கனடாவின் வடக்குப் பகுதியில் உறைபனி நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓநாய் குட்டியின் இயற்கையாகப் பதப்படுத்தப்பட்ட உடல் அது 56 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிரந்தரப் பனிப் பாறைகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு புதைந்து கிடந்த இந்த பெண் ஓநாய்க் குட்டியின் மம்மி போல பதனமாகியிருந்த உடலை தங்கம் தேடும் ஒருவர் கண்டுபிடித்தார்.
இதுவரை அறியப்பட்ட ஓநாய் மம்மிகளிலேயே இது மிகவும் முழுமையாக கிடைத்துள்ளது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். காரணம் அதன் தோல் முடி,பல் ஆகியவை சிதையாமல் அப்படியே உள்ளன.
ஆய்வாளர்கள் அந்த ஓநாய் குட்டியின் வயது, அது தனது வாழ்நாளில் எதைத் தின்றது, அது ஏன் மாண்டது என்பனவற்றை ஆய்வுகளின் மூலமாக ஊகித்துள்ளனர்.
ஓநாய் குட்டியும் அதன் தாயும் மீன் உள்ளிட்ட கடல்வாழ் விலங்குகளைத் தின்றதாக அவர்கள் நம்புகின்றனர். மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் அந்த ஓநாய் குட்டி சுமார் 56,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அது பிறந்த சுமார் 7 வாரங்களில் மாண்டிருக்கலாம் என்றும் அவர்கள் மதிப்பிடுகின்றனர். ஓநாய் குட்டி இருந்த பனிக்குகை திடீரென இடிந்து விழுந்ததால் அது மாண்டதாக நம்பப்படுகிறது.
அது பசியால் மாண்டுபோகவில்லை என்றும் அது நீண்ட நேரம் வலியில் துடிக்காமல் உடனே மாண்டு போனது என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment