Thursday, December 31, 2020

மாவை முன்னெடுக்கும் நகர்வுகள் தொடர்ந்தும் தோல்வியில் முடிவதேன்?

 அரசியலில் எதுவுமே விபத்தாக நேரிடுவதில்லை. ஒன்று நடக்குமாக இருந்தால் அது அந்தவகையில் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்பதை உறுதிபடக்கூறமுடியும்

                                                                                                  -ஃபிராங்லின் டி ரூஸ்வேல்ட்






அரசியல் வாழ்வில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத்தவறினால் என்ன நடக்கும் என்பதற்கு அண்மைக்காலத்தில் நல்ல உதாரணமாக மாறியிருக்கிறார் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா .

குடும்ப வாரிசு அரசியலில் இருந்தன்றி தனது  அர்ப்பணிப்புமிக்க ,தியாகம் நிறைந்த அரசியல் செயற்பாடுகளால்  தமிழ் தேசிய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தவர் மாவை

.தனது 19 வயதிலேயே  இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 ம் ஆண்டு இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தார். 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தமை அவரது தியாகத்திற்கு சான்று பகர்கின்றது. மாவை கடந்த காலத்தில் செய்த அர்ப்பணிப்புக்களுக்காகவும் தியாகங்களுக்காகவும் தான்  அவரது பிதற்றல்களுக்கும் சொதப்பல்களுக்கும்  மத்தியிலும்  2000 ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடைபெற்ற ஐந்து பாராளுமன்றத்தேர்தல்களில் தொடர்ந்தும் அவரை மக்கள் தேர்ந்தெடுத்து நன்றிக்கடன் செய்தார்கள். 

ஆனால் அதற்கு பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய சகலதையும் உதறித்தள்ளி, பன்றியுடன் சேர்ந்த பசுவாகி தீயனவற்றை மட்டுமே பதவிமோகத்தால் சிந்திக்கலானவராகி தன் கூடவே தீயவர்களையும் துஷ்டர்களையும், கெட்டவர்களையும் கொண்டு செயற்பட்டார்.

யார் யாரை காப்பாற்ற நினைத்தாரோ, எந்தத் தகுதியுமில்லாமல் அன்றேல் தகுதி இழந்தும் தனது அரசியல் பிழைப்பு வாதத்திற்காக தனக்குப் பிடித்தவரை முன்னிறுத்தினாரோ அவர்களும் தொடர்ந்தும் தோல்விகளைச் சந்தித்துவருவது தமிழர் அரசியல் கணிப்பீட்டிலிருந்து மாவையின் காய்நகர்த்தல்கள்  இலக்குத்தவறி செல்வதைப் பறைசாற்றுகின்றன. 

எதை எங்கு பேச வேண்டும், எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், தீர்மானங்களை எப்படி எடுக்கவேண்டும் என்ற விடயங்கள் எல்லாம் அரசியல் என்று வந்த பின்னர் முக்கியமானது.



கடந்த சில ஆண்டுகளாக மாவையின் நீண்ட உரைகளை செவிமடுத்திருந்தால்  அவரது சிந்தனை கட்டுக்குள் இல்லை என்பது புரிந்துகொள்ளலாம். . உரைகளின் பெரும் பகுதி பிதற்றல்களது பெட்டகமாகவே காணப்பட்டன. அதுபோன்றே மாவையின் நகர்வுகளும் தீர்மானங்களும்  தெளிவற்றதாக அமைந்திருக்கின்றன. பிதற்றும்  மாவை இன்று எடுப்பார் கைப்பிள்ளையாய் அவர் மாறிவிட்டதே இதற்கு காரணம்.  அரசியலில் அதுவும் துணிவும் சாணக்கியமும்  மிகவும் அவசியமாக தேவைப்படும் தமிழர் அரசியலில்  சிந்தனைத் தெளிவை இழந்துவிட்ட மாவை கடந்த காலத்தில் தன் தியாகங்களாலும் அர்ப்பணிப்புக்களாலும் கட்டியெழுப்பிய பெயரை  இதற்கு மேலும் பாழடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதே சாலச்சிறந்தது. 

மாவை முதுமை அடைந்துவிட்டதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறவரவில்லை மாறாக தனது தனிப்பட்ட குடுப்ப நலன்களைத் தாண்டி  சமூகத்திற்காக சிந்திக்கும் ஆற்றலையும்  திட்டவட்டமாக தீர்மானமெடுத்து செயற்படும் சாணக்கியத்தையும் இழந்துவிட்டமைக்காகவே அவர் கௌரவமாக ஒதுங்கிக்கொள்ளவேண்டும்.இல்லையேல் காலம் அவரை ஒதுக்கிவிடும். ஆனால் கட்டிக்காத்த கௌரவம் காற்றில் பறக்க நேரும்.


No comments:

Post a Comment