Tuesday, May 26, 2020

தவறவிட்ட 2009 முள்ளிவாய்க்கால் புகைப்படம் !




ஊடகவியலாளனான நான் முக்கியமான இடங்களுக்குப் போகும் போது  அந்த இடத்திற்கு முன்பாக நின்று புகைப்படங்களை எடுப்பதுண்டு. அது போன்றே முக்கியமான மனிதர்களைப் பார்க்கும் போதும் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துவைத்துக்கொள்வதுண்டு.

 நான் இப்படிப் புகைப்படங்களை எடுக்கும் போது என்னுடைய சக ஊடகவியலாளர்கள் என்னை கிண்டல் செய்வதுண்டு. என்னதான் ஊடகத்துறைக்குள் நுழைந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டாலும் இப்போதும் ஒவ்வொரு செய்திகளை எழுதும் போதும் என்னை புதியவனாக பார்ப்பதனால் சிறுவர்களுக்கே உரிய ஆர்வத்துடன்  நான் படங்களை எடுக்கத்தவறுவதில்லை.

அந்தப்படங்களை மீண்டும் பார்க்கும் போது அவை வெறுமனே படங்களாக அன்றி வரலாற்று சான்றுகளாக எனக்குத் தோன்றும் . அந்த இடத்திற்கும் காலத்திற்கும் என்னைக் கொண்டுசென்றுவிடும் ஊடகமாக அந்தப்படங்கள் அமைவதுண்டு.

சக்தி, தீபம் டீவியில் பணியாற்றிய காலத்தில் செய்தி சேகரிப்பிற்கான வன்னிக்குச் சென்றபோது விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் எடுத்த புகைப்படம் ( துரதிஷ்டவசமாக அது கணனியில் இருந்து அழிந்துவிட்டது சோகக்கதை) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். எச்.எம் அஷ்ரப் ,மலையக மக்கள் முன்னணியின்  தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை பார்க்கின்றபோது அந்த தருணங்கள் மனதில் நிழலாடும்.

2002ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வன்னிக்கு சென்ற போது எடுத்த பல புகைப்படங்கள் இப்போதும் அந்த தருணங்களை கண்முன்னே கொண்டுவரும்.  போர் மீண்டும் 2006ம் ஆண்டு கடைசியில் மூண்டபின்னர் வன்னிக்குப் போகும் வாய்ப்பு இரண்டு வருடங்கள் இல்லாமல் போனது . இதன் பின்னர் 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி  கிளிநொச்சி  அரசபடைகள் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததையடுத்து இரண்டுமாதங்கள் கழித்து இராணுவத்தினர் தெற்கிலுள்ள ஊடகவியலாளர்களுக்காக ஒரு ஊடக சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர் .


2009 பெப்ரவரி மாதம் 22ம் திகதி :இந்த தினம் எனக்கு நினைவில் இருக்கவில்லை. என்னோடு வந்த சிங்க ஊடகவியலாளர் ரந்திக ஹெட்டியாராச்சியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவருக்கும் தினம் நினைவில்லை ஆனால் அன்றுதான் ஸ்லம்டோர்க்  மில்லியனர் திரைப்படத்திற்கு ஒஸ்கார் விருது கிடைத்தது என்பதை திட்டவட்டமாக கூறமுடியும் என்று சொன்னார். அதன் மூலமாக 2009 பெப்ரவரி 22ம் திகதியே அந்த நாள் என உறுதிப்படுத்திக்கொண்டேன்.

அப்போது எமக்கு வவுனியாவிலுள்ள மெனிக் பார்ம் இடைத்தங்கல் முகாமிற்கே செல்லக்கிடைத்தது. அங்கு கண்ட காட்சிகளை மக்களுடன் பேசிய தருணங்களை இன்று நினைத்தாலும் வேதனைதான்.



இதற்குப் பின்னர் தென்பகுதியிலுள்ள ஊடகவியலாளர்களை  இராணுவம் வன்னிக்கு அழைத்துச் சென்ற தினம் 2009 ஆண்டு ஏப்ரல் 24ம்திகதி.
http://aroarun.blogspot.com/2009/04/blog-posyt_8411.html




கொழும்பிலிருந்து முதலில் அநுராதபுரத்திற்கு விமானத்தில் சென்று அங்கிருந்து கிளிநொச்சிக்கு ஹெலிக்கொப்டரில் சென்று பின்னர் அங்கிருந்து பரந்தன் முல்லைத்தீவு வீதியூடாக புதுமாத்தளன் வரை சென்ற பயணம்.



கிளிநொச்சியில் இறங்கிய போது தீபம் டீவியின் கமராமென் ருவான் மல்தெனிய இராணுவக் கவச வாகனங்களுக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான். அப்போது நானும் அவனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தேன்.



அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை தலைமையகம் அமைந்திருந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றனர்.


அங்கு ஊடகவியலாளர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டபின்னர் ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற சண்டையில் பலியான விடுதலைப்புலிகள் இயக்க தளபதிகளின் படங்களையும் கைப்பற்றிய ஆயுதங்களையும் காண்பித்தனர்.

அங்கிருந்துபரந்தன் முல்லைத்தீவு வீதியாக அழைத்துச் சென்றபோது வளமிக்க தர்மபுரம்,, விசுவமடு புதுக்குடியிருப்பு பகுதிகள்  சின்னாபின்னமாகிக்கிடந்ததைக் காணமுடிந்தது. கவசவாகனத்தில் இருந்தவாறு புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.

அதன் பின்னர் இரணைப்பாலை ஊடாக புதுமாத்தளன் சென்றோம். அந்த இடத்தில் நின்றபோது இறுதியுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பகுதியென சிறிய நீர்ப்பரப்பிற்கு அப்பால் உள்ள பகுதியைக் காண்பித்தனர். நாம் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்குள் தான் இருந்தது என முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் இன்று என்னிடம் கூறினார்.


நாம் நின்றுகொண்டிருந்த இடத்தில் இருந்து பார்த்தபோது சில இடங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. சில இடங்களில் புகைவெளிக்கிளம்பிக்கொண்டிருந்தது. பலரும் அந்தக்காட்சிகளைப் பின்னணியாக வைத்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர்.


வழமையாக படங்களை முந்திக்கொண்டு எடுக்கும் எனக்கோ அன்று என்னுடைய உருவத்துடன் சண்டை இடம்பெறும் பகுதி தெரியும் படியான படங்களை எடுக்கத்தோன்றவில்லை. அப்படி படங்களை எடுக்காமல் விட்டது  நான் எடுத்த நல்ல முடிவு என்றே பார்க்கின்றேன்.

தமிழ் மக்களின் வாழ்வில் இதனை விட சோகத்தை அனுபவித்துவிட முடியுமா என அமைந்துவிட்ட இறுதிப்போர்நாட்களின் நினைவுகளால் நித்திரையிழந்த பல நாட்கள் உண்டு. இந்த வாரம் கூட எனது மனம் நிம்மதி தொலைத்து கவலையால் ஆட்கொள்ளப்பட்டது இன்றும் வேதனையில் மூழ்கிவிட்டேன்.

என்னுடைய உருவத்துடன் சண்டை இடம்பெறும் பகுதி தெரியும் படியான படங்களை எடுத்திருந்தால் 2009ம் ஆண்டின் அந்தக்கணங்களுக்கு என்னை மீண்டும் அழைத்துச் சென்று தற்போதைய நிலையைவிட கோரமான நினைவுகளால் வாட்டி வதைத்திருக்கும். அந்தப்படங்களை எடுக்காமல் தவறவிட்டது நல்லதே.


ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயமாக என்மனதில் படுகின்றது. தமிழர்கள் இலங்கையில் இதனைவிடவும் மோசமான வேதனையை அண்மைய எதிர்காலத்தில்  ஏன் இன்னமும் பல தசாப்தத்துக்கு கூட்டாக அனுபவிக்கப்போவதில்லை. இதுவும் கடந்து போகும். அட்டூழியம் இழைத்தவர்கள் ஆர்ப்பரிக்கலாம். அதர்ம வழியில் நடந்தவர்கள் அதற்கானவிலையைக் கொடுப்பார்கள். . பொறுத்திருப்போம்.

ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதன்








சீனப் பெருஞ்சுவரை நேரில் தரிசித்தபோது உணர்ந்த பெரும் யதார்த்தம்!


கொரோனா வைரஸ் என பொதுவாக அறியப்படும் கொவிட் 19னால்  ஏறத்தாழ ஸ்தம்பித்துப் போயிருந்த உலகம் மெல்ல மெல்ல வழமைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது.

பல்வேறு தொழில்துறைகளும் கொவிட்-19 க்கு முன்பிருந்த நிலையை எட்டுவது தொடர்பாக பல்வேறு கால எல்லைகளை எதிர்வுகூறினாலும்  அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி வெளிநாடுகளுக்கு நாடுகாண் சுற்றுப்பயணங்களை மேற்கொள்வது ஆகக்குறைந்த பட்சம் அடுத்து ஓருவருட காலப்பகுதிக்கு இடம்பெறமாட்டாது என்பதை பயண நிபுணர்களின் கருத்துக்கள் உணர்த்திநிற்கின்றன.

கனவுகளிலேயே  உலகத்தை சஞ்சரிக்க  கொரோனா வைரஸ்  முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில் கடந்த கால பயண நினைவுகளை மீட்டுப்பார்ப்பார்க்கின்றேன்.   நான் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களில் இன்று மனதைவிட்டு அகலாத பயணமாக உலகின் புதிய எழு அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவருக்கு  2016ம் ஆண்டில் மேற்கொண்ட பயணம்  இன்றும் என் மனதில் நீங்கா நினைவுகளாகப் பதிந்துள்ளது.

உலகின் புதிய ஏழு அதிசயங்கள்  எவை?
https://tamil.oneindia.com/news/2007/07/08/wonders.html


நினைத்தாலே மெய்சிலிர்க்கவைக்கும் சீனப் பெருஞ்சுவரின்  வரலாற்றுத் தொன்மை, பிரமிக்கவைக்கும்  பெருமை ஆகியவற்றை இதனைவிடவும் சிறப்பாக எழுத முடியுமா என்ற அளவிற்கு Roarmedia மூன்றாண்டுகளுக்கு  முன்னர் எழுதியிருந்த கட்டுரையை இங்கு தந்துள்ளேன்.

ஆகப்பெரிய அதிசயம் சீனப்பெருஞ் சுவர்



https://roar.media/tamil/main/history/ever-wonder-the-great-wall-of-china/



நாம்  2015ம் ஆண்டிசீனத் தலைநகர் பீஜிங்கில் இருந்து  காலை 8 மணியளவில்  ஆரம்பித்து சுமார் ஒரு மணிநேரம்  பஸ்ஸில்  பயணித்து  Mutianyu என்ற இடத்திற்கு சென்றோம்.



சுமார் 6000 மைல்கள் நீளமான  சீனப் பெருஞ்சுவரை பல்வேறு  பகுதிகளிலுள்ள வாயில்களினூடாக ஏறமுடியும் என்றாலும் மிகவும் நேர்த்தியாக சீரமைக்கப்பட்ட பகுதியாக Mutianyuல் உள்ள சீனப் பெருஞ்சுவரே காணப்படுகின்றது.


காலை 9 மணிக்கு நாம் சீனப் பெருஞ்சுவரில் கடுங்குளிருக்கு மத்தியில் ஏறியது நினைவிலுள்ளது. மார்ச் மாதப்பகுதியில் அந்தப்பகுதயில் அதிகபட்ச வெப்பநிலை 12 பாகை செல்லியஸைத்தாண்டுவதில்லை . எம்முடைய காலத்திற்கு கிட்டத்தட்ட 2 -3 பாகைதான் வெப்பநிலை இருந்திருக்கக்கூடும் என்ற  அளவிற்கு குளிர் வாட்டியது. குளிரைப்பொருட்படுத்தாமல் 20-30 அடிகள் ஏறத்தொடங்கியதுமே மூச்சுமுட்டத்தொடங்கியது.

இருந்தாலும் அதீத  ஆர்வத்தால் மெல்ல மெல்ல சுமார் 200 மீற்றர் தூரத்திற்கு சீனப் பெருஞ்சுவரில் நடந்ததை மறக்கமுடியாது.  வாழ்க்கையில் ஒருமுறையேனும் விஜயம் செய்து பார்க்கவேண்டிய அதிசயம் இந்தச்சீனப் பெருஞ்சுவர் என்றால் மிகையல்லவே!

சீனப் பெருஞ்சுவர் பற்றிய விடயங்களை புத்தகங்களிலும் கட்டுரைகளிலும் மாத்திரமே முன்னர் அறிந்துவைத்திருந்த எனக்கு நேரில் பார்த்தது முதலில் பிரமாண்டத்தை கண்முன் காட்டியது. பல நூற்றாண்டுகளாக பல்வேறு சீன அரச வம்சத்தினரால் கட்டிமுடிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவரை நிர்மாணித்தபோது இடம்பெற்ற துயரங்களை எம்மோடு வந்த சீன வழிகாட்டி  கூறிய போது கண்கள் பனித்தன. ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் சுவர் நிர்மாண வேலைகள் நடைபெற்ற போது இறந்த நிலையில் அதிலே புதைக்கப்பட்டனர் என்ற விடயம் மனதில் தீராத கவலைகளை ஏற்படுத்தியது .


 வெளியே பிரமாண்டமாக சீனாவின் பெருமையாக பார்க்கப்படும் சீனப்பெருஞ்சுவர் மீது நான் நின்ற இடத்தில்  எத்தனை பேரின் உடலங்கள் புதைக்கப்பட்டிருக்மோ என்ற வேதனையும் வாட்டியது. உலகில் ஒவ்வொரு பிரமாண்டங்களுக்கும் பெருமைக்குரிய செயற்பாடுகளுக்கு பின்னணியில் எத்தனை பேரில் உயிர்கள் எவ்வளவு வேதனைகள் சோகங்கள் இருக்கும் என்ற யதார்த்த உணர்வை சீனப் பெருஞ்சுவருக்கான விஜயம் தந்த  தமையை ஆண்டுகள் பல கடந்தும் நினைத்துப் பார்க்கையில் மெய்சிலிர்க்கின்றது.


ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதன்

"உலகம் என்பது ஒரு புத்தகம் . பயணம் செய்யாதவர்கள் அதில் ஒரு பக்கத்தையே படிக்கின்றனர்" புனித அகஸ்தீனார்

“THE WORLD IS A BOOK AND THOSE WHO DO NOT TRAVEL READ ONLY A PAGE.” ~ SAINT AUGUSTINE