Friday, December 4, 2020

போர்க்குற்றச்சாட்டுகளால் 50ற்கும் அதிகமான சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுக்கு விஸா மறுப்பு -விடயத்தை அம்பலப்படுத்தினார் பொன்சேகா

 



இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் காரணமாக தமக்கு அமெரிக்காவிலுள்ள மகள்மாரைப் பார்ப்பதற்கு  விஸா பெறமுடியாத நிலை உள்ளமையை பாராளுமன்றத்தில் வியாழக்கிழமையன்று சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இரா|ணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா,  இராணுவத் தளபதி உட்பட 50ற்கும் மேற்பட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுக்கும் விஸாக்கள் மறுக்கப்பட்டுள்ளதாக அம்பலப்படுத்தினார்.

 பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது

"சபாநாயகர் அவர்களே போர்க்குற்றச் சாட்டுக்கள் குறித்து நீங்கள் அறிவீர்கள். எமது வெளிநாட்டு அமைச்சரை வெளியே சந்தித்தபோது இதுபற்றி சில விடயங்களைப் பேசியிருந்தோம். மீண்டும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. நாம் இணை அனுசரணையில் இருந்து ( ஜெனிவா மனித உரிமைகள் தீர்மானம்) விலகியமை தொடர்பாக  விமர்சனத்தை முன்வைத்து பிரித்தானியப் பாராளுமன்றத்திலும் உறுப்பினர் ஒருவர் பேசியிருந்தார். இதன் போது இராணுவமயப்படுத்தல் தொடர்பாகவும் அந்த உறுப்பினர் பேசியிருந்தார். இராணுவத்தினரை சிவில் உத்தியோகத்தர்களின் இடங்களுக்கு நியமிப்பது தொடர்பாகவும் அவர்களது விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இது இரண்டு விடயம் ஆனால் இதை நான் கூறுவதற்கு காரணம் அமைச்சர் விமல் வீரவன்ஸ போன்று அனைத்துவிடயங்களுக்கும் சர்வதேச சதி என்று சொல்லிக்கொண்டிராது  வெளிநாட்டிலுள்ளவர்கள் சொல்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டும். நாம் தனித்து செயற்படமுடியாது. வெளிநாடுகளுடன் வர்த்தகம் உள்ளது. ஜி எஸ்பி வரிச்சலுகை உள்ளது. எனவே இது தொடர்பில் நியாயமாக பேசி இதுவிடயத்தில் சரியானதும் இறுதியாக பெற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இதனைக் குழப்பி தொடர்ந்தும் இழுத்துச் சென்றால் இதற்கு பலிக்கடா ஆவது நாமே. என்னுடைய பிள்ளைகளைப் பார்க்க ( அமெரிக்காவிற்கு ) இன்னமும் விஸா எடுக்க முடியாத நிலை உள்ளது. இராணுவத்தளபதிக்கும் முடியாது. 51 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளுக்கு முடியாது. இந்தப்பிரச்சனைக்கு நாம் தீர்வு காணவேண்டும். அப்படி இல்லாமல் இப்படியே இழுபட்டுச் சென்றால் இந்த நாட்டின் நற்பெயருக்கு நல்லதல்ல இவை நிச்சயமாக இறுதி முடிவுகாணப்படவேண்டியவை. " என்று குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவின் பின்னர் பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக் குமார் பொன்னம்பலம் , "52ற்கும் மேற்பட்ட  இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச நாடுகளுக்கான வீசா வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சபையில் கூறினார். ஏன் அவர்களுக்கு வீசா வழங்கப்படவில்லை என சிந்தித்துப்பாருங்கள். குறித்த இராணுவ அதிகாரிகள்ள அப்பாவிகள் என்றால் அதனை நிரூபிக்க வேண்டும் "என்று கூறினார்.



No comments:

Post a Comment