Tuesday, December 8, 2020

பிரிட்டன் மூதாட்டிக்கு கிடைத்த உலகின் முதல் ஃபைசர் கொரோனா தடுப்பூசி

 

பிரித்தானியாவில் 2வது கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 81வயதுடைய வில்லியம் ஷேக்ஸ்பியர் 


எப்போது வரும் என்று வழிமேல் விழி வைத்துக்காத்திருந்த கொரோனா தடுப்பூசி இன்று நடைமுறைச்சாத்தியமானது. 

இது தொடர்பாக பிபிசி செய்திச் சேவையில் வெளியான ஆக்கம் இதோ...




உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தாக அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசி அடுத்த வாரம் 91 வயதை எட்டவிருக்கும் பிரிட்டன் மூதாட்டி மார்கரெட் கீனானுக்கு போடப்பட்டுள்ளது.

இது தனக்கு முன்கூட்டியே கிடைத்த பிறந்த நாள் பரிசு போல உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பிரிட்டன் உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் அவருக்கு வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது. 'இந்த தடுப்பூசியை எல்லோரும் போட்டுக் கொள்ள வேண்டும். 90 வயதில் என்னால் இதை போட்டுக் கொள்ள முடியும் என்றால், இது உங்களாலும் முடியும்' என்று கீனான் தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து 81 வயதான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற வார்விக்ஷயர் பகுதியைச் சேர்ந்த முதியவருக்கு வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது.

அவருடன் சேர்த்து ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவான தடுப்பூசி மருந்தை முதல் கட்டமாக 8 லட்சம் பேருக்கு போடப்படவுள்ளது. இந்த பணிகள் அடுத்து வரும் வாரங்களில் நிறைவு பெறும்.

இந்த மாத இறுதிக்குள்ளாக நாற்பது லட்சம் பேருக்கு தடுப்பூசி மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள சுகாதார மையங்களில் 80 வயதுகளை கடந்த வயோதிகர்கள், சுகாதார ஊழியர்கள், பராமரிப்பக ஊழியர்கள் ஆகியோருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி மருந்து போடப்படவுள்ளது. சமூகத்தில் நோய் எதிர்ப்பின்றி மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டு அவர்களை இயல்புநிலைக்கு கொண்டு வருவது முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தின் நோக்கம்.

முதல் தடுப்பூசி போடப்பட்ட செவ்வாய்க்கிழமையை வெற்றி தினம் என்று அழைக்கும் பிரிட்டன் சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக், தடுப்பூசி அறிமுகத்துக்கு வந்து விட்டாலும், அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து சமூக இடைவெளி விதிகளையும் பிற வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதேவேளை, லண்டனில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். 'இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்களுடைய நாட்டுக்கும் நல்லது,' என்று அப்போது அவர் தெரிவித்தார்.

உலக அளவில் ஃபைசர் நிறுவன தடுப்பூசி பிரிட்டனில்தான் முதல் முறையாக போடப்பட்டுள்ளது. இந்த நிறுவன தடுப்பூசியை போடுவதற்கு மருத்துவ ஒழுங்குமுறைத்துறைகள் கடந்த வாரம் முறைப்படி ஒப்புதல் தெரிவித்தன.

இது குறித்து பிபிசியிடம் பேசிய பிரிட்டன் சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக், 'தடுப்பூசி போடும் நடவடிக்கையில் நாடு இன்னும் நீ்ண்ட தூரம் கடக்க வேண்டியுள்ளது,' என்றார்.

பிரிட்டனில் கோவிட்-19 வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட 28 நாட்களில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருப்பதற்கான அடையாளம் தென்படுகிறது.

கடந்த நவம்பர் 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின் புதிய தரவுகளில், 14 ஆயிரத்து 106 உயரிழப்புகள் பதிவானதாகவும் அதில் 3,400 பேர் கொரோனா வைரஸால் இறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தடுப்பூசி எப்போது வேலை செய்யத்தொடங்கும்?

ஃபைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்ட ஒருவருக்கு அடுத்த 12 நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் ஏற்படத் தொடங்கும். அதைத்தொடர்ந்து 21ஆவது நாளில் அவருக்கு இரண்டாவது தடுப்பூசி போட வேண்டும். இதன் பிறகு 28ஆவது நாளில்தான் அந்த நபருக்கு முழு எதிர்ப்புத்திறன் கிடைக்கும்.

எனவே வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டபோதும் சம்பந்தப்பட்டவர்கள் முழு பாதுகாப்புடன் வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்தாக வேண்டியது அவசியம் என்று பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment