இன்றைய கொரோனா காலகட்டத்தில் சமூக இடைவெளியைப் பேணவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் தொன்றுதொட்டே ஒவ்வொரு மனிதனும் சக மனிதனோடு சமூகமயப்பட்டு வாழப்பழகியவனாவான். தனது விருப்பு, வெறுப்புக்களை, தேவைகளை, உணர்வுகளை அதிகமாக ஒவ்வொருவரும் வார்த்தைகளாகவே பகிர்ந்துகொள்கின்றனர். அது படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று தொழில்நுட்ப யுகத்திற்குள் புகுந்து கொண்டதும், தனது கருத்துக்களை ஆழமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். சமகாலத்தில் ஒவ்வொருவரும் தமது எண்ணங்களை பாகுபாடின்றி வெளிப்படுத்தி தமக்கென ஒரு அடையாளத்தை அமைத்துக்கொள்ளும் ஒரு தளமாக வலைத்தளங்கள் காணப்படுகின்றன. ஏனெனில், எல்லோரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்த தகுந்த சந்தர்ப்பம், நேரம், காலம் அமையும் எனவும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரும் கூட்டத்தை திரளச்செய்தல், நேரடியாக தெரியப்படுத்தல் என்பது அவ்வளவு சுலபமல்ல. அதனால் Facebook, Twitter, WhatsApp, Viber என பல வலைத்தளங்களில் ஒரு கணக்கை (Account) வைத்திருப்பதனூடாக கருத்துக்களை எச்சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளமையானது எமக்காக பேச ஒரு மிகச்சிறந்த தருணமாகவும் வாய்ப்பாகவும் அமையப்பெற்றுள்ளது. அந்தவகையில் இன்றைய யுகம் டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கும் வேளையில் இணையத்தை பயன்படுத்தாத நபர்கள் அரிதாகிவிட்டனர். அதிகமானோர் ஏதோ ஒரு வகையில் இலத்திரனியல் உலகத்திற்குள் புகுந்துவிட்டனர் என்பது நிதர்சனமே. 2020 ஒக்டோபர் கணக்கெடுப்பின்படி, இன்று உலக சனத்தொகையில் 4.6 பில்லியன்(460 கோடி) மக்கள் இணையத்தை Internet ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இலங்கையில் 5 – 69 வயதுவரை உள்ளவர்களின்படி 40.3% டிஜிட்டல் கல்வியறிவு கொண்டிருக்கின்றனர். . ஆகவே இன்று மக்களாகிய நாங்கள் வேலை, கல்வி, பொழுதுபோக்கு என்பவற்றிற்காக டிஜிட்டல் உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டும் செயற்பட்டுக் கொண்டும் இருக்கின்றோம்.
இதில் ஆச்சரியத்தக்க விடயம் என்னவெனில், இது நாள் வரையில் வலைத்தளங்களை பயன்படுத்தியிருந்தாலும் அதுபற்றி நம்மிடம் முழுமையான தெளிவு மற்றும் புரிதல் இருக்கின்றதா? என்றால் சந்தேகமே. 'Digiital Citizenship' எனும் வார்த்தை பலருக்கு புரியாத மற்றும் புதிதாக இருக்கலாம். புரிந்து கொள்ள எளிமையான விளக்கம் என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் அதாவது கணனியைப் பயன்படுத்தி இணையத்தின் துணையோடு வலைத்தளங்களை இயக்கவும் அதன் நன்மைகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடியும் போது ஒவ்வொரு மனிதனும் Digital Citizen (இலத்திரனியல் குடியுரிமையாளன்) ஆவான். மறுபுறம் கூறுவதானால் ஒரு அரசில் வாழும் ஒருவர் எவ்வாறு அவ்வரசின் குடியுரிமையாளனாவானோ இணைய உலகில் இணைந்திருக்கும் அனைவருமே இலத்திரனியல் குடியுரிமையாளன் (ஆவான். இதில் மிக முக்கிய விடயம் என்னவெனில் இது ஒரு மனித உரிமையாகும் என்பதே. இது நாள் வரையில் வாழ்வதற்கான உரிமை, பொருளாதார உரிமை, சிந்திப்பதற்கான உரிமை, காலாசார உரிமை என தெரிந்த பல உரிமைகள் உண்டு.
அதில் ஒன்றாகவே கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரமானது நேரில் மட்டுமல்ல ஊடகத்தினூடாகவும் உண்டு என்பதை எனக்கு உணரவைத்தது. நாம் சாதாரண வாழ்க்கையை வாழ எந்தளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையை பெற்றிருக்கிறோமோ அதேயளவு உரிமையை வலைத்தளங்களை பயன்படுத்தும்போதும் கொண்டுள்ளோம். எவ்வாறு சாதாரண வாழ்க்கையை வாழும் போது பிறருக்கு இடையூறின்றி கருத்துக்களை வெளிப்படுத்தி நல்ல செயல்களைச்செய்து வாழ்கிறோமோ அதைப்போலவே கருத்தை வெளிப்படுத்துவதோடு பிறரால் அச்சுறுத்தப்படாமல் வற்புறுத்தப்படாமல் பயன்படுத்த உரிமையுண்டு. இதை யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாது. அவ்வாறு உட்படுத்தினால் அது மனித உரிமை மீறலாகும் என்கின்ற விடயம் உண்மையிலேயே வியப்பாக இருந்ததுடன் அதிகமாக இதைப்பற்றி யாரும் வெளிப்படையாக கதைத்தும் அறியாத ஒன்றாகவே இருந்தது.
வலைத்தளங்களை பயன்படுத்துவது அதில் பங்குபற்றுவது என்பது மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இலங்கையில்,2018தரவின்படி 44.5% ஆண்களும் 36.4% பெண்களும் வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அதில் பெண்களின் எண்ணிக்கையை 52ம% கொண்ட இலங்கையில் அவர்களது இப்பாவனை குறைவாக இருக்க பல காரணங்களுண்டு. சமூக அச்சுறுத்தல்கள், வற்புறுத்தல்கள் அடக்குமுறைகள் என்பன காணப்பட்டாலும் பெண்கள் வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடாதென்பது உண்மையில் மனித உரிமை மீறலாகும். அனைவருக்கும் சம சந்தர்ப்பம் சமவாய்ப்பு என்பது எல்லா அரசிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையாகும். ஆகவே அது அனைவருக்கும் பாதுகாப்பாக பங்குபற்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பாலினம் குறித்து என்னை சிந்திக்கச் செய்ததுடன், ஒரு குடியுரிமையாளனுக்கு எவ்வாறு அனைத்து உரிமைகளும் உள்ளதோ அதைப்போல இன்றைய காலகட்டத்திற்கேற்ப வலைத்தளங்களை பயன்படுத்துவதால் நாம் டிஜிட்டல் குடியுரிமையாளனாக மாறியுள்ளோம். இருப்பினும் அதே உரிமையையும் பெற்றுள்ளோம். உரிமைகள் எனும் போது கடமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக நோக்கப்படுகிறது. நாம் எவ்வாறு சுதந்திரமாக செயற்பட விரும்புகிறோமோ அதைப்போல, நம்மை சுற்றியுள்ளவர்களையும் சுதந்திரமாக செயற்பட வழிவிட வேண்டும்.
எமது சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு நுனி மட்டுமே' என ஆபிரகாம் லிங்கன் அதையே கூற முற்பட்டார். நிஜ வாழ்க்கையில் எவ்வாறு சிறந்த குடியுரிமையாளனாக வாழ்கின்றோமோ இணையவெளியிலும்மற்றவர் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து இன, மத, மொழி, பால், சாதி வேறுபாடின்றி அடுத்தவரை சாடாமல் கடமையை செய்வதன் மூலம் நமது உரிமையை நாம் அனுபவிக்கலாம். ஆனால் சமகாலத்தில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள்,ஆபத்தான கருத்துக்கள், போலி செய்திகள்என்பவற்றை பரப்பி தமது பொறுப்பு மற்றும் கடமையிலிருந்து விலகுவதனூடாக உரிமையை தவறாக பயன்படுத்துகின்றனர் என்பது அண்மைக்காலத்தில் அதிகரித்து வந்துள்ளது. . கொரோனா கோலோச்சும் இந்தக்காலத்தில் சமூக வாழ்க்கை என்பது இணையவெளிக்குள்ளேயே பெரும்பாலும் முடங்கிக்கிடக்கின்றமையால் இன்றைய யுகத்திற்கு ஏற்ப டிஜிட்டல் குடியுரிமையாளனாக நாம் மாற்றப்பட்டுள்ளதால் அதற்கேற்ப பொறுப்புடன் செயற்பட்டு உரிமையை அனுபவிப்பதோடு பிறரோடும் இவ்வுரிமை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டியது எம் கடமை என்பதை மனதிற் கொள்வோமாக.
No comments:
Post a Comment