Sunday, December 27, 2020

பிரித்தானியாவில் பரவும் திரிவுபெற்ற கொரோனா வைரஸால் இலங்கைக்கு ஆபத்துண்டா?

 





உலகில் பல நாடுகளை மீண்டும் கடும் முடக்கநிலைக்குள் தள்ளிவிட்டுள்ள பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ், இலங்கையிலும் பரவக்கூடிய அபாயமுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய வகை தொற்றானது நாட்டிற்குள் பரவுக்கூடிய சந்தர்ப்பம் மிக அதிகளவில் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இயக்குநர் டொக்டர் ஹரித்த அளுத்கே குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் 60 வீதமானோர் புதிய வகை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடுகளைத் தவிர ஆசிய நாடுகளிலும் புதிய கொரோனா தொற்று பரவியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சிங்கப்பூரிலும் புதிதாக நோயாளர்கள் அடையாளங்காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதிவேகமாகப் பரவக் கூடிய கொரோனா வைரஸின் புதிய திரிபு தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பிரிட்டனில் இருந்து புதிய திரிபு கொரோனா வைரஸுடன் தொடர்புடையவர்கள் வந்திருக்கிறார்கள்.

கனடாவின் ஒன்டாரியோ நகரில் ஒரு தம்பதியினரும்  கொரோனா வைரஸின் புதிய திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கவில்லை அல்லது அதிக நோய் தொற்று ஆபத்து உள்ளவர்களுடன் கூடியவர்களுடன் எந்தவித தொடர்பிலும் இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.



ஜப்பான் வரும் திங்கட்கிழமை முதல் குடியுரிமை பெறாத பெரும்பாலான வெளிநாட்டவர்களை அந்நாட்டுக்குள் நுழைய அடுத்த ஒரு மாத காலத்துக்கு தடை விதிக்க இருக்கிறது.

இது போக கூடுதலாக இருவருக்கு இந்த புதிய திரிபு பரவி இருக்கிறது. அதில் ஒருவருக்கு உள்நாட்டில் இருந்த ஒருவர் மூலமாகவே பரவியிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் புதிய திரிபு பற்றிய செய்தி வெளியானதால் கடந்த வாரத்தில்இ பல உலக நாடுகளும் பயணத் தடைகளை விதித்து இருக்கின்றன.

டிசம்பர் 27 அன்று தான் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சேர்த்து கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப் படுவது தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸின் புதிய திரிபு பரவத் தொடங்கியதால் பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் முன் கூட்டியே தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கி இருக்கின்றன.

ஜெர்மனியில் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் ஃபைசர் - பயோஎன்டெக் கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிக்க இன்னும் ஒரு நாள் காத்திருக்க தாங்கள் தயாராக இல்லை என வடகிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

ஹல்பெர்ஸ்டாட் என்கிற நகரத்தில் பராமரிப்பு இல்லங்களில் இருக்கும் வயதானவர்களுக்கு இவர்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஹங்கேரி நாட்டில் டெல்-பெஸ்ட் சென்ட்ரல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதாக, அந்நாட்டின் செய்தி முகமை கூறியுள்ளது. ஸ்லோவாக்கியா நாட்டிலும் கொரோனா தடுப்பூசி வழங்கத் தொடங்கிவிட்டதாக அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதை கொண்டாடும் விதமாக தன் ட்விட்டர் பக்கத்தில் 'இது ஒரு நெகிழ்வான நம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் தருணம்' எனக் குறிப்பிட்டு ஒரு காணொளியைப் பகிர்ந்திருக்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன்.

பிரிட்டனில் கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு முதலில் கண்டுபிடிக்கப்பட்டதற்கு அந்நாட்டின் கண்காணிப்பு அமைப்புமுறை வலுவாக இருந்தது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.



இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு முந்தையை திரிபுகளை விட அதிவேகமாகப் பரவுகிறது ஆனால் புதிய திரிபு பரவியவர்களுக்கு எந்த வித கூடுதல் அபாயங்களும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த புதிய வடிவ கொரோனா வைரஸ் பழைய வைரஸின் இடத்தை வேகமாக பிடித்து வருகிறது.

இந்த புதிய வடிவ வைரஸின் முக்கிய பகுதியில் மரபியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதில் சில மாற்றங்கள் மனிதர்களை தொற்றும் வைரஸின் திறனை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

மற்ற ரக கொரோனா வைரஸை விட இந்த புதிய ரக கொரோனா வைரஸ்இசுமாராக 70 சதவீதம் கூடுதலாக பரவலாம்.

இந்த காரணங்களால் இந்த வைரஸ் எளிதாக பரவுகிறது என்கிறார் பிபிசியின் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர் ஜேம்ஸ் கல்லேகர்.

இருப்பினும் இந்த புதிய வடிவ வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூற எந்த ஆதாரமும் இல்லை என்றும் சமீப மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் இவற்றுக்கு எதிராக செயல்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் புதிய திரிபால் பாதிக்கப்பட்டிருக்கும் தம்பதியினர் டொரன்டோ அருகிலிருக்கும் துர்ஹம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போது தங்களை சுய-தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பானில் இருவருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் ஒருவர் 30-களில் இருக்கும் விமானி மற்றும் 20-களில் இருக்கும் ஒரு பெண் என க்யொடோ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில், மேட்ரிட் நகரத்தில் நான்கு பேருக்கு இந்த புதிய திரிபு பரவியிருக்கிறது. இவர்கள் அனைவருமே பிரிட்டனில் இருந்து வந்தவர்கள். இவர்களில் யாருமே மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆளாகவில்லை.

சுவிட்சர்லாந்தில் மூன்று பேருக்கு புதிய திரிபு பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் இரண்டு பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே கிறிஸ்துமஸ் ரூ புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சுவிட்சர்லாந்து மட்டுமே தன் வான்வெளியைச் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பல்லாயிரக் கணக்கான பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுவிட்சர்லாந்தில் தரையிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடன் நாட்டில் ஒரு பயணி மட்டும் கொரோனாவின் புதிய திரிபால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்இ அவரும் பிரிட்டனில் இருந்து வந்த பிறகு தன்னை சுய-தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ஸ்வீடனின் சுகாதார முகமை கூறியுள்ளது.

லண்டனிலிருந்து பிரான்ஸ் சென்று திரும்பிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபு தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment