Sunday, January 31, 2021

100,000 பக்கங்கள் கொண்ட ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை தயார்?

 


உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, சுமார் ஒரு இலட்சம் (1,00,000) பக்கங்களை கொண்டதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அச்சிடுவதற்கு சுமார் 10 மில்லியன் ரூபாய் செலவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள தகவல்களின் படி, இதனை அச்சிடுவதற்கு அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாட்சியங்கள் சுமார் 40,000 பக்கங்களை கொண்டதென தெரிவிக்கப்படுகிறது.

ஆணைக்குழு அதன் விசாரணைகளை ஜனவரி 27 ஆம் திகதி முடிவுக்கு வந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாணர் ஷானி அபேசேகர ஆணைக்குழு முன் இறுதியாக சாட்சியமளித்தார்.

ஆணைக்குழுவின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், அதன் விசாரணை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இலங்கை எதிர்நோக்கும் பேரபாயம்- மனித உரிமை ஆணையாளர் அறிக்கையின் பின் எச்சரிக்கிறார் கலாநிதி தயான் ஜயதிலக்க

 இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லே அம்மையார் பிரசுரித்துள்ள அறிக்கை முன்னெப்போதுமில்லாத வகையில் மிகவும் பாரதூரமானதாக அமைந்துள்ளதாக ஜெனிவாவிற்கான இலங்கையின் முன்னாள் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியாக செயற்பட்ட சிரேஷ்ட இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். குளோப் தமிழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். 



மனித உரிமைகள் ஆணையாளர் இரண்டு விடயங்களை முக்கியமாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருக்கும் அவர் அதில் ஒன்று கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டுவருகின்ற போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்களுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறலாக உள்ளது என குறிப்பிட்டார். மற்றைய விடயம் முக்கியமானது என குறிப்பிட்ட அவர் போர்க்காலத்தில் கூட யாருமே கூறாத விடயமாக உள்ளது. அதுதான் இலங்கை அரசின் கட்டமைப்பு மாற்றம் பற்றியதாகும். அதாவது ஜனநாயக அரசு என்பது இராணுவமயப்படுகின்றது என்ற விடயம் முக்கியமானது என அவர் கூறினார். 

தற்போது மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே மேற்கொள்ளக்கூடிய விடயங்கள் என உறுப்பு நாடுகளுக்கு ஆணையாளர் பரிந்துரைத்துள்ள விடயங்களில் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் வெளிநாடுகளின் இலங்கையில் போர்க்குற்றம் இழைத்ததாக நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தல் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல் அவர்களது சொத்துக்களை முடக்குதல் ஆகியன இலங்கைக்கு பாரிய சவாலாக மாறும் அபாயமுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

தற்போதைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சிலி நாட்டின் ஜனாதிபதியாக இருமுறை இருந்தவர் என்ற வகையில் உலகெங்கும் பெரு மரியாதைக்குரியவராக கருதப்படுகின்றார். அவரது தந்தை சிலியின் இராணுவத்தில் ஜெனரலாக இருந்தவர். ஜனநாயக வாதியான அவர் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார். தனிப்பட்ட ரீதியில் அவர் இந்த விடயங்களை நன்கறிந்தவர்.  ஆணையாளரது பரிந்துரைகளை உலகிலுள்ள  பாராளுமன்றங்கள் செனற் மேலவைகள் ஆராயத் தொடங்கினால் இலங்கையிலுள்ள ஆட்சியாளர்களும் இராணுவத்தினரும்  பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் எனவும் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறினார். 






22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் பிரித்தானியாவில் 4 வயது சிறுமியால் கண்டுபிடிப்பு

 


பிரித்தானியாவில் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் டைனோசரின் காற்தடத்தை 4 வயது சிறுமியொருவர் கண்டு தனது தந்தைக்கு தெரிவித்துள்ளார்.

சுமார் 22 கோடி ஆண்டுகள் பழமையான இந்த கால்தடம் இவ்வளவு காலம் ஈர மண்ணால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது 10 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாகவுள்ளது. 75 சென்டிமீட்டர் உயரம் கொண்ட டைனோசரின் கால் தடமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனினும், எந்த வகையான டைனோசர் என அவர்களால் கணிக்க முடியவில்லை.

சிறுமி லில்லியும் அவரது தந்தை ரிச்சர்ட்டும் கடற்கரையோரம் நடந்து செல்கையில், லில்லி இந்த கால் தடத்தைக் கண்டு ரிச்சர்ட்டிற்கு காண்பித்துள்ளார்.

அவர் அதனை புகைப்படம் எடுத்து தனது மனைவிக்கு காண்பித்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவி அதனை நிபுணர்களுக்கு அறிவித்துள்ளார்.

டைனோசர்கள் எப்படி நடந்தன என்பதை நிறுவ இந்த கால் தடம் உதவும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

'இதுவரை இந்த கடற்கரையில் கிடைத்த கால் தடங்களிலேயே இந்த கால் தடம் தான் மிகவும் சிறந்தது' என வேல்ஸில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தின்இ வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களை ஆராயும் அறிஞர் சிண்டி ஹோவெல்ஸ் கூறியுள்ளார்.

டைனோசரின் காலடித் தடத்தை சிறப்பாக பராமரித்தால், விஞ்ஞானிகள் டைனோசரின் காலின் உண்மையான வடிவத்தை நிறுவ அது உதவும் என வேல்ஸ் தேசிய அருங்காட்சியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Saturday, January 30, 2021

அரச செலவில் வெளிநாடுகளுக்கு மேற்படிப்பிற்காக சென்ற 101 விரிவுரையாளர்கள் நாடுதிரும்பவில்லை



அரச செலவில் வெளிநாடுகளுக்கு மேற்படிப்பிற்காக சென்ற மூன்று பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 101 விரிவுரையாளர்கள் நாடுதிரும்பவில்லை என்ற தகவல் கணக்காய்வின் மூலமாக வெளியாகியுள்ளது. 

நாடு திரும்பாமை காரணமாக இந்த விரிவுரையாளர்கள் 290 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு திருப்பியளிக்க வேண்டியுள்ளது. 

ஜயவர்த்தன புர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 விரிவுரையாளர்களும் மொரடுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 37 விரிவுரையாளர்களும் களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 விரிவுரையாளர்களும் வெளிநாடுகளுக்கு அரச செலவில் மேற்படிப்பிற்காக சென்றபின்னர் நாடுதிரும்பவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஐநா அறிக்கையை உன்னிப்பாக ஆராயும் அமெரிக்கா

 


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் Edward Ned Price-இன் ட்விட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் கொண்டுள்ள கரிசனைகள் மற்றும் கடந்த கால சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மீதே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெச்சலட் அண்மையில் வௌியிட்டிருந்தார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச ஊழியர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.

அனைத்து மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் உடனடியாக, விரிவான பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறும் தனது வருடாந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீண்ட கால வழக்குகளுக்கு பொறுப்புக்கூறும் விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறலை பலப்படுத்தி உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு விடயத்தில் மறுசீரமைப்புகளை அமுல்படுத்துமாறும் மிச்செல் பெச்சலட் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

Friday, January 29, 2021

அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் சிங்கப்பூரை முந்தியது இலங்கை

 


உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையின் படி இலங்கை தற்போது சிங்கப்பூரை  விட அதிக தொற்றாளர்கள் கொண்ட நாடாக மாறியுள்ளது. 



ஜனவரி 28ம்திகதி தரவுகளின் அடிப்படையில் 59,425 ஒட்டுமொத்த தொற்றாளர்களுடன் உலக அளவில் சிங்கப்பூர் 93வது இடத்திலுள்ள அதேவேளை இலங்கை 61,045 தொற்றாளர்களுடன் 91வது இடத்திலுள்ளது. 

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகத்தொடங்கியது முதலாக ஒரு நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய நாளாக நேற்றைய தினம்  அமைந்தது. நேற்று மாத்திரம் 892 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். ஒட்டுமொத்த தொற்றாளர்கள்  61,045பேரில் இதுவரை 54 ,435 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.  தொடர்ந்தும் 6,854 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். 

இலங்கையில் ஏற்கனவே 290 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில்,  நேற்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ள 7 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 297 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் இவ்வாறு முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்திவரும் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் கொவிட-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள், பரிசோதனை சதவிகிதங்களை அடிப்படையாக கொண்டு அவுஸ்ரேலியாவின்  Australian think tank the Lowy Institute  நிறுவனம் நடத்திய ஆராய்வுகளின் பிரகாரமே இலங்கைக்கு 10ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்திவரும் நாடுகளில் நியூசிலாந்துக்கு முதலிடம்.


100 நாடுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டுள்ள இந்த பகுப்பாய்வில் வியட்நாம், தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த விடயத்தில் ஆஸ்திரேலியா 08ஆவது இடத்திலும் இலங்கை 10ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான தொற்றாளர்கள் கண்டறிப்படும் அமெரிக்கா 94ஆவது இடத்தில் உள்ளது. இந்தோனேசியாவும் இந்தியாவும் முறையே 85 மற்றும் 86ஆவது இடங்களில் உள்ளன.

இந்தப் பட்டியலில்   Australian think tank the Lowy Institute நிறுவனம் சீனாவை தரப்படுத்தவில்லை. சீனாவின் உண்மையான தரவுகளை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல் நிலைமையால் இவ்வாறு தரப்படுத்தப்படவில்லை.

பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் கொவிட்-19 வைரஸை மிகவும் திறம்பட கையாண்டுள்ளதாக Australian think tank the Lowy Institute நிறுவனம் கூறியுள்ளது.






Thursday, January 28, 2021

விருப்பமில்லை எனில் கொரோனா தடுப்பூசியை தவிர்த்துக்கொள்ள முடியுமா?

 



கொரோனா வைரஸ் தொடர்ந்தும் வேகமாக உலகில் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக தடுப்பூசி ஏற்றவேண்டும் என்ற எண்ணப்பாடு பலருக்கும் உள்ள அதேவேளை தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் மற்றும் இதர காரணங்களால் தடுப்பூசியை ஏற்ற விரும்பாதவர்களும் உள்ளனர். 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட தீர்மானம் என லலித் வீரதுங்க கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள Covishield தடுப்பூசியின் முதலாவது தொகுதி இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று காலை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.



ஜனாதிபதி, பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க தடுப்பூசி பரிசளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் Astrazeneca Covishield  தடுப்பூசி மும்பையின் Serum Institute-இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் Astrazeneca Covishield  தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று முற்பகல் 11.45 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இன்று கொண்டுவரப்பட்டுள்ள 2,50,000 தடுப்பூசிகளின் நிறை 1323 கிலோகிராம் ஆகும்.

குளிரூட்டபட்ட விசேட வாகனத்தில்,Astrazeneca Covishield தடுப்பூசிகள், சுகாதார அமைச்சிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், 2 – 8 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.



இந்த தடுப்பூசிகள் 25 மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை மேல் மாகாணத்தின் 06 வைத்தியசாலைகளில் நாளை (29) ஆரம்பிக்கப்படவுள்ளது.

Covid ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 1,50,000 ஆயிரம் சுகாதார சேவையாளர்கள், முப்படையின் 1,20,000 பேர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

இதனிடையேஇ ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக சீனாவினால் 03 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக covid தடுப்பூசியை தருவிப்பது தொடர்பான குழுவின் தலைவர் ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.



28 இராணுவ அதிகாரிகளுக்கு கோட்டா முக்கிய பதவிகளை வழங்கியுள்ளதாக ஐநா அறிக்கையில் சுட்டிக்காட்டு- ரொய்ட்டர்ஸ்

 



போரின் இறுதி ஆண்டுகளில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்  ஆகியவற்றில் ஈடுபட்டதாக  ஐநா அறிக்கைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் உட்பட  இராணுவத்தைச் சேர்ந்த 28 அதிகாரிகளை (2020)கடந்தாண்டில் முக்கியமான நிர்வாகசேவை பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதை தனது அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லேட் சுட்டிக்காட்டியுள்ளார்.  

 எனினும், இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளதாகவும் அது தவறானதெனவும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நேற்றையதினம் மிகவும் காட்டமான அறிக்கையை  வெளியிட்டிருந்தார்.

'பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீது    நாடுகள் பயணத்தடைகள் மற்றும் சொத்துக்களை முடக்குதல் போன்ற இலக்குவைக்கப்பட்ட தடைகளை பிறப்பிப்பது குறித்து பரிசீலிக்க முடியும்' என்று தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதுடன் என்று தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதுடன்  உலகளாவிய நியாயாதிக்கத்தின் அடிப்படையில் தமது சொந்த நாடுகளிலேயே குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத்தொடரமுடியும்' என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஐநா ஆணையாளரின் அறிக்கையில்  கண்டறிதல்களை இலங்கை அரசாங்கத்தரப்பினர் உடனடியாக நிராகரித்துள்ளனர். அதில் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் இந்த அறிக்கையில் விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் முறையே 58வது மற்றும் 53வது  படையணிகளுக்கு தலைமை தாங்கியிருந்தனர். இந்த இரு படையணிகளும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களின் கீழேபாரதூரமான குற்றச்செயல்களை ஆயுத மோதல்களின் போது இழைத்துள்ளனர் எனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019ம் ஆண்டு ஓகஸ்ற் மாதத்தில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால  இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டபோது சர்வதேச நாடுகள் சில கரிசனைகளை முன்வைத்த நிலையில் அவை வருந்தத்தக்கது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்ததுடன் அந்த தீர்மானம் இறையாண்மை கொண்ட நாட்டின் தனிப்பட்ட  நடவடிக்கை எனவும் குறிப்பிட்டிருந்தது. 

இந்த அறிக்கைதொடர்பாக இலங்கை அரசாங்கம் வழமையான மறுப்பை வெளியிட்டுள்ளபோதிலும் மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஜோன் பிஸர் இந்த அறிக்கை இலங்கை சர்வதேச சட்டங்களின் கீழ் இழைத்த குற்றங்கள் தொடர்பாக எவ்விதமான பொறுப்புக்கூறலுமின்றி முற்றுமுழுதாக தண்டனை விலக்குபான்மையில் நடந்துகொண்டிருப்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.






Wednesday, January 27, 2021

இலங்கையில் "எதிர்கால வன்முறைகளுக்கும் மோதல்களுக்குமான விதைகள்" நாட்டப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை சுட்டிக்காட்டு

 


இலங்கையில் எதிர்கால வன்முறைக்கும் மோதல்களுக்குமான விதைகள் நாட்டப்பட்டுள்ளதாக  சற்றுமுன்னர் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்ட  இலங்கை தொடர்பான அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லேட் தெரிவித்துள்ளதுடன் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட  இலங்கை அதிகாரிகள் மீது அங்கத்துவ நாடுகள் பயணத்தடைகளை விதிப்பது குறித்தும் அவர்களது சொத்துக்களை முடக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என கோரியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை  இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக இரகசியமான முறையில் அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம்  அது கசியவிடப்பட்டிருந்தது. முன்னெப்போதுமில்லாத வகையில் இலங்கை மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்திருந்தார். 

மனித உரிமை பேரவைக்கு வெளியே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பொறுப்புக்கூறலை முன்நகர்த்துவது நாடுகள் தமது உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தி நம்பகரமான பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பல பரிந்துரைகளை அவர் முன்வைத்திருந்தார். 

. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஆரம்ப மாகு முன்னர் இலங்கை தொடர்பான கடுமையான அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


தொழிலாளர்களை வதைத்த 2020 ஆம் ஆண்டு



 கொவிட்–19 நோய்த் தொற்றால் வேலைச் சந்தை உலக அளவில் ஆட்டம் கண்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டோடு ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு உலகளாவிய வேலை நேரம் 8.8 வீதம் குறைந்ததாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

அது, 255 மில்லியன் முழுநேர வேலைக்குச் சமம் என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டது. 2009ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார நெருக்கடி நிலவரத்தைக்காட்டிலும் இது நான்கு மடங்கு அதிகம்.

1930ஆம் ஆண்டு நேர்ந்த உலகின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நேர்ந்துள்ள மிகக் கடுமையான நெருக்கடி இதுவாகும். உலக அளவில் வேலையின்மை 1.1 வீதம் அதிகரித்துள்ளது.

கொவிட்–19 நோய்ப்பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட முடக்கநிலை, நடமாட்டக் கட்டுப்பாடுகள் போன்ற காரணத்தாலும் வேலைகள் பறிபோயின.

இந்த ஆண்டு வேலை வாய்ப்புகள் மெதுவாக உருவாகும். இருப்பினும், நிச்சயமற்ற நிலையால் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

Tuesday, January 26, 2021

பிரித்தானியாவில் பரவுவதைவிட உக்கிரமான கொரோனா திரிபு இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது

 


பிரித்தானியாவில் பரவும் கொரோனா வைரஸை விட வித்தியாசமானதும் விரைவாக பரவக்கூடியதுமான கொரோனா வைரஸ் வகையை ஆய்வாளர்கள் இலங்கையிலும் கண்டுபிடித்துள்ளனர்.

சுவிட்ஸர்லாந்து, ஜேர்மன், டென்மார்க்இ ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் தற்போது இந்த கொரோனா வைரஸ் வகை பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களின் மாதிரிகள் கடந்த வாரம் சோதனைகளுக்காக பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர், மருத்துவர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.

இந்த ஆய்வின் போது, குறித்த வைரஸ் இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸிலிருந்து மாறுபட்ட தன்மையைக் கொண்டிருப்பதாகவும்  டீ1.258 பரம்பரையைக் கொண்டது எனவும் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி மூலமான நோய் எதிர்ப்பு சக்திக்கு அச்சுறுத்தலான செயற்பாட்டைக் கொண்டிராததால் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.


இது குறித்து தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருதாகவும் அவர் கூறினார்.

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை கட்டாயமாக எரிப்பது மனித உரிமை மீறலாகும்-ஐநா நிபுணர்கள் கூட்டாக அறிக்கை

 




கொவிட்-19அன்றேல் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்கின்ற  கொள்கையை இலங்கை அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

 அப்படி இல்லாதவிடத்து ஏற்கனவே வேர்விட்டுள்ள பாரபட்சம் சகிப்புத்தன்மையின்மை மற்றும் வன்முறைகளுக்கு தூபமிடுவதாக இது அமைந்துவிடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 



"கொவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டதாக அன்றேல் சந்தேசமுள்ளதாக இனங்காணப்படும் சடலங்களை கையாளும் போது தகனம் செய்வது ( எரிப்பது) என்ற நிலைப்பாட்டை மாத்திரமே கொண்டிருப்பது  மனித உரிமை மீறலுக்கு நிகரானதாகும். கொவிட்டால் இறந்தவர்களின் உடலங்களைப் புதைப்பதனால்  கொவிட்-19 போன்ற தொற்றுநோய்களின் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதென்ற கூறப்படும் விடயத்தில் இலங்கையிலோ அன்றேல் ஏனைய நாடுகளிலோ மருத்துவ ரீதியான அன்றேல் விஞ்ஞான ரீதியான சான்றுகள் இல்லை" எனவும் ஐநா நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் நான்கு பிரதிநிதிகளால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரிகளான  Ahmed Shaheed, Fernand de Varennes, Clément Nyaletsossi Voule மற்றும் Tlaleng Mofokeng  ஆகியோரால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இதனிடையே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

தாம் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களையே பின்பற்றுவதாகவும் அதனை நிராகரித்தால் ஏற்படக்கூடிய மோசமான நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டியேற்படும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.

 

விழி பிதுங்கி தவிக்கும் ராஜபக்ஷ அரசாங்கம் - மனோ சுட்டிக்காட்டு

 


எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும்தாம் தூண்டிவளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள்தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து,  விடுபட முடியாமல்நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசாங்கம்இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாக திகழ்கிறது.   

 

கொழும்பு துறைமுக  கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவை பங்காளியாக்க கடந்த  அரசு திட்டமிட்டபோது அதை எதிர்த்துதமது தொழிற்சங்கங்களையும்தேரர்களையும் தூண்டி விட்டுதெருவில் இறக்கிஅரசியல் செய்த ராஜபக்ச அரசுஇப்போது அதே இந்தியாவுக்குஅதே கிழக்கு முனையத்தைஅதே அடிப்படையில்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கொழும்பு மாவட்ட எம்பியும், ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

 

இது இவர்களது இனவாத பரம்பரை பழக்கம். எமது நல்லாட்சியின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வு திட்டத்தைபுதிய அரசியல் அமைப்பாக நாம் கொண்டு வர முயற்சி செய்த போதுஅதை எதிர்த்து நாட்டில் பேரினவாத தீயை பற்ற வைத்தவர்கள் இவர்களாகும். இவர்களை ஒதுக்கி தள்ளி ஆரம்பித்த பணியினை முடிக்கஅன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதுகெலும்பு இருக்கவில்லை.

 

அதைபோல்அமெரிக்க அரசுடன் எம்சிசி ஒப்பந்தம் குறிந்து நாம் பேசிய போதுஅதை எதிர்த்து நாட்டை தீ வைத்து கொளுத்திஇதுபற்றி ஒன்றுமே தெரியாதவண. உடுதும்பர காஸ்யப்ப என்ற  பெளத்த தேரரை கொண்டு வந்து எம்சிசிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்தவர்கள்இவர்களாகும்.

 

பின்னர் ஆட்சிக்கு வந்த உடன்,  எம்சிசி ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இனாமாக தர இருந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துக்கு ஆசைப்பட்டு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்கள்.  எம்சிசி ஒப்பந்தத்தில், 70 விகிதம் நல்லதே என உதய கம்மன்பில என்ற தமிழ்முஸ்லிம் மக்களை சதா கரித்து கொட்டித்தீர்க்கும் அமைச்சர் சொன்னார். ஆனால், கடைசியில் “சரிதான் போங்கடா” எனஅமெரிக்கா எம்சிசி ஒப்பந்தத்தையும்,  400 மில்லியன் அமெரிக்க டொலரையும் எடுத்துக்கொண்டு போயே போய் விட்டது.  

 

“ஐயோ, கைக்கு வந்ததுவாய்க்கு எட்டவில்லையே” என கையை விட்டு போய்விட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நினைத்து நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசின் உள்ளே ஒப்பாரி ஓலம் கேட்டது.

 

அதைபோல்,  கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாஜப்பான் நாடுகளை பங்காளிகளாக்க கடந்த அரசு திட்டமிட்டபோதுஅதை எதிர்த்துதமது தொழிற்சங்கங்களையும்தேரர்களையும் தூண்டி விட்டு தெருவில் இறக்கி அரசியல் செய்தமகிந்த ராஜபக்சவிமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்காரஉதய கம்மன்பில ஆகியோர் அடங்கிய கூட்டணிஇன்று நந்தசேன கோடாபய ராஜபக்ச தலைமையில் ஆட்சி அமைத்தவுடன்சுருதி இறங்கி பேசுகிறது.

 

பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதவும் முடியாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளஇதே கொழும்பு துறைமுகத்தில் 85 விகித பங்குரிமையுடன் இவர்கள் சீனாவின் சைனா மெர்ச்சன்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள சீஐசீடி என்ற இன்னொரு முனையத்தை திரும்பி வாங்கவும் முடியாமல், கோடாபய ராஜபக்ச அரசாங்கம்விழி பிதுங்கி போய் நிற்கிறது.

 

இந்நிலையில் இந்த அரசில் இருக்கும் ஒரு அரை அமைச்சரான நிமல் லான்சா,  “கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை யார் தடுத்தாலும்இந்தியாவுக்கு  வழங்கியே தீருவோம்” என வெட்டி வீறாப்பு பேசுகிறார். இதை இவர் இன்றைய எதிரணியான எங்களிடம் கூற தேவையில்லை. தெரியாமல் வாக்களித்த பொதுமக்களிடம் கூற தேவையில்லை.  எதிர்கட்சியில் இருக்கும் போது இவர்களே ஊட்டி வளர்த்த இவர்களது கட்சியின் தொழிற்சங்கங்கள் மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர்வண. ஓமல்பே சோபித தேரர்வண. முருத்தெட்டுகம தேரர்  ஆகிய பெளத்த தேரர்களிடம்தான் கூற வேண்டும்.




 

ஜோ பைடன் நிர்வாகத்திலும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கை மீதான அழுத்தங்கள் தொடரும்- அமெரிக்க தூதுவர்

 



அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்துகொள்ளுமா என்பது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க முடியாது எனவும் அவர் கருத்துவெளியிட்டார்.

எனினும் ஏனைய நாடுகள் மூலமாக இலங்கையில் உண்மையான அமைதி காணப்படுவதை உறுதிசெய்வதற்காக பாடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின்போதும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தகதியிலேயே காணப்படுகின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மனித உரிமைக்கு ஆதரவளிப்பதை இலங்கையுடன் வலிந்து மோதலில் ஈடுபடுவதாக கருதக்கூடாது எனவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை உறுதிசெய்ய இந்தியா கையாண்ட 'கடும் பேரம்': வெளியாகின தகவல்கள்

 



கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் தமக்குரிய பங்குகளை உறுதிசெய்துகொள்ளும் விடயத்தில் இந்தியா கடுமையான பேரம்பேச்சை முன்னெடுத்ததான தகவலை நிக்கே ஏசியா என்ற சர்வதேச சஞ்சீகைக்காக  எழுதியுள்ள கட்டுரையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் மார்வன் மாக்கன் மார்க்கார் வெளிக்கொண்டுவந்துள்ளார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தில் தமக்குரிய பங்குகளுக்கு உரிமைகோரி இந்தியா பிரயோகித்த அழுத்தத்திற்கு இலங்கையின் கடும்போக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அடிபணிந்தார் என அந்தக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது  திட்டவட்டமான முறையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வதற்கான விதிமுறைகளை  வெளிப்படுத்திய நிலையிலேயே ஜனாதிபதி ராஜபக் ஷ தனது இறுக்கமான முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரென  மார்க்கார் மேலும்  தெரிவித்துள்ளார். 

பிராந்திய பூகோள அரசியல் கரிசனைகளை கருத்தில் கொண்டே  இந்தத்திட்டத்தினை முன்னெடுக்க  இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதாக  ராஜபக்ஷ அலுவலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மார்க்கார் தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளார். 



இந்தியாவினால் பிரயோகிக்கப்பட்ட கடும் அழுத்தங்களையடுத்து தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதற்கு அமைய கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 51% மான பங்குகளை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் அதேவேளை 49% மான பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனம் கொண்டிருக்கும்.  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாரிய உட்கட்டுமான திட்டங்களை முன்னெடுக்கும் இந்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமான  உறவுகளைப் பேணிவருபவர் என அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. 

இந்த துறைமுக உடன்படிக்கை இந்தியாவிற்கு கிடைப்பதை உறுதிசெய்துகொள்வதற்கு  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் காண்பித்த கடும் அழுத்த இராஜதந்திரமானது பிராந்திய வல்லரசு என்ற தனது ஆதிக்க வலுவை இந்தியா தேவையான நேரத்தில்  தேர்ந்து பிரயோகிக்கும் என்பதை கோடிட்டுக்காண்பிப்பதாக அமைந்திருக்கின்ற என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்பதை கொழும்பை தளமாக கொண்டிருக்கும் இராஜதந்திர சமூகத்தினர் புரிந்துள்ளதாகவும் மார்க்கார் தனது கட்டுரையில் விபரித்துள்ளார். 

ஏனைய தரப்பினரை விட இந்தியாவின் நலன்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்பதை  இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதற்கு இந்தியாவிடம் போதுமான காரணிகள் இருப்பதாக நிக்கே ஏசியா சஞ்சீகைக்கு இராஜந்திர வட்டாரமொன்று உறுதிசெய்துள்ளது.  '  'இந்திய -இலங்கை உறவு எதிர்காலத்தில்  எவ்வாறு அளவிடப்படும் என்பதற்கான புதிய கேந்திர அளவுகோலாக கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் மாறியுள்ளது' எனவும் இராஜதந்திர தரப்பு கூறியுள்ளது. 

இலங்கை விடயத்தில் இந்தியா தற்போது கையாளத்தொடங்கியிருக்கும் கடும் அழுத்த இராஜதந்திரமானது தனது கொல்லைப்புறத்திலுள்ள கேந்திர முக்கியத்தும் மிக்க தீவில் தனது ஆசிய பேரெதிரியான சீனாவிடம் இழந்துவிட்ட பாகங்களை மீட்டெடுக்கும் பெரும் திட்டத்தின் கீழ் அமைந்துள்ளதென வெளிவிவகார அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

இந்தியா தெற்காசியாவில் பெரும் ஆதிக்க சக்தியாகவுள்ளது. சீனா போன்ற நாடுகள் தமது செல்வாக்கை முன்னிறுத்துவதற்கு அது இடமளிக்க மாட்டாது என  புது டில்லியைத் தளமாகக் கொண்ட ஓ.பி. ஜிந்தால் குளோபல்  பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் கேந்திரக் கற்கைகளுக்கான பேராசிரியர் பங்காஜ் குமார்  ஜா தெரிவிக்கின்றார். 

மாலைதீவு இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் அவற்றின் மற்றவர்களின் கருத்துக்களையும் விருப்பங்களையும் உள்வாங்குகின்ற வகையில் இந்தியா காண்பித்த நிலைப்பாடு காரணமாக அளவுக்கதிகமான கேந்திர நிலப்பகுதி சீனாவிற்கு சென்றுவிட்டதாக இந்தியா கருதுகின்றது. இதன்காரணமாக சீனா தளங்களை நிர்மாணித்துவருகின்றது. சில தருணங்களில் இலங்கை மற்றும் மாலைதீவிலுள்ள துறைமுகங்களில் அதிகமான நேரம் சீனாவின் கடற்படைக் கப்பல்கள் தரித்துநிற்கின்ற வழிகோலியுள்ளது. எனவேதான் தற்போது தனது நலன்களை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா கடும் அழுத்த ஆதிக்க நிலைப்பாட்டை முன்னெடுக்கின்றது என பேராசிரியரின் கருத்துக்கள் அமைந்துள்ளன. 




கொழும்பு துறைமுகம் ஏற்கனவே கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தை கொண்டுள்ளது.  சீனாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூலதனத்தில் இது நிர்மாணிக்கப்பட்டது. 2013ம் ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த முனையத்தின் 85 சதவீதமான பங்கு சீனாவிற்கு சொந்தமாக உள்ள அதேவேளை கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு 15 சதவீதமான பங்குகளே உள்ளன.இந்த முனையத்திற்கு 2014ம் ஆண்டில் சீனாவின் நீர்மூழ்கி முன்னறிவித்தல் ஏதுமின்றி வந்துசென்றமை இலங்கை அரசாங்கம் சீனா பக்கம் சாய்ந்துள்ளதை அம்பலப்படுத்தியிருந்தது. 





புடின் எதிர்ப்பாளர் நாவல்னிக்கு ஆதரவாக உலக நாடுகள்

 



ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு ஆதரவாகவும், அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை மேற்குலக நாடுகள் ஊக்குவிப்பதாக ரஷ்ய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று, ரஷ்யா முழுவதும் குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான காவல்துறையினரை மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற பேரணிகளில் பங்கேற்றனர். இதையடுத்து பேரணியில் பங்கேற்றதாக சுமார் 3,500 பேர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்த பேரணியில் 'மிகவும் குறைந்தளவிலான' மக்களே பங்கேற்றதாக நேற்று (ஜனவரி 24இ ஞாயிற்றுக்கிழமை) பேசிய ஜனாதிபதி விளாடிமீர் புடினின்  செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ரஷ்ய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

குறிப்பாக, இந்த 'கைது நடவடிக்கையுடன் தொடர்புடைய ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகள்' எடுக்கப்பட வேண்டுமென்று எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்துகின்றனர்.

நவால்னி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை முடுக்கிவிடுமாறு போலந்தின் ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடாவும் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மீது தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வரும் அந்த நாட்டின் எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸே நவால்னி கடந்த வாரம் ரஷ்யாவில் நுழைந்த உடனேயே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தன் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதி மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும், சைபீரியாவிலிருந்து மாஸ்கோ வரை என நாடுமுழுவதும் சுமார் 100 நகரங்களில் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

குறிப்பாக, ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில், வன்முறை தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து இழுத்துச் செல்வதைக் காண முடிந்தது.

ரஷ்யா முழுவதும் பரந்துபட்ட அளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் முன்னெப்போதுமில்லாத வகையில் இருந்ததாக அரசியல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தலைநகர் மாஸ்கோவை பொறுத்தவரை, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு போராட்டம் தீவிரமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையினரின் கடுமையான எச்சரிக்கை மற்றும் தடுப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பேருந்துகளில் பயணித்தவர்கள் கையசைத்தும், வாகன ஓட்டிகள் ஒலியெழுப்பியும் ஆதரவு தெரிவித்தது அவர்களை உற்சாகப்படுத்தும் படியாக இருந்தது.

இந்த நிலையில், நேற்று மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டுமென்று வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுபோன்ற கருத்தை தெரிவித்ததன் மூலம் 'தங்களது நாட்டின் உள்விவகாரங்களில்' அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்தார்.

எனினும், இதுபோன்ற அறிவிப்புகள் 'வழக்கமான செயல்பாடே' என்று மாஸ்கோவிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, போராட்டத்தில் பங்கேற்றதற்காக தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம்இ காவல்துறையினரின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

அதே சூழ்நிலையில் மேற்குலக நாடுகள் மாஸ்கோவிலுள்ள தங்களது தூதரகங்களின் வாயிலாக ஆர்ப்பாட்டக்காரர்களை ஊக்குவிப்பதாக பிரிட்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டிருந்தது.


ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்கள், 'மேற்கத்திய போலி ஜனநாயகம் மற்றும் போலி தாராளமயத்துடன் தொடர்புடைய மேற்கத்திய சிந்தனையின் வெளிப்பாடு' என்று கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும் ரஷ்யாவின் செயல் 'சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வது' என்று கருத்துத் தெரிவித்துள்ள பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷ்யாவிற்கு எதிராக மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தால் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னியை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்று உயிர் தப்பிய நவால்னி சிகிச்சை முடிந்து கடந்த வாரம் ஜெர்மனியிலிருந்து ரஷ்யாவுக்கு வந்தவுடன் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

அலெக்ஸே நவால்னி மீது கையாடல் (Embezzlement)வழக்கொன்று பதியப்பட்டு அதில் அவருக்கு ஏற்கனவே தண்டனையும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த வழக்கு அரசியல் காரணங்களால் தன் மீது தொடுக்கப்பட்டதாக நவால்னி கூறுகிறார். இந்த தண்டனை காலத்தில் நவால்னி தொடர்ந்து விதிமீறல் செய்ததால் கடந்த டிசம்பர் 29 முதல் தேடப்பட்டு வருகிறார் என ரஷ்யாவின் சிறைத்துறை கடந்த வாரம் (ஜனவரி 17) ஒரு அறிக்கை வெளியிட்டது.

இது மட்டுமின்றி ரஷ்ய அரசுத் தரப்பு நவால்னி பல்வேறு அமைப்புகளுக்குச் செய்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஒரு குற்றவியல் வழக்கையும் பதிந்திருக்கிறது. தான் ரஷ்யாவுக்கு வருவதைத் தடுத்து பேச்சை நசுக்குவதற்காகவே தனக்கு எதிராக புதின் வழக்குகளை ஜோடிப்பதாக குற்றஞ்சாட்டுகிறார் நவால்னி.


நன்றி - பிபிசி உலகச் சேவை

ராஜபக்ஷாக்களுக்கு ஜெனிவா அமர்வில் யாதார்த்தம் புரியும்-கலாநிதி தயான் ஜயதிலக

 



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது கடுமையான தீர்மானமொன்று கொண்டுவரப்படும் சாத்தியமுள்ளதாக பல்வேறு தரப்புக்களில் இருந்து வருகின்ற தகவல்கள் கோடிட்டுக்காட்டுகின்றன. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர்  வீரசேகரி பத்திரிகைக்காக ஜெனிவாவிற்கான இலங்கைத்தூதுவராக பணிபுரிந்த சிரேஸ்ட இராஜதந்திரி கலாநிதி . தயான் ஜயதிலக்க  வீரகேரியின் உதவி ஆசிரியர் எம். ராம்குமாருக்கு  வழங்கிய நேர்காணல் இதோ:


கேள்வி:- மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்திலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகையில் உங்களுடைய பார்வை எவ்வாறுள்ளது?

பதில்:- தேசப்பற்றாளர்களாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், எம்.சி.சி.ஒப்பந்தம் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தமையால் அமெரிக்காவால் தம்மை அடிபணிய வைக்க முடியாது போய்விட்டது என்று மார்பு தட்டுகின்றார். 

பிறிதொரு தரப்பினர் நாட்டை முன்னேற்றுவதற்காக கிடைத்த அரியவாய்ப்பொன்று அற்றுப்போய்விட்டதாக கதறுகின்றனர். இரண்டு தரப்புக்களுமே முட்டாள்த்தனமான பிரதிபலிப்புக்களையே செய்கின்றார்கள். 

எம்.சி.சி.என்பது சீனாவுடன் பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள போட்டியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதொரு மூலோபாயத்திட்டம் என்ற புரிதல் மேற்படி ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்பில் உள்ளவர்களில் எத்தனை போர் அறிவார்களோ தெரியவில்லை. 

விடயமொன்றை ஆராயாது முழுமையாக கட்டியணைத்து ஏற்றுக்கொள்ளுதல் இல்லாவிட்டால் அதனை முழுமயாக உதறித்தள்ளுதல் போன்ற வெட்டொன்று துண்டு இரண்டு என்ற அணுகுமுறையே ஆட்சியாளர்களிடமும் எதிர்க்கட்சியினரிடமும் தாராளமாக காணப்படுகின்றது. 

மக்களின் நிலைப்பாடு என்னவாக உள்ளது என்பதை உணராது, எம்.சி.சி.விடயம் தவாறாக கையாளப்பட்டுள்ளது. எம்.சி.சி உடன்படிக்கையை முறையாக மீளாய்வுக்கு உட்படுத்தி சர்ச்சைக்குரிய விடயங்களை தவிர்த்து ஏனையவற்றை ஏற்றுக்கொண்டிருக்க முடியும். ஆனால் அதற்குரிய முயற்சிகளோஇ அணுகுமுறைகளோ முறையாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

கேள்வி:- எம்.சி.சி. உடன்படிக்கையில் இலங்கை பங்கேற்காமையானது,அமெரிக்கவுடனான உறவில் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- சமகால நிலைமைகளை அவதானிக்கின்றபோது இலங்கை வெளிவிவகாரக் கொள்கையில் நடுநிலையாக இல்லை. எம்.சி.சி. உடன்படிக்கையால் நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு ஆபத்து உள்ளது என்று கூறி இணக்கப்பாட்டை தெரிவிப்பதற்கு காலத்தை இழுத்தடித்மையாலேயே அமெரிக்கா இலங்கையுடன் பணியாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றது. 

இங்கு நாட்டின் சுயாதீனத் தன்மையை முதன்னைப்படுத்தி உடன்படிக்கையிலிருந்து விலகி நிற்பதாக காண்பித்துவிட்டு மறுபக்கத்தில் சீன சார்பு நிலைப் போக்குகளை அதிகளவில் வெளிப்படுத்துவதானது அமெரிக்காவுக்கு நிச்சயமாக கோபத்தினை ஏற்படுத்தும். அதன் காரணமாக அமெரிக்காவும் அமைதியாக இருக்காது வெவ்வேறு தளங்களில் தனது பிரதிபலிப்புக்களைச் செய்வதற்கே முயலும்.

இந்த விடயத்தினை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உயிருடன் இருந்திருந்தால் மிகச் சாணக்கியமாகச் செயற்பட்டு இலங்கை, அமெரிக்க உறவுகளில் விரிசல்கள் ஏற்படாதவாறு துல்லியமான முடிவுகளை எடுத்திருப்பார். 

அதற்காக இவ்விதமான விடயங்களை கையாள்வதில் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன திராணியற்றவர் என்று அர்த்தப்படுத்த முனையவில்லை. அவர் வெறுமனே பெயரளவிலான வெளிவிவகார அமைச்சரே. இத்தகைய விடயங்கள் அனைத்தையும் ஜனாதிபதியும் அவரைச் சூழவுள்ள முன்னாள் படையதிகாரிகள் குழுவினருமே கையாள்கின்றனர். 

அவர்களுக்கு வெளிவிவகார கொள்கைகள், இருதரப்பு உறவுகள், இராஜதந்திர மூலோபயங்கள் தொடர்பில் எவ்விதமான அனுபமும் கிடையாது. ஆகவே அத்தகையவர்கள் விளைவுகளை உணராது இவ்வாறு தான் பிரதிபலிப்பார்கள். இது நாட்டின் துரதிஷ்டம் தான்.

கேள்வி:- இலங்கை தொடர்பான எம்.சி.சி.யின் உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியான அதேதினத்தில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரை சந்தித்து எதிர்வரும் மார்ச் மாத ஜெனிவா கூட்டத்தொடர் பற்றி பேசியிருக்கின்றார். இந்த நகர்வை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் நிலைப்பாட்டிற்கு எம்.சி.சி.விடயமும் ஒருகாரணமாக இருக்குமே தவிர அதுதான் முதற்காரணியாக அமையப்போவதில்லை. இம்முறை அமெரிக்கா பேரவையின் உறுப்புரிமையை இழந்திருக்கின்றது. அதனால் அது அமைதியாக இருக்கும் என்று கூற முடியாது. 

ஏனென்றால் 2009இல் அமெரிக்காவோ இலங்கையோ மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாக இருக்கவில்லை. ஆனாலும் 2009 மே 4ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கச் செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன் ஜெனிவாவில் உள்ள அமெரிக்க பிரதிநிதிக்கு அனுப்பிய கேபிள் தகவல் ஜுலியன் அசாஞ்சே ஊடாக விக்கிலீக்ஸில் வெளிப்பட்டிருந்தது. 

அதில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பில் கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அந்தப்பிரேரணை தோல்வி அடைந்தால் இராஜதந்திர ரீதியில் பல பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன் இலங்கை தொடர்பான பிரேரணையை தமக்கு அனுப்பி வைக்கும்படியும், அதனை வசன ரீதியாக செம்மைப்படுத்தி மீள அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆகவே அமெரிக்கா உறுப்பு நாடாக இல்லாது விட்டாலும் தனது அழுத்தத்தினை அதியுச்சமாக பிரயோகிக்கும். 

கேள்வி:- அப்படியென்றால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படலாம் என்று கருதுகின்றீர்களா? 

பதில்:- ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தம்மை ட்ரெம்ப் வாதிகளாக பிரதிபலித்தனர். மனித உரிமைகள் பேரவையுடன் ட்ரெம்ப் அரசுக்கு காணப்பட்ட முரண்பாடுகள் தமக்குச் சாதகமாக இருக்கும் என்றும் கருதினார்கள். ட்ரெம்பை போன்றே மனித உரிமை பேரவையை மதிக்காது ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.  

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. ட்ரெம்ப் பதவியிலிருந்து அகற்றப்பட்டு மனித உரிமைகள் விடயங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கும் ஜோ பைடன் கமலா ஹரீஸ் நிருவாகத்தினை பொறுப்பெடுக்கவுள்ளனர். 

ஒபாமா, ஹிலாரி நிருவாகத்தினை விடவும் மனித உரிமைகள் விடயத்தில் அதிகளவு கரிசனை கொண்டவர்கள் என்பதால் அவர்கள் இலங்கை விடயத்தில் கணிசமான அளவு தாக்கம் செலுத்துவார்கள்.

இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் ஜெனிவாவில் இம்முறை மூன்று தரப்பினரையே நம்பியிருந்தனர். ஐ.நா.மனித உரிமை பேரவையுடன் கடுமையாக முரண்படும் தரப்புக்களான அமெரிக்காவின் ட்ரெம்ப் நிருவாகம், இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு நிருவாகம் மற்றும் சீனா ஆகியன அவையாகும். இதில் சீனா மட்டுமே எஞ்சியிருக்கின்றது. 

2009இல் நான் வதிவிடபிரதிநிதியாக பதவியில் இருந்தபோது இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை தோற்கடிக்க முடிந்ததைப் போன்ற நிலைமைகள் தற்போது இல்லை. மேற்குல நாடுகளின் நிலைப்பாடுகள் வெகுவாக மாறியுள்ளன.  

அந்த அடிப்படையில் இம்முறை பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு பெரும்பான்மையான ஆதரவு காணப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

கேள்வி:- பிரெக்ஸிட் ஒப்பந்தத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியமை மற்றும் அந்நாட்டுடன் புலம்பெயர் சிங்கள தரப்புக்களின் அணுகுமுறைகள் அடுத்த ஜெனிவா பிரேரணையின் உள்ளடக்கங்களில் செல்வாக்குச் செலுத்துமா?

பதில்:- பிரித்தானியா, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தலிருந்து வெளியேறிய வேளையோடு இலங்கை தொடர்பிலான பிரேரணைக்கு தலைமை வகிக்கவுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தமது தனித்துவ கரிசனை அடையாளங்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவே அந்நாடு அதிக பிரயத்தனம் செய்யும். 

பிரெக்ஸிட்டிலிருந்து பிரித்தானியா வெளியேறியதால் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு எதிராக இருக்கும் என்று கருதமுடியாது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாக அவற்றின் ஒருமித்த செயற்பாடுகள் மட்டுமே இல்லாதிருக்கும். ஆனால் ஏனைய விடயங்களுடன் இருதரப்புக்களும் தோளோடு தோள்நின்று செயற்பாடுகளை முன்னெடுக்கும். 

கேள்வி:- தமக்கான 'இறைமையை' காரணம்காட்டி இலங்கை அரசாங்கம் அடுத்து நிறைவேற்றப்படும் ஜெனிவா தீர்மானத்தினையும் முழுமையாக நிராகரித்தால் என்ன நடக்கும்?

பதில்:- இலங்கையில் இறைமை என்ற விடயம் வாதவிவாதப்பொருளாகவே நீடித்து வருகின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளான சுமந்திரன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் இறைமை மக்களுக்கு உரித்தானது என்றும் அது அரசாங்கத்திற்கு அல்லது நாட்டிற்கு உரித்தானது அல்ல என்றும் திடமாகக் கூறுகின்றார்கள். அவ்வாறான கருத்தினை முன்வைப்பவர்கள் எதியோப்பிய அரசாங்கம் தனது ரிக்ரே பிராந்திய விடயத்தில் முன்னெடுத்த செயற்பாட்டை கருத்திற் கொள்ளல் வேண்டும். 

மறுபக்கத்தில் நாட்டின் இறைமையானது சகல விடயங்களிலும் சுதந்திரத்தினையும், சுயாதீனத்தினையும், அதிகாரத்தினையும் அளிக்கவல்லது என்ற நிலைப்பாட்டில் ராஜபக்ஷாக்கள் இருக்கின்றார்கள். 

குறிப்பாக, ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் தமக்கான இறைமை, உலக நியதிகள், சட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது என்றே கருதுகின்றது. அதாவது இறைமை என்பது சர்வாதிகாரம் பொருந்திய இராசதானிகளின் மன்னர்களாக இருப்பதற்கு நிகரானது என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதன் யதார்த்தம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தொடரின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் தேசிய ரீதியில் அடைந்த தோல்விகள் அதனை உணர்த்தியுள்ளன. கோட்டாபயவுக்கு சர்வதேச அரங்கம் அதனை உணர்த்தும்.

கேள்வி:- தற்போதைய அரசாங்கம் 'உள்ளகப் பொறிமுறையில்' பொறுப்புக்கூறல் விடயத்தினை கையாள்வதாக அறிவித்தால் சர்வதேசம் அதனை ஏற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்:- 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. பதினொருவருடங்கள் முழுமையாக நிறைவுக்கு வந்தபோதும் உள்ளகப் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான பின்னணியில் பார்க்கின்றபோது உள்ளகப்பொறிமுறையையும் நிராகரிக்கின்ற மனநிலை தான் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உள்ளது.

இதனைவிடவும், கற்றுத்தந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டு வெளிப்படைத் தன்மையுடனான சுயாதீன விசாரணைச் செயற்பாடுகள் அவசியமென வலியுறுத்தப்பட்டு பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன. 

அதற்கு அடுத்து மக்ஸ்வெல் பரணகம மற்றும் டெஸ்மன் டி சில்வா ஆணைக்குழு அறிக்கை, அதனுள் காணப்படுகின்ற ஜோன் ஹோம்ஸின்  பிரத்தியேக அறிக்கை உள்ளிட்டவற்றிலும், அவசியம் விசாரணை செய்யப்பட வேண்டிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

அந்த அறிக்கையிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனியான அலகு உருவாக்கம் உட்பட மூன்று முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் இவை பற்றியெல்லாம் பேசுவதில்லை. 

அரசாங்கம் எதிர்வரும் ஜெனிவா அமர்வில் 'உள்ளகப்பொறிமுறை' என்பதை அடியொற்றிய பதிலளிப்பைச் செய்வதாக இருந்தால் இவ்விரு அறிக்கைளில் உள்ள பரிந்துரைகளை செய்வதாகவும், அதற்குரிய நேர அட்டவணையையும் தயாரித்து வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான எந்த சமிக்ஞைகளும் இல்லை.

ஏனென்றால் அன்றைய காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளைந்தபோது கடும்போக்கு நிலைப்பாடுகளை எடுத்து எதிர்த்தவர்கள் தற்போது ஆட்சியில் உள்ளவர்களே. 

மிருசுவிலில் குழந்தை உள்ளிட்டவர்களை படுகொலை செய்த சம்பவத்தில் படைவீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தி, மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு அதனை மேன் முறையீட்டு நீதிமன்றமும் உறுதிசெய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதி பதவியேற்ற கையோடு அக்குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்தார். இந்தச் செயற்பாடு உள்நாட்டு பொறிமுறையை கேள்விக்குட்படுத்தும் அண்மித்த சம்பவமாகும். 

அத்தகைய ஜனாதிபதியொருவருக்கு 20ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ள மேலதிக அதிகாரங்களும் மேலும் இதனையொத்த செயற்பாடுகளுக்கே வித்திடும் என்றும் தர்க்க ரீதியாக கூறமுடியும். 

அதனைவிடவும், உள்நாட்டில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களின் போது தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இயலுமானவரையில் நிராகரித்தலும் பங்கேற்பினை மட்டுப்படுத்தலும் உள்ளக பொறிமுறையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. 

கேள்வி:- இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக மியன்மார் அல்லது சிரியா நாடுகள் விடயத்தில் முன்னெடுக்கப்படும் பொறிமுறையை அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் / சர்வதேச தீர்ப்பாயம் ஆகியவற்றுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற தமிழ்த் தரப்புக்களின் நிலைப்பாட்டினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- தமிழ் மக்களின் பிரதிநிதிகளையிட்டு நான் மிகவும் கவலைப்படுகின்றேன். ஏனென்றால் தென்னிலங்கையில் உள்ள ராஜபக்ஷ சகோதரர்களின் அரசாங்கம் போன்று தான் அவர்களும் யதார்த்தத்திற்கு அப்பால் சிந்திக்கின்றார்கள். வேற்றுலகில் வாழ்பவர்கள் போன்றே பிரதிபலிக்கின்றார்கள். 

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லதுஇ தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்வது என்ற விடயம்  சாத்தியமற்றதொன்றாகும். ஏனென்றால் ரோம் உடன் படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. அடுத்து பாதுகாப்புச் சபை ஊடாக கொண்டு செல்வதாக இருந்தாலும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கையுடனான உறவு மற்றும் பூகோள அரசியல் காரணமாக வீட்டோவைப் பயன்படுத்தலாம். 

அடுத்து மியன்மார்,சிரியா விடயத்தில் முன்னெடுக்கப்படும் பொறிமுறை இலங்கைக்கு பொருந்தாது. காரணம், 2009உடன் இலங்கை விடயம் நிறைவுக்கு வந்தாகிவிட்டது. மியன்மார், சிரியாவில் உள்ள விடயங்கள் தற்போதும் நிகழ்ந்துகொண்டிருப்பவை. 

தற்போதைய நிலையில் தமிழர்கள் தமது பூர்வீக நிலங்களைப் பாதுகாப்பதும், சமஉரிமைகளை பெற்றுக்கொள்வதுமே பெரும் போராட்டமாகி உள்ளது. இத்தகையதொரு சூழலில் மனித உரிமைகள் பேரவையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றே அவர்கள் முதலில் பார்க்க வேண்டியுள்ளது. 

அதற்காக அதனைத் தாண்டி செல்லக்கூடாது என்று நான் கூற விளையவில்லை. ஆனால் முதலில் சாத்தியமாக இருக்கும் ஜெனிவா தளத்தினை சரியாக பயன்படுத்த வேண்டும். 

இனப்படுகொலை நடந்தது, படையினர் போர்க்குற்றங்களைச் செய்தர்கள் என்பதை கோசங்களாக முன்வைப்பதை விடுத்து, திருமலை ஐந்து மாணவர்கள், இசைப்பிரியா விடயம், மூதூர் விவகாரம், இவ்வாறு சாட்சியங்கள் உள்ளவற்றை மற்றும் அரசாங்கத்தின் விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டவற்றை மையப்படுத்திய சான்றாதாரங்களை சமர்பித்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தலாம். 

மிருசுவில், குமாரபுரம் விடயத்தில் நீதிமன்ற தீர்ப்புக்களின் பின்னர் நடைபெற்ற விடயங்களை முன்வைத்து உள்ளகப்பொறிமுறையை சவாலுக்கு உட்படுத்தலாம். தென்னிலங்கை மக்களும், எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை சர்வதேச தளத்தில் முன்னிலைப்படுத்தி நீதி கோரலாம். 

அவ்வாறில்லாது தமிழ் பிரதிநிதிகள் தம்மை 'மிகைப்படுத்திய சக்தியாளர்களாக காண்பிக்கும் மனோநிலையில'; போர்க்குற்றங்கள், இனப்படுகொலை போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்த விளைந்தால் ஒருகட்டத்தில் பொறுப்புக்கூறல் விடயத்தினை நகர்த்த முடியாது முற்றுப்பெறும் நிலையே ஏற்படும். 

பிரபாகரனுக்கும் அதேநிலை தான் ஈற்றில் ஏற்பட்டது என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆயுதப்போராட்டத்தினை நிறுத்தி மாற்று உபாயங்களை கையாள வேண்டுமென்று அன்ரன் பாலசிங்கம் கூறியதை அவர் கேட்டிருக்கவில்லை. அன்ரன் பாலசிங்கத்தினை ஒதுக்கி வைத்துவிட்டு ஆயுதத்தினால் அனைத்தையும் நிறைவேற்ற விளைந்ததால் முடிவு தலைகீழானது. 

ஆகவே அன்ரன்பாலசிங்கம், அதேபோன்று சர்வதேச அபிமானம் பெற்ற நீலன் திருச்செல்வம் போன்றவர்கள் உயிருடன் இருந்திருந்தால் ஜெனிவா விடயத்தில் எவ்விதம் செயற்படுவார்கள் என்பதை கருத்திற்கொண்டு தமிழ் பிரதிநிதிகள் தீர்மானங்களை எடுப்பதே பொருத்தமானது. 

உலகநாடுகளில் அரசியல் பிரநிதிகளாக தமிழர்கள் இருக்கின்றார்கள். அயல்நாடான இந்தியா தமிழர்கள் விடயத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஆகவே இத்தரப்புக்களை ஒருங்கிணைத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு மத்தியஸ்த நிலைப்பாட்டிற்கு வரவேண்டும். 

தமிழ் பிரதிநிதிகள் சட்டத்துறை சார்ந்தவர்கள் அல்லவா. நீதிமன்றங்களில் சாத்தியமாகாத தீர்ப்பினை கோரினால் ஒட்டுமொத்தமாக வழக்கிற்கு என்ன நடக்கும் என்பதை அறியாதவர்கள் அல்ல. 

மேலும் இலங்கை விடயத்தில் அடுத்த கட்டம் என்னவென்பதை தமிழ் பிரதிநிதிகளோ, புலம்பெயர் அமைப்பினரோ தீர்மானிப்பதில்லை. மனித உரிமைகள் ஆணையாளரும் அலுவலகமுமே தீர்மானிப்பார். ஆகவே ஏற்கனவே நடந்து முடிந்த விடயங்களை அவரிடத்தில் கூறுவதைவிடவும் சமகால நிலைமைகளை சான்றாதாரங்களுடன் அவருக்கு எடுத்துரைப்பது முன்னேற்றகரமான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.


இந்த நேர்காணலை வீரகேசரி உதவி செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமார் மேற்கொண்டிருந்தார். 



 இவர் 2019ம் ஆண்டின் இலங்கையின் மிகச்சிறந்த செய்தியாளருக்கான விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


சகல கைதிகளும் சமமானவர்கள் அல்ல: வர்க்கபேதம், இனத்துவம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம்

 



நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்தபோது சந்தித்த கனகசபை தேவதாசன் 64 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள்  கடந்து விட்டன. அந்தக் காலப்பகுதியில் பத்து வருடங்களுக்கு மேல் அவர் சிறைச்சாலையில் கழித்து விட்டார். 2021 ஜனவரி 6ஆம் திகதி தேவதாசன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். தமது வழக்கை துரிதப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் பேசப் போவதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஜனவரி 16ஆம் திகதி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். தாம் மூன்று வார காலம் தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அவர் அறிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக தேவதாசன் மேன்முறையீடு செய்து இருக்கிறார். அத்துடன், தனது வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி தமக்குப் பிணை வழங்குமாறு அவர் கோருகிறார். 1979ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் கதையும் தேவதாசனின் கதையைப் போன்றதுதான். தம்மை சிவில் உடை தரித்தவர்கள் கடத்தி, அங்கீகரிக்கப்படாத தடுப்பு நிலையத்தில் ஒரு வாரகாலம் தடுத்து வைத்துஇ சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் கைச்சாத்திடுமாறு தம்மை நிர்ப்பந்தித்து, அதன் பின்னர் பொலிஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைத்திருந்ததாக சிவதாசன் கூறுகிறார். தாம் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் 15 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த காலப்பகுதியில் தாம் தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளானதாகவும் தேவதாசன் குறிப்பிடுகிறார். அவருக்கு சட்டத்தரணிகள் கிடையாது. அவர் தம் சார்பில் தாமே ஆஜராகிறார்.


ஒருவர் பாரதூரமான குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாலும், அதன் அடிப்படையில் அவரைக் கடத்தவோ, அங்கீகரிக்கப்படாத இடத்தில் தடுத்து வைக்கவோ, சித்திரவதை செய்யவோஇ நிர்ப்பந்தத்தின் பேரில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறவோ முடியாது. ஒருவர் புரிந்த குற்றம் எந்தளவு தீவிரமானதாக இருந்தாலும், முறையான அடிப்படை விசாரணை நடைமுறைக்கான உரிமை அவருக்கு உண்டு. எனினும், பயங்கரவாத குற்றங்களைப் பொறுத்தவரையில், அடுத்தடுத்த தொடர்ச்சியாக வந்த அரசுகளும், பொது மக்களும்இ சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகளும் மாத்திரமன்றி, சட்டத்துறையில் வேலை செய்பவர்களும் இத்தகைய அடிப்படைக் கோட்பாடுகளை பொருட்படுத்துவது கிடையாது.


பயங்கரவாதிகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள்?

பயங்கரவாத குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்படுபவர்களை, பொதுவாக கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் இருந்தே குற்றவாளிகளாக அரசு சித்தரிக்கிறது. இதுவரை காலமும் பெரும்பாலும் தமிழர்களும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுமே இந்த நிலையை எதிர்கொண்டனர். 'குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர்' என்ற அடிப்படைக் கொள்கையில் குற்றவியல் நீதி முறைமை கட்டமைக்கப்பட்டிருந்தாலும், அந்த நீதிமொழியானது பயங்கரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களைப் பொறுத்தவரையில் அடிப்படை உரிமையாக அல்லாமல், கைக்கெட்டாத விடயமாகவே இருக்கிறது. அமல் டி சிக்கேரா கூறுவதைப் போல, பயங்கரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்படும் ஒருவர், தாம் கைது செய்யப்படுவதாலும் தமது (இன, மத) அடையாளத்திற்காகவுமே முன்கூட்டியே குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு விடுவார். பயங்கரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்கள் நடத்தப்படும் விதமானது மனித உரிமை ஆர்வலர்களிடம் கூட அதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தயக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தயக்கத்திற்குக் காரணம், தாமும் அரசாங்கத்தால் பயங்கரவாதி முத்திரை குத்தப்படுவோம், பொதுமக்களின் சீற்றத்திற்கு ஆளாவோம் என்ற அச்சம் தான்.

வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் தமிழர்கள், காலத்துக்குக் காலம் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டுமென கோருபவர்கள் ஆகியோர், எல்ரீரீஈயாக முத்திரை குத்தப்பட்டார்கள் அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சித்தரிக்கப்பட்டார்கள். நானும் கூட அத்தகைய முத்திரை குத்தலுக்கு ஆளாகியிருக்கிறேன். குரல் கொடுப்பவர்களைத் தண்டிக்கக் கூடிய எந்த ஒரு செயலையும் நியாயப்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் அவ்வாறு முத்திரை குத்தப்படுகிறது. சமகாலத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி கூட தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவராக முத்திரை குத்தப்படுகிறார். இதற்குக் காரணம் அவர் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமைக்காக குரல் கொடுத்தமையும் அரசாங்கத்தின் பாரபட்சம் இளம் தலைமுறையை கடும்போக்காளர்களாக மாற்றும் என்பதை சுட்டிக் காட்டியமையும் தான். பாரபட்ச செயற்பாடுகள் சமூகத்திற்குள் முரண்பாடுகள் மற்றும் வன்முறையை உண்டாக்கும் அல்லது முரண்பாடுகளை தீவிரம் பெறச் செய்யும் என்பது வரலாற்றில் இருந்து நாம் அறிந்த பாடம். அதில் இருந்து கற்றுக் கொள்வதற்குப் பதிலாக தற்போது அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன. அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கே 'தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்' என முத்திரை குத்தப்படுகிறது என்றால், அத்தகைய அதிகாரமோ சலுகையோ இல்லாத பிரஜையொருவரின் நிலை என்ன? இத்தகைய பின்புலத்தில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, 'நீங்கள் ஒரு தடவை பயங்கரவாதி என்றால், எப்போதுமே பயங்கரவாதிதான். இதனையே நாம் நம்புகிறோம்' என்று கூறுவது, ஒரு மரணதண்டனைக்குச் சமமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.


வர்க்கபேதம்: கண்ணுக்குத் தென்படுவது ஆனால் ஏற்றுக் கொள்ளப்படாதது


மேலே குறிப்பிடப்பட்ட சூழமைவு காரணமாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்காக சட்டத்தரணிகள் ஆஜராகத் தயங்குவது வழமைக்கு மாறானது அல்ல. இத்தகைய சூழ்நிலைகளில்இ ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விசாரணை நடைமுறை சார்ந்த உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமெனக் கோரும் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கவை. எனினும், ஹிஜாஸின் விவகாரமானது பயங்கரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் விடயத்தில் வர்க்க பேதம் எவ்விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பிரதிபலிக்கிறது. வர்க்கபேதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை அரசும், பொதுமக்களும் மாத்திரமன்றி, மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கூட எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் பாதிக்கிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் சட்டத்திலும், நடைமுறையிலும் உள்ள குறைபாடுகள் மீதே கவனத்தைச் செலுத்துகின்றன. சில சந்தர்ப்பங்களில் மாத்திரமே, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட குறிப்பிட்ட தனிநபர்களின் உரிமைகளுக்காக உரத்த குரல் எழுப்பப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை ஞாபகத்திற்கு வருகின்றது. ஹிஜாஸிற்கு அப்பால், செய்தியாளர் திஸ்ஸநாயகத்தின் விவகாரம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தத் தனிநபர்களின் பெரும் சாதனைகளும், சமூக பங்களிப்பும் இவர்கள் மீது கவனம் செலுத்த அடித்தளமாக இருக்கின்றன. இது நியாயமானது. எனினும், இதன்மூலம் நாம் குரலெழுப்பி போராடுவதற்கு தகுதியானவர்கள் யார் என்பதை ஒரு படிநிலையின் அடிப்படையில் தீர்மானிக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வட மாகாணத்தின் சாவகச்சேரி நகர வீடொன்றில் தற்கொலை அங்கி மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐம்பதிற்கு மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த விவகாரம் பற்றி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு கனத்த மௌனம் நிலவியது. இத்தகைய படிநிலை இருப்பதற்கு இதுவே ஆதாரம்.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பல மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் குற்றம் புரியவில்லை என்பது தெரியவந்ததால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. தற்கொலை அங்கியை வைத்திருந்தவருடன் தத்தமது நாளாந்த பணிகளுக்காக ஏதேனும் தொடர்பைப் பேணியமைக்காக பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நாணய பரிவர்த்தனை நிலையத்தில் காசாளராகவும், மற்றொருவர் மோட்டார் சைக்கிள் கடையின் உரிமையாளராகவும் இருந்தார். தடுப்புக் கட்டளைக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டிருந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களது முறைப்பாடுகளை ஆராய்ந்து, வழக்குகளை கவனித்து வந்தேன். இவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், தடுப்புக் காவலில் இருந்த காலப்பகுதியில் இவர்களது வாழ்க்கையும், வாழ்வாதாரங்களும், வர்த்தக முயற்சிகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட விதத்தை நான் அறிவேன். பயங்கரவாத குற்றங்களைப் பொறுத்தவரையில்இ முறையான விசாரணையின் மூலம் திரட்டப்படும் ஆதாரங்களின் அல்லது நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் கைதுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக, கைதுகளின் பின்னரே பெரும்பாலும் விசாரணைகள் தொடங்குகின்றன.

படிநிலையின் அடிப்படையில் எவரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கலாம் என்பது நிர்ணயிக்கப்படுவதற்கு இரண்டாவது உதாரணம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற கைதுகள். இதன்போது, முஸ்லிம் ஆண்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த நபர்கள் வெளிப்படையான ஆதாரங்கள் அல்லது நியாயமான சந்தேகமின்றி கைது செய்யப்பட்ட சமயத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூட மௌனம் காத்தமை படிநிலை இருப்பதற்கான வெளிப்படையான ஆதாரமாக அமைகிறது. தமது வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக கொஞ்சம் குளோரின், திருக்குர்ஆன் மற்றும் அரேபிய மொழியில் எழுதப்பட்ட ஆவணங்கள், பட்டாக்கத்தி, திறன்பேசியில் அல்லாஹ்வின் பெயரை உச்சரிக்கும் கஸீதா போன்றவற்றை வைத்திருந்தமைக்காக ஆண்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் சில முஸ்லிம்கள் குர்ஆனையும், அரேபிய மொழியிலான ஆவணங்களையும் தாம் எரித்ததை ஆதங்கத்துடன் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்.

பெரும்பாலும் தொழிலாளர் வர்க்க பின்புலத்தைச் சேர்ந்த முஸ்லிம் கைதிகளை பார்வையிட்டதுடன், அவர்களது குடும்பங்களையும் சந்தித்தேன். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கைதானவர்களில்தான் முழுக் குடும்பங்களும் வருமானத்திற்காக தங்கி இருந்ததை நான் அறிவேன். இந்த நிலையில், இவர்களது கைது குடும்பத்தவர்களுக்கு பெரும் கஷ்டத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருந்தது. தாம் எங்கே, எப்படி சட்ட உதவி பெறலாம் என்பது பற்றி அவர்களுக்கு போதிய புரிந்துணர்வு இருக்கவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு சட்ட ஆலோசனை பெறும் அளவிற்கு வசதி இருக்கவில்லை. சட்டத்தரணியை அமர்த்திக் கொள்ள வசதியிருந்தவர்கள் எண்ணற்ற தடைகளை எதிர்நோக்கினார்கள். தாம் கைதிகளுக்காக ஆஜராவதை பயங்கரவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சித்தரிக்கப்பட்டுஇ தாம் பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாக நேரிடும் என்று சட்டத்தரணிகள் அச்சப்பட்டதால், அவர்கள் கைதிகளுக்காக ஆஜராக மறுத்தார்கள்.

மாரவில சட்டத்தரணிகள் சங்கம் போன்ற சில சங்கங்களில், சட்டத்தரணிகள் கைதிகளுக்காக ஆஜராக மறுத்தமைக்கு அப்பால், ஏனைய சட்டத்தரணிகள் கைதிகளுக்காக முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் அவர்களை சிலர் அச்சுறுத்த முயற்சித்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இது பற்றி, கைதானவர்களின் குடும்பத்தவர்கள், கைதானவர்களுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் ஆகியோரிடம் இருந்து கிடைத்த நம்பகத்தன்மை மிக்க, உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகளின் பிரகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கடிதம் எழுதியது. எனினும், 'ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக முன்னிலையாவதைத் தவிர்க்குமாறு எந்தவொரு பிராந்திய சங்கத்திலும் எதுவித முறையான தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை' என சட்டத்தரணிகள் சங்கம் பதில் அளித்தது. இந்த விவகாரம் பற்றி முறையான விசாரணையை சங்கம் ஆரம்பிக்கவும் இல்லை. சங்கத்தின் பதில் கடிதமானது, அந்த சமயத்தில் நிலவிய முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலைகள் பற்றி போதிய புரிந்துணர்வு இல்லாதிருந்ததை வெளிப்படுத்தியது. நியாயமான விசாரணைக்கான உரிமையின் மீது உத்தியோகபூர்வமற்ற சமூக செயற்பாடுகள், எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இச்சம்பவம் விளக்கியது.

மன்னாரைச் சேர்ந்த கவிஞர் அஹ்னாவ் ஜஸீமின் விவகாரமும் முக்கியமானது. இவர் கடும்போக்குவாதத்தை தூண்டுவதாகக் கூறப்படும் கவிதை நூலொன்றுக்காக 2020ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். ஆனால், அவரது கவிதைகள் உண்மையில் கடும்போக்குவாதத்தை இல்லாதொழிப்பதை ஆராய்ந்து, வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எத்தனையோ கைதுகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தைப் பெறாமல் இருப்பதற்கு இந்த விவகாரம் மற்றொரு உதாரணமாகும். ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இந்தக் கைது பற்றி அறிவிக்கப்பட்டுஇ 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிருபர்களால் பகிரங்கப்படுத்தப்பட்ட போதிலும், அஹ்னாவ்வின் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக குறைவாகவே குரல் எழுப்பப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டவர்கள் அந்நியர்களாக இருந்தாலும், சட்டக் கோட்பாடுகள் எமக்கு அந்நியமானவை அல்ல

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பற்றி சிந்திக்கும் சமயத்தில், 'அவரைப் பற்றி ஊடகங்கள் வரையும் சித்திரத்தை விமர்சனம் இன்றி ஏற்க வேண்டாம்' என்று மக்களை வலியுறுத்தும் எனது சகாவான கிஹான் குணத்திலக்கவை கருத்தைப் புரிந்து கொண்டுஇ அதற்கு ஆதரவளிக்கிறேன். 'இந்தச் சித்திரம் அவரைப் பற்றி நாம் அறிந்தவற்றுடன் எந்த வகையிலாவது ஒத்திருக்கிறதா என்று நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று கிஹான் சகலரிடமும் கோருகிறார். எவ்வாறெனினும், தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றி பெரும்பாலும் நாம் எதனையும் அறிந்து வைத்திருப்பதில்லை. எனவே,,அவர்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பதன் அடிப்படையில், அவர்களுக்காக பரிந்து பேச முடியாது.

'ஒருவரைப் பற்றி எந்தளவு குறைவாக அறிந்திருக்கிறோமோ, அந்தளவுக்கு அவரை கேலிச்சித்திர கோட்டோவியமாக வரைவது எளிது. முழுமையற்ற துணுக்குகளாக உள்ள தகவல்களைத் திரட்டி, மாறா-படிவுரு சிந்தனைகளைப் (Stereotype)பாவித்து அவற்றை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வார்ப்புக்குள் இடுதலே நடக்கிறது' என்று அமல் கூறுகிறார். ஆனால், ஆளுமைகள் பற்றியும், கைதிகளின் தனிப்பட்ட கடந்த காலம் பற்றியும் எதனையும் தெரிந்து கொள்ளாதபோது, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வாறு பரிந்து பேச முடியும்? எனவேஇ எமக்குள்ள ஒரே வழிமுறை, சட்டக் கோட்பாடுகள் மற்றும் மனித உரிமை தராதரங்களின் அடிப்படையில் எமது முயற்சிகளை மேற்கொள்வது தான்.

ஒருவரைப் பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்பதன் அடிப்படையில் அல்லது ஒருவரை அறிந்திருக்கிறோம் என்பதற்காக அல்லது அவர் ஒரே சமூக வட்டங்களைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்பதற்காக மாத்திரம் அவரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரக்கூடாது. மாறாக, ஒவ்வொருவரும், குற்றமற்றவராக இருந்தாலென்ன, குற்றவாளியாக இருந்தாலென்ன, முறையான விசாரணை நடைமுறையை அனுபவிக்கக் கூடிய உரிமை இருப்பதாலும்இ குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் குற்றம் அற்றவராக கருதப்பட வேண்டும் என்பதாலும்இ நாம் அவ்வாறு கோர வேண்டும். அந்த நபர் குற்றமற்றவர் என நம்புவதன் காரணமாகவோ, அவர் அத்தகைய குற்றத்தை செய்திருக்க மாட்டார் என நினைப்பதாலோ மாத்திரம் நாம் பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்துங்கள் என்று கூறக் கூடாது. இந்தச் சட்டம் அடிப்படை மனித உரிமை தராதரங்களை மீறுவதால், அதனைத் திருத்துமாறு கோர வேண்டும். ஹிஜாஸின் உரிமைகளுக்காக நாம் எந்த விதத்தில் குரல் கொடுக்கிறோமோ அதே மாதிரியாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சகலரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். இது கனகசபை தேவதாசன் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகலரினதும் உரிமைகளுக்காக நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகளின் தராதரமாக அமைவது அவசியம்.




மூலம் : @அம்பிகா சற்குணநாதன். தமிழில் -மாற்றம்