Wednesday, December 2, 2020

தமிழ் கட்சிகள் நியமித்துள்ள அரசியல்யாப்பு உருவாக்க குழு ஏற்படுத்தியுள்ள உணர்வலைகள்!

 

இலங்கையில் சிறுபான்மையினங்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவரும் இன்றைய காலத்தில் முன்னெடுக்கப்படும் புதிய அரசியல் யாப்பு உருவாக்க பணிகள் தொடர்பாக தமிழ்க்கட்சிகள் சில இணைந்து  அரசியல் யாப்பு வரைபுக் குழுவை அமைத்திருக்கின்றன.  
இந்தக் குழு தொடர்பாக தனது முக நூலில் பதிவிட்டுள்ள பிரபல வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்






ஈழத்தமிழினத்தின் தற்போதைய இழிநிலை : புதிய சட்டவரைபை தயாரிக்க சட்டத்துறையில் அடிப்படை தகுதி அற்றவர்களைக் கொண்ட குழு நியமனம்

இன்றைய ஊடக அறிக்கைகளின் படி தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து 5 பேர் கொண்ட அரசியல் யாப்பு வரைபுக் குழுவை நியமித்து இருப்பதாகவும் அதில் மாவை சேனாதிராஜா தலைமையில் சிவிகே  சிவஞானம், சுரேஷ் பிரேமச்சந்திரன் எம் கே சிவாஜிலிங்கம் , பொருளியல் பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் செயற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



 இதில் கோமாளித்தனம் என்னவென்றால் இவர்களில் ஒருவர் கூட அடிப்படை சட்டஅறிவுடைய சட்டத்தரணியாக கூட இருக்கவில்லை என்பதுடன்  அதன் காரணமாக இத்தகைய குழு அமைக்கப்பட்டது கற்றுஅறிந்தோர் சமூகமாக இருந்த ஈழத்தமிழினத்தில் உள்ள ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது. புலிகளின் காலத்திலேயே சட்டவரைபை அவர்கள் உருவாக்க முயன்றபோது நேர்மையாக தமது உறுப்பினர்களின் சட்டஅறிவு போதாது என்பதை ஏற்றுக்கொண்டு முன்னாள் சட்டமாஅதிபர் சிவபசுபதி சட்டநிபுணர் விசுவேந்திரன் மேலும் பல கற்றறிந்த பேராசிரியர்களை கொண்ட ஆலோசனைக்குழுவை நியமித்து இருந்தார்கள். ஆனால் இன்று சட்டம் சம்பந்தமான அடிப்படை அறிவற்ற குழு ஓன்று அரசியல் யாப்பு வரைபை தயாரிக்க புறப்பட்டு இருப்பது இந்தியா அல்லது வேறு சக்திகளினால் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஒரு அரசியல் யாப்பு வரைபுக்கு உயிர் கொடுக்கும் சூழ்ச்சியோ என்ற நியாயமான சந்தேகம் பலர் மனதிலும் எழுந்துள்ளது. கடந்த காலத்தில் சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் தமிழர் தேசத்தை பாதிக்கும் பிரச்சினைகளில் முடிவெடுக்கும் போது தொடர்புடைய துறைசார் நிபுணர்களையும் பேராசிரியர்களையும் கொண்ட ஆலோசனைச்சபை அமைத்து அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படவேண்டும் என்று தமிழ் கட்சிகளை கோரியிருந்தேன். ஆனால் தமிழ்கட்சிகளின் தற்போதைய தான்தோன்றித்தனமான செயல்பாடுகள் கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற் கூற்றம் என்று ஒளவையார் மூதுரையில் பாடியிருப்பதை நினைவூட்டுகிறது. இந்த நிலையில் இந்தக் குழுவினரின் செயல்பாடுகளையும் இவர்களால் சமர்ப்பிக்கப்பட உள்ள அரசியல் யாப்பு  வரைபையும் ஈழ தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் பொறுப்பு வாய்ந்த தமிழ் ஊடகங்கள் இது தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும்  விநயமாக கேட்டுக்கொள்கிறேன். 


நன்றி 


Dr. முரளி வல்லிபுரநாதன் 
சமுதாய மருத்துவ நிபுணர்


சமுதாயத்தில் தனது அறிவிற்காக மதிக்கப்படுகின்றவர்களில் ஒருவரான டொக்டர் முரளி வல்லிபுரநாதனின் கருத்துக்கள் ஆராயப்படவேண்டியதாகும்.

அன்றாடம் கஸ்டப்பட்டு உழைக்கின்ற சராசரி மனிதர்கள் கூட தனது பிழைப்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் ஆனால் இனத்தை வைத்து பிழைப்பு நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பவனென்ற வகையில்  இந்தக் குழு அரசியல் பிழைப்பிற்காக அமைக்கப்பட்ட குழு என்றே எண்ணத்தோன்றுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் அடைந்த தோல்வியை அடுத்து தமது அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்காக தாம்  மக்களுக்காக செயற்படுகின்றோம் என்பதை காண்பிப்பதற்கு  தமது வீச்செல்லைகளைத் தாண்டிய கடமைகளைப் பொறுப்பேற்று மக்களைப் பலிக்கடாவாக்கிவிட முயலக்கூடாது.

சில தினங்களுக்கு முன்னர் மக்கள் முன்னேற்றக்கட்சியின் செயலாளர் நாயகமும்  முன்னாள் எம்.பி .சாம் தம்பிமுத்துவின் புதல்வருமான அருண் தம்பிமுத்துவை மெய்நிகர் நேர்காணல் செய்த போது  அடுத்து வரும் தேர்தல்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். தமிழர்களின் இருப்பிற்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்தை உணர்ந்தே தமிழ்த்தேசிய அரசியலில் ஈடுபடத் தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ராஜபக்ஸ தரப்பினருடன் நெருக்கமான உறவைப் பேணிய அவர் வேண்டுமானால் ராஜபக்ஸக்களின் ஆட்சியில் ஏதோ ஒரு பதவியை எடுத்துக்கொண்டு  மௌனித்திருக்க முடியும். ஆனால்  தமிழர்களின் இருப்பிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து  தமிழ்த் தேசிய அரசியலில்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் விக்னேஸ்வரன் போன்றவர்களையும் இணைத்துக்கொண்டு  ஒன்றாக பயணிக்க வேண்டும் என்று கூறுகின்றார். 


தமிழர்கள் தற்போது ஏற்பட்டிருக்கும் தமது இருப்பிற்கான கேள்விக்குறிக்கு மத்தியில் ஒற்றுமையுடன் தமக்கு மத்தியிலுள்ள சிறந்த ஆற்றல் மிக்கவர்களின் பங்களிப்புக்களைப் பெற்று செயற்படவேண்டியது அவசியம்.



கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நேற்றையதினம் இவ்வாறான பதிவொன்றை ஃபேஸ்புக்கில் இட்டிருந்தார்.

"புதிய அரசியலமைப்பில் இடம்பெற வேண்டிய அடிப்படை உரிமைகள் அத்தியாயம் தொடர்பிலான முழுமையான முன்வைப்பொன்றை வெளிக்கொண்டு வந்துள்ளோம். கலாநிதி. அசங்க வெலிக்கல (எடின்பரோ பல்கலைக்கழகம்இ ஐக்கிய இராச்சியம்) கலாநிதி. தினேஷா சமரரத்ன (கொழும்புப் பல்கலைக்கழகம்), கலாநிதி. கலன செனரத்தின (பேராதனைப் பல்கலைக்கழகம்), கலாநிதி கிஹான் குணத்திலக்க (ஹார்வார்ட் பல்கலைக்கழகம்) மற்றும் என்னால் கூட்டாக உருவாக்கப்பட்ட இந்த சமர்ப்பணம் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான நிபுணர் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஒருவருக்கு பிணை வழங்கப்படுதல் ஒரு அரசியலமைப்பு உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும், இறந்தவர்களை நினைவு கூறுவதற்கான உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும். மேல் நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் விண்ணப்பங்களிற்கான முதனிலை நீதிமன்றங்களாக வேண்டும். அடிப்படை உரிமை மீறல்களுக்கு எழுத்தாணை ஓர் பரிகாரமாக வழங்கப்பட வேண்டும். உரிமைகளிற்கும் சுதந்திரங்களுக்கும் விதிக்கப்படும் மட்டுப்பாடுகள் குறைந்தபட்சமாக இருப்பதற்கான யோசனைகள் எனப் பல்வேறு பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான முன்னெடுப்புக்களே  தற்போதைய நிலையில் அவசியமாகும். அதைவிடுத்து தமது பிழைப்பிற்காக தகுதியற்றவர்களை அரசியல்யாப்பு உருவாக்கம் போன்ற முக்கியமான விடயங்களில்  நியமிப்பது கேலிக்கூத்தாகவே அமையும். 

No comments:

Post a Comment