Monday, September 27, 2010

சுற்றுலாத்துறை வளர்ச்சியில் இலங்கை எதிர்நோக்கி நிற்கின்ற சவால்கள்



உலக சுற்றுலா தினம் இன்று




யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படுகின்ற இலங்கை அரசாங்கம் அதற்காக தெரிவுசெய்துள்ள துறைகளில் சுற்றுலாத்துறை முக்கிய இடத்தை வகிக்கின்றது .

2016ம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதை இலக்காகக் கொண்டு சுற்றுலா அதிகார சபை அதன் அபிவிருத்தித்திட்டங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இன்றையதினம் கொண்டாடப்படுகின்ற உலக சுற்றுலா தினம் முக்கியத்துவம் பெறுகின்றது 


உலக சுற்றுலா தினம் 1980ம் ஆண்டு முதல் ஐக்கியநாடுகளின் உலக சுற்றுலாத்துறை அமைப்பினால் கொண்டாடப்பட்டுவருகின்றது .சர்வதேச சமூகத்தின் மத்தியில் சுற்றுலாத்துறையின் வகிபாகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறை எங்கனம் சமூக கலாச்சார அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தாக்கங்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதை உணர்த்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

உலக சுற்றுலா அமைப்பின் வரைவிலக்கணத்திற்கு அமைவாக சுற்றுலாப்பயணி என்பவர் தனது வழமையான வாழ்விடச் சூழலுக்கு அப்பால் 24மணிநேரத்திற்கு அதிகமான ஆனால் ஒருவருடத்திற்கு மேற்படாத காலப்பகுதியை பொழுதுபோக்கிற்காக அன்றேல் வர்த்தகத்திற்காக அன்றேல் வேறு நோக்கங்களுக்காக கழிப்பதுடன் இந்த செயற்பாடுகளுடாக வருமானமீட்டுதலை நோக்காக கொண்டிருக்காமை' எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

தற்போதைய புள்ளிவிபரங்களின் படி சுற்றுலா 260மில்லியன் மக்களுக்கு உலகளாவிய ரீதியில் வேலைவாய்ப்புக்களை வழங்குகின்றதும் உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் 10வீதமான வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதுமான சுற்றுலாத்துறையே உலகிலுள்ள மிகப்பெரியதும் மிக வேகமாக வளர்வதுமான தொழில்துறையாக கருதப்படுகின்றது 

2008ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் சுற்றுலா 922மில்லியனுக்கும் அதிகமானவர்கள் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளதுடன் அதே ஆண்டில் சர்வதேச சுற்றுலாத்துறை கொடுக்கல்வாங்கல்களில் 944பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடன் சுற்றுலாப்பயணிகளின் சர்வதேசப் போக்குவரத்து கட்டணங்களையும் இணைத்துப்பார்ககின்றபோது 2008ம் ஆண்டில் மொத்த தொகையானது 1.1 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது .இதன்படி நாளொன்றுக்கு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது முப்பதாயிரம் கோடி ருபாவிற்கும் அதிகமான தொகையாகும் .


உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணிகளில் அதிகமானவர்கள் பயணம் செய்கின்ற நாடுகள் வரிசையில் பிரான்ஸ் முதலிடம் வகிக்கின்றது .

கடந்தாண்டில் 74.2மில்லியன் சுற்றுலாப்பயணிகள் பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்தாண்டில் அதிக சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்த சில நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு :

பிரான்ஸ் 74.2 மில்லியன் 
அமெரிக்கா 54.9மில்லியன் 
ஸ்பெயின் 52.2மில்லியன் 
சீனா 50.9 மில்லியன்
இத்தாலி 43.2மில்லியன் 
புpரித்தானியா 28மில்லியன் 
துருக்கி 25.5மில்லியன் 
ஜேர்மனி 24.2மில்லியன் 
மலேசியா 23.6மில்லியன் 
மெக்ஸிகோ 21.5மில்லியன்
.

இலங்கையின் சுற்றுலாத்துறையும் யுத்தத்தின் தாக்கமும்

1983ம் ஆண்டில் கம்போடியா நாட்டிற்கு 200 000 சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்திருந்தநிலையில் இலங்கைக்கு 337 530 சுற்றுலாப்பயணிகள் விஜயம் மேற்கொண்டிருந்தனர், ஆனால் 2009ம் ஆண்டிலோ கம்போடியா நாட்டிற்கு சுமார் 21 லட்சம் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்துள்ள அதேவேளை இலங்கைக்கு 447890 சுற்றுலாப்பயணிகள் மாத்திரமே விஜயம் செய்திருந்தனர்.  

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தமானது ஏனைய துறைகள் போன்றே சுற்றுலாத்துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டிருப்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ள முடியும். 

எனினும் கடந்தாண்டு மே மாதத்தில் யுத்தம் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் அதிகரிப்புக்கள் ஏற்பட்டுள்ளதை இலங்கை சுற்றுலா அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன 
கடந்தாண்டின் ஒவ்வொரு மாதங்களுடனும் ஒப்பிட்டுப்பார்க்கையில் இவ்வாண்டில் சுற்றுலாப்பயணிகள் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது 

இவ்வாண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியிலும் இலங்கைக்கு மொத்தமாக 341 988 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர் இது இதே காலப்பகுதியில் 2009ம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்திருந்த 229 952 சுற்றுலாப்பயணிகளுடன் ஒப்பிடும் போது 48.7வீத வளர்ச்சியாகும் . கடந்த ஓகஸ்ற் மாதத்தில் 55 898 சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம் செய்துள்ளனர் கடந்தாண்டு ஒகஸ்ற் மாதத்தில் 41207 சுற்றுலாப்பயணிகளே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர் .ஆக மொத்தம் இந்த வளர்ச்சி தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதையே காணமுடிகின்றது 

இதன் படி இவ்வாண்டில் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஆறுலட்சத்தை எட்டும் என இலங்கை சுற்றுலா அதிகார சபை எதிர்பார்க்கின்றது.இதுவரை காலத்தில் இலங்கைக்கு அதிகபட்சமாக 566000 சுற்றுலாப்பயணிகள் 2004ம் ஆண்டு வருகைதந்திருந்தனர் .இவ்வருட மொத்த எண்ணிக்கை இதனைத்தாண்டும் என்றே எதிர்பார்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன 

2009ம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த 447 890 சுற்றுலாப்பயணிகளில் 59.7 வீதமானவர்கள் ஆண்களென்பதுடன் 40.3வீதமானவர்கள் பெண்களாவர். 40வயதிற்கும் 49வயதிற்கும் இடைப்பட்டவர்களே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாப்பயணிகளில் அதிகமானவர்களாக இருந்தனர் .மொத்த எண்ணிக்கையில் இது 28.6வீதமாகும் இதற்கு அடுத்ததாக 30வயது முதல் 39வயதுவரையானவர்களில் 28.5வீதமானவர்கள் இங்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்
 .
இலங்கைக்கு விஜயம் செய்பவர்களில் அதிக எண்ணிக்கையாளவர்கள் கடந்தாண்டில் இந்தியாவிலிருந்தே வருகை தந்திருந்தனர் .இந்தியாவில் இருந்து 83 634 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருந்தனர் அதற்கடுத்து பிரித்தானியாவில் இருந்து 81594 பேர் வருகைதந்திருந்தனர் . மாலைதீவு 31916 ஜேர்மனி 29654 அவுஸ்திரேலியா 23239பேரும் கடந்தாண்டில் வருகைதந்திருந்தனர் .

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் பிpரான்ஸ் சிங்கபூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக அண்மைக்கால புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன .

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் 
இலங்கை 2016ம் ஆண்டில் நிர்ணயித்திருக்கின்ற 2.5மில்லியன்கள் என்ற சுற்றுலாப்பயணிகள் இலக்கை எட்டுவதற்கு பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது 

இலங்கையில் தற்போது 14700 வரையான ஹோட்டல் அறைகளே உள்ளன.சுற்றுலாத்துறை அபிவிருத்தித்திட்டத்திற்கு அமைவாக அடுத்துவரும் ஐந்தாண்டு காலப்பகுதியில் மேலதீகமாக 30000 ஹோட்டல் அறைகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துவைத்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபையின் தலைவர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார் 

பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி வலயத்தில் 13 ஹோட்டல்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் அப்பிரதேசத்தின் தேவையைப் பூர்த்திசெய்வதற்கான 1000 ஹோட்டல் அறைகளை உள்ளடக்கியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .இதனைத்தவிர குச்சவெளியில் 500 ஏக்கர் நிலப்பகுதியை சுற்றுலாத்துறை அபிவிருத்தி வலயமாக அபிவிருத்திசெய்வதற்கு சுற்றுலா அதிகார சபை திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் 


அடுத்துவரும் இரண்டு வருடகாலப்பகுதியில் 450 ஹோட்டல் அறைகளை நிர்மாணிப்பதற்காக கல்பிட்டியிலுள்ள இரு தீவுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுற்றுலா அதிகார சபைத்தலைவர் மாலைதீவிற்கு ஈடாக உயர்மட்ட சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் கல்பிட்டியிலுள்ள 12 தீவுகள அபிவிருத்தி செய்யப்படுதற்காக குத்தகைக்கு விடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 

வடக்கு கிழக்கில் சுற்றுலா அபிவிருத்திக்கு பொருத்தமான வலயங்களை இனங்காண்பதற்காக ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் சுற்றுலா அதிகார சபைத்தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார் 

2016ம் ஆண்டில் 2.5மில்லியன் சுற்றுலாப்பயணிகளை வரவழைக்கின்ற அரசாங்கத்தின் இலக்கை அடைய வேண்டுமானால் இலங்கைக்கு வருகின்ற தலா ஒரு சுற்றுலாப்பயணிக்கு தலா நான்கு பணியாளர்களை வேலைக்கமர்த்த வேண்டும் என இலங்கை சுற்றுலாத்துறை ஹோட்டல் உரிமையாளர்களுக்கு இலக்கு கொடுத்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன .
இதன்படி மொத்தமாக 10மில்லியன் உள்ளுர் வாசிகள் அதாவது சனத்தொகையில் ஏறத்தாழ சரிபாதியானவர்கள் சுற்றுலாத்து ஹோட்டல்துறையில் பணிபுரிவர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது 

இலங்கை சுற்றுலாத்துறையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கிற்கு அமைவாக தலா ஒரு சுற்றுலாப்பயணிக்கு நான்கு பணியாளர்கள் என்ற இலக்கு பாரிய சவாலைத்தோற்றுவித்துள்ளதாக ரேணுகா ஹோட்டல் குழுமநிறுவனத்தின் இணை நிர்வாக பணிப்பாளர் அர்னிலா தம்பையா அண்மையில் இடம்பெற்ற வைபவமொன்றில் சுட்டிக்காட்டியிருந்தார் 

உயர் தராதரம் அவசியமானவிடயம் என்றநிலையில் இந்த எண்ணிக்கையானவர்களை பயிற்றுவிப்பது கடும் சவாலானவிடயம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார் 
மத்தியவங்கியின் தரவுகளுக்கு அமைவாக கடந்தவருடத்தில் சுற்றுலா ஹோட்டல் துறை கடந்தவருடம் 124 456 பேருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கியிருந்தது இதில் 51857 பேர் நேரடித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கைக்கு அமைவாக ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இங்கு ஒருவிடயத்தை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன் .

இலங்கையை விடவும் (65610 சதுரகிலோமீற்றர்) சுமார் நூறு மடங்கு சிறிய நாடான சிங்கப்பூரிற்கு (699 சதுர கிலோமீற்றர்) கடந்தாண்டில் 9.68 மில்லியன் மக்கள் விஜயம் மேற்கொண்டிருந்தனர் .இது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சுமார் 20மடங்கு அதிகமாகும் .

5.08 மில்லியன் மக்களைக் கொண்ட சிங்கப்பூர் நாடு 9.68மில்லியன் சுற்றுலாப்பயணிகளை உபசரிக்க முடியும் என்கின்ற அது எம்போன்ற நாடுகளுக்கெல்லாம் பெரும் பாடத்தை எடுத்துணர்த்திநிற்கின்றது 

இலங்கையின் சுற்றுலாத்துறையைப் பொறுத்தமட்டில் 99சதவீதமானவை தனியாருக்கு சொந்தமாக உள்ளது. ஆனாலும் சுற்றுலாத்துறைக்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இங்குகாணப்படவில்லை அதனிலும் மேலாக நிலையான கொள்கைகள் இல்லாமையே சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . 

அண்மையில் இலங்கைக்கு வருகின்றவர்கள் அனைவருக்கும் விஸா கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறித்தலொன்று வெளியாகியிருந்தது இந்த அறிவித்தல் வெளியாகி மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே அந்த அறிவித்தல் மீளப்பெறப்பட்டு இது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன .

இதுபோன்ற தெளிவில்லாத கொள்கைகள் சுற்றுலாத்துறைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகின்றது .

எல்லாவற்றிற்கும் மேலாக ஏனைய துறைகளின் அபிவிருத்தியைப் போன்றே சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கும் அமைதிச் சூழல் இன்றியமையாததாகும் .பல நாட்கள் படுகின்ற கஷ்டங்களெல்லாம் ஒரு அசம்பாவிதத்தினால் நஷ்டமாக போய்விடக்கூடும் என்பதை கடந்த கால படிப்பினைகள் காண்பித்துநிற்கின்றன . 

பாசிக்குடா சுற்றுலா அபிவிருத்தி வலயத்தில் இதுவரை ஒரு ஹோட்டல் நிர்மாணப்பணிமாத்திரமே இடம்பெறுவதாக இலங்கை ஹோட்டல்துறை தலைவர் ஹிரான் குரே அண்மையில் ஆதங்கம் வெளியிட்டிருந்தார் 

எதிர்பார்த்த முதலீடுகள் வந்து சேரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் 

சுற்றுலாத்துறையில் இன்று பாரிய அபிவிருத்தியைக்கண்டுநிற்கின்ற கிழக்காசிய நாடுகள் கடந்த பலதசாப்தகாலமாக பெரும் பிரச்சனைகள் இன்றி அமைதியாக இருந்தமை காரணமாகவே இன்றுள்ள நிலையை அடையமுடிந்தது அந்தவகையில் இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்துடன் கூடிய நிரந்தர சமாதானம் கட்டியெழுப்பப்பட்டால் கிழக்காசிய நாடுகளென்ன உலகமே பார்த்து வியக்கும் நாடாக அபிவிருத்தி காணமுடியும் என்பதில் ஐயமில்லை 



No comments:

Post a Comment