கர்தினால் உள்ளிட்ட மதத்தலைவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பான புலனாய்வுத் தகவலை அறிவிக்கும் இயலுமை அரச புலனாய்வுப் பிரிவில் இருந்தது என்று சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதென முதல் நாளான 20 ஆம் திகதி புலனாய்வுத் தகவல் கிடைத்தும் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடமே இவ்வாறு சாட்சியளிக்கப்பட்டது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பதில் பணிப்பாளரான ஓய்வுபெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் பராக்கிரம லங்காபுர சாட்சியமளிக்கும் போதே இந்தத் தகவல்களை கூறியுள்ளார்.
தமது 30 வருட புலனாய்வு அனுபவத்தின் பிரகாரம், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதென முதல் நாள் கிடைத்த தகவல் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க போதிய கால அவகாசம் இருந்தது என அவர் கூறினார்.
இதேவேளை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா முன்னிலையாகியிருந்தார்.
ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முதல் நாள் கிடைத்த சர்வதேச புலனாய்வுத் தகவலின் பிரதிகளை அரச புலனாய்வுப் பிரிவின் ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணியான ஷமில் பெரேராஇ உங்களுக்கு இருக்கும் அனுபவத்தின் பிரகாரம் இந்தத் தகவல்கள் தொடர்பில் எடுக்கக்கூடிய நடவடிக்கை என்னவென்று வினவினார்.
அந்த பிரதிகளை கண்காணித்த சாட்சியாளர்இ தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளமை தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தாக்குதல் நடத்தப்படும் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் பல உயிர்களை காப்பாற்றுவதற்கு உடனயடியாக செயற்படும் இயலுமை இருந்தது எனவும் கூறினார்.
குறித்த தகவல்கள் தொடர்பாக ஹோட்டல்களுக்கும் தேவாலயங்களுக்கும் அறிவிக்கும் இயலுமை அரச புலனாய்வுப் பிரிவிற்கு மாத்திரமே இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கர்தினால் உள்ளிட்ட மதத்தலைவர்களுக்கு குறித்த விடயத்தை அறிவிக்கும் இயலுமை அரச புலனாய்வுப் பிரிவில் இருந்தது என்றும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை சிவில் சேவையில் அந்தத் தருணத்தில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்றும் ஓய்வுபெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
தமது அனுபவத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அறிவிப்பதற்கு நேரம் போதாவிட்டால் வீடுகளுக்கு சென்றேனும் கூறியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment