Monday, April 25, 2016

போரின் வடுக்களைக் குணப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தேவை - -இலங்கைக்கான ரஷ்யத்தூதுவர் அலெக்ஸாண்டர் கர்சாவா



*நல்லிணக்க  முயற்சிகளுக்கு தலைமைதாங்கும்  முன்னாள் ஜனாதிபதி சந்திக்காவை செச்னியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்


* பனாமா பேப்பரில் ஜனாதிபதி புட்டினின் பெயர் இல்லை


* ரஷ்யாவின் பங்களிப்பின்றி எந்த சர்வதேச பிரச்சனைக்கும் தீர்வுகாணமுடியாதென்பதே யதார்த்தம்



அருண் ஆரோக்கிய நாதர்


படம்: ராயிஸ் ஹஸன் 

இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற போரின் வடுக்களை குணப்படுத்துவதற்கு  வேண்டிய அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். போரின் பாதிப்பினால் ஏற்பட்ட காயங்கள் நெருப்பு அணைந்தும் வெந்தணல் தொடர்ந்தும் இருப்பது போன்றது. எனவே அதனை தணிப்பதற்கான அனைத்துநடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் அலெக்ஸாண்டர் கர்சாவா தெரிவித்தார். 

சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியின் போதே அவர் இந்தக்கருத்துக்களைத் தெரிவித்தார். 

இலங்கையில் அனைத்து சமூகங்களிடையேயும் நல்லிணக்தை ஏற்படுத்த முனையும் அலுவலகத்திற்கு தலைமைதாங்குகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவை சந்தித்த வேளையில் ரஷ்யாவில் ஒரு காலத்தில் போரினால் சின்னாபின்னப்பட்டிருந்த செச்னிய மாகாணத்திற்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நேரில் காணுமாறு கூறியதாகவும் ரஷ்யத்தூதுவர் கூறினார்.

பனாமா பேப்பர்களின் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினின் பெயர் இடம்பெறவில்லை மாறாக அவரது நெருக்கிய நண்பரொருவரின பெயரே இடம்பெற்றுள்ளது. நண்பரின் பெயர் இடம்பெற்றுள்ளதால் ஜனாதிபதியும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றனர் உண்மையில் ஜனாதிபதிக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஜனாதிபதி புட்டினின் 16 ஆண்டுகால ஆட்சிக்காலமானது சர்வதேச மட்டத்தில் ரஷ்யாவின் வகிபாகத்தை கனப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமல் இன்று எந்த சர்வதேச பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணமுடியாதென்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாதாவர்கள் பொறாமை காழ்ப்புணர்வு காரணமாகவே புட்டினின் ஆட்சி முறைகுறித்து விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர் எனவும் இலங்கைக்கான ரஷ்யத்தூதுவர் மேலும் தெரிவித்தார். 



இலங்கைக்கான ரஷ்யத்தூதுவர் சுடர் ஒளிக்கு வழங்கிய முழுமையான நேர்காணல் :

நீங்கள் இலங்கைக்கான ரஷ்யத்தூதுவராக பதவியேற்று மூன்றரைவருடங்களாகிவிட்டன. இலங்கை தொடர்பில் உங்களது ஒட்டுமொத்தமான மதிப்பீடு என்ன?


நான் மூன்றரை வருடங்களுக்கு முன்னர் வந்தபோதும் தற்போதும் இருக்கின்ற நிலைமையை பார்க்கும் போது நிறைய சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இந்தக் காலப்பகுதியில் கொழும்பு அதிகமாற்றங்களைக் கண்டிருக்கின்றது. நான் இந்த நாட்டிற்கு வந்த உடனேயே இந்த நாடு நசுக்கிவைக்கப்பட்டிருக்கும்  கம்பிச்சுருள்களைப் போன்றுள்ளது என எண்ணினேன். ஆம் எப்படி நசுங்கிய நிலையிலுள்ள கம்பிச்சுருளை  அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் போது எப்படி பெருத்துச்செல்லுமோ அதேபோன்றே இந்த நாட்டையும் அதனை நெருக்கிக்கொண்டிருக்கும் விடயங்களில் இருந்து விடுவிக்கும் போது அதன் முழுமையான வீச்சை நோக்கி விரிந்துசெல்லும். அதுவே நடந்துகொண்டிருக்கின்றது. கொழும்பைச் சுற்றி எத்தனை நிர்மாண வேலைகளை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை உங்களால் பார்க்கமுடியும். இங்குள்ள வாகனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நீங்கள் காணமுடியும். 2012ம் ஆண்டு செப்டம்பர் மாத பிற்பகுதியில் நான் வந்தபோது நான் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதாக முகங்கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அதிகமான போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. இது மக்களுக்கு அசௌகரியமானதாக ஒரு பக்கத்தில் காணப்பட்டாலும் மறுபக்கத்தில் அவர்களது வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் காண்பிப்பதாக உள்ளது. நான் வருகைதந்த வேளையில் சராசரி தனிநபர் வருமானம் 2600 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.  தற்போது அது நான்காயிரம் அமெரிக்க டொலர்களாகும். அப்படிப்பார்க்கையில் 50 சதவீத அதிகரிப்பு காணப்படுகின்றது. இதுவெல்லாம் பெரும் மாற்றங்களாகும். 


ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது அவர்கள் மேற்கொண்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் ரஷ்யா முழுமையான ஆதரவை வழங்கியதாக இலங்கையர்கள் மத்தியில் மத்தியில் ஒரு கருத்துநிலை காணப்படுகின்றது?இந்தக் கேள்வி தொடர்பில் குறுக்கீடு செய்ய விளைகின்றேன்
. இலங்கையுடனான எமது இராஜதந்திர உறவுகள் 60 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. அடுத்தாண்டு 60வது வருடப் பூர்த்தி விழாவைக் கொண்டாடவுள்ளோம். இந்த காலப்பகுதி பூராகவும் ரஷ்யா இலங்கைக்கு சர்வதேச ரீதியாக உதவியளித்துவந்துள்ளது. ராஜபக்ஷவின் காலத்தில் மட்டுமன்றி இலங்கையின் உண்மையான நண்பனாக நாம் வரலாறு முழுவதுமே ஆதரவளித்துவந்துள்ளோம். 

ராஜபக்ஷவினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எவ்வித கேள்விகளும் இல்லாமல் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளித்ததாக எமது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்துநிலைப்பாடு நிலவியது?
ஒட்டுமொத்த இலங்கைக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் குறிப்பாக ஐநாவில் ஆதரவுவழங்கினோம்.நாம்  ராஜபக்ஷவிற்கோ வேறெந்த தனிப்பட்டவர்களுக்கோ ஆதரவளிக்கவில்லை. நாம் இலங்கை நாட்டிற்கே ஆதரவளித்தோம்.  நாம் இலங்கை மக்களுக்கே ஆதரவளித்தோம்.நாங்கள் சிங்களவர்கள் என்றோ தமிழர்கள் என்றோம் முஸ்லிம்கள் என்றோ பறங்கியர் என்றோ நோக்கவில்லை மாறாக இலங்கை நாட்டவர்கள் என்றே நோக்கினோம் இலங்கைக்கே ஆதரவளித்தோம். 


கடந்த மூன்றரை ஆண்டு காலப்பகுதியில் இலங்கை பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றது என்று கூறினீர்கள்.இந்த சாதகமான நிலையைத் தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு செய்யவேண்டிய விடயங்கள் என நீங்கள் எவற்றைப் பரிந்துரைக்கின்றீர்கள்?
இந்த நிலைமையை தொடர்ந்தும் பேணவேண்டும்.இதற்கு இலங்கையில் உள்ளக சமாதானமும் நின்று நிலைக்கக்கூடியதான அபிவிருத்தியும் அவசியமாகும். உள்ளக முதலீடுகளாக இருந்தாலும் சரி வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக இருந்தாலும் சரி நின்று நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கு  அவசியமாகும் 

கடந்த காலத்தில் ரஷ்யாவைப் பொறுத்தவரையில் செச்னியா பிரச்சனைக்கு முகங்கொடுத்தது. தற்போது அந்தப்பிரச்சனைக்கு தீர்வுகாணப்பட்டதாக அறிகின்றேன். இதிலிருந்து எத்தகைய பாடங்களை நீங்கள் படித்தீர்கள்? 

நல்லிணக்க  முயற்சிகளுக்கு உங்கள் நாட்டில் தலைமைதாங்குகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நான் பலமுறை சந்தித்திருக்கின்றேன். நீங்கள் மிகவும் முக்கியமான பணியை பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருக்கின்றீர்கள் ஏன் செச்னியாவிற்கு வருகைதந்து அங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிடக்கூடாது என அழைப்பு விடுத்துள்ளேன்.  செச்னியாவானது போரின் பின்னர் ஏறத்தாழ சின்னாபின்னமாகிக்கிடந்தது.   முற்றுமுழுதாக தரைமட்டமாகிக் காணப்பட்டது. இங்கு மாதிரி 26வருடங்கள் அங்கு போர் இடம்பெறவில்லை. மாறாக குறைந்த காலப்பகுதியே போர் இடம்பெற்றது. இரண்டு இரண்டு வருடங்களாக மொத்தமாக நான்கு வருடங்களே போர் இடம்பெற்றது.அந்த போரில் முழுமையாக சின்னபின்னமடைந்து கற்குவியல்களாக காணப்பட்ட செச்னியா இன்று அழகிய பிரதேசமாக காணப்படுகின்றது.தற்போது நல்லிணக்கம் உச்சளவில் நிலவுகின்றது. இலங்கைவிடயத்தில் நாம் தலையிடவில்லை. இதனை நாம் முழுமையாக உள்நாட்டுப்பிரச்சனையாகவே நோக்குகின்றோம். நாம் ஆலோனைவழங்க முடியும். உண்மையான ஆதரவை வழங்கமுடியும். உண்மையில் நாம் கண்ணிவெடியகற்றலுக்கு ஆதரவு வழங்கினோம். நாம் எமது உபகரணங்களை வழங்கினோம். தொழில் நுட்பவியலாளர்களை வழங்கினோம்  நிபுணர்களை வழங்கினோம்.  எமது உதவிகளையிட்டு இலங்கைத்தரப்பினர் மகிழ்ச்சியுற்றதாக அறிந்துள்ளோம். 





 உலக வல்லரசுகளான அமெரிக்கா சீனா மற்றும் இந்தியா ஆகியன இலங்கையில் தமக்குரிய ஆதிக்கத்தை செலுத்த முற்படுவதைக் காணமுடிகின்றது


இந்த விடயத்தில் எனது கருத்தைச் சொல்ல வேண்டும். உண்மையில் அமெரிக்கா சீனா இந்தியாவின் கவனக்குவிப்பிற்குள்ளாக இலங்கை வந்துள்ளதென்று கூறுவதே சரியென நினைக்கின்றேன்.

ரஷ்யாவும் உலகின் பெரும் வல்லரசுகளிலொன்றாக திகழ்ந்துகொண்டிருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் ரஷ்யாவின் அக்கறைகள் என்ன?


எமது அக்கறைகள் மிக மிக எளிமையானவை நாம் எந்தவித வரப்பிரசாதங்களையோ  அனுகூலங்களையோ இங்கு எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டை நாம் எமது நல்ல பங்காளியாகவும் உண்மையான நண்பனாகவும் நாம் கருதுகின்றோம்.

20வருடங்களுக்கு முன்பாக ரஷ்யாவின் பெயர் சர்வதேச மட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்தாகக் காணப்பட்டது. தற்போதைய நிலையில் உலகில் ரஷ்யாவின் வகிபாகம் என்ன? சர்வதேச சமூகத்திடம் இருந்த உரிய கௌரவத்தை ரஷ்யா பெறுகின்றதெனக் கருதுகின்றீர்களா? 

இன்னமும் சர்வதேச சமூகத்திடமிருந்து நாம் உயரிய மதிப்பையும் அங்கிகாரத்தையும் பெற்றுக்கொண்டிருக்கின்றோம் என நான் நினைக்கின்றேன். வரலாற்றை எடுத்து நோக்கினால் ஐரோப்பாவின் காவற் கேடயமாக ரஷ்யா விளங்கிவந்துள்ளது. ஜென்ஜிஸ் கானின் படைகள் ரஷ்யாவினாலேயே நிறுத்தப்பட்டன. ரஷ்யா பெரும் பாத்திரத்தை பல்வேறு முக்கியமான விடயங்களில் வகித்துள்ளது. ஹிட்லரின் நாஸிப்படைகளுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவின் பங்கு அளப்பரியது.  ரஷ்யா மாத்திரம் வேறெந்த நாட்டையும் விட அதிகமாக 206 மில்லியன் பேரைப் பலிகொடுத்திருந்தது. ரஷ்யா என்கிற போது தனியே ரஷ்யா அல்ல மாறாக சோவியத் ஒன்றியம் அதில் பல நாடுகள் இருந்தன. அவற்றிலிருந்து ஒட்டுமொத்தமாக  206 மில்லியனுக்கு அதிகமானவர்களை ரஷ்யா பலிகொடுத்திருந்தது. தற்போதைய நிலையில் சர்வதேச அரங்கை   நீங்கள் பரந்து பட்ட நிலையில் நோக்கினால் சர்வதேசத்திலுள்ள எந்தவொரு பெரும் பிரச்சனைக்கு ரஷ்யாவின்றி தீர்க்க முடியாத நிலை காணப்படுகின்றது. 

எகிப்தின் பிரபல சுற்றுலாத்தலமான ஸாம்  அல் ஸேய்க்கிலிருந்து புறப்பட்ட ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் தாங்கிய விமானம் வெடித்துச் சிதறியதில் சில மாதங்களுக்கு முன்பாக ரஷ்யர்கள் பலர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகள் எத்தகைய பாரதூரத்தன்மை கொண்டவை ? உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கும் சவால்கள் என்ன? 

சர்வதேச இது மிகவும் அபாயகரமான சவாலாகும்.இந்த அமைப்பு மிகவும் கொடிய அமைப்பாகும்.இதனைத் தோற்கடிக்க அனைத்து நாடுகளும் ஒரணியில் இருந்த உழைக்கவேண்டும் .

மிகப்பயங்கரமான அமைப்பென்று கூறுகின்றீர்கள் அப்படியாயின் சிரியாவில் இருந்து ஏன் படைகளை வாபஸ் பெற்றீர்கள்?

நாம் நிர்ணயித்த இலக்கை அடைந்ததனாலேயே படைகளை வாபஸ் பெற்றோம். ஆனால் தேவையேற்படின் சில மணி நேரத்திற்குள் அங்கு செல்லுகின்ற வசதிகள் எம்மிடம் உள்ளன. 


அண்மையில் வெளியிடப்பட்ட பனாமா பேப்பரில் உங்களுடைய ஜனாதிபதி புட்டினின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றதே? உண்மையில் அவருடைய பெயர் அதில் இல்லை. மாறாக அவரது நெருங்கிய நண்பரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பரின் பெயர் இடம்பெற்றிருப்பதால் ஜனாதிபதியும் அவரது நண்பருக்கு ஊடாக இதில் சம்பந்தப்பட்டிருக்கலாமோ என ஊகத்தின் அடிப்படையில் கருத்து வெளியிட்டுள்ளனர். உண்மையில் அவர் இதில் எந்தவகையிலும் சம்பந்தப்படவில்லை. 


மேற்கு நாட்டவர்கள் உங்களது ஜனாதிபதிக்கு எதிராக தொடர்ச்சியாக கடுமையா விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன் அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றும்  நோக்கில் செயற்படுவதை செய்திகள் மூலமாக அறியமுடிகின்றது. ஏன்  இப்படியாக அவர் இலக்கு வைக்கப்படுகின்றார் என நினைக்கின்றீர்கள்? 

இந்த விமர்சனங்களும் கருத்துக்களும் பொறாமையின் காரணமாக தெரிவிக்கபடுகின்றன என நினைக்கின்றேன்.



ஜனாதிபதி புட்டினின் காலத்தில் சாதித்த விடயங்களில்  முக்கியமானதா எதைக் கருதுகின்றீர்கள்?  சர்வதேச தளத்தில் இந்த 16 வருடகாலப்பகுதியில் ரஷ்யாவின் வகிபாகத்தின் கனதியை அவர் அதிகரித்திருக்கின்றார். ரஷ்யா இல்லாமல் எவ்வித சர்வதேச பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளமை அவர் விட்டுச் செல்கின்ற பெரும் வகிபாகமாக கருதுகின்றேன். 

ரஷ்யா,இலங்கையில் அதன் புதிய தூதரகக்கட்டிடத்தை நிர்மாணித்து வருகின்றது. இதன் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி புட்டின் வரக்கூடும் என சில செய்திகளைப் படித்த ஞாபகம் உள்ளது. இதற்கான சாத்தியங்கள் உள்ளதா?


நான் ஏற்கனவே புதிய தூதரக்கட்டிடத்தில் தான் கடமையாற்றுகின்றேன். ஆனால் உத்தியோகபூர்வமாக நாம் அதனை இன்னமும் திறந்துவைக்கவில்லை.  நான் நினைக்கவில்லை ஜனாதிபதி இதற்கு வருகை தருவார் என்று இது  ஜனாதிபதி வருமளவிற்கான நிகழ்ச்சியல்ல. 

இன்னமும் இரண்டு வருடங்களில் ரஷ்யா உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தவுள்ளது. இது எவ்வளவிற்கு முக்கியத்துவமானது?

 உலகக் கிண்ணம் என்பது ரஷ்யாவைப் பொறுத்தவiரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கால்ப்பந்தாட்டம் ரஷ்யாவில் மிகவும் பிரசித்திவாய்ந்த விளையாட்டாக திகழ்கின்றது. ரஷ்யா 1960களில் அரையிறுதி வரை உலகக்கிண்ணப்போட்டிகளில் முன்னேறியிருந்தது. அந்தக்காலப்பகுதியில் ஐரோப்பிய சம்பியன் பட்டத்தையும் ஒலிம்பிக் சம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியிருந்தது. இந்த முறை சொந்த நாட்டில் உலகக்கிண்ணம் நடப்பதால் நாம் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்.