இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகளை புலிகளுக்கு எதிராக இலங்கையின் அரசாங்க படைகள் வெற்றிபெற்றதாக கூறுகின்ற போதெல்லாம் அந்த வெற்றி தனித்துப்பெறப்படவில்லை பல நாடுகள் மற்றும் அமைப்புக்ககளின் பங்களிப்புடனேயே விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதனைக் கண்ணுற்றுள்ளோம் .
அந்த வகையில் இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட பிரிட்டிஷ் கூலிப்படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளை லண்டன் பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police)விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இதுதொடர்பாக பிபிசி செய்திச் சேவையில் வெளியாகியுள்ள ஆக்கம்
1980களில் தமிழ் பிரிவினைவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு, இலங்கை காவல்துறையினரில் ஒரு பிரிவினருக்கு பயிற்சி கொடுத்தது தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ் (Keenie Meenie Services - KMS) இவர்கள் இலங்கை காவல்துறையின் அதிரடிப்படையினருக்கு (Special Task Force) பயிற்சி கொடுத்துள்ளனர்.
இந்த அதிரடிப்படையினர், இலங்கை போரின்போது நடந்த பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். இதில், தமிழ் மக்களை விசாரணையே இல்லாமல் கொலை செய்த குற்றங்களும் அடக்கம்.
பிரிட்டனில் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்கும் பொறுப்பு, மெட்ரோபோலிட்டன் காவல்துறையின் அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயமாகும்.
அந்த வகையில், ஒரு பிரிட்டன் அமைப்பு முதல் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த கூலிப் படையினரின் அயல்நாட்டுச் செயல்பாடு தொடர்பாக தற்போது விசாரணை நடத்துவது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.
இலங்கை உள்நாட்டுப் போரின்போது, பிரிட்டனைச் சேர்ந்த கூலிப்படையினர் போர் குற்றங்களைச் செய்ததாக கடந்த மார்ச் மாதம் மெட்ரோபோலிட்டன் காவல்துறைக்கு சில தகவல்கள் கிடைத்தன. அதைமதிப்பிட்ட பின், விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது என்கிறார் அந்த காவல்துறையின் செய்தித்தொடர்பாளர்.
பிரிட்டன் அரசு இத்தனை காலமும் ரகசியமாக வைத்திருந்த ஆவணங்களை (Classified Files), சமீபத்தில் ரகசியமற்ற ஆவணங்களாக (Declassified Files) வகைப்படுத்தியது. அதே போல பத்திரிகையாளர் ஃபில் மில்லர் தகவல் சுதந்திரத்தின் கீழ் சேகரித்த பல தரவுகளைத் தொகுத்து Keenie Meenie: The British Mercenaries Who Got Away With War Crimes ) என்ற புத்தகத்தை எழுதி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.
இவைதான் பிரிட்டிஷ் கே.எம்.எஸ் தனியார் கூலிப் படையினர், இலங்கை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்பதற்கான ஆதாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.
'லண்டன் காவல்துறையின் இந்த விசாரணையை, பிரிட்டனில் வாழும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் சமூகத்தினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்,' என்கிறார் ஃபில் மில்லர்.
அந்த சமூகத்தினர் பலரும், இலங்கையில் உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த காலங்களில் அந்நாட்டில் இருந்து வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் அடைந்தவர்கள்.
'1980களில் கே.எம்.எஸ் படையினர் இலங்கையில் இருந்த நேரத்தில், பல தமிழ் மக்கள் பிரிட்டனில் அகதிகளாக வந்தனர்' என்கிறார் ஃபில் மில்லர்.
அந்த காலங்களில் ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி துப்பாக்கிகளால் மக்கள் சுடப்பட்டதை பார்த்ததை இப்போதும் சிலர் நினைவுகூர்கிறார்கள். அத்தகைய தாக்குதல்களின்போது, அந்த ஹெலிகாப்டர்களை இயக்கியது பிரிட்டனைச் சேர்ந்த கூலிப் படையினர்தான் என்பது தெரியவரும் போது இந்த தகவல்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றன என்கிறார் மில்லர்.
26 ஆண்டுகால பயங்கர மோதல்களுக்குப் பின்னர் 2009ஆம் ஆண்டு மே மாதம்இ இலங்கை ராணுவம், தமிழீழ விடுதலைப்புலிகளை வீழ்த்தியது.
அந்த போர், இலங்கையை இன அடிப்படையில் இரண்டாகப் பிரித்தது - ஒரு தனி அரசை விரும்பும் தமிழ் கிளர்ச்சியாளர்கள் ஒரு பக்கம். பெரும்பான்மை பெளத்த மதத்தை பின்பற்றும் சிங்களர்கள் ஆதிக்க அரசாங்கம் மறு பக்கம் என இரு முரண்களுக்கு சாட்சியாக இருந்தது.
இந்த சண்டையில் 1,00,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 20,000 பேர் (பெரும்பாலும் தமிழர்கள்) காணவில்லை.
இந்த போரின் இறுதியில் இரு தரப்பினரும் மோசமாக அட்டூழியம் செய்ததாக ஐ.நா அமைப்பு குற்றம்சாட்டியது. அதிலும் குறிப்பாக, இறுதி கட்ட போரின்போது போர் குற்றங்கள் தீவிரமாக இருந்ததாக ஐ.நா குறிப்பிட்டது.
இலங்கையில் யார் எல்லாம் காணவில்லையோ அவர்கள் எல்லாம் இறந்துவிட்டதாக கருதலாம் என இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் இலங்கை ஜனாதிபதி முதல் முறையாக ஒப்புக் கொண்டார்.
கே.எம்.எஸ் நிறுவனம், டேவிட் வாக்கர் என்கிற முன்னாள் பிரிட்டிஷ் விமானப்படை (எஸ்.ஏ.எஸ்) அதிகாரியால் நிறுவப்பட்டது. தற்போது கே.எம்.எஸ் நிறுவனம் இல்லை. ஆனால் 78 வயதான டேவிட் வாக்கர் சலாதின் செக்யூரிட்டி என்கிற நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த நிறுவனம் கென்சிங்டன் என்கிற இடத்தில் உள்ளது.
கே.எம்.எஸ் தொடர்பான யாருமே இலங்கையில் நடந்த போர் குற்றத்துக்கு உடந்தையாகவோ போர் குற்றங்களில் ஈடுபடவோ இல்லை என்பதை தொடர்ந்து அழுத்தமாகக் கூறி வருகிறார் டேவிட் வாக்கர்.
1980களில் போர் குற்றங்களில்இ டேவிட் வாக்கர் அல்லது கே.எம்.எஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுவதை திட்டவட்டமாக மறுக்கிறோம் என டேவிட் வாக்கரின் பிரதிநிதி ஒருவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
'சலாதீன் செக்யூரிட்டி என்கிற நிறுவனம்இ முழுமையாக ஒரு தனி நிறுவனம். இந்த நிறுவனத்துக்கும் இலங்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டேவிட் வாக்கர் கே.எம்.எஸ் நிறுவனத்தின் பங்குதாரரோ அல்லது இயக்குநரோ அல்ல.'
'லண்டன் பெருநகர காவல்துறையினர்இ போர் குற்றம் தொடர்பான விசாரணை தொடர்பாக, சலாதின் நிறுவனத்திடமிருந்தோ, டேவிட் வாக்கரிடம் இருந்தோ, எந்தவொரு உதவியையும் கேட்கவில்லை. ஒருவேளை உதவி கேட்டால், மகிழ்ச்சியாக ஒத்துழைப்பார்கள்' என டேவிட் வாக்கரின் பிரதிநிதி வெளியிட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
நன்றி பிபிசி செய்திச் சேவை
No comments:
Post a Comment