" உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம்"கடந்த சனிக்கிழமை இலங்கைப் பாராளுமன்றத்தில் மும்மொழிகளிலும் சிறப்பாக உரையாற்றிய போது சிங்களத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கூறியது.
ஆட்சியிலுள்ளவர்கள் எப்படியாக சிங்கள மக்களை பொய்களைக் கூறி அச்சங்களை விதைத்து ஏமாற்றுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டியே அவர் சிங்கள மக்கள் பாவம் என்று குறிப்பிட்டிருந்தார்.
சமஷ்டி என்பது நாட்டில் பிரிவினை ஏற்படுத்தும் என்று சிங்கள அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் ஊடகங்களும் மீண்டும் மீண்டும் கூறி இன்று சமஷ்டி என்ற சொல்லைக் கேட்டவுடன் எவ்விதமான மாற்றுச் சிந்தனைகளும் இன்றி அதனை எப்படி வேண்டத்தகாத சொல்லாகப் பார்க்கின்றனரோ அப்படியே இன்னமும் பல விடயங்களையும் மாற்றுச்சிந்தனையின்றி அப்படியே நம்பிவிடும் மந்தைகளாக மாற்றப்பட்டிருக்கின்றனர் சிங்கள மக்கள் . இதற்கு ந்ல்ல உதாரணம் இன்றைய தினம் அரங்கேறியிருக்கின்றது.
கொவிட்-19 ,கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மருந்து என நாட்டு வைத்தியர் தம்மிக்க பண்டார அறிவித்த மருந்தைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று அதிகாலை முதல் கேகாலை, ஹெட்டிமுல்ல, உடமாகம பிரதேசங்களில் இருந்து பெருந்திரளான மக்கள் சென்றிருந்தனர்.சுமார் 15000 பேர் அளவில் மக்கள் கூடியதாக சமூக வலைத்தளப்பதிவுகளைக் காணமுடிந்தது.
சமய வழிபாடுகளின் பின்னர் மருந்தை மக்களுக்கு இலவசமாக வழங்கும் கைங்கரியம் முன்னெடுக்கப்பட்டது.
மத குருமார்கள், பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் என பல பிரதேசங்களிலிருந்து வருகை தந்த பெரும்பாலானோருக்கு மருந்து பகிர்ந்தளிக்கப்பட்டது.
எனினும், அவ்விடத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் செயற்பட்டதை தாம் அவதானித்ததாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் பத்மகுமார் விக்ரமரத்ன தெரிவித்தார்.
குறித்த ஔடதம் குறித்து சுகாதார அமைச்சு இன்னும் பரிசோதனை நடத்தி வருவதால், அது பற்றி தம்மால் எதனையும் உறுதியாகக் கூற முடியாது என அவர் கூறினார்.
இதேவேளை, இவ்வாறான செயற்பாட்டின் மூலம் கேகாலை மாவட்டத்தில் பாரியதொரு அபாய நிலைமை ஏற்படக்கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே குறிப்பிட்டார்.
எனவே அவ்விடத்தில் கட்டுப்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.தற்போது மருத்து வழங்கும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தம்மிக பண்டாரவின் தடுப்பு மருந்து ரஜரட்ட பல்கலைக்கழகத்தை அண்மித்து பரிசோதிக்கப்படுவதாகவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அளவில் அதுகுறித்த முழுமையான பெறுபேறு கிடைக்கும் என நம்புவதாகவும் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.
அந்த மருந்து வெற்றியளித்தால் அதனை கண்டுபிடித்தவரின் கதைகள் நமக்கு எதற்கு? அவருக்கு காளி அம்மன் கூறியதாக அவர் கூறுகின்றார். மருந்து சரியாக இருந்தால், அதனை ஏற்க வேண்டிவரும். காளி அம்மனை விஞ்ஞானத்தில் போய் தேட முடியாது என விமல் வீரவன்ச மேலும் கூறியிருந்தார்.
இலங்கை ஆயுர்வேத சங்கத்தினதோ அன்றேல் வேறு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனத்தினதோ ஒப்புதல் இன்றி ஒரு தனிப்பட்ட மருத்துவர் கூறும் கதைகளை உண்மையென நம்பி உலகமே அச்சத்தில் மூழ்கியிருக்கும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியின்றி மணிக்கணிக்கில் நின்று அந்த மருந்தைப் பெற்றுச்சென்றதை கண்ணுற்ற போது எந்தளவிற்கு மக்கள் சிந்தனை அற்று செயற்படுகின்றனர் என்பதை உணரமுடிகின்றது.
இப்படிப்பார்கையில் எதற்கெடுத்தாலும் வெளிநாட்டுச் சதி என கதையளக்கும் விமல் வீரவன்ஸ போன்ற அமைச்சர்களது கதைகளை இந்த மக்கள் உண்மையென நம்பாமல் இருப்பார்களா?
சீனாதான் உண்மையான நண்பன் மற்றைய நாடுகள் இலங்கையை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன என்ற தகவல் உண்மையற்றது என்ற கதைகளை மறுதலிப்பார்களாக இந்த மக்கள்?
விடுதலைப்புலிகள் மீள எழுச்சி பெறுகின்றார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர போன்றவர்கள் கட்டுக்கதைகளை நம்பாமல் இருப்பார்களா இந்த மக்கள் ?
சமஷ்டி என்பதை பேயாக பிரிவினையாக காட்டி மனதில் பதித்துவிட்ட ராஜபக்ஷக்களே இல்லை அது நல்ல ஆட்சிமுறை அதனால் நாடுபிளவுபடாது என்று கூறினாலும் இந்த சிங்கள மக்கள் கேட்பாளர்களா?
கொரோனாவால் உயிரிழந்தவர்களைப் உரிய சுகாதார நடைமுறையுடன் நல்லடக்கம் செய்யவும் முடியும் என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கும் மேலாக ஆய்வே செய்யாமல் உயிரிழந்தவர்களைப் புதைத்தால் அவர்களது சடலங்களில் இருந்து கொரோனா வைரஸ் பூமியைப் பிளந்துகொண்டு வரும் என்று கூறும் கதைகளை நம்பிக்கிடக்கும் மக்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கின்றது
No comments:
Post a Comment