Monday, November 30, 2020

மஹர சிறைச்சாலையில் அரங்கேறிய இரத்தக்களரியின் பின்னணி என்ன?

 

                                  பொலிஸ் அதிகாரியிடம் தம் உறவுகளின் நிலையைப் பற்றி வினவும் மக்கள் 

மஹர சிறைச்சாலையில் கலவரம் வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகிய போது என்மனதில் மஹர என்பது ஏதோ கண்டிக்கு  அப்பால் இருப்பது போன்ற ஒரு உணர்வே ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்தது .கண்டியை  சிங்களத்தில் மஹநுவர என்று அழைப்பதால் இப்படி ஒரு தூர உணர்வு ஏற்பட்டதுண்மை .




ஆனால் தேடிப்பார்த்தால் கொழும்பில் இருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தூரத்தில் வடகிழக்கு திசையில் அமைந்திருக்கும் கம்பஹா மாவட்டத்திலுள்ள ஒரு பழமைவாய்ந்த நகரமே மஹர என அறிய முடிந்தது. அங்கு தான் இப்போது பேசுபொருளாக இருக்கும் கலவரம் அரங்கேறி இன்னமும் பதற்றம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. 

நேற்று மாலை நிகழ்ந்த இந்த கலவரத்தில் எட்டு சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 71 பேர் காயமுற்றுள்ளதாகவும் இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மஹர சிறைச்சாலையில் எதற்காக இந்தக்கலவரம் இடம்பெற்றது என்பது தொடர்பாக பல்வேறு விதமான காரணங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இதில் சில முன்னுக்குப் பின்னர் முரணானதாக அமைந்துள்ளன. 

இன்று மாலை ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றக்கூடிய நோய்கள் மற்றும் கொவிட்-19 தடுப்பிற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சை  மேலதீகமாக ஏற்றிருந்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சனி பெர்ணான்டோ புள்ளேயின் இன்று பாராளுமன்றத்தில் கருத்துதெரிவித்த போது ,இவ்வாறான மோதல்களின் பின்னணியில் பலம் வாய்ந்த சக்தியொன்று செயற்பட்டுவருவதாகவும் அவ்வாறான நபருக்கு வெளியில் இருந்து ஒத்துழைப்பு வழங்கும் நபரை கண்டறிய வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்திருந்தார். 

போதைப் பொருளை ஒழிக்க அரசாங்கம் கொள்கையளவில் செயற்பட்டு வருவதாகவும் போதை பொருள் பாவனையாளர்களை சிறையில் அடைத்துவைக்க நேரிட்டுள்ளதால் 11,000 பேரை மாத்திரமே அடைத்துவைக்கப் போதுமான இலங்கையின் சிறைச்சாலைகளில்  32 ,000 பேரை அடைத்துவைக் க நேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்கும் நோக்குடனேயே சிறைச்சாலைக்குள் மோதல் இடம்பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

இதேவேளை இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ஸ ஒருபடி மேலே சென்று மஹர சிறைச்சாலை கலவரம் சர்வதேச சதி நடவடிக்கை என தெரிவித்திருந்தார். கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதும் சிறைச்சாலைக் கலவரம் ( வெலிக்கடை சிறைச்சாலை) இடம்பெற்றது. அவர் ஜனாதிபதியானதன் பின்னரும் சிறைச்சாலைக்கலவரம் நடைபெறுகின்றது பாருங்கள் என காண்பிப்பதற்காக இப்படியான கலவரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

சிறைக்கைதிகளுக்கு குளுசை கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விமல் வீரவன்ஸ இந்த குளுஸையைக்  உட்கொண்டவர்களுக்கு கடும் கோபம் ஏற்படுமெனவும் அப்படிக் கோபம் ஏற்பட்டால் இரத்தம் பார்க்காமல் விடத்தோன்றாது எனவும் அமைச்சர் கதையளர்ந்தார். 

இந்தக் கலவரம் தொடர்பாக ஆராய்ந்துபார்ப்பதற்காக பல்வேறு குழுக்களை அரசாங்கமும் பாதுகாப்பத்தரப்பும் நியமித்துள்ள வேளையில் அரசாங்கம் அமைத்துள்ள குழுக்களில் நம்பிக்கையில்லை சுயாதீன குழுவே நியமிக்கப்படவேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஏற்கனவே கொள்ளளவைத் தாண்டி கைதிகளால் நிறைந்து வழிகின்ற சிறைச்சாலைகளில் கொரோனா நோயாளிகள் அதிகரித்ததால் ஏற்பட்ட பதற்றத்தால் கலவரம் வெடித்தாக சர்வதேச ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டுள்ள போதும் இது உண்மையான காரணமல்ல என அமைச்சர் விமல் வீரவன்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

ஆனால் சிறைக்கைதிகள் மத்தியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தமையால் கைதிகள் மத்தியில் ஏற்பட்ட பதற்ற நிலையே சிறைக்கலவரமாக வெடித்துள்ளமைக்கு முக்கிய காரணம் என அரசாங்கத்தரப்பல்லாத ஊடகங்கள் மற்றும் அக்கறையுடைய தரப்பினரின் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. 

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் சேனக்க பெரேரா கருத்துவெளியிடுகையில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மற்றும் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட கைதிகளை வேறுபடுத்துதல் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகள் ஒருமாத காலத்திற்கும் மேலாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் கைதிகள் விரக்தியடைந்திருந்ததாக சுட்டிக்காட்டினார். 



இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய உள்ளடக்கப்படக்கூடிய கைதிகளின் தொகையை விடவும் அதிக எண்ணிக்கையானவர்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சிறைச்சாலைகள் நெருக்கடிமிக்கதாக அமைந்துள்ளமை அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டுவந்துள்ளது.


சிறைச்சாலைகள் அவற்றின் தாங்கும் திறனுக்கு மேலாக அதிக கைதிகளைத் தம்வசம் கொண்டிருப்பதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் இதன்காரணமாக சிறைச்சாலைகளிலுள்ள சிறுகுற்றங்களைப் புரிந்த கைதிகள் அடங்கலாக கணிசமான கைதிகளை விடுவித்து இடநெருக்கடியைக் குறைக்க வேண்டும் எனவும் கடந்த மார்ச் மாதத்திலே மனித உரிமைகள் ஆர்வலர்கள் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய கரிசனைமிக்க இலங்கைப் பிரஜைகள் கூட்டாக  அறிக்கை வெளியிட்டிருந்தனர்.


சிறைச்சாலை திணைக்களத்தில் கிடைக்கக்கூடிய பொதுத் தகவல்களுக்கு அமைவாக 2004ம் ஆண்டில் 20,661ஆக இருந்த  சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு பெப்ரவரியில் 26,403 ஆக அதிகரித்துள்ளது.


2009ம் ஆண்டில் 11,707 சிறைக்கைதிகளுக்கு மாத்திரமே சிறைச்சாலைகளில்  உத்தியோகபூர்வரீதியாக தங்குமிடம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளாந்தம் சராசரியாக சிறைச்சாலைகளில் காணப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 27,823 ஆகும்.


சிறைச்சாலைகள் நிறைந்துவழிவதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் .மனித வளப்பற்றாக்குறை மாத்திரமன்றி இலங்கையின் குற்றவியல் நீதிப்பொறிமுறையில் காணப்படும் குறைபாடுகளும் காரணம் என  இலங்கையின் சிறைச்சாலைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்  முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட ஆய்விற்கு தலைமைதாங்கிய முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டுகின்றார்.


ரிமாண்ட் சிறைச்சாலையில் காணப்படும் அதிகமானவர்கள் பிணை வழங்கியும் கூட அதனைச் செலுத்துவதற்கு வசதியற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.


இதில் ஆகக்குறைந்தபட்சம் 2000ரூபாவை பிணையாக செலுத்தமுடியாமல் சிறையில் தொடர்ந்து இருப்பவர்களும் உள்ளனர் என்பது கவலைக்கிடமானது  குஸல் மென்டிஸ் வாகனத்தைச் செலுத்தியபோது  மிதிவண்டியைச் செலுத்திய முதியவர் பலியானமை அனைவரும் அறிந்தது. ஆனால் ஒரு மில்லியன் ரூபாவை செலுத்திவிட்டு ஒரே நாளில் பிணையில் வெளியில் சென்றார் மென்டிஸ்.


சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் செய்யும் கைதிகள் ( ஆவணப்படம் )

2012ம் ஆண்டில் பிணைக்கான கட்டணத்தைச் செலுத்தமுடியாமல் சிறையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 12,045 ஆக இருந்தது. 2018ல் இந்த எண்ணிக்கை 16 ,111 ஆக மாறியது. குறித்தஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் இது முறையே 42.4 %  மற்றும்  64.8 % ஆக இருந்தது.


 மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளடங்கலாக அக்கறை மிக்க பிரஜைகள் கொரோனா அச்சுறுத்தலின் மத்தியில் சிறைக்கைதிகளைப்பாதுகாப்பது தொடர்பாக மார்ச்சில் எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிறைக்கைதிகளில் ஒரு குறித்த எண்ணிக்கையினரை விடுவித்துள்ள போதும் அது இன்னமும் போதாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.


ஜனாதிபதியின் சட்டத்துறைக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஹரிகுப்தா  ரோகணதீரவின் தகவலுக்கமைய மார்ச் 17ம்திகதி முதல் ஏப்ரல் 4ம் திகதிவரையான காலப்பகுதியில் 2,916 சிறைக்கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


தற்போதைய நிலையில் இலங்கையின் சிறைச்சாலைகளில் 10,000 கைதிகளை மாத்திரமே சுகாதார முறைப்படி உள்ளடக்குவதற்கு வசதிகள் இருந்தாலும் துரதிஷ்ட வசமாக மூன்று மடங்கு அதிகமான கைதிகள் சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டிருப்பது கொரோனா வைரஸ் போன்ற தொற்றுக்கள் விரைந்துபரவ வாய்ப்பாக அமைந்துவிடும் என்பது மட்டுமன்றி இவ்வாறான பதற்ற நிலைகளுக்கும் கலவரங்களுக்கும் வித்திடலாம்  மீள நினைவுறுத்த விரும்புகின்றோம்.



 

No comments:

Post a Comment