Thursday, December 24, 2020

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி. இன்று நள்ளிரவு முதல் ஊடரங்கில்லை

 



இன்று 24ம்திகதி நள்ளிரவு முதல் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என கொவிட்-19 தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத்தளபதியுமான லெப்ரினற் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் நாடுதழுவிய ரீதியிலான ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் ஒரு வாரகாலத்திற்கு ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வதந்திகள்  பரவிவந்த நிலையில் இராணுவத்தளபதியின் அறிவிப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைப்பதாக அமைந்துள்ளது. 


நாட்டில் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில்  நாட்டில் ஒருவாரகால முடக்கநிலையை அறிவிக்க வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே வதந்திகளும் பரவியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இதேவேளை ,நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 22 மாவட்டங்களில் 580 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 228 பேர் கம்பஹா மாவட்டத்தில் 108 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 68 பேர் கண்டி மாவட்டத்தில் 40 பேர் திருகோணமலை மாவட்டத்தில் 18 பேர் இரத்தினபுரி மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தலா 17 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா 15 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

மேலும் குருணாகல் மாவட்டத்தில் 11 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 09 பேர், கேகாலை மாவட்டத்தில் 07 பேர், மாத்தளை மாவட்டத்தில் 06 பேர், அம்பாறை மாவட்டத்தில் 05 பேர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 பேர், வவுனியா மாவட்டத்தில் 02 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 02 பேர், முல்லைத்தீவு, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மேலும் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார் எனகொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 639 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் 29 ஆயிரத்து 882 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 573 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 184 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment