அவசரகால அனுமதி அளித்து ஃபைசர் தடுப்பூசியை(Pfizer vaccine) பொதுமக்களுக்குப் படிப்படியாக அளிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரச் செயலாளர் மாட் ஹான்காக் அறிவித்தார். புதிய வேற்றுருவ (varient) வைரஸ் உருவாகியுள்ளது என்ற இந்தச் செய்தியை 'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்' என்ற மருத்துவ ஆய்வு இதழ் பிரசுரிக்க காட்டுத்தீ போலச் செய்தி பரவிப் புதிய அச்சம் தோன்றியுள்ளது.
பிரிட்டனின் தென்பகுதியில் இந்த வேற்றுருவம் கூடுதலாகப் பரவியுள்ளதாக ஹான்காக் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் மற்ற வகைகளை விஞ்சி இந்தப் புதிய வேற்றுருவம் கூடுதலாகக் காணப்படுகிறது. பிரிட்டனின் வேறு பகுதிகளுக்கும் பரவிவருகிறது.
இந்த வேற்றுருவ வைரஸால் இரண்டாம் முறை தொற்று ஏற்பட்டால் மறுபடியும் நோய் ஏற்படுமா எனவும் மேலும் வீரியத்துடன் இந்த வேற்றுருவ வைரஸ் பரவுகிறதா எனவும் கவலை எழுந்துள்ளது.
ஏற்கெனவே உள்ள வைரஸ் மரபணு வரிசையை மனதில் கொண்டுதான் தடுப்பூசிகள் தயார் செய்யப்படுகின்றன. அதுவும் குறிப்பாக ஃபைசர் தடுப்பூசி ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி போன்றவை ஆர்என்ஏ மரபணுத் தொழில்நுட்பத் தடுப்பூசிகள். எனவே புதிய வேற்றுருவம் தோன்றியுள்ள நிலையில் தடுப்பூசிகள் வேலை செய்யுமா என்பது குறித்துக் கூடுதல் கவலையும் எழுந்துள்ளது.
புத்தகத்தைப் பார்த்துப் படி எடுத்து எழுதும்போது மூலப் பிரதிக்கும் நகல் பிரதிக்கும் இடையே சில சமயம் அங்குமிங்கும் எழுத்துப் பிழைகள் ஏற்படும். அதுபோல வைரஸ் இனப்பெருக்கம் செய்யும்போது மரபணு வரிசையில் அங்கும் இங்கும் மாற்றம் ஏற்படும். இதனை 'மரபணு திடீர் மாற்றம்' என்பார்கள். இப்படி மரபணு மாற்றம் நிகழும்போது பல சமயங்களில் மாற்றம் அடைந்த வைரஸ் செயலிழந்துவிடும். சில சமயம் புதிய வேற்றுருவமாக மாறித் தொடரும்.
தற்போது ஏற்படுள்ள திடீர் மாற்றத்தின் தொடர்ச்சியாகப் புதிதாக உருவாகியுள்ள வேற்றுருவம் VUI – 202012/01 என்று பெயரிடப்பட்டுள்ளது. முதன்முதலில் சீனாவின் வூஹான் நகரத்தில் இனம் காணப்பட்ட வைரஸின் மரபணுத் தொடரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது 17 இடங்களில் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வேற்றுருவ மரபணுத் தொடரில் கரோனா வைரஸின் ஸ்பைக் புரத மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு அமினோ அமிலங்களைப் பிணைத்துப் புரதங்களை வைரஸ் தயாரிக்க வேண்டும். மொத்தம் உள்ள 21 அமினோ அமிலங்கள் எந்த வரிசையில் கோக்க வேண்டும் என்பதற்கான ஆணை தொடர்கள் கொண்டதுதான் மரபணு வரிசை. இந்த வரிசையில் மாற்றம் ஏற்பட்டால் உருவாகும் அமினோ அமில வரிசையில் மாற்றம் ஏற்படும். அந்தச் சமயங்களில் உருவாகும் புரதத்தின் தன்மையில் மாறுபாடு ஏற்படலாம்.
புதிய வேற்றுருவம்
VUI – 202012/011 வேற்றுருவ மரபணு வரிசையில் குறிப்பாக ஸ்பைக் புரத அமினோ அமில வரிசையில் 501-வது இடத்தில் ஏற்பட்ட மாற்றம்தான் மற்ற திடீர் மாற்றங்களைவிடக் கூடுதல் கவனம் பெறுகிறது. அங்கே அஸ்பாரகின் (asparagine) (N) என்ற அமினோ அமிலத்துக்கு பதிலாக டைரோஸின்(Tyrosine) (Y) என்ற அமினோ அமிலம் வேற்றுருவ ஸ்பைக் புரதத்தில் அமைந்துவிடுகிறது. எனவேஇ இந்த மாற்றத்தை N501Yஎன்பார்கள்.
மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காத வைரஸின் ஆர்என்ஏவின் நடுவே கொரோனா வைரஸின் ஸ்பைக் புரத மரபணுவை இணைத்துத்தான் ஃபைசர் போன்ற ஆர்என்ஏ வகை தடுப்பூசிகளை தயாரிக்கிறார்கள். இந்தத் தடுப்பூசி நமது உடலில் சென்று செல்களுக்குள் செல்லும். அங்கே கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை நமது செல்கள் குறிப்பாகச் சுவாச மண்டல செல்கள் தயாரிக்கும். கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் அந்நியப் பொருள் என்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அந்த அந்நியப் புரதத்தை அழிக்க ஏற்ற ஆன்டிபாடியைத் தயார் செய்யும். ஒரு தடவை முறையாக ஆன்டிபாடி தயார் செய்துவிட்டால் அதையும் அந்நியப் பொருளையும் நமது நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும்.
தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டால் வைரஸ் நமது உடலுக்குள்ளே சென்று ஸ்பைக் புரதம் உட்பட பல்வேறு புரதங்களைத் தயார் செய்யும். ஸ்பைக் புரதம் தயாரானதுமே நோய் எதிர்ப்பு சக்தி அதனை இனம்கண்டு அழிக்கத் தொடங்கிவிடும். ஸ்பைக் புரதம் இல்லாமல் கொரோனா வைரஸ் செல்களுக்குள் செல்ல முடியாது, செல்களுக்குள் சென்றாலும் இனப்பெருக்கம் செய்ய முடியாது. எனவே, வைரஸ் அழிந்து நோய்த் தொற்று ஏற்படாது.
ஆர்என்ஏ வகை மரபணுத் தொழில்நுட்பத் தடுப்பூசிகள் பயன்படுத்தும் ஸ்பைக் புரத மரபணு வரிசையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்தான் N501Y மாற்றம். எனவே ஃபைசர் உட்பட மரபணுத் தொழில்நுட்பத் தடுப்பூசிகள்இ ஏனைய தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்துக் கேள்வி எழும்பியது. உள்ளபடியே வேற்றுருவமெல்லாம் தனியினம் (strain) அல்ல. மரபணு வரிசையில் சில மாற்றங்கள் எழுந்தாலும் குணத்தில் பெரும் மாறுபாடு இருக்காது.
வேற்றுருவ வைரஸ்களில் மரபணு வரிசையில் மாற்றம் இருந்தாலும் அதன் மருத்துவ விளைவுகளில், அதாவது பிறருக்குப் பரவும் தன்மை, நோய் ஏற்படுத்தும் திறன் முதலியவற்றில் கணிசமான மாற்றம் ஏதும் இருக்காது. சில சமயம், மரபணு மாற்றங்களின் எண்ணிக்கை கூடி வைரஸின் தன்மையில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். அதுவே தனியினம்.
No comments:
Post a Comment