பிசிஆர் பரிசோதனை - ஆவணப்படம்
கொவிட்-19 காரணமாக உயிரிழந்தால் தன்னுடைய சடலத்தினை உரிமைகோரி பொறுப்பேற்க வேண்டாம் என்று 15 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் அனுபவமிக்கவரான பிரபல ஆங்கில ஊடகவியலாளர் முன்ஸா முஸ்டாக் தனது குடும்பத்தினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இன்று பதிவிட்டுள்ள டுவிட்டரில் இவ்வாறான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
'"நான் கொவிட் -19 காரணமாக உயிரிழக்க நேரிட்டால் என்னுடைய சடலத்தை ( ஜனாஸா) உரிமைகோரி பொறுப்பேற்க வேண்டாம் என என்னுடைய குடும்பத்தாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். முஸ்லிம்களை தகனம் செய்வதில் அரசாங்கம் மகிழ்ச்சி கொள்ளுமேயானால் அதற்காக அவர்களால் நிச்சயமாக கட்டணம் செலுத்தும் முடியும். என்னுடைய சாம்பலை வைத்து எனது குடும்பத்தினரால் எதுவும் செய்யமுடியாது. ஆகவே என்னுடைய சாம்பலை அரசாங்கம் வைத்துக்கொள்ள முடியும். " என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள முன்னணி ஆங்கிலப்பத்திரிகைகள் பலவற்றில் பணியாற்றியரான முன்ஸா முஸ்டாக் தற்போது சர்வதேச கீர்த்திபெற்ற நிக்கே ஏசியா ரிவியு லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் அனடொலு செய்திச் சேவை ஆகியவற்றுக்கு பங்களித்து வருகின்றார்.
கொவிட்-19 காரணமாக உயிரிழந்த சிலரின் சடலங்கள் ஏற்கனவே உறவினர்களால் உரிமைகோரப்படாத நிலையில் அரச வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை உறவினர்கள் அல்லது பொறுப்பாளர்கள் ஏற்க மறுக்கும் பட்சத்தில், அந்த பூதவுடலை அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்ய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
உறவினர்களால் உரிமை கோரப்படாத நிலையில் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதன்படி, அவ்வாறான பூதவுடல்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்யுமாறு ஜனாதிபதி உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பூதவுடல்களை தகனம் செய்வதற்கு செலவிடப்படும் செலவீனத்தை இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வழங்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை Covid – 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை எரிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியஇ நீதியசர்களான முர்து பெர்னாண்டோ ப்ரீதி பத்மன் சூரசேன ஆகியோரால் இந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சுகாதார அமைச்சரினால் வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி 12 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையானோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக மனுக்கள் மீதான பரிசீலனையின் நிறைவில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய அறிவித்தார்.
இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது நிராகரிக்குமாறு சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே மற்றும் இடைமனு தாரர்கள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன உள்ளிட சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க பிரஜைகள் மாத்திரமின்றி அனைத்து மதத்தவரும் தங்களின் மத கடமைகளை பின்பற்றுவதற்கு காணப்படும் உரிமையை தாம் மதிப்பதாகவும் எனினும் கொரோனா போன்ற மிக கடுமையான தொற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நாட்டு மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சரினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் சட்டபூர்வமானது என்பதால் அதனை ஆட்சேபனைக்கு உட்படுத்த முடியாது எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment