தேவையான சில இறுதி கட்ட நடவடிக்கைகளில் தேர்தல் சபை உறுப்பினர்கள் கூடிப் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதும் ஒன்றாக இருந்தது.
(அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி) டிசம்பர் 14ஆம் திகதி அது நடந்து முடிந்துள்ளது).
எனினும் தேர்தல் சபை உறுப்பினர்கள் மூலம் ஜோ பைடன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவை தற்போதைய ஜனாதிபதியும் தேர்தலில் தோல்வியடைந்த குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று கருதப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள் நேரடியாக ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில்லை. ஒவ்வொரு மாகாணத்துக்கும் அந்த மாகாணத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ற எண்ணிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் சபை உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள்.
அந்த மாகாணத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் கட்சி அதன் தேர்தல் சபையைக் கைப்பற்றும்.
அந்தந்த மாகாணத்தில் வென்ற கட்சியின் தேர்தல் சபை உறுப்பினர்கள் ஒன்றாகக் கூடி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள்.
நவம்பர் 3ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 306 தேர்தல் சபை இடங்களையும் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 232 தேர்தல் சபை உறுப்பினர்களையும் பெற்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெல்ல ஒரு வேட்பாளர் குறைந்தது 270 தேர்தல் சபை உறுப்பினர்களைப் பெறுவது அவசியம் .
அமெரிக்க ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே தேர்தல் சபை உறுப்பினர்களின் பணியாகும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல் சபை கூடி புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்யும்.
அந்தந்தக் கட்சியின் தேர்தல் சபை உறுப்பினர்கள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். கட்சி மாறி வாக்களிப்பது மிகவும் அரிதானதாகும்.
இனி அடுத்து என்ன நடக்கும்?
ஒவ்வொரு மாகாணத்திலும் நடந்த தேர்தல் சபை வாக்கெடுப்பின் முடிவுகள் அனைத்தும் தலைநகர் வாஷிங்டன் டிசி-க்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கு வரும் ஜனவரி 16ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தேர்தல் சபை வாக்குகள் எண்ணப்படும்.
இந்தக் கூட்டுக் கூட்டத்துக்கு தற்போதைய அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தலைமை வகிப்பார்.
இந்த நடவடிக்கை வரும் ஜனவரி 20ஆம் திகதி ஜோ பைடன் ஜனாதிபதியாகவும் , கமலா ஹாரிஸ் உப ஜனாதிபதியாகவும் பதவி ஏற்க வழிவகுக்கும்.
தேர்தல் சபை உறுப்பினர்களால் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டால் தாம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறப் போவதாக நவம்பர் மாதம் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல், தேர்தலில் மோசடி நடந்தது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார் டிரம்ப்.
டொனால்ட் டிரம்ப் நிலை இனி என்ன?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை மாற்ற டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை அணுகி மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் பெரும்பாலும் பலனளிக்கவில்லை. இருந்தாலும் டிரம்ப் அணியினர் தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை.
அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான மாற்றுத் தேர்தல் சபை நடவடிக்கைகளை டிரம்ப் அணி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதனால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை.
பைடன் வெல்வதைவிடவும் இந்த நடவடிக்கைகள் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு சற்று ஆறுதல் தருவதாக இருக்கும்.
நீதிமன்றங்களும் அமெரிக்க நாடாளுமன்றமும் டிரம்ப் தரப்பு மேற்கொள்ளும் தேர்தல் சபை நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஜோ பைடன் சார்ந்துள்ள ஜனநாயக கட்சியின் கட்டுபாட்டில் உள்ளது.
அமெரிக்காவின் சட்டங்களும் ஜோ பைடன் ஜனாதிபதி பதவி ஏற்பதற்கே வழிவகை செய்யும்.
உண்மையான உலகில் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை என்றே சொல்லலாம்.
நன்றி : பிபிசி செய்திச் சேவை
No comments:
Post a Comment