மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திலுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீர சேகர போன்றோர் கூறிவரும் நிலையில் மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பது நெருப்புடன் விளையாடுவது போன்று ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தொடர்பாக ஏதேனும் தீர்மானத்தை எடுக்க முன்னர் இந்தியா வுடன் கலந்துரையாடவேண்டும் அன்றேல் பிரச்சனைகளை மீண்டும் எதிர்நோக்க நேரிடலாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாரிறி ஜயசேகர தெரிவித்திருந்தை ஆமோதிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள் அமைந்துள்ளன.
"13வது திருத்தம் என்பது 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய உடன்படிக்கையின் விளைவாக ஏற்பட்டது. மாகாணசபை முறைமை என்பது 13வது திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டது. மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பது என்பது இலகுவானதல்ல என நான் அறிவேன். நாம் முற்றுமுழுதாக 13வது திருத்தத்தை இல்லாமல் செய்தால் இந்தியா எம்மோடு சிறிது அதிருப்திகொள்ளக்கூடும். எமது இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவுடனான நட்புறவு இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து அரசாங்கங்களும் இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பது இன்றியமையாதது. மாகாண சபைகளை இல்லாதொழிப்பதென்பது நெருப்புன் விளையாடுவதற்கு ஒப்பானது" என ஹிந்து பத்திரிகைக்கு மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இதேவேளை மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்திய 30 வருடகால அனுபவத்தில் இருந்து நாட்டின் அனைத்துப்பாகங்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்கமானது எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளைத் தரவில்லை எனச்சுட்டிக்காட்டியுள்ள சிறிசேன, மாவட்ட அபிவிருத்தி சபைகளை வலுவூட்டுவதே இதற்கான தீர்வு எனத்தாம் கருதுவதாகவும் மைத்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment