Friday, December 4, 2020

நடராஜன்களும் வியாஸ்காந்த்களும் அளிக்கும் நம்பிக்கை

 

கஷ்டங்களுக்கு நடுவிலேயே சந்தர்பங்கள் அமைந்திருக்கின்றன- அல்பர்ட் ஐன்ஸ்டீன்- தலைசிறந்த விஞ்ஞானி 


இன்றைய நாள் உலக வாழ் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.  தங்கராசு நடராஜன் இந்திய அணிக்காக டி 20 கிரிக்கட் போட்டியில் அறிமுகமாகி அசத்திய நிலையில் விஜயகாந்த் வியாஸ்காந்த் லங்கா பிரிமியர் லீக்கில் ஜெவ்னா ஸ்டேலியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி  ஆரம்பத்திலேயே நம்பிக்கையளித்திருக்கின்றார். 

சுழற்பந்துவீச்சுத் திறமைக்காக அணிக்குள் உள்வாங்கப்பட்ட  வியாஸ்காந்த்  இன்றையதினம் முதலில் தனது துடுப்பாட்ட ஆற்றலைக் காண்பித்திருந்தார். உலகத்தரம்வாய்ந்த சகலதுறைவீரர் அன்ட்ரே ரஸலின் பந்துவீச்சை எதிர்கொண்டு தனது முதலிரு ஓட்டங்களையும் பெறுவதற்காக அவர் ஆடிய ஷொட்கள் நேர்த்தியான துடுப்பாட்ட வீரர் ஆடுவதைப் போன்று எடுப்பாக இருந்தது. இதனை  நேர்முக வர்ணனை செய்துகொண்டிருந்த சர்வதேச வர்ணனையாளர்களும் சுட்டிக்காட்டத்தவறவில்லை. யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான வியாஸ்காந்த் யாழ்ப்பாணத்திலிருந்து எல்பிஎல் அணிக்காக விளையாடும் முதலாவது வீரர் என்ற பெருமையைத் தனதாக்கியுள்ளார். 

கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி இலக்கை விரட்டி துடுப்பெடுத்தாடத் தொடங்கிய போது  அடுத்தடுத்து நான்கு ஓவர்களையும் சிறப்பாக வீசியிருந்தார்.  இதில் தனது மூன்றாவது ஒவரை வீசிய போது இலங்கை அணியின் மிகச்சிறந்த சகலதுறைவீரரும் முன்னாள் அணித்தலைவருமான அஞ்சலோ மத்தியுஸ் தனக்கு எதிரே நிற்கின்றார் என்று அஞ்சாது சிறப்பாக பந்துவீசினார். தனது பந்துவீச்சில் மத்தியுஸ் ஒரு சிக்ஸரையும் பவுண்டரியையும் அடித்த போதும்  கலங்காது பந்துவீசிய வியாஸ்காந்த் எல்பில் அறிமுகத்தில் கைப்பற்றிய முதலாவது விக்கட்டாக அஞ்சலோ மத்தியுஸின் விக்கட்டை தனதாக்கினார். வரலாற்றில் என்றும் இந்த விக்கட்டை  வியாஸ்காந்த மறக்க மாட்டார் என்பது நிச்சயம் . 

எதிரணி வீரர்கள் உலகத்தரம் வாய்ந்த பெரும் பெயர்களைக் கொண்ட வீரர்களாக இருந்தபோதும்  பதற்றமடையாமல்  சிறப்பாக பந்துவீசி தனது நான்கு ஓவர்களில் 29 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து ஒரு விக்கட்டைக் கைப்பற்றிய வியாஸ்காந்தின்  ஆரம்ப எல்பிஎல் போட்டி எதிர்காலத்திற்கான சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றது.ரஸல் ஆர்னோல்ட், மைக் ஹேய்ஸ்மன், மிக்கி ஆர்தர் போன்ற உலகத்தரமிக்க வர்ணனையாளர்கள் எல்லாம்  வியாஸ்காந்தின் பந்துவீச்சை வெகுவாக புகழ்ந்தமையை கேட்ட போது  புளகாங்கிதமேற்பட்டது. 

 .இன்னமும் சில நிமிடங்களில் தனது 19வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வியாஸ்காந்தின் வாழ்வில் இன்றைய நாள்  பிறந்த நாள் பரிசாக அமைந்திருந்தது என்றால் மிகையல்ல 

இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய அணிக்காக சர்வதேச  ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமாகி இரண்டு விக்கட்டுக்களைக் கைப்பற்றி வெற்றிக்குப் பங்களித்த நடராஜன் இன்றையதினம் டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி அசத்தினார். அதிரடி வீரர் கிளென் மக்ஸ்வெல்லின் விக்கட் உட்பட 3 விக்கட்டுக்களை கைப்பற்றி முதலாவது போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார். 

தமிழ் நாடு பிரிமியர் லீக் போட்டிகளை பார்த்தவர்களைத் தவிர நடராஜனை இரண்டு மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு யார் என்றே தெரியாது. ஐபிஎல் தொடரில் இவர் களமிறங்கும் முன் பலருக்கும் இவரை தெரியாது. ஐபிஎல் தொடரிலும் இவர் ஆடும் ஹைதராபாத் அணியில் மிட்சல் மார்ஷ், புவனேஷ்வர்குமார், ரஷீத் கான், சந்தீப் சர்மா, கலீல் அகமது என்று முன்னணி பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இதனால் நடராஜனை தொடக்கத்தில் யாருமே கவனிக்கவில்லை.

ஆனால் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஓவரில் இவர் துல்லியமாக யோக்கர் போடுவதை பார்த்து மொத்தமாக ஐபிஎல் உலகம் அரண்டு போனது.ஷேன் வோர்ன், பிரட் லி ,  இயன் பிஷப்  போன்ற ஜாம்பவான் வீரர்கள் கூட கொண்டாடும் அளவிற்கு நடராஜன் பந்துவீச்சு  இருந்தது. ஐபிஎல் தொடரில் அதிக யோக்கர் பந்துகளை வீசிய நம்பர் 1 வீரர் இவர்தான்.

முக்கியமாக டெத் ஓவர்களில் பும்ரா, போல்ட், ஷமிக்கு அடுத்தபடியாக மிக சிறப்பாக பந்துவீசிய வீரரும் இந்திய அணியில் இடம்பெறாமல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரரும் இவர்தான். ஆனால் இந்திய அணிக்கு இவர் நேரடியாக தேர்வாகவில்லை. வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலக டி 20 அணியில் நடராஜன் வந்தார்.  .பின்னர் நேற்று முன்தினம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அறிமுகம், இன்று டி 20யில் அறிமுகம் என இரண்டு நாட்களில்  இந்தியளவில் மட்டுமன்றி கிரிக்கட் உலகளவிலும் பேசுபொருளாக மாறியுள்ளார். 

ஆரம்பத்தில் வீதிகளில் டென்னிஸ் பந்து கிரிக்கட் விளையாடி பின்னர் சுற்றுப்போட்டிகளில் பங்கேற்று தனது ஆட்டத்தை மெருகேற்றிய நடராஜன் 
தமிழக அணிக்காக முதல்தர போட்டியில் 2015ல் அறிமுகம் ஆனார். ஆனால் அப்போதே இவரின் பந்துவீச்சுப் பாணி சரியிலை என்று தடை செய்யப்பட்டார். பின் பந்துவீச்சுப் பாணியை மாற்றிவிட்டு வந்தவர் 2016ல் டிஎன்பிஎல் போட்டியில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார். அதன்பின் பஞ்சாப் அணியால் ஐபிஎல்லில் ஏலம் எடுக்கப்பட்டவர் காயம் காரணமாக அவதிப்பட்டார். பின் கடந்த ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடினார்.

இம்முறை ஐபிஎல் தொடரில் தோனி, கோலி, ரசல், ஏபிடி என்று முக்கிய தலைகளின் விக்கெட்டுகளை நடராஜன் எடுத்துள்ளார்.  இதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இது குறித்து ஐபிஎல் தொடரின் போதே நடராஜன் பேட்டி அளித்து இருந்தார். அதில் நான் வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவன். சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். என் அப்பா நெசவு தொழில் செய்து வருகிறார். அம்மா சாலை ஓரத்தில் கோழிக்கடை வைத்து இருக்கிறார். இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்துதான் நான் வந்து இருக்கிறேன் என்று தனது  வாழ்க்கைப் பயணத்தை கூறியிருந்தார். 


விளையாடுவதற்கு தேவையான சப்பாத்து கூட வாங்க வழியில்லாத வறுமை நிலையில் இருந்து இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கும்  தங்கராசு நடராஜனையும் போரினால் அழிவுகளை எதிர்கொண்ட  வடமாகாணத்திலிருந்து வந்து தன் ஆரம்ப எல்பிஎல் போட்டியிலேயே பிரகாசித்திருக்கும்  விஜயகாந்த் வியாஸ்காந்தையும் பார்க்கின்ற இளைய தலைமுறையினருக்கு  தம்முடைய சூழ்நிலை எத்தகையதாக இருப்பினும் முயன்றால் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. 

No comments:

Post a Comment