Thursday, December 24, 2020

யாழ் மாநகர புதிய முதல்வர் விடயத்தில் கூட்டணியுடன் தமிழ் கூட்டமைப்பு ஒன்றுபடும் சாத்தியம்



யாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது முதல் யாப்பிற்கு அமைய புதிய முதல்வரை  சபையின் பெரும்பான்மையானோரின் விருப்பிற்கு இணங்க தெரிவுசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில்,யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டைத் தவிர வேறு ஒருவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தினால் ஆதரிக்கத் தயாரென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அத்தோடு நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய வேட்பாளரை நியமித்தால் அவரையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று  (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், 'யாழ். மாநகர சபை முதல்வருக்கு .ஆர்னோல்ட்டை தவிர இன்னொருவரையும்இ நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு தியாகமூர்த்தி தவிர்ந்த இன்னொருவரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக அறிவித்தால் அவர்களை ஆதரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராக இருக்கிறது.

அதேநேரம், இரண்டு சபைகளிலும் பதவி விலகிய ஆர்னோல்ட் தியாகமூர்த்தி இருவரையுமே வேட்பாளர்களாக நிறுத்தினால் எமது கட்சி அவர்களை எதிர்க்கும். எமது எதிர்ப்பையும் மீறி அவர்கள் வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும் அவர்கள் சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்தையும் எதிர்ப்போம்.

இதன்மூலம் இரண்டு சபைகளும் கலையும் நிலைமை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  கடந்த திங்கட்கிழமை குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் யாழ் மாநகர சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன்  புதிய முதல்வர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார் என்று குறிப்பிட்டிருந்தார். புதிய முதல்வர் என்று அவர் கூறியமை ஆர்னோல்ட்டைத் தவிர வேறொருவரே நியமிக்கப்படுவார் என்பதைக் கோடிட்டுக்காட்டியது . இதேவேளை வி. மணிவண்ணனை முதல்வர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கூட்டமைப்பின் பேச்சாளர். அதில் உண்மை இல்லை எனவும் கூட்டமைப்பிற்குள் உள்ள ஒருவரே புதிய முதல்வராக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார். 




No comments:

Post a Comment