Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Tuesday, March 16, 2021

அஸ்ரா செனேக்கா தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் கொள்ள தேவையில்லை : உலக சுகாதார அமைப்பு

 


அஸ்ரா செனேக்கா astrazeneca தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் கொள்ள தேவையில்லையென உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. தடுப்பூசியினை தொடர்ந்தும் செலுத்துமாறு அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் உள்ளிட்ட சில நாடுகள் அஸ்ரா செனேக்கா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையிலையே உலக சுகாதார அமைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுதிக்கொள்ளப்பட்டதன் பின்னர் இரத்தம் உறைவதாக கருத்துக்கள் வெளியானதை அடுத்து அந்நாடுகள் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை இடைநிறுத்தியுள்ளன.



எவ்வாறெனினும் இரத்தம் உறைவதற்கும் இத்தடுப்பூசிக்கும் தொடர்பேதும் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சிலருக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தடுப்பூசி வழங்கலை இரத்து செய்யுமளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லையென உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Friday, February 26, 2021

பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திக்கொன்ற பாதகி : மனதை உருக்கும் பிபிசி செய்தி

 

                               பணிப்பெண்

தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் தொடர்ச்சியாக சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை பணியமர்த்தி இந்திய வம்சாவளி பெண்மணி தன் மீதான குற்றச்சாட்டை கடந்த செவ்வாயக்கிழமை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் விரைவில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.


சிங்கப்பூரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2015 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த அந்த துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கொலை பற்றிய முழு விவரமும் தற்போது வெளியாகியிருக்கிறது.


பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள் தென்பட்டன என்றும், உடலின் மேற்பரப்பில் மட்டும் 47 காயங்கள் காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

                                         கொலைகாரப் பாதகி


இது தொடர்பாக அவரை தன் வீட்டில் பணியமர்த்தி கொடுமைகள் புரிந்த 40 வயதான இந்திய வம்சாவளிப் பெண் காயத்ரி முருகையனும் அவரது கொடிய செயல்பாட்டுக்கு துணை நின்ற அவரது தாயார் பிரேமா நாராயணசாமியும் கைதாகி உள்ளனர்.


காயத்ரியின் கணவரும் காவல்துறை ஊழியருமான கெவின் செல்வம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார்.


உயிரிழந்த பணிப்பெண் பியாங் இங்கை டொன், அவ்வப்போது காயத்ரி வீட்டில் தாக்கப்பட்டது தொடர்பான சில காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அக்காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்ததாக சிங்கப்பூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


நிபந்தனைகளை ஏற்று பணியில் சேர்ந்த பணிப்பெண்

கடந்த 2015ஆம் ஆண்டு மியான்மாரைச் சேர்ந்த பியாங் இங்கை டொன் என்பவர் பணிப்பெண் வேலைக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண் தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்த நிலையில்,காயத்ரியின் வீட்டில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.


கைபேசி பயன்படுத்தக் கூடாது, ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக் கூடாது என காயத்ரி விதித்த சில நிபந்தனைகளிளை ஏற்றுக் கொண்டார் பியாங் டொன். மற்றவர்களுடன் தனது பணிப்பெண் பேசக் கூடாது என்பதே காயத்ரியின் விருப்பம். அதனால் விடுப்பில்லாத நாட்களுக்கும் சேர்த்து பியாங் டொன்னுக்கு அதிக தொகை அளிக்க அவர் முன்வந்துள்ளார்.


காயத்ரி வீட்டில் அவரது கணவர், தாயார், இரு குழந்தைகள், வாடகைக்கு குடியிருக்கும் இருவர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.


பணியில் சேர்ந்த சில தினங்களிலேயே பியாங் டொன் சரியாக வேலை பார்க்கவில்லை என அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளார் காயத்ரி. சுத்தமாக இல்லை, அதிகமாக சாப்பிடுகிறார், மெதுவாக வேலை செய்கிறார் என்று பணிப்பெண் மீது புகார்களை அடுக்கியுள்ளார்.


தொடக்கத்தில் அவ்வப்போது உரக்க கத்தி பணிப்பெண்ணை திட்டித்தீர்த்த காயத்ரி, பிறகு உடல் ரீதியிலும் பியாங் டொன்னை துன்புறுத்த ஆரம்பித்தார். குறிப்பாக 2015, அக்டோபர் மாதம் முதல் அந்த அப்பாவி பணிப்பெண்ணுக்கு 'கொடுமைக்காலம்' தொடங்கியது.


குப்பைக்கூடையில் கொட்டப்படும் உணவைக் கூட சாப்பிட விடவில்லை



தமது குழந்தைகளையும் பணிப்பெண்ணையும் கண்காணிப்பதற்காக வீட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி இருந்தார் காயத்ரி. அவற்றில் பதிவான காட்சிகள்தான் பின்னாட்களில் அவரை போலிசில் சிக்க வைத்துள்ளது.


பணியில் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு பியாங் டொன் உடல் ரீதியிலான தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ளார். அடி, உதைக்கு மத்தியில் தண்ணீரில் தோய்க்கப்பட்ட ரொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவு அல்லது சிறிதளவு சோறு ஆகியவைதான் அவருக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதிகம் சாப்பிடுவதாக குறை கூறிக்கொண்டே உணவின் அளவை வெகுவாக குறைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் காயத்ரி.


வேறு வழியின்றி வீட்டுக் குப்பைக் கூடையில் கொட்டப்படும் வீணாகிப்போன உணவை சாப்பிடுவதற்கும் தயாராக இருந்துள்ளார் பியாங் டொன். ஆனால் அதையும் கண்டுபிடித்து சாப்பிடவிடாமல் தடுத்துள்ளனர்.


தினமும் இரவு ஐந்து மணி நேரம் மட்டுமே பியாங் டொன் தூங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உறங்கினால் எட்டி உதைத்து எழுப்புவார் காயத்ரி.


குளிப்பது, கழிவறைக்குச் செல்வது என எதுவாக இருப்பினும் கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தனது பணிப்பெண்ணுக்கு காயத்ரி பிறப்பித்த கட்டளைகளில் ஒன்று.


14 மாத பணிக்காலத்தில் 15 கிலோ எடை குறைந்து போனார் பியாங் டொன். அதாவது பணிக்கு வரும் முன் இருந்த உடல் எடையில் 38 விழுக்காடு குறைந்து போனது.


பியாங் டொன் சுத்தமாக இல்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்த காயத்ரி, ஒரே சமயத்தில் பல முகக்கவசங்களை அணிந்தபடி வீட்டைச் சுத்தப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.


தனது பணிப்பெண்ணின் முகத்தைப் பார்க்கக் கூட அவர் விரும்பவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.


ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக தனது முதலாளி மற்றும் அவரது தாயாரால் பியாங் டொன் தாக்கப்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதே போல் ஒரே நாளில் பலமுறை தாக்குதலுக்கு ஆளாவதும் நிகழ்ந்தது.


கன்னத்தில் அறைவது, முகத்தில் குத்துவது, தள்ளிவிடுவது, உதைப்பது ஆகிய துன்புறுத்தல்களுடன்இ படுத்திருக்கும்போது எட்டி உதைப்பதும் கனமான பொருட்களைக் கொண்டு தாக்குவதும் கூட நடந்துள்ளது.


இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு உச்சபட்ச கொடுமை

பியாங் டொன் எதிர்பாராத சமயங்களில் அவரது தலைமுடியை மேல்நோக்கி இழுத்து, அங்குமிங்குமாக குலுக்கி, கொத்து முடியை காயத்ரி பிய்த்தெடுத்துள்ளார். ஒரு பொம்மையைப் போல் தனது பணிப்பெண் கையாண்டுள்ளார்.

கடந்த 2016 ஜூன் மாதம் பணிப்பெண் துணிகளுக்கு இஸ்த்ரி போட்டுக் கொண்டிருந்த போது திடீரென வந்த காயத்ரி, இஸ்த்ரி பெட்டியை எடுத்து அவரது நெற்றியிலும் பிறகு கையிலும் சூடு வைத்துள்ளார்.


இதனால் பியாங் டொன் அலறித் துடிக்க, அப்போதும் அவர் சரியாக வேலை செய்வதில்லை என குத்திக்காட்டி உள்ளார்.


இதுபோன்ற துன்புறுத்தல்கள் நிறைந்த காணொளிப் பதிவுகள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அதில் பியாங் டொன் பரிதாபகரமான நிலையில் உடல் மெலிந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதும் பதிவாகி இருந்தது.


இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு பியாங் டொன்னுக்கு உச்சபட்ச கொடுமை நிகழ்ந்துள்ளது. அவரது இரு கைகளையும் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்துள்ளனர். அவரது காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் தனது அறையை விட்டு எங்கும் சென்றுவிடக் கூடாது என்பதில்தான் காயத்ரி கவனமாக இருந்துள்ளார்.


2016 ஜூலை 25ஆம் தேதி இரவு சுமார் 11.40 மணியளவில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பியாங் டொன்னை ஓங்கி குத்திய காயத்ரி, வேகமாக வேலைகளைச் செய்யுமாறு திட்டியுள்ளார்.


பின்னர் கோபம் குறையாமல் அவரது முடியைப் பிடித்து இழுத்தபோது பியாங் டொன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போதும் காயத்ரி விடவில்லை.


பின்புறமாக கீழே விழுந்ததால் எழ முடியாமல் பியாங் டொன் தத்தளிக்க, தனது தாயார் பிரேமாவை அழைத்துள்ளார் காயத்ரி. அதன் பின்னர் இருவருமாகச் சேர்ந்து பணிப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.


பிரேமா தன் பங்குக்கு பியாங் டொன்னை சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என்று வீட்டின் ஒவ்வொரு பகுதிக்குமாக இழுத்துச் சென்றபடியே தாக்கியுள்ளார்.


பியாங் டொன் வயிற்றில் காயத்ரி எட்டி உதைக்க, பிரேமா முகத்தில் குத்தியதுடன் கழுத்தையும் நெரித்துள்ளார்.


ஈரத்துணி, பட்டினி, காயங்களால் ஏற்பட்ட வலியுடன் கண்மூடிய பியாங் டொன்

இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் எந்தவித எதிர்ப்பும் காட்டாத அந்த பணிப்பெண் தனக்கு இரவு உணவு கிடைக்குமா என்று கேட்க, ஏற்கெனவே உணவு கொடுத்தாயிற்று என்று கூறியுள்ளார். மேலும் இரவு தூங்கும் நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று கூறி உறங்கச் செல்லுமாறும் பணித்துள்ளார்.


அன்றிரவும் பியாங் டொன்னின் கைகள் ஜன்னல் கம்பிகளுடன் கட்டப்பட்டன. துணிகளை துவைத்த போது அவர் அணிந்திருந்த ஆடைகள் ஈரமாகிவிட்டன. எனினும் உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் அந்த நள்ளிரவு வேளையில் அவரது வயிற்றில் எட்டி உதைத்துள்ளார் காயத்ரி.


ஈரத்துணியுடன், பட்டினியுடன், உடல் காயங்களால் ஏற்பட்ட வலி வேதனையுடன் கண் மூடியுள்ளார் பியாங் டொன். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அவரை எழுப்ப வந்துள்ளார் காயத்ரி.


பியாங் டொன் கண் விழிக்கவில்லை. இதனால் கோபமடைந்த காயத்ரி வழக்கம்போல் எட்டி உதைத்ததுடன், கழுத்திலும் தலையிலும் தொடர்ந்து குத்தியுள்ளார். இறுதியாக பணிப்பெண்ணின் தலைமுடியை தன் கைகளால் சுருட்டி பின்னோக்கி இழுக்க, பியாங் டொன்னின் கழுத்துப் பகுதியும் பின்னோக்கி இழுக்கப்பட்டது.


இந்த சித்ரவதைக்குப் பிறகும் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை. தன் தாயார் பிரேமாவை மீண்டும் அழைத்துள்ளார் காயத்ரி. இருவரும் சேர்ந்து பியாங் டொன்னுக்கு காப்பி போன்ற பானம் ஒன்றைப் புகட்ட முயன்றனர். சில்லிட்டுப் போயிருந்த உடலில் கை கால்களைத் தேய்த்துவிட்டு சூடேற்றவும் முயன்றுள்ளனர்.


எதற்கும் பலனின்றிப் போகவே மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார். காலை சுமார் 10.50 மணிக்கு வந்த மருத்துவர், பியாங் டொன்னை பரிசோதித்த பின்னர் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளார்.


பணிப்பெண்ணைத் தாக்கினீர்களா? அவருக்கு முறையாக உணவு வழங்கப்பட்டதா ?என்று மருத்துவர் கேட்ட போது பியாங் டொன் தவறி கீழே விழுந்ததாகவும் மருத்துவரின் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை இயல்பாக இருந்ததாகவும் கூறி தாயும் மகளும் சமாளிக்கப் பார்த்துள்ளனர்.


முன்னதாக பியாங் டொன் அணிந்திருந்த உடையை மாற்றி அவரை வீட்டு சோஃபாவில் படுக்க வைத்திருந்தனர். அன்றைய தினம் காயத்ரியின் கணவர் கெவின் செல்வம் பணிக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அங்கு இல்லை.


போலிஸ் விசாரணையை அடுத்து காயத்ரி, அவரது தாயார், கணவர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.


பணிப்பெண்ணின் உடலில் அண்மைய 31 காயங்களும் உடலின் மேல்பரப்பில் 47 காயங்களும் இருந்தது பிரேதப் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.


ஜூலை 25 அன்று காலை காயத்ரி, பியாங்கின் கழுத்தை மீண்டும் மீண்டும் பின்னோக்கி இழுத்தத்தில் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்ததால்தான் மரணம் நிகழ்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.


நோக்கமில்லா மரணம் விளைவித்தது உட்பட 28 குற்றச்சாட்டுகளை காயத்ரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.



அவருக்கு ஆயுள் தண்டன விதிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


பணிப்பெண்ணைத் தாக்கியது தொடர்பாக காயத்ரியின் தாயாரும் கணவரும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.


தாய்மை அடைந்திருந்தபோது காயத்ரி கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 'ஓசிடி' எனப்படும் மனநலப் பிரச்சினையால் அவர் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.


கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி பியாங் டொன் இறந்தபோது அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது. எந்த மகனின் எதிர்காலத்துக்காக வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்தாரோ அந்த மூன்று வயது குழந்தையை மீண்டும் பார்க்காமலேயே கண்மூடிவிட்டார் பியாங் டொன்.


நன்றி :பிபிசி

Thursday, February 11, 2021

இந்த அறிகுறிகள் இருக்கா? அப்படியானால் கொரோனா உறுதி - வெளியான புதிய ஆய்வு



பிரித்தானியாவில் கண்டறியப்பட்டட உருமாறிய கொரோனா வைரஸின் பரவல் தொடர்பாக பலரும் அச்சமடைந்துள்ளனர்.  உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பில் பிரித்தானியா 5-வது இடத்தில் உள்ளது. அங்கு உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வரும் சூழலில், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.



கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரித்தானியாவில் புதிதாக 13,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,996,833-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், Xinhua செய்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 'ஜூன் 2020 முதல் ஜனவரி 2021 வரை 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், வைரஸின் புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

                          அறிகுறிகள் 

தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) வழிகாட்டுதலில் ஏற்கனவே உள்ள அறிகுறிகளான காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், வாசனை / அல்லது சுவை உணர்வு இழப்பு ஆகியவற்றுடன் இந்த புதிய அறிகுறியும் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவலி, தசைவலி 

லண்டன் இம்பீரியல் கல்லூரி வெளியிட்டுள்ள ஆய்வின் படி, குளிர், பசியின்மை, தலைவலி மற்றும் தசை வலி உள்ளிட்ட சில புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவிகித நபர்களுக்கு எந்த அறிகுறிகளும் தெரியவில்லை என்று அறிக்கை கூறுகிறது.


அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்புகளுடன் பிரித்தானியா நான்காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா, பிரேசில் மெக்ஸிகோ மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கையில் ஐந்தாவது பெரிய நாடாக  பிரித்தானியாஉள்ளமை குறிப்பிடத்தக்கது

Monday, February 1, 2021

10 ஆண்டுகளுக்குப் பின்னர் மியான்மரில் மீண்டும் இராணுவ ஆட்சி : ஆங் சன் சூகி உள்ளிட்ட தலைவர்கள் கைது




மியான்மர் நாட்டில் ஆங் சன் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் சமீபத்தில் நடந்த தேர்தலை அடுத்து அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவி வந்த பதட்டத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.



நாட்டின் முக்கிய தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகுஇ மியான்மரில் ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சியின் மூலம் அந்த நாட்டின் ராணுவம் அறிவித்துள்ளது.

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மர் 2011இல் ஜனநாயக சீர்திருத்தங்கள் தொடங்கும் வரை ராணுவத்தால் ஆளப்பட்டது.

இந்த நிலையில், தளபதி மின் ஆங் ஹ்லேங்கிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தலைநகரான நேபியேட்டோ மற்றும் முக்கிய நகரமான யாங்கூனின் தெருக்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக மியான்மர் நாட்டின் என்.எல்.டி. கட்சியின் தலைவர் ஆங் சன் சூகி கைது செய்யப்பட்டதாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.



அரசாங்கத்துக்கும் ராணுவத்துக்கும் இடையிலான பதற்றத்தினால் இந்த கைது நடத்திருக்கிறது. இப்பதற்றமான சூழல் ஆட்சிக் கவிழ்க்கப்படலாம் என்கிற அச்சத்துக்கு வலுசேர்த்திருந்தது.

கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில், நேஷனல் லீக் ஃபார் டெமாகிரசி (என்.எல்.டி) கட்சி ஆட்சியை அமைப்பதற்குத் போதுமாக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அந்த நாட்டு ராணுவமோ தேர்தலில் மோசடி நடந்ததாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு வரை பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மர், ராணுவத்தின் பிடியில் இருந்தது. இதனால் ஆங் சன் சூகி பல ஆண்டுகளை வீட்டுக் காவலில் கழித்தார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மர் நாடாளுமன்றத்தின் கீழவை இன்று (பிப்ரவரி 1இ திங்கட்கிழமை) கூட இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டு ராணுவம் தலையிட்டு அக்கூட்டத்தை ஒத்திவைக்க அழைப்புவிடுத்திருக்கிறது.




மியான்மரின் தலைநகரான நேபியேட்டோ மற்றும் யாங்கூனின் சாலைகளில் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் என பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் ஜொனதன் ஹெட்ட் கூறுகிறார்.

தொலைபேசி மற்றும் அலைபேசி அழைப்பு சேவை மட்டுமின்றி இணைய சேவையும் துண்டிக்கப்பட்டிருப்பதாக பிபிசியின் பர்மீசிய சேவை கூறுகிறது.

மியான்மர் நாட்டின் பல்வேறு பிராந்தியத்தின் முதலைச்சர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர்களின் குடும்பத்தினர்கள் கூறுகிறார்கள்.

மியான்மரின் ஆயுதப் படையினர், அரசியலமைப்புச் சட்டத்தைக் கடைபிடிப்போம் என கடந்த சனிக்கிழமை உறுதியளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங் சன்  சூகி மியான்மரின் ஜனாதிபதி வின் மைன்ட் என பல தலைவர்கள் இன்று காலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் என்.எல்.டி கட்சியின் செய்தித் தொடர்பாளரான மயோ நியுன்ட் கூறினார்.

'மியான்மர் மக்கள் எந்த வித மோசமான வழியிலும் எதிர்வினையாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் சட்டத்தின் வழியில் நடக்க வேண்டும். நானும் கைது செய்யப்படலாம்' என்றார் மயோ.



கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடந்த தேர்தலில் என்.எல்.டி கட்சி மொத்தம் உள்ள இடங்களில் 83 சதவீதம் வெற்றிபெற்றது. இதை பலரும் சூச்சியின் மக்கள் அரசாங்கத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பாகப் பார்த்தார்கள்.

2011-ம் ஆண்டு வரையிலான ராணுவ ஆட்சிக்குப் பிறகு நடத்தப்பட்ட இரண்டாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் நாட்டின் ராணுவம் இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த நாட்டின் அதிபர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புகாரளித்திருக்கிறது ராணுவம். தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.


தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் இந்த விவகாரம் தொடர்பாக ' நடவடிக்கை எடுக்கப்போவதாக' மியான்மர் ராணுவம் சமீபத்தில் அச்சுறுத்தி இருந்தது. எனவே ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம் என்கிற அச்சம் அப்போதே உண்டானது.

நன்றி பிபிசி உலகச் செய்திச் சேவை

============================================================================

இன்று அதிகாலை 5.49ற்கு பதிவிட்ட செய்தி

மியன்மாரில் இராணுவச் சதியா? ஆங் ஷான் சூகி உட்பட முக்கியஸ்தர்கள் தடுப்பில் ..




மியன் மார் நாட்டின் ஆட்சியாளரும் வெளிவிவகார அமைச்சருமான ஆங் சன் சூகி உள்ளிட்ட மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இன்று அதிகாலை அந்நாட்டில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது. 

மியன்மாரில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலை அடுத்து நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தினருக்கும் சிவில் அரசாங்கத்திற்கும் இடையே முறுகல் நிலை அதிகரித்து வந்ததுடன் இராணுவ சதிப்புரட்சி தொடர்பான அச்சங்களும் வலுத்துவந்தன. 

ஆங் சன்  சூகி நாட்டின் ஜனாதிபதி வின் மின்ட் உட்பட ஏனைய அரச தலைவர்கள் அதிகாலை கொண்டுசெல்லப்பட்டதாக மியோ நண்ட் கூறினார்.

மியான்மர் நாட்டு பெண் தலைவர். ஆங் சன் சூ கி. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் ஆளும் கட்சி தலைவராக இருக்கிறார். அந்நாட்டு வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். சக்திவாய்ந்த இராணுவ ஆட்சியாளர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைதிவழியில் ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக 1991ம் ஆண்டு சமாதானத்திற்கான  நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ரொஹின்ஜா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறையை கண்டிக்கத் தவறியமை மற்றும் கண்டுகொள்ளாமல் இருந்தமைக்காக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் நோபல் பரிசை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்ககது. 


Wednesday, January 27, 2021

தொழிலாளர்களை வதைத்த 2020 ஆம் ஆண்டு



 கொவிட்–19 நோய்த் தொற்றால் வேலைச் சந்தை உலக அளவில் ஆட்டம் கண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டோடு ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு உலகளாவிய வேலை நேரம் 8.8 வீதம் குறைந்ததாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

அது, 255 மில்லியன் முழுநேர வேலைக்குச் சமம் என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டது. 2009ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார நெருக்கடி நிலவரத்தைக்காட்டிலும் இது நான்கு மடங்கு அதிகம்.

1930ஆம் ஆண்டு நேர்ந்த உலகின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நேர்ந்துள்ள மிகக் கடுமையான நெருக்கடி இதுவாகும். உலக அளவில் வேலையின்மை 1.1 வீதம் அதிகரித்துள்ளது.

கொவிட்–19 நோய்ப்பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட முடக்கநிலை, நடமாட்டக் கட்டுப்பாடுகள் போன்ற காரணத்தாலும் வேலைகள் பறிபோயின.

இந்த ஆண்டு வேலை வாய்ப்புகள் மெதுவாக உருவாகும். இருப்பினும், நிச்சயமற்ற நிலையால் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

Tuesday, January 26, 2021

புடின் எதிர்ப்பாளர் நாவல்னிக்கு ஆதரவாக உலக நாடுகள்

 



ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு ஆதரவாகவும், அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை மேற்குலக நாடுகள் ஊக்குவிப்பதாக ரஷ்ய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று, ரஷ்யா முழுவதும் குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான காவல்துறையினரை மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற பேரணிகளில் பங்கேற்றனர். இதையடுத்து பேரணியில் பங்கேற்றதாக சுமார் 3,500 பேர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த பேரணியில் 'மிகவும் குறைந்தளவிலான' மக்களே பங்கேற்றதாக நேற்று (ஜனவரி 24இ ஞாயிற்றுக்கிழமை) பேசிய ஜனாதிபதி விளாடிமீர் புடினின்  செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ரஷ்ய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

குறிப்பாக, இந்த 'கைது நடவடிக்கையுடன் தொடர்புடைய ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள்' எடுக்கப்பட வேண்டுமென்று எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்துகின்றனர்.

நவால்னி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை முடுக்கிவிடுமாறு போலந்தின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடாவும் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மீது தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வரும் அந்த நாட்டின் எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸே நவால்னி கடந்த வாரம் ரஷ்யாவில் நுழைந்த உடனேயே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தன் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதி மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும், சைபீரியாவிலிருந்து மாஸ்கோ வரை என நாடுமுழுவதும் சுமார் 100 நகரங்களில் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

குறிப்பாக, ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில், வன்முறை தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து இழுத்துச் செல்வதைக் காண முடிந்தது.

ரஷ்யா முழுவதும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் முன்னெப்போதுமில்லாத வகையில் இருந்ததாக அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தலைநகர் மாஸ்கோவை பொறுத்தவரை, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு போராட்டம் தீவிரமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையினரின் கடுமையான எச்சரிக்கை மற்றும் தடுப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பேருந்துகளில் பயணித்தவர்கள் கையசைத்தும், வாகன ஓட்டிகள் ஒலியெழுப்பியும் ஆதரவு தெரிவித்தது அவர்களை உற்சாகப்படுத்தும் படியாக இருந்தது.

இந்த நிலையில், நேற்று மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டுமென்று வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுபோன்ற கருத்தை தெரிவித்ததன் மூலம் 'தங்களது நாட்டின் உள்விவகாரங்களில்' அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்தார்.

எனினும், இதுபோன்ற அறிவிப்புகள் 'வழக்கமான செயல்பாடே' என்று மாஸ்கோவிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, போராட்டத்தில் பங்கேற்றதற்காக தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம்இ காவல்துறையினரின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

அதே சூழ்நிலையில் மேற்குலக நாடுகள் மாஸ்கோவிலுள்ள தங்களது தூதரகங்களின் வாயிலாக ஆர்ப்பாட்டக்காரர்களை ஊக்குவிப்பதாக பிரிட்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டிருந்தது.


ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்கள், 'மேற்கத்திய போலி ஜனநாயகம் மற்றும் போலி தாராளமயத்துடன் தொடர்புடைய மேற்கத்திய சிந்தனையின் வெளிப்பாடு' என்று கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும் ரஷ்யாவின் செயல் 'சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வது' என்று கருத்துத் தெரிவித்துள்ள பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்யாவிற்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தால் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னியை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்று உயிர் தப்பிய நவால்னி சிகிச்சை முடிந்து கடந்த வாரம் ஜெர்மனியிலிருந்து ரஷ்யாவுக்கு வந்தவுடன் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

அலெக்ஸே நவால்னி மீது கையாடல் (Embezzlement)வழக்கொன்று பதியப்பட்டு அதில் அவருக்கு ஏற்கனவே தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கு அரசியல் காரணங்களால் தன் மீது தொடுக்கப்பட்டதாக நவால்னி கூறுகிறார். இந்த தண்டனை காலத்தில் நவால்னி தொடர்ந்து விதிமீறல் செய்ததால் கடந்த டிசம்பர் 29 முதல் தேடப்பட்டு வருகிறார் என ரஷ்யாவின் சிறைத்துறை கடந்த வாரம் (ஜனவரி 17) ஒரு அறிக்கை வெளியிட்டது.

இது மட்டுமின்றி ரஷ்ய அரசுத் தரப்பு நவால்னி பல்வேறு அமைப்புகளுக்குச் செய்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்கையும் பதிந்திருக்கிறது. தான் ரஷ்யாவுக்கு வருவதைத் தடுத்து பேச்சை நசுக்குவதற்காகவே தனக்கு எதிராக புதின் வழக்குகளை ஜோடிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார் நவால்னி.


நன்றி - பிபிசி உலகச் சேவை

டொனால்ட் ட்ரம்ப் ஏற்படுத்திய படுகாயத்தை ஜோ பைடன் ஆற்றுவாரா?

 


வெகு நாட்களாக ஜனவரி 20, 2021 என்ற திகதி  ஒருபோதும் வராதோ என்று தோன்றியது. நாட்காட்டியில் மிகுந்த இடைவெளியில் அந்தத் திகதி இருந்தது, அமெரிக்காவின் அற்பமான, மிகுந்த ஊழல்வயப்பட்ட, மிகவும் திறமையற்ற ஒரு ஜனாதிபதியிடம் இருந்து  அமெரிக்கா விடுதலை பெறும் தருணமாக நாட்காட்டியில் பரவசப்படுத்திக்கொண்டிருந்தது.

ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் நாள் முதலில் வாரக் கணக்கில் எண்ணப்பட்டது, பிறகு நாள் கணக்கில், பிறகு மணிக் கணக்கில், நிமிடக் கணக்கில், ஏதோ அமெரிக்கர்கள் புத்தாண்டின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்ததைப் போல. இந்த விஷயத்தில், வெறுக்கத்தக்க ஒரு நிர்வாகத்தை உதறித் தள்ளுவதற்கான 8.1 கோடி அமெரிக்கர்களின் தீவிர விருப்பம் மட்டுமல்லஇ டொனால்டு ட்ரம்ப் பதவியில் இருக்கும்போதே என்ன செய்வார் என்பது குறித்த நியாயமான பயமும் அடங்கியிருந்தது.


சிறந்த பதிலடி


ஒருவழியாக ஜனவரி 20-ம் திகதி வந்தேவிட்டது; அமெரிக்கத் தலைநகரில் குளிர் மிகுந்த, பலத்த காற்று வீசும் புதன்கிழமை காலைப் பொழுது. நேஷனல் மாலில் இந்த முறை கூட்டம் இல்லை. குறைந்த அளவு விருந்தினர்கள் மட்டும் சீரான இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு முன்பு இருந்த திடலில் ஏராளமான கொடிகள் இருந்தன. மதியம் 12 மணி ஆவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் , ஜோ பைடனுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பைடனும், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸும் பதவியேற்றுக்கொண்டனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ட்ரம்ப்பால் தூண்டப்பட்ட கலவரக்காரர்கள் எந்த இடத்துக்குள் அத்துமீறி நுழைந்தார்களோ அதே இடத்தில் பைடனும் கமலாவும் பதவியேற்றுக்கொண்டார்கள். அந்தக் கறுப்பு தினத்துக்கு இதைவிட சிறந்த பதிலடி இருக்க முடியாது.

ஜனவரி 6 அன்று கேப்பிட்டலைச் சூறையாட முயன்ற, வன்முறை பீடித்த, வெறுக்கத் தக்க கும்பல் அமெரிக்காவின் மோசமான பக்கத்தைப் பிரதிபலித்தது என்றால் பைடனின் பதவியேற்பில் மேடையில் இருந்தவர்கள் அமெரிக்காவின் சிறப்பான பக்கத்தைப் பிரதிபலித்தார்கள்.

'ஜனநாயகமானது எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடியது. இந்த நேரத்தில், என் நண்பர்களே, ஜனநாயகம் வென்றிருக்கிறது' என்று ஜனாதிபதி பைடன் தனது பதவியேற்பு உரையில் குறிப்பிட்டார். 'ஒரு ஜனநாயகத்தில் மிகவும் அரிதான விஷயம்: ஒற்றுமை. ஒற்றுமை இன்றி அமைதி இல்லை. கசப்பும் சீற்றமும்தான் இருக்கும். நாடு இருக்காது. அலங்கோலத்தின் ஆட்சிதான் இருக்கும்' என்றார் பைடன்.

கறுப்பினத்தவருக்கான விடுதலைப் பிரகடனத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரஹாம் லிங்கன் கையெழுத்திடும்போது கூறிய வார்த்தைகளை பைடன் நினைவுகூர்ந்தார்: 'என் முழு ஆன்மாவும் இதில் இருக்கிறது.'



ட்ரம்ப்பின் கோழைத்தனம்

ஒரு விஷயத்தை பைடன் பேசவில்லை: அவருக்கு முன்னால் இந்தப் பதவியை வகித்தவரின் பெயர்தான் அது. வழக்கமான சூழல்களில் இப்படிச் செய்வது அவமரியாதையின் உச்சமாகவே கருதப்படும். ஆனால், அந்த நிகழ்ச்சிக்குக்கூட வந்திராத ட்ரம்ப்புக்கு இது சரியான விடைகூறலே ஆகும். கடைசிவரை முசுடுபிடித்தவராகவும் சிறுபிள்ளைத்தனமான கோழையாகவும் இருந்த அந்த நபர் நகரத்தை விட்டுப் பல மணி நேரங்களுக்கு முன்பே வெளியேறினார்.

வரலாற்றிலேயே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற முதல் நபர் போல ட்ரம்ப் நடந்துகொண்டார். ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் ஒரு தோல்வியாளர் இருக்கவே செய்வார். புதன் கிழமைக்கு முன்புவரை வெளியேறும் ஜனாதிபதிகள் புதிய ஜனாதிபதியிடம் அதிகாரத்தின் கடிவாளத்தைக் கண்ணியத்துடன் ஒப்படைத்திருக்கிறார்கள். தங்களை அடுத்துப் பதவிக்கு வருபவர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மறுத்த மிகச் சிலரும்கூட அன்ட்ரூ ஜோன்ஸன் போன்றவர்கள்இ புதிய ஜனாதிபதிகளின் வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும்படி பொய்களைப் பரப்பியதில்லை. பெரும்பாலான ஜனாதிபதிகளுக்கு தாங்கள் கொண்டுசென்ற திசையிலும் மாறுபட்ட திசையில் புதிய ஜனாதிபதிகள் நாட்டைக் கொண்டுசெல்வார்கள் என்பது தெரியும். அதை அறிந்துகொண்டுதான் அதிகாரத்தைக் கைமாற்றிவிடுகிறார்கள். தங்கள் அகந்தையைவிட அமெரிக்கா எனும் லட்சியத்தை அவர்கள் பெரிதும் மதித்ததால் அப்படிச் செய்தார்கள். அதற்குப் பதிலாக ட்ரம்ப் தனது கடமையைத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸிடம் தள்ளிவிட்டுச் சென்றார். மேடையில் மைக் பென்ஸ் அமர்ந்திருந்தது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது. ஏனெனில் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது எஜமானரின் காலடியில் விசுவாசமாக இருந்துகொண்டு அவர் தன்னைத் தானே கேவலப்படுத்திக்கொண்டவர்.

வரலாற்றிலேயே மிகவும் அவமானப்பட்ட, மிகவும் அவமானகரமான அதிபராக ட்ரம்ப் தனது பதவியை விட்டுச் சென்றார். ஒட்டுமொத்த தேசத்தையும் அவர் பிளவுபடுத்தி அதனைக் களைப்படையச் செய்துவிட்டார். கடைசி நொடி வரை தனது பதவியை அவர் தவறாகப் பயன்படுத்தினார். கடைசி நிமிட மன்னிப்புகளை ஸ்டீவ் பனான் உள்ளிட்ட நண்பர்களுக்கு வழங்கினார். அவரது முன்னாள் பிரச்சார மேலாளரான ஸ்டீவ் பனான் அமெரிக்க எல்லையில் சுவர்கள் எழுப்பப்போவதாகச் சொல்லி ட்ரம்ப்பின் ஆதரவாளர்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருப்பவர்.


ட்ரம்ப்பின் வசம் இன்னொரு சாதனையும் இருக்கிறது: இரண்டு முறை பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட முதல் அதிபர் அவர். அவர் மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக ஆகாதவாறு நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல்ரீதியிலான பொறுப்பேற்பை அவர் எதிர்கொண்டிருக்கிறார் அதே நேரத்தில் பொருளாதாரரீதியிலான, சமூகரீதியிலான, குற்றவியல்ரீதியிலான பொறுப்பேற்பையும் அவர் சந்திக்க வேண்டும்.

ட்ரம்ப் தற்போது பதவியில் இல்லையென்றாலும் நாட்டில் அவர் ஏற்படுத்திய பாதிப்பு இன்னமும் நீடிக்கவே செய்கிறது. அவருக்கு வாக்களித்த 7.40 கோடி பேர் இன்னமும் அமெரிக்காவில்தான் இருக்கிறார்கள். மிகவும் பிளவுபட்ட நாடு ஒன்று எப்படி ஒன்றுபட்டு தனது காயங்களை ஆற்றிக்கொள்ளும் என்பதற்கு வழியறிவதற்கு நேரம் வரும். அது நடந்தாலும், ட்ரம்ப்பின் துஷ்பிரயோகங்களையோ அதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள் என்பதையோ மறந்துவிட்டு அது நடக்காது. அமெரிக்கர்களை இந்த அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளிவிட்ட தீவிரமான பிரச்சினைகளை – பொருளாதார சமத்துவமின்மையில் ஆரம்பித்து இனவெறி, சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்புவது வரை – மறந்துவிட்டு அது நடக்காது.


பைடன் முன்னுள்ள சவால்கள்


பைடனால் மட்டுமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, என்றாலும் பிரச்சினையின் தீவிரத்தையும் காத்திருக்கும் முட்டுக்கட்டைகளையும் பற்றி அவர் நன்கு அறிவார். அவரது நாடாளுமன்றச் செயல்திட்டங்கள் உச்ச நீதிமன்றத்தால் சவாலான சூழ்நிலைக்குத் தள்ளப்படலாம். ஏனெனில், நூற்றாண்டிலேயே மிகவும் தீவிரமான மரபியர்கள் உச்ச நீதிமன்றத்தை ஆக்கிரமித்துவிட்டனர். பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு நேர்மாறாக சிந்திக்கும் நீதிபதிகள் அங்கே இருக்கிறார்கள்; நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை விளங்கிக்கொள்வதிலும் சட்டங்கள் தொடர்பாகவும் இனி வரும் சில தசாப்தங்களுக்கு அவர்கள் சொல்வதுதான் இறுதித் தீர்ப்பாக இருக்கும்.

எனினும், தற்போது கொஞ்சம் நிதானம் கொள்வோமாக, பைடனை அமெரிக்கா தேர்ந்தெடுத்ததைக் கொண்டாடுவோம். அவர் பதவியேற்றதற்கு முந்தைய நாளில் இருந்ததைவிட மாயாஜாலம் போல வேறொன்றாக அமெரிக்கா மாறிவிடவில்லைதான். எனினும், அமெரிக்கா தற்போது ஒரு கண்ணியமான, அனுபவம் வாய்ந்த பொதுச்சேவையாளர் ஒருவரால், அதாவது தனக்கு வாக்களித்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அக்கறை கொண்ட ஒருவரால் ஆளப்படுகிறது என்பது பெரிய விஷயம். ஊழல்கறை படிந்த, எதேச்சாதிகாரி ஒருவரைத் தேர்தல் மூலம் அதிகாரத்தை விட்டுத் துரத்தியது சாதாரணச் செயல் அல்ல. அமெரிக்க மக்கள் அதைச் சாதித்திருக்கிறார்கள். அவர்கள் இந்த தினத்தை (ஜனாதிபதி பதவியேற்பு தினம்) பெறுவதற்குத் தகுதியானவர்களே. புதிய அதிபரின் பதவியேற்பு என்பது சுயாட்சியின் சிகரமான சடங்காகும்.

தன் பதவியேற்பு நாளில் அவர் ஆற்றிய உரையின் இறுதியில், எதிர்காலத் தலைமுறைகள் 'அவர்கள் இந்த சிதறுண்ட நாட்டின் காயங்களை ஆற்றினார்கள்' என்று சொல்வார்களா என்று கேட்டார். பைடன் அதிகாரத்துக்கு வந்திருப்பதன் மூலம் காயத்தை ஆற்றும் செயல்பாட்டை நாடு தொடங்குவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நமது இதயபூர்வமான வாழ்த்துகளுக்குத் தகுதியானவர் அவர்.


மூலம்:@நியூயார்க் டைம்ஸ். சுருக்கமாகத் தமிழில்: ஆசை-  த ஹிந்து

Monday, January 25, 2021

அமெரிக்காவின் பழம் பெரும் தொலைக்காட்சி நெறியாளர் மரணம்

 



அமெரிக்காவின் பழம்பெரும் தொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் (87) 23ம் திகதி காலமானார்.

இதுகுறித்து அவரது ‘Ora Media’ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரது இறப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

எனினும்இ அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக CNN தொலைக்காட்சி கடந்த 2-ஆம் திகதி தெரிவித்திருந்தது.

1950 மற்றும் 60-களில் வானொலி நெறியாளராக இருந்த லாரி கிங், பிறகு தொலைக்காட்சி நெறியாளராக புகழ்பெற்று விளங்கினாா்.

Peabody, Emmy விருதுகள் அடங்கலாக பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

Friday, January 22, 2021

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய மூவர் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

 


இலங்கையில்   மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய விசாரணைக் குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.இதனையடுத்து கருத்துவெளியிட்ட அவர் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வெற்றிகொள்வதற்காகவும் மனித வள அபிவிருத்தியை பூர்த்தி செய்வதற்காகவும் ஐக்கிய நாடுகளுடனும் அதன் பிரதிநிதிகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசின் கொள்கை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயத்திலான முன்னேற்றம் ஆகியன தொடர்பான 30/1 பிரேரணை மற்றும் அதனுடன் தொடர்புடை மேலும் இரண்டு பிரேரணைகளுக்கு அப்போதைய அரசாங்கம் அனுசரணை வழங்கியது.

எனினும், இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக தற்போதைய அரசாங்கம்இ பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் போது அறிவித்தது.

மனித உரிமைகள் மற்றும் மானிட சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுக்களும் ஏனைய குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டு பல பரிந்துரைகளையும், அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் மீள விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மூவரடங்கிய புதிய ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர்  A.H.M.D.நவாஸ் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளரான நிமல் அபேசிறி ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Thursday, January 21, 2021

"இன்று ஜனநாயகம் வென்றிருக்கிறது"

 



ஜனநாயகம் கடுமையான சவால்களை கண்டிருந்த போதும் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளதாக அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்தார். 

அரசியல் பிளவு, பொருளாதார தேக்கநிலை மற்றும் கொரோனா வைரஸ் பொருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஜோ பைடன் 46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக இன்று அமெரிக்க நேரப்படி (20) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.



அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

'இது அமெரிக்காவின் நாள். ஜனநாயகத்தின் நாள். வரலாறு மற்றும் நம்பிக்கைக்கான நாள்' ,

'பல சோதனைகளை சந்தித்துள்ள அமெரிக்கா, சவால்களில் இருந்து மீண்டுள்ளது. இன்று என் வெற்றியை அல்ல, ஜனநாயகத்தை கொண்டாடுவோம்' ,

'ஜனநாயம் எவ்வளவு விலைமதிப்பானது என்று நாம் மீண்டும் கற்றுக் கொண்டுள்ளோம். ஜனநாயகம் சற்று பலவீனமானது, ஆனால். இன்று ஜனநாயகம் வென்றிருக்கிறது' 

'சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் (கெபிடல் ) வன்முறை வெடித்தது. ஆனால், இங்கு நாம் ஒரே நாடாக, கடவுளுக்கு கீழ் ஒன்றிணைந்து இருக்கிறோம். கடந்த இரண்டு தசாப்தங்களாக எப்படி நடந்ததோ அப்படி இன்றும் அமைதியான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.'



ஜனாதிபதியாக பதவியேற்ற பின் பேசிய முதல் உரையில் பெண் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் குறித்தும்  பைடன் குறிப்பிட்டார்.

'180 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வாக்களிக்கும் உரிமை கேட்டு பேரணி நடத்தியபோது, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்னர். ஆனால், இன்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதியாக  இங்கு கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார். எதுவும் மாறாது என்று கிடையாது' என்று அவர் தெரிவித்தார்.

எனக்கு வாக்களிக்காதவர்களையும் நான் பாதுகாப்பேன் என உறுதி கூறுகிறேன் என்று அவர் பேசினார்.



வொசிங்டன் டி.சியில் கெபிடல் பாராளுமன்ற கட்டடத்திற்கு முன்னால் இடம்பெற்ற பதவியேற்று நிகழ்வில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவியில் இருந்து விடைபெறும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றக் கட்டடத்தில் இந்த மாதம் ஆரம்பத்தில் கலகத்தில் ஈடுபட்ட நிலையில் சுமார் 25,000 துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே பதவியேற்று நிகழ்வு இடம்பெற்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் குடியிருந்த டொனால்ட் ட்ரம்ப், அதனை விட்டு புளோரிடாவில் தமது இல்லத்திற்கு திரும்பினார்.



பைடனின் பதவியேற்பு நிகழ்வில் ட்ரம்ப் பங்கேற்காதது அமெரிக்க வரலாற்றில் 150 ஆண்டுகளில் முதல் முறையாக இருந்தது. இதற்கு முன்னர் கடைசியாக 1869 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக உலிசஸ் எஸ் கிராண்ட் பதவி ஏற்றபோது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அன்ட்ரூ ஜோன்சன் பங்கேற்கவில்லை.

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதியரசர் ஜோன் ரொபட்ஸ் முன்னிலையிலேயே  பைடன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வு சம்பிரதாயமான அம்சங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தவிர, ஜனவரி 06 ஆம் திகதி டிரம்ப் ஆதரவாளர்களின் அத்துமீறிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாதுகாப்பு வழக்கத்தை விடவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் முன்னர் பைடன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தபோது ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, பில் கிளின்டன் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகிய மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்றிருந்தனர்.

ட்ரம்பின் துணை ஜனாதிபதியான மைக் பென்ஸும் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தார். தலைநகருக்கு வெளியில் இராணுவத் தளம் ஒன்றில் ட்ரம்பின் பிரியாவிடை வைபவத்தை தவிர்த்தே பென்ஸ் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பைடன் அரை மணி நேர உரை ஒன்றையும் நிகழ்த்தினார். அதில் தேசிய ஐக்கியம் அதிகம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முதலாவது பெண் மற்றும் கறுப்பு மற்றும் ஆசிய அமெரிக்கராக ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

மறுபுறம் 78 வயதான பைடன் அமெரிக்காவின் மிக வயதான ஜனாதிபதியாகவே பதவியேற்றார்.

முன்னதாக அமெரிக்க நேரப்படி இன்று காலை மெரிலாந்தில் இருக்கும் அன்ட்ரூஸ் கூட்டுப்படை தளத்தில் ட்ரம்ப் பிரியாவிடை வைபவத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் ஜனாதிபதிக்கு பின்னரான வாழ்வை தொடர்வதாற்காக பாம் பீச்சில் மாரா லேகோ கொல்ப் விடுதிக்கு ஏர்போர்ஸ் ஒன் விமனாத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதி பதவியின் கடைசி நேரத்தில் ட்ரம்ப் 140க்கும் அதிகமானவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்தார். இதில் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான தமது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பெனொனும் உள்ளார்.

பிரியாவிடை செய்தி ஒன்றையும் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தார். அதில் நாட்டைப் பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்துக்கொள்வதற்கு அடுத்த நிர்வாகத்துக்கு வாழ்த்து தெரிவத்துக்கொண்டார்.

ஆனால், அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பெயரை அவர் தமது உரையில் குறிப்பிடவில்லை.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பைடன் பெற்ற வெற்றியை முழுமையாக ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் மறுத்து வருகிறார்.

இந்த மாத ஆரம்பத்தில், அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்தின் மீது தொடுக்கப்பட்ட வன்முறை தாக்குதலை 'தூண்டியதாக' ட்ரம்ப் மீது ஏற்கனவே பாராளுமன்ற பிரதிநிதிகள் அவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து செனட் அவையில் விசாரணை நடைபெறும். செனட் அவை விசாரணை நடத்தி, குற்றச்சாட்டை உறுதி செய்யும்பட்சத்தில் அவர் பதவி நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால், அவர் பதவிக்காலம் அதற்கு முன்பே முடிவுக்கு வருவதால், அவர் மீண்டும் அமெரிக்க அரசு பதவிகளுக்கு போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படலாம்.



அமெரிக்க வரலாற்றிலேயே தமக்கு எதிராக இரண்டு முறை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பெற்ற முதல் ஜனாதிபதி ட்ரம்ப் ஆவார்.

எனினும், பிரச்சினைகளை விடுத்து தனது தலைமையிலான நிர்வாகம் சாத்தியமாக்கிய இலக்குகளை மட்டும் தனது வீடியோவில் பட்டியலிட்ட ட்ரம்ப்இ 'எனது நிர்வாகம் உலக வரலாற்றில் மிகச் சிறந்த பொருளாதாரத்தை கட்டமைத்துள்ளது' என்று கூறினார்.

Sunday, January 17, 2021

வட்ஸ் அப் கணக்கு நீக்கப்படாது: மே 15 வரை கால அவகாசம்

 


தங்களுடைய நிபந்தனைகளை ஏற்காத கணக்குகள் பெப்ரவரி 8ம் திகதி யன்று முடக்கப்படும் என்று தெரிவித்திருந்த வட்ஸ் அப், தனது முடிவில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிந்துகொள்ள ஏதுவாக மே 15 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் வட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

200 கோடிக்கும் அதிகமான பாவனையாளர்களுடன் முன்னணி மெசேஜிங் சேவையான வட்ஸ் அப் செயலியின் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வட்ஸ் அப்பின் மாற்றி அமைக்கப்பட்ட நிபந்தனைகளில், ஃபேஸ்புக்குடன் தரவுகள் பகிர்ந்து கொள்ளப்படுவது தொடர்பான அம்சமே அதிகம் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிபந்தனைகள் பெப்ரவரி 8ம் திகதி  அன்று அமலுக்கு வருவதாகவும் வாட்ஸ் அப் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்த இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் உண்டான சர்ச்சையை அடுத்து புதிய நிபந்தனை மாற்றம் வட்ஸ் அப் வர்த்தக சேவை தொடர்பானது என்றும் பயனாளிகள் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் வட்ஸ் அப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

எனினும் வட்ஸ் அப் பயனர்களின் தனியுரிமைப் பாதுகாப்பு குறித்த கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்களுடைய நிபந்தனைகளை நிற்காத கணக்குகள் பெப்ரவரி 8ம் திகதி முடக்கப்படும் என்று தெரிவித்திருந்த வாட்ஸ் அப் தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. பயனர்கள் தங்களுடைய புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிந்துகொள்ள ஏதுவாக மே 15 வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும் வட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  அமெரிக்க நேரப்படி நேற்றும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையிலும் வட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பயனர்களின் வட்ஸ் அப் கணக்கு பெப்ரவரி 8ம் திகதி அன்று முடக்கவோ, தற்காலிகமாக நீக்கவோ படாது. இது தொடர்பாகப் பரவி வரும் பல்வேறு தகவல்கள் உண்மையல்ல. அவை தவறானவையே. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும்.

புதிய அப்டேட்டில் எவ்வாறு தரவுகள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வட்ஸ் அப்பை இப்போது எல்லோரும் வணிகப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்துவதில்லை என்பதால் வருங்காலத்தில் இன்னு அதிகப் பயனர்கள் வணிகப் பயன்பாட்டைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நினைக்கிறோம். இதனால் புதிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்துப் பயனர்கள் அறிந்துகொள்ள போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Friday, January 15, 2021

டொனால்ட் ட்ரம்ப் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக போட்டியிட முடியாதா?

 


எதிர்வரும் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டரம்ப்பை போட்டியிடாது தடுக்கும் நகர்வுகளில் முக்கிய கட்டம் தற்போது நிறைவேறியுள்ளது. 

நேற்றையதினம் ,அமெரிக்க  ஜனாதிபதி டிரம்ப் மீது அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டமான கேபிடலில் வன்முறையில் ஈடுபடும்படி தமது ஆதரவாளர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் கிடைத்தன.



பதவிக்காலம் முடியும் முன்பாக பதவி நீக்கப்படுவாரா?

பல மணி நேரம் நடந்த கடுமையான விவாதங்களுக்குப் பிறகு இந்த கண்டனத் தீர்மானம நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வின்போது அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வெளியேயும்இ உள்ளேயும் 'நேஷனல் கார்ட் ட்ரூப்ஸ்' என்ற தேசிய பாதுகாப்புத் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே தமக்கு எதிராக இரண்டாவது முறை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் முதல் ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தான். இதுவரை மூன்று ஜனாதிபதிகளுக்கு எதிராகத்தான் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ள நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் செனட் அவையில் விசாரணை நடக்கும். அங்கே அந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டால் மீண்டும் அவர்  ஜனாதிபதி பதவிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படும்.

ஆனால் ஜனவரி 20ம் திகதி அவர் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக அவர் பதவி நீக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. காரணம், அதற்கு முன்பாக மீண்டும் செனட் கூடாது.

கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப் தோல்வி அடைந்து, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அடுத்த வாரம் ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாக, தலைநகர் வாஷிங்டன் டிசியிலும், 50 மாநிலத் தலைநரங்களிலும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கக் கூட்டரசு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. எச்சரித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு வெளியிட்ட ஒரு வீடியோவில் டிரம்ப் தமது ஆதரவாளர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால்இ தம் மீது நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் குறித்து அவர் அந்த விடியோவில் எங்கும் அவர் குறிப்பிடவில்லை. 'வன்முறைக்கும் அட்டூழியத்துக்கும் நமது நாட்டில் இடமில்லை.... என்னுடைய உண்மையான ஆதரவாளர்கள் எவரும் அரசியல் வன்முறையை கையில் எடுக்க மாட்டார்கள்' என்று கூறி உருக்கமாகப் பேசினார் அவர்.

டிரம்ப் மீது என்ன குற்றச்சாட்டு?



கண்டனத் தீர்மானம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள்  அரசியல்ரீதியிலானவை. குற்றவியல் ரீதியிலானவை அல்ல.

ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகைக்கு முன்பாக ஜனவரி 6-ம்  திகதி கூடிய கூட்டத்தில் பேசிய ஜனாதபி டிரம்ப், கேபிடல் கட்டடத்தில் நுழையும்படி ஆதரவாளர்களைத் தூண்டினார் என்பதுதான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டனத்தீர்மானம் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

அந்த உரையில் தமது ஆதரவாளர்களிடம் 'அமைதியாகவும், நாட்டுப்பற்றோடும்' தங்கள் குரலை கேட்கும்படி செய்யவேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், அதை மட்டும் கூறவில்லை. திருடப்பட்ட தேர்தல் என்று அவர் சுமத்திவரும் பொய்யான குற்றச்சாட்டை மீண்டும் வைத்த அவர், அந்த தேர்தலுக்கு எதிராக 'நரகம் போல சண்டையிடுங்கள்' என்று நேரடிப் பொருள்தரும் ' 'fight like hell' ' என்ற தொடரையும் பயன்படுத்தினார்.

இந்தப் பேச்சுக்குப் பிறகு, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து சான்றளிக்கும் நடைமுறைக்கு குந்தகம் விளைவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புக்காக ஓடும் நிலையை ஏற்படுத்தினர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

'ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மோசடியானவை என்றும், அவற்றை ஏற்கக்கூடாது என்றும் மீண்டும் மீண்டும் அவர் பொய்யான அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருந்தார் என்று கண்டனத் தீர்மானத்தின் பிரிவு' ஒன்று கூறுகிறது.

'அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், அதன் அரசாங்க நிறுவனங்களுக்கும் மோசமான ஆபத்தை ஏற்படுத்தினார் டிரம்ப், ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார், அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடப்பதில் தலையிட்டார்' என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இந்த கண்டனத் தீர்மானத்தில் இடம் பெற்றிருந்தன. 

தகவல் மூலம்- பிபிசி

Wednesday, January 13, 2021

ட்ரம்ப் ஆதரவாளர்களின் புதிய ' ஆயுத' திட்டம்?

 


ஜோ பைடன், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவி ஏற்கும் தினத்தில் நாடெங்கும் ஆயுதம் ஏந்திய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெறும் ஜனவரி 20 ஆம் திகதி 50 மாநிலங்களினதும் தலைநகரங்கள் மற்றும் வொசிங்டன் டி.சியில் ஆயுதம் தரித்த குழுக்கள் ஒன்றுகூட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து கலகத்தில் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களின் பின்னரே பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதனை ஒட்டி பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மறுபுறம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இன்று புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாக பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் 'கிளர்ச்சியை தூண்டியதாக' ஜனாதிபதி மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதோடு டிரம்பை பதவி நீக்கம் செய்ய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தவறும் பட்சத்திலேயே இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனைச் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்து பென்ஸ் இடம் இருந்து எந்த சமிக்ஞையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கெப்பிட்டல் கட்டிடத்தில் இடம்பெறும் நிகழ்விலேயே ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்கவுள்ளனர். கடந்த ஜனவரி 6 ஆம் திகதி இடம்பெற்றது போல் மற்றொரு அத்துமீறல் நிகழ இடமளிப்பதில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் முடிவு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களால் உறுதி செய்து வாக்களிப்பு இடம்பெறும் சந்தர்ப்பத்திலேயே ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் அந்தக் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக ட்ரம்ப் ஆதாரமின்று குற்றம்சாட்டி வந்த சூழலிலேயே இந்த வன்முறை இடம்பெற்றது. இதில் ஐவர் கொல்லப்பட்டனர்.

அது தொடக்கம் டிரம்பை பதவி விலகும்படி அழுத்தம் அதிகரித்திருப்பதோடு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர ஜனநாயகக் கட்சியினர் தயாராகி வருகின்றனர். தவிர, டிரம்பின் சமூக உடகங்கள் இடைநிறுத்தப்பட்டிருப்பதோடுஇ குறிப்பாக டிவிட்டர் அவரது கணக்கை நிரந்தரமாக நிறுத்தியது.

இதனிடையே ட்ரம்ப் ஆதரவாளர்கள் பல போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்தப் போராட்டம் எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பித்து ஜனவரி 20ஆம் திகதியன்று தலைநகர் வொஷிங்டன் டி.சியை நோக்கி பயணப்பட இருப்பதாக, டிரம்புக்கு ஆதரவான மற்றும் வலதுசாரியினரின் வலைதளப் பதிவுகளில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 16 முதல் 20 ஆம் திகதி வரை எல்லா மாநில தலைமையகங்களிலும் போராட்டங்கள் நடக்கலாம் என எப்.பி.ஐ எச்சரித்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநில சபைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உள்ளூர் காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ட்ரம்ப் பதவிக் காலத்துக்கு முன்னதாகவே பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பதவியேற்கும் நாளில் ட்ரம்ப் பங்கேற்கவில்லை என்றாலோ, உள்ளூர்இ மாநில மற்றும் ஐக்கிய நீதிமன்றங்களில் முற்றுகையிட ஒரு குழு அழைப்பு விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Sunday, January 10, 2021

சர்வதேயமயமான முள்ளிவாய்க்கால் தூபி தகர்ப்பு: பிரித்தானிய அமைச்சர் ஆழ்ந்த கவலை தெரிவிப்பு




 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பு குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக தெற்காசிய விவகாரங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார். 



"யாழ்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றவற்றையிட்டு ஆழ்ந்த கவலையடைகின்றேன்.இலங்கையில் நடைபெற்ற மோதல்களில் மரணித்த அனைவரையும் நினைவுகூருவது இலங்கை மக்களுக்கு முக்கியமானது .ஏனெனில் அது கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்திற்கு மேம்படுத்துவதற்கும் உதவும்" என பிரித்தானிய அமைச்சர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



Saturday, January 9, 2021

ட்ரம்பின் ஆட்டத்தை முற்றாக அடக்கிய டுவிட்டர்




அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக இராஜினாமாச் செய்யவில்லை என்றால் கடந்த புதன் கிழமை அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் அத்துமீறியைமைக்காக அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படும் என அமெரிக்க சபாநாயகர் நான்ஸி பெலோசி எச்சரித்துள்ளார். 

"கிளர்ச்சியைத் தூண்டியமை" என்ற குற்றச்சாட்டு எதிர்வரும் திங்களன்று நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையிலுள்ள ஜனநாயகக்கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ளது. 

அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் மீது வன்முறைக்கு கிளர்ச்சியாளர்களைத் தூண்டியதாகவே அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வன்முறைகளில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் பாரிய சேதம் விளைவிக்கப்பட்டது. 



இதனிடையே தொடர்ந்தும் வன்முறைகளைத் தூண்டிவிடும் அச்சம் உள்ள காரணத்தால் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி ட்ரம்பின்  பிரதானமான பிரசார ஊடகமாக டுவிட்டர்  சமூக வலைத்தளம் காணப்பட்டது. அதில் அவரை 89 மில்லியன்  பேர் பின்தொடர்ந்துவந்தனர். இப்போது அந்த கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.





கடந்த புதன் கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு 12 மணிநேரம் முடக்கப்பட்டது. இப்போது அது முற்றுமாக முடக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது. 

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் கூடியது. இதற்கான இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில் தற்போதைய  உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தலைமையில் ஜோ பைடனை ஜனாதிபதியாக  அறிவிக்கும் நிகழ்ச்சி கடந்த புதன் கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்துக் கொண்டும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தனர். ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் ஜோ பைடனை ஜனாதிபதியாக அறிவிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு, உப ஜனாதிபதி  மைக் பென்ஸ் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதர உறுப்பினர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் நாடாளுமன்ற அவையின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு பூட்டப்பட்டது.

இதனிடையே டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டரில் 'இத்தேர்தல் தங்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு தேர்தல். இது ஒரு மகத்தான தேர்தல் என்பதை அனைவரும் அறிவர். நமக்கு அமைதி வேண்டும். நாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

வன்முறைக்கு மத்தியில், பதவி விலகும் ட்ரம்ப் தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சைக்குரியது என்றும் ஆகவே அவரது வீடியோவை கட்டுப்படுத்துவது எனவும் ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்தே கடந்த புதன்கிழமை அவரது டுவிட்டையும் கணக்கையும் முடக்கியது. ட்ரம்ப்பின் இந்தப் பதிவு வன்முறைக்கு வித்திடும் எனவும், அதற்கு பதிலளிக்கவோ அல்லது மீள் பதிவிடவோ முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Friday, January 8, 2021

34 லட்சம் கோடிகளுடன் உலகின் மிகப்பெரிய பணக்கார் வரிசையில் முதலிடம் பிடித்தார் எலன் மஸ்க்

 





உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் அமெஸன் நிறுவனத்தலைவர் ஜெஃவ் பெஸோஸை பின்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலன் மஸ்க் .

நேற்றைய தினத்தில்  எலன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 185 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியிருந்தது. இலங்கை நாணயத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களின் தற்போதைய மதிப்பு 18800 கோடி  ரூபா என்கின்ற நிலையில் எலன் மஸ்கின் சொத்துப்  பெறுமதி தற்போதைய நிலையில் 3 478 000 கோடி ரூபா என்றால் வியப்பாகவுள்ளதா?

உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரராக பல வருடங்களாக முதலிடத்தில் இருந்த மைக்ரோ ஷொஃப்ட் நிறுவனத்தலைவர்  பில் கேட்ஸை பின்தள்ளி 2017ம் ஆண்டில் முதலிடம் பிடித்திருந்தார் அமெஸன் நிறுவனத்தலைவர் ஜெஃவ் பெஸோஸ் .

இந்த நிலையில் மின்சார கார் {எலெக்ரிக் கார்} தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் தலைவரான எலன் மஸ்க் நேற்று ஜனவரி 7ம் திகதி உலகின் பணக்காரர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளதாக புளும்பேர்க் செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உலகம் திண்டாடிக்கொண்டிருந்த 2020ம் ஆண்டில் மட்டும் எலன் மஸ்கின் சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. இது இலங்கை நாணயத்தில் 2,820 ,000 கோடி ரூபா ஆகும்.

2020ம் ஆண்டு ஆரம்பித்த போது எலன் மஸ்கின் சொத்துமதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவே காணப்பட்டது. உலகில் முதல் பத்து பணக்காரர் வரிசையில் கூட அவர் இருக்கவில்லை. டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் தொடர்ச்சியாக பலமடங்குகள் அதிகரித்ததன் விளைவாகவே கிடுகிடுப்பென அவர் முதலிடத்திற்கு வந்திருக்கின்றார். கடந்தாண்டில் டெஸ்லா பங்குகள் 9 மடங்கு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பணக்காரர் வரிசையில்   இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜெஃவ் பெஸோஸ் 25 ஆண்டுகளாக மனைவியாக இருந்த மெக்கன்ஸி ஸ்கொட்டை கடந்தாண்டில் விவாகரத்து செய்த போது அவருக்கு 38 பில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கியிருந்தார். கடந்தாண்டு ஜுலை மாதத்தில் விவகாரத்து  செய்திருக்காவிடின்  200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துமதிப்பு எல்லையைக் கடந்த முதலாவது செல்வந்தர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். 

புதிய பணக்காரர் வரிசை விபரம் வருமாறு

1. எலன் மஸ்க் -185 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 

2. ஜெஃவ் பெஸோஸ்-184 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 

3.பில் கேட்ஸ்-132 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

4. பேர்னாட் ஆர்னோல்ட்-114 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

5 மார்க் ஸக்கர்பேர்க் -100 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

6. ஷொங் ஸன்ஸன்- 93 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

7. வொரன் பஃவ்வட்-87 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

8. லரி பேஜ்- பில்லியன் அமெரிக்க டொலர்கள்

9. சேர்ஜி பிரின்-79 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

10. லரி எலிஸன்-79 பில்லியன் அமெரிக்க டொலர்கள்


Thursday, January 7, 2021

ஜோ பைடன் வெற்றி உத்தியோகபூர்வமானது. ஆட்சேபனைகளை பென்ஸ் நிராகரித்ததையடுத்து ஆரவாரம்

 


வரலாறு காணாத வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் நடத்திய கலவரத்துக்குப் பிறகு மீண்டும் கூடிய நாடாளுமன்ற செனட் அவையில்இ ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து குடியரசுக் கட்சியினர் பதிவு செய்த ஆட்சேபனைகளை உப ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரித்தார்.



இதையடுத்து செனட் அவையில் பலத்த கைத் தட்டல் எழுந்தது.

குடியரசுக் கட்சியின் ஆட்சேபனையில் எந்த செனட் உறுப்பினரும் கையெழுத்திடவில்லை என்பதால் அது நிராகரிக்கப்பட்டது.

ஜோர்ஜா மாநிலத்தில் இருந்து கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோடி ஹைஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு ஆட்சேபனையை பதிவு செய்திருந்தார்.

மர்ஜோரி டெய்லர் கிரீன் என்ற இன்னொரு ஜோர்ஜா பிரதிநிதி மிஷிகன் மாநில தேர்தல் சபை வாக்குகள் குறித்து ஆட்சேபனை செய்தார். ஆனால் அதுவும் ஏற்கப்படவில்லை.


புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த காலத்தில் கியூ அனான் சதிக் கோட்பாட்டை ஆதரித்தவர்.


அலபாமா மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோ ப்ரூக்ஸ் நவேதா மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆட்சேபனை செய்தார். அதுவும் ஏற்கப்படவில்லை.


கலவரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய உப ஜனாதிபதி மைக் பென்ஸ்இ அமெரிக்க கேபிடல் வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என்று குறிப்பிட்டார். இவரும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற அதே தேர்தலில் அவரது சக போட்டியாளராகவே போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.





அமெரிக்காவில் வரலாறு காணாத கலவரம்:வொஷிங்டன் டிசி-யில் ஊரடங்கு




அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தோல்விகண்டதை ஒப்புக்கொள்ள மறுத்துவரும் ஜனாதிபதி ட்ரம்பின்  டிரம்ப் ஆதரவாளர்கள்,அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் ஹில் கட்டடத்துக்கு வெளியேயும்,உள்ளேயும் குவிந்த கலவரத்தில் ஈடுபட்டனர்.200 வருடகாலத்தில் முதற்தடவையாக அமெரிக்க நாடாளுமன்றம், கலவரக்காரர்களின் அத்துமீறல்களுக்குள்ளாகியுள்ளமை  அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதலில் தேர்தல் சபை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிறகு அவர்கள் ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வாக்களிப்பார்கள்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இப்படி தேர்தல் சபை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை டிசம்பர் 14ம் திகதி செலுத்தி அவற்றை சீலிட்ட கவர்களில் அனுப்பிவைத்தனர். அந்த வாக்குகள் புராதன மகாகனி மரப்பெட்டிகளில் வைத்து கேப்பிட்டல் கட்டடத்துக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

அந்த வாக்குகளை அமெரிக்க நாடாளுமன்றத்தில் எண்ணும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில் இந்தக் கலவரம் நடந்துள்ளது.



இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.


எனினும் இந்த வாக்குச் சீட்டுகள் காப்பாற்றப்பட்டதாக ஒரு செனட் உறுப்பினர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


வழக்கமாக இந்த வாக்குச் சீட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஓராண்டு காலத்துக்கு பொதுமக்கள் விரும்பினால் சரிபார்ப்பதற்காக ஃபெடரல் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.


இந்தக் கலவரத்தில் ஊடகங்கள் தாக்கப்பட்டன.இதையடுத்து வொஷிங்டன் டிசி-யில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தை தொடர்ந்து தனது ஆதரவாளர்களைத் திரும்பிப் போகும்படி டிரம்ப் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அகற்றியுள்ளன. அந்த வீடியோவில் ஆதரவாளர்களை திரும்பிப் போகச் சொல்லும் அதே நேரம் அவர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரமில்லாமல் மீண்டும் குற்றம்சாட்டினார்.

பேஸ்புக் அவரது கணக்கை 24 மணித்தியாலத்திற்கு முடக்கிவைத்துள்ளது.டிவிட்டர், டிரம்பின் கணக்கை 12 மணி நேரத்துக்கு முடக்கி வைத்துள்ளது.

முன்னாள் அதிபரும் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான ஜனாதிபதியும் ஜோர்ஜ் புஷ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.



பெண் மரணம் 13 பேர் கைது 5 ஆயுதங்கள் சிக்கின

கலவரத்தில் சுடப்பட்ட ஒரு பெண் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது பெயரை அவர்கள் வெளியிடவில்லை.

இந்தக் கலவரம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


வாக்குகளை எண்ணும் பணி இரவு மீண்டும் தொடரும்


புதன்கிழமை இரவே மீண்டும் தேர்தல் சபை வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் தொடரும் என்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்தார்.

தலைநகரில் 2,700 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கலவரக் காரர்கள் கலைந்து சென்றனர்.

அண்டை நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ்  ஜோன்சன் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் இதனை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கண்டித்துள்ளனர்.


நன்றி: பிபிசி


Wednesday, January 6, 2021

ஜோ பைடனின் வெற்றியை இறுதிநேரத்தில் தட்டிப்பறிக்க அமெரிக்க ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சி வெற்றிபெறுமா?

 


தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் உட்பட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட நகர்வுகள்  தோல்விகண்ட நிலையில் இறுதி அஸ்திரமாக நம்பியிருப்பது உப ஜனாதிபதி மைக் பென்ஸைத்தான்.


அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகும் நம்பிக்கையை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னமும் கொண்டிருக்கின்றார் என்பது பலருக்கும் ஆச்சரியமளிக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் முற்றுமாக இல்லாமல் போகவில்லை என்பது நிதர்சனம்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3ம் திகதி நடைபெற்றது .  இழுபறிகளுக்கு மத்தியில் நவம்பர் 7ம்திகதியன்று ஜோ பைடன் வெற்றிபெற்றதாக ஊடகங்கள் அறிவித்தன. அதன்பின்னர் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு படி நிலைகளைத் தாண்டவேண்டியிருந்தது. அதில் முதல் படியாக தேர்தல் மன்றக்கல்லூரி வெற்றியை உறுதிப்படுத்துவது . அது கடந்த டிசம்பர் 14ம்திகதி இடம்பெற்றது . தற்போது இரண்டாவதும் கடைசியுமான படியாக அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் தேர்தல் மன்றக்கல்லூரியால் உறுதிப்படுத்தப்பட்டதை மீளுதிப்படுத்தவேண்டும்.

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப்

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப் இருப்பினும்இ இத்தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றுள்ளதால் ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை ஜனாதிபதி  டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார்.தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் உட்பட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட நகர்வுகள்  தோல்விகண்டன. 

எம்பிகள் திட்டம் 

அமெரிக்கத் தேர்தல் விதிமுறைகளின்படி ஒவ்வொரு மாநில அரசும் யார் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து சான்றிதழை அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் அளிக்கும். இன்று (ஜனவரி 6) அந்த சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டுஇ அதன்படி  தேர்தல் உறுப்பினர்கள் ஒன்றுகூடி புதிய  ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த நிகழ்வில்தான் டிரம்ப் ஆதரவு எம்பிகள் பைடனின் வெற்றிக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவுள்ளனர். இருப்பினும்இ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் இதனால் எந்த தாக்கமும் இருக்காது என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்..

உப ஜனாதிபதிக்கு ட்ரம்ப் அழுத்தம்

ஜோ பைடனின் வெற்றியை செல்லுபடியாக்கி தமது வெற்றியை உறுதிசெய்வதற்காக இதுவரை மேற்கொண்ட திட்டங்கள் தோல்விகண்டுவிட்ட நிலையில், இறுதி அஸ்திரமாக நம்பியிருப்பது உப ஜனாதிபதி மைக் பென்ஸைத்தான்.



ஜனாதிபதி டிரம்பின்  பார்வை உப ஜனாதிபதி  மைக் பென்ஸை நோக்கித் திரும்பியுள்ளது. ஏனென்றால் இன்று கூடும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் சான்றிதழ்களைத் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தான் உறுதி செய்வார். இந்த இடத்தில் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, ஜனநாயக கட்சி வென்ற சில மாநிலங்களைச் சேர்ந்த தேர்தல் மன்றக்கல்லுரி உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் ,மைக் பென்ஸை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி  டிரம்ப் கூறுகையில் 'இந்த விஷயத்தில் செயல்படத் உப ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்பதில் நானும் பென்ஸும் உறுதியாக உள்ளோம். அமெரிக்காவின் அரசியலமைப்பின் கீழ் உப ஜனாதிபதிக்கு இதுபோல பல அதிகாரங்கள் உள்ளன. மாநில தேர்தல் முடிவுகளை ரத்து செய்யவும் செல்லாது என்றும் அறிவிக்கவும் அவரால் முடியும். அவர் இதைச் செய்யவில்லை என்றால்இ எனக்குப் பிடிக்காத நபராக அவர் ஆகிவிடுவார். டிரம்ப் இவ்வாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவதுஇ பைக் பென்ஸ் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

                          இன்று என்ன செய்யப்போகிறார் பென்ஸ்? 

இருப்பினும், டிரம்பின் வலியுறுத்தல்களுக்கு மைக் பென்ஸ் கட்டுப்பட மாட்டார் என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளனர். அவர் ஜனாதிபதிக்கு ஆதரவாக இருப்பார் என்றாலும்கூட இறுதியில் அரசியலமைப்பின்படியே அவர் செயல்படுவார் என்று உப ஜனாதிபதி அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் கூறியுள்ளார். 'இது வெறும் சம்பிரதாய நடைமுறை. மாநில அரசுகள் அனுப்பியுள்ள தேர்தல் முடிவு சான்றிதழ்களை உப ஜனாதிபதி கவரில் இருந்து எடுத்துப் படிக்க வேண்டும் அவ்வளவுதான்' என்றார்.