புதிய நாடாளுமன்றத்தில் நான்கு தமிழ் உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்துகொண்டு எல்லோரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்கள் கருத்துக்களை சிறப்பாக முன்வைக்கிறார்கள். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கட்சிவேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் பெரும் அபிமானத்தைப் பெறுகிறார்கள்.
அவர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் மதியாபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் ஏற்கெனவே 10 வருடங்கள் சபையில் அங்கம் வகித்தவர். மற்றைய மூவரில் தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 10 வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எஞ்சிய இருவரான உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் சாணக்கியன் ராகுல் இராஜபுத்திரன் இராசமாணிக்கமும் முதற்தடவையாக நாடாளுமன்றத்துக்கு வந்திருப்பவர்கள்.
இவர்கள் நால்வரும் ஆளுமைத்திறமையுடன் ஆங்கிலத்தில் உரையாற்றுவதால் தமிழ் மொழியை விளங்கிக் கொள்ளமுடியாத பல உறுப்பினர்கள் இவர்கள் கூறுவதை நேரடியாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களும் நீண்டகாலத்துக்குப் பிறகு தங்கள் சார்பில் வலுவான முறையில் வாதங்களை முன்வைக்கக்கூடிய ஆளுமைமிக்கவர்கள் ஒரு சிலராவது பாராளுமன்றம் வந்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியடைகிறார்கள்.
விக்னேஸ்வரன் தனக்கேயுரித்தான முறையில் ஏற்னெவே தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கிறார். இன உணர்ச்சிகளைக் கிளறும் அவரது உரைகள் ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் உறுப்பினர்களுக்கு ஆத்திரத்தை கிளறினாலும், அவர்களின் குறுக்கீடுகளை அவர் அலட்சியம் செய்துவிடுகிறார்.
சுமந்திரனைப் பொறுத்தவரை, கடந்த பத்து வருடங்களாக நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயற்பட்டு வந்திருக்கிறார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் பெரும் நம்பிக்கைக்கு பாத்திரமானவரான சுமந்திரன் ஒரு அரசியலமைப்பு சட்டநிபுணர் என்ற வகையில் கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு செயன்முறைகளில் துடிப்பாக பங்கெடுத்து பாடுபட்டவர். அது பல்வேறு காரணிகளினால் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது என்பது வேறு விடயம்.
போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக வந்த காரணத்தினால் சுமந்திரன் தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகத்தின் ஈடுபாடுகளில் தன்னை சம்பந்தப்படுத்தவேண்டிய தவிர்க்க முடியாததேவை ஏற்பட்டது. அதற்கு அவரது ஆங்கிலப்புலமை தாராளமாகக் கைகொடுத்தது. அவரின் அணுகுமுறைகள் கடும் தமிழ்த் தேசியவாத சக்திகளின் விமர்சனங்ளுக்கு உள்ளாகிய போதிலும், அவர் நடைமுறைச் சாத்தியமானது என்று தான் நம்பிய வழிமுறைககளில் அவற்றை அணுகினார். இவற்றின் காரணத்தால் ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் தமிழர் அரசியலில் ஒரு மைய ஸ்தானத்துக்கு வரக்கூடியதாக இருந்தது. சுமந்திரன் அவரது தமிழரசு கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலரின் வெறுப்புக்கும் ஆளானார் என்பதை அண்மைய நிகழ்வுப் போக்குகளில் இருந்து அவதானிக்கக்கூயதாக உள்ளது.
அடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பார்ப்போம். அவர் ஒரு பாரம்பரிய அரசியல் குடும்பமொன்றின் வாரிசு. ஒரு பாரிஸ்டர். அதற்கு மேலாக சில தனித்துவமான திறமைகளை வளர்த்துக்கொண்டவர். கடந்த பத்து வருடங்களாக நாடாளுமன்றத்துக்கு வரமுடியாமல் போய்விட்டாலும் கூட மீண்டும் புதிய நாடாளுமன்றத்துக்கு வந்த குறுகிய காலத்துக்குள் தனது வாதத் திறமையாலும் ஆங்கில நாவன்மையாலும் தமிழ் மக்களின் அபிமானத்தை இலகுவாகப் பெற்றுவிட்டார்.
நாடாளுமன்றத்தில் சில விவாதங்களின்போது தன்னைக் குறுக்கீடு செய்பவர்களை பொன்னம்பலம் மறுதலிப்பதில் காட்டுகின்ற துணிச்சலும் இலாவகமும் நீண்டகாலமாக நாடாளுன்ற அனுபவமுடைய ஒரு தலைவரின் செயற்பாட்டை பிரதிபலிப்பதாக இருக்கிறது. அவரது தீவிரவாத அரசியல் நிலைப்பாட்டையும் கோட்பாட்டுப் பிடிவாதத்தையும் ஒதுக்கிவிட்டுப்பார்த்தால், வடக்கில் ஒரு முதன்மையான தலைவராக வரக்கூடிய ஆற்றல்கள் அவரிடம் இருக்கின்றன என்று சில அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.
இறுதியாக சாணக்கியனைப் பார்ப்போம். சுமந்திரனையும் பொன்னம்பலத்தையும் விடவும் மிகவும் இளையவரான இவர் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்பு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான காலஞ்சென்ற எஸ்.எம்.இராசமாணிக்கத்தின் பேரனாவார்.
சாணக்கியன் மும்மொழிகளிலும் சரளமாகப் பேசுவதால், சபைக்குள் சகல தரப்பு உறுப்பினர்களினதும் கவனத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டார். அவரது உரைகள் மிகவும் சுறுசுறுப்பானவையாகவும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்பவையாகவும் இருக்கின்றன. ஒரு பத்துநிமிட உரையில் மும்மொழிகளிலும் மாறிமாறி விவாதிக்கிறார். முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தையும் சாணக்கியன் தயங்காமல் விமர்சிக்கிறார். அவரது இந்த விமர்சனங்களை முஸ்லிம் மக்கள் வரவேற்கிறார்கள்.
சாணக்கியன் இதே திறமையுடனும் துணிச்சலுடனும் தொடர்ந்து இயங்குவாராயின் கிழக்கில் தமிழர் அரசியலில் தற்போது நிலவும் தலைமைத்துவ வெற்றிடத்தை எதிர்காலத்தில நிரப்பக்கூடியவராக வளருவார் என்று பலரும் நம்புகிறார்கள்.
தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைசிறந்த சட்ட நிபுணர்களாகவும் கற்றறிந்த பெருமகன்களாகவும் விளங்கிய நீண்டகாலகட்டமொன்று இருந்தது. அவர்கள் எல்லோரும் சிறந்த விவாதிகளாக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை. இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களை நாடாளுமன்ற அரசியல் மூலமும் சிறந்த ஆங்கில உரைகளின் மூலமும் தமிழர் பிரச்சினைக்கு தீரவுகண்டுவிட முடியும் என்ற வாதமாக வியாக்கியானப்படுத்தவும் தேவையில்லை.
தமிழர்களுக்கு இப்போது இருக்கக்கூடிய ஒரே மார்க்கம் ஜனநாயக அரசியலே என்று வந்தபிறகு அந்த அரசியலின் முக்கியமான அங்கமான நாடாளுமன்ற அரசியல் சிறப்பாக பயன்படுத்தக்கூடிய ஆற்றல் இளைய தலைமுறை அரயல்வாதிகளுக்கு தேவையல்லவா?
வீ. தனபாலசிங்கம்
( நன்றி: வீரசேகரி மற்றும் மாற்றம்)
No comments:
Post a Comment