Friday, August 29, 2014

ஊவா தேர்தல் அவலம்


 
 
 
 
 
இலங்கையில் தேர்தல் காலப்பகுதியில் வன்முறைகள் அரங்கேறுவதொன்றும் புதிய விடயமல்ல என்றாலும் ஊவாவில் இருந்து கடந்த சில நாட்களாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் ஜனநாயகத்தை நேசிப்பவர்களுக்கு மனவேதனையைத் தருவது மட்டுமன்றி ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சிதறடிப்பதாக அமைந்துள்ளன.

மாகாணசபைத் தேர்தலுக்கு இன்னமும் சில வாரங்களே உள்ளநிலையில் மொனராகலை மாவட்டத்திலுள்ள எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமான 18 பிரசார அலுவலகங்கள் 24மணிநேர காலப்பகுதிக்குள் அடித்துநொருக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி எதிரணியின் பிரசாரக் கூட்டங்களுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டும் எதிரணியின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்பட்டும் அடாவடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான “கபே’ அமைப்பு விடுத்துள்ள கடுந்தொனியிலான அறிக்கையில் இருபத்திநான்கு மணிநேர காலப்பகுதியில் 18 தேர்தல் பிரசார அலுவலகங்கள் மீது ஆயுதம் தரித்த குழுக்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை காரணமாக மொனராகலை மாவட்டத்தில் எதிரணி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் தமது உயிருக்கு அஞ்சுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பிபிலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே மிகவும் மோசமான தேர்தல் வன்முறைச்சம்ப வங்களில் சில கடந்த 24ஆம்திகதி அதிகாலை தொடக் கம் அடுத்துவந்த ஆறுமணி நேரத்திற்கு தொடர்ச்சியான முறையில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நினைத்த தெதனையும் செய்யலாம் தண்டனை வழங்கப்படமாட்டாது என்ற ரீதியில் தாக்குதல்களை நடத்தியோர் காடைத்தனத்தை அரங்கேற்றியிருப்பதனையும் அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமையையும் “கபே’ கண்காணிப்பாளர்கள் தமது அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலா ளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த நேற் றையதினம் வெளியிட்ட கருத்துக்கள் அமைந்துள் ளன.
திங்களன்று படல்கும்புர பிரதேசத்தில் வெடித்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளத் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டிய அவர் பொலிஸார் உரிய வகையில் செயற்பட்டிருந்தால் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார். வன்முறைக்கும்பலொன்று அப்பிரதேசத்திலேயே தரித்துநின்றபடியால் தாக்குதலில் காயமுற்றோரை மருத்துவமனைகளுக்குக்கூட எடுத்துச்செல்ல முடியவில்லை என்பதையும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தரொருவரே இவ் வாறு கூறியிருப்பது யார் இந்தத் தாக்குதல்களை உண்மையில் நடத்தினார்கள் என்பதைத் சாதாரண மக்களாலும் விளங்கிக்கொள்ள வழிகோலியிருக்கின்றது.

வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு தான்தோன் றித்தனமாக செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை கடுமையாகச் சாடியுள்ளதுடன் அதிகாரிகளின் கையாலாகாதத் தன்மையே மோசமடையும் சூழலுக்கு காரணம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளன.
வடமாகாண தேர்தலைத் தொடர்ந்து பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு அதன் அறிக்கையில் 2010ஆம் ஆண்டில் அரசியல்சாசனத்துக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட 18வது திருத்தமானது நம்பகத்தன்மைமிக்கதும் போட்டித்தன்மையுடனானதுமான தேர்தலை நடத்துவதற்கான அரசியல்சாசன மற்றும் சட்டகட்டமைப்பினை மலினப்படுத்திவிட்டதாக சுட்டிக்காட்டியிருந்ததுடன் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கான நிபந்தனைகளையும் இல்லாமற் செய்துவிட்டதாக குறிப்பிட் டிருந்தது.

திங்களன்று வரையில் தேர்தல்வன்முறைகள் தொடர்பான 74முறைப்பாடுகள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. வன்முறைகள் மூலம் எதிரணியின் செயற்பாடுகளை முடக்கி தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் என்று செயற்படுகின்ற தரப்பினர் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்றமையால் தேர்தல் நெருங்க நெருங்க முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதென்பதைக் கணிக்க மேதைகள் தேவையில்லை.

Wednesday, August 20, 2014

பேர்குஸன் கலவரங்கள் உணர்த்துவதென்ன?


அமெரிக்காவின் மிஸோரி மாநிலத்தின் பேர்குஸன் நகரில் தொடரும் கலவரங்கள் அந்நாட்டில் மட்டுமல்ல உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இந்தப்பகுதி தற்போது ஒரு யுத்த பூமி போன்று காட்சியளிக்கும் அளவிற்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

இம்மாதம் ஒன்பதாம் திகதி மைக்கல் பிரவுண் என்ற பதின்ம வயது கறுப்பின இளைஞர் பொலிஸாரினால் காட்டுமிராண்டித்தனமாக சுட்டிக்கொல்லப்பட்டதையடுத்து அதற்கு அடுத்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப்பட்ட மெழுகுதிரி ஏந்திய திருவிழிப்பு நிகழ்ச்சியயான்றின் போது கார்க் கண்ணாடிகளை உடைத்தும் கடைகளைக் கொள்ளையிட்டும் ஆரம்பமான கலவரங்கள் தற்போது இரண்டாவது வாரமாக தொடர்கின்றன.

கலவரங்களால் பாதிக்கப்பட்ட பேர்குஸன் நகரின் மொத்த சனத்தொகை 21,205 என் பதுடன் மொத்த சனத்தொகையில் 65 சத வீதமானோர் கறுப்பினத்தவர்களாவர். ஆனால் அந்த நகரிலுள்ள ஒட்டுமொத்த பொலிஸாரில் 6 சதவீதமானோர் மட்டுமே கறுப்பினத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது மைக்கல் பிரவுண் என்ற இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்கனவே அந்தச் சமூகத்தில் காணப்பட்ட பாரிய வேறுபாட்டையும் அநீதிகளையும் கோடிட்டுக்காட்டுகின்றன.
இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் அரசியல் ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் பாரபட்சத்திற்கு உட்படுத்தப்படுவதைப் போன்றே உலகின் முன்னணி ஜனநாயக நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் சிறுபான்மையினரான கறுப்பினத்தவர்களின் நிலைமை இன்னமும் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்பிநிற்கின்றது.

அமெரிக்காவின் சிவில் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரான மார்டின் லூதர் கிங் ஜுனியர் 1963 ஆம் ஆண்டு ஓகஸ்ற் 28ஆம் திகதியன்று – எனக்கு ஒரு கனவுள்ளது என்ற உலகப்புகழ் பெற்ற உரையை ஆற்றியிருந்தார்.
அவ்வுரையிலே தனது பிள்ளைகள் – வருங்கால சந்ததியினர் தமது தோலின் நிறத்தினை அடிப்படையாகக்கொண்டன்று மாறாக அவர்களது குணாம்சங்களின் அடிப்படையில் – செயல்களில் அடிப்படையில் எடைபோடப்படும் காலம் உருவாகவேண்டும் என்பதே தனது கனவு என்ற அடிப்படைக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

அவரது உரை இடம்பெற்று ஐம்பதாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் அமெரிக்காவில் நிற பேதம் என்பது இன்னமும் முழுமையாக அகன்றுவிடவில்லை. அது புரையோடிப்போய்க் கிடக்கின்றது என்ற செய்தியே தற்போது பேர்குஸனில் இடம்பெறும் கலவரங்களூடாக உணர்த்தப்படுகின்றது. இத்தனைக்கும் அமெ ரிக்காவில் கறுப்பினத்தவர் ஜனாதிபதியாக தேர்வாகி எத்தனையோ பல கறுப்பினத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகப் பொறுப்பிலும் முன்னிலையில் திகழ்கின்ற நிலையிலும் அடிமட்டத்தில் நிலவும் வேறுபாடுகள் பெருமளவில் மாறவில்லை என்ற உண்மை புலனாகின்றது. பேர்குஸன் விடயத்தை விதிவிலக்காகப் பார்த்தாலும் பாரபட்சங்களால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு சட்டத்தின் ஆட்சி மூலமாக எப்படியேனும் விடைதேடலாம் என்ற நம்பிக் கையேனும் அமெரிக்காவில் பொதுவாக காணப்படுகின்றது.

ஆனால் எமது நாட்டில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான பாரபட்சங்கள் மட்டுமன்றி சட்டத்தின் ஆட்சியில் காணப்படும் வெற்றிடமானது சிறுபான்மை மக்களை நம்பிக்கையற்ற நடைபிணங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் அரசாங்கம் தூரதரி சனத்துடன் செயற்படாவிடின் விளைவுகள் விரும்பத்தகாதவையாகவே அமைந்துவிடும் அபாயம் உண்டு!

மறுதலிப்புக்களால் நல்லிணக்கத்தை அடையமுடியாது
இம்மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமையாளர் பதவியிலிருந்து விடைபெற்றுச்செல்லும்  நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த வார முற்பகுதியில் ரொய்டர்ஸ் செய்திஸ்தாபனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த விடயங்கள் இலங்கை அரசிற்கு பெரும் அசௌகரியத்தைக் கொடுத்துள்ளமை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை கோடிட்டுக்காண்பிக்கின்றது.

' இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஏராளமான விடயங்கள் இலங்கைக்கு வெளியே உள்ளன. இதனால் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளாமலேயே ஐ.நா.விசாரணைக்குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.' என விடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ரொய்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு பதிலடியாக வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையில் விசாரணைகள் ஆரம்பக்கட்டத்திலுள்ள நிலையில் நவநீதம்பிள்ளை முன்கூட்டியே இலங்கை தொடர்பில் நடுத்தீர்ப்பு வழங்கிவிட்டதாகவும் விசாரணையின் போக்கை தனக்கு விருப்பமான போக்கிலேயே மாற்றமுனைவதாகவும் கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தது. நவநீதம்பிள்ளை ஆரம்பமுதலே இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தாக தெரிவித்திருந்த வெளிவிவகார அமைச்சு புதிய ஆணையாளராக பொறுப்பேற்கவிருக்கும் இளவரசர் செயீத் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கம் இன்னமும் சில மாதங்களில் புதிய ஆணையாளர் செயீத் மீதும் 'பக்கச்சார்பாக பாரபட்டமாக செயற்படுகின்றார், ஒருதலைப்பட்டமாக நடந்துகொள்கின்றார், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டுகொள்ளாமல் செயற்படுகின்றார், ஒரு இனவாதி' போன்ற இன்னோரன்ன விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தால் ஆச்சரிப்படுவதற்கில்லை.

நவநீதம்பிள்ளைக்கு முன்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த லூயிஸ் ஆர்பர் அம்மையாரும் இலங்கை அரசாங்கத்தின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில் புதிய ஆணையாளர் செயீத்தும் இலங்கை அரசின் கடுஞ்சொற்கணைகளை எதிர்கொள்ளும் நாள் வெகுதூரத்திலில்லை.

' 'உலகில் பயங்கரவாத்திற்கு முடிவுகட்டிய ஒரேநாடு இலங்கை, 'பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டிற்கு விடுதலைபெற்றுத்தந்தது ராஜபக்ஸ அரசாங்கமே' 'மக்களெல்லாம் யுத்த பயமின்றி சுதந்திரமாக வாழ்கின்றனர்' 'நாட்டில் அபிவிருத்தி சிறப்பாக நடக்கின்றது' 'இலங்கையின்  புதிய நெடுஞ்சாலைகள் விமானநிலையம் துறைமுகம் அற்புதமாகவுள்ளன' 'சட்டத்தின் ஆட்சியில் ஆசியாவிலேயே இலங்கை முன்னிலையில் திகழ்கின்றது' 'ஊடக சுதந்திரம் இந்த நாட்டில் சிறப்பாகவுள்ளது' போன்ற வார்த்தைகளையே அரசாங்கம் கேட்கவிரும்புகின்றது. அதற்கு மாற்றாக கருத்துக்களை வெளியிடுபவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்பதுடன் நின்றுவிடாது துரோகிகளாவும் அடையாளப்படுத்தப்படும் நிலை உள்ளது.

அரசு தான் கேட்க விரும்பும் விடயங்களையே காலங்கடந்து நியமித்துள்ள விசாரணைக்குழுவிலும் எதிர்பார்கின்றதா? அப்படி எதிர்பார்க்கும் இடத்து உண்மைகள் உள்நாட்டுப்பொறிமுறையிலிருந்து வெளிவர வாய்ப்பில்லை.  இதனையே காணமல்போனோர் விசாரணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம ' காணமல்போனோரின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்த கருத்தும் உறுதிப்படுத்திநிற்கின்றது. உண்மைகளை முறையாக தேடிக்கண்டறியும்  அக்கறையோ ஆர்வமோ இல்லாத நிலையிலும் பிறர் வெளியிடும் கருத்துக்களில் பொதிந்துள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமல் மறுதலிப்பதாலும் நிரந்தர நல்லிணக்கத்தை அடைந்துவிடமுடியாது

Monday, August 4, 2014

அரசியல் தீர்வை அடைய முடியும்.–பிரித்தானிய தூதுவர் உறுதிபடத் தெரிவிப்புமாற்றமா?

ஆசிரியர் தலையங்கம் -04-08-2014


இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை அவதூறுக்குட்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகியிருந்த கட்டுரை இந்திய அரசு தரப்பிலிருந்தும் தமிழ் நாட்டு அரசியல் தளத்திலிருந்தும் வந்த கடும் எதிர்ப்புக்களையும் கண்டனங்களையும் அடுத்து பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலிருந்து அவசரமாக நீக்கப்பட்டதுடன், இந்தச் செயலுக்காக என்றுமில்லாதவாறு விழுந்தடித்துக்கொண்டு மன்னிப்புக் கோரப்பட்டுள்ள விவகாரமானது இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் முக்கியதொரு விடயமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.


கொடூர ஆயுத மோதல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போதும் இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் இன்னமும் அடையப்படவில்லை. அதற்கான அர்த்தபூர்வமான அடிப்படை நடவடிக்கைகளே எடுக்கப்படவில்லை என அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற மற்றும் அரசின் குறைகளை எடுத்துரைக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் சிவில் சமூக அமைப்புக்கள் மீதும் நல்லெண்ணம் கொண்ட தனிப்பட்டோர் மீதும் அவப்பழிகளை சுமத்தியும் எவ்வளவிற்கு முடியுமோ அவ்வளவிற்கு அசிங்கப்படுத்தியும் இலங்கையின் அரச சார்பு ஊடகங்களில் ஆக்கங்களும் விவரணங்களும் பிரசுரிக்கப்படுகின்றமையும் ஒளி ஒலி பரப்பப்படுகின்றமையும் வழமையானதொருவிடயமாகிவிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டினால் அன்றேல் இது தொடர்பில் விளக்கம் கோரினால் தவறு சரி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றதோ இல்லையோ நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் மென்மேலும் அசிங்கப்படுத்தப்படும் ஏதுநிலையே இதுவரையில் நிலவிவந்துள்ளது.


இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக தனது ஆவணப்படங்கள் மூலம்  உலகின் கவனத்தை ஈர்த்து நீதித் தேடலுக்கான பெரும் முயற்சிகளை மேற்கொண்டவரான சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரேயும் அவரது குழுவினருக்கும் எதிராக இலங்கையின் அரச ஊடகங்களில் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஆக்கங்கள் வெளியிடப்பட்டதையும் பொதுநல வாயப் மாநாடு தொடர்பாக கடந்த நவம்பரில் சனல் 4 குழுவினர் இங்கு வந்தபோது அவர்களது குழுவினர் பல தடவைகள் நேரிலே அவமானப்படுத்தப்பட்டமையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். இதுபோன்று இன்னும் பல வெளிநாட்டு  மற்று உள்நாட்டு ஊடகவிலயாளர்களுக்கு எதிராகவும் மிகவும் கீழ்த்தரமான வகையில் ஆக்கங்கள் அரச  ஆதரவு ஊடகங்களில் வெளியாகியுள்ளன. உண்மைகளைச் சுட்டிக்காட்டுகின்ற  அரச சார்ப்பற்ற நிறுவனப்பிரதிநிதிகள், சிவில் சமூக அங்கத்தவர்களும் அரச சார்பு ஊடகங்களில் அவமானப்படுத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.தாம் செய்வதெல்லாம் சரி மற்றவர்கள் எதைச் சுட்டிக்காட்டினாலும் அவர்கள் நாட்டுக்கு எதிராகத் துரோகம் செய்கின்றனர், விடுதலைப்புலிகளின் அடிவருடிகளாச் செயற்படுகின்றவனர் என வறட்டுத் தனமான வாதத்தை முன்வைத்து விறாப்புடன் நடந்து வந்த இலங்கை அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளும் செயற்பாட்டின்  ஒரு கட்டமாகவா அன்றேல் எதிர்பார்த்திராத அளவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான தற்காலிக நடவடிக்கையாகவா இவ்வாறான ஒரு பகிரங்க மன்னிப்பை இந்தக் கட்டுரைவிடயத்தில் கோரியிருக்கின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

Sunday, August 3, 2014

காஸாவும் முள்ளிவாய்க்காலும்

ஆசிரியர் தலையங்கம் 03-08-2014இன்றைய நாட்களில் காஸாவில் இஸ்ரேல் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஐந்துவருடகாலங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் என்னவெல்லாம் நடைபெற்றிருக்கும் என்பதை மீண்டுமாக மனக்கண் முன்கொண்டுவந்து நிறுத்துகின்றன. தினம் தினம் வருகின்ற செய்திகளும் புகைப்படங்களும்  இரும்பான மனங்களிலும் கண்ணீரைச் சிந்தவைக்கும் அளவிற்கு நிலைமைகள் மோசமாகிக்கொண்டிருப்பதை துல்லியமாக உணர்த்துகின்றன.

குறிப்பாக உயிரற்ற நிலையில் சடலங்களாக்கிடக்கும் பாவமறியா பச்சிளம் குழந்தைகளினதும் குற்றுயிராக உயிராக ஜீவ மரணப்போராட்டத்தில் சிக்குண்டிருக்கும் சிறார்களினதும் புகைப்படங்களைப் பார்க்கையில் மனதை உருக்கும் வேதனையின் பரிமாணத்தை வார்த்தைகளால் விவரித்துவிடமுடியாது.

காஸா மீது காட்டுமிராண்டித்தனமாக இஸ்ரேல் கட்டவிழ்துவிட்டுள்ள புதிய கட்டத்தாக்குதல்கள் இன்றுடன் 27வது நாட்களை எட்டியிருக்கின்ற நிலையில் நேற்று வரையில் 1600ற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8000ற்கு அதிகமானோர் காயமுற்றுள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமுற்றோரில் அனேகமானோர் பொதுமக்களாக அதிலும் குறிப்பாக சிறுவர்களும் பெண்களுமாக இருப்பதில் இருந்து போரென்பது உண்மையில் யாரை அதிகமாக பாதிக்கின்றதென்பதை புரிந்துகொண்டுவிடலாம்.

மத்தியதரைக்கடலைக் மேற்கு எல்லையாகக் கொண்டுள்ள காஸா மொத்தமாக கொண்டுள்ள 360 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள சிறிய நிலப்பிரதேசமாகும். 41 கிலோ மீற்றர் நீளத்தையும் 6 முதல் 12 கிலோ மீற்றர் வரையான அகலத்தையும் கொண்டுள்ள காஸா நிலப்பரப்பில் 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதாக பரவலாக தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இந்தச் சிறிய நிலப்பரப்பிற்குள் இவ்வளவு தொகையான மக்கள் வாழ்வதையும் பொருட்படுத்தாது இஸ்ரேலிய படைகள் முன்னெடுத்துவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் காஸா இன்றொரு கொலைக்களமாக மாற்றம்பெற்றிருக்கின்றது.

ஐந்துவருடங்களுக்கு முன்னர் காஸாவிலும் பார்க்க பன்மடங்கு சிறிதான முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் ஏறத்தாழ அரைமில்லியன் மக்கள் அடர்த்தியாக குவிந்திருந்த பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டபோது மக்கள் பட்ட துன்ப துயரங்களை எண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு தருணத்திலும் இதயத்தில் ஆறாத வலிகள் பெருக்கெடுப்பதை மறுத்துவிடமுடியாது.

காஸா மீது இஸ்ரேல் அதி நவீன ஆயுதங்களைக் கொண்டு தரைவழியாகவும் வான் வழியாகவும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் உயிர்களுக்கும் உடைமைகளுக்கு ஏற்பட்டுவருகின்ற சேதங்களின் ஒட்டுமொத்த பரிமாணத்தை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் கணிசமான அளவிற்கு அங்கு நடைபெறும் அட்டூழியங்களை அங்கு களத்திலே நேரடியாக நின்று செய்திசேகிக்கின்ற செய்தியாளர்களும் புகைப்படப் பிடிப்பாளர்களும் வெளிக்கொண்டுவருகின்றனர். இவர்களில் பலர் சர்வதேசத்திலுள்ள முன்னணி செய்தி ஊடகங்களின் செய்தியாளர்களாகவும் இருப்பதால் அந்த ஊடகங்களுடாக உலகெங்கும் காஸாவின் துயரம் சென்றடையும் சந்தர்ப்பம் இதுவரையில் கிட்டியிருக்கின்றது.

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் காஸாவில் இன்னமும் பிரசன்னமாகியிருப்பதனால் அடைக்கலம் தேடி உயிரையேனும் காத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையாவது எஞ்சியிருக்கும். ஆனால் அந்த நம்பிக்கை கூட அருகிப்போவதாக ஐநாவின் பராமரிப்பிலிருக்கும் பாடாசாலை அகதி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த வாரத்தில் 15ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட தாக்குதல் உணர்த்துகின்றது. இதுபோன்ற சம்பவங்களால் நம்பிக்கை நாளாந்தம் தகர்ந்துபோனாலும் ஐநா போன்ற அமைப்புக்களின் பிரசன்னம் இருக்கும் வரையில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை மிஞ்சியிருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

ஐநா தரப்பினரின் பிரசன்னம் இருக்கின்ற நிலையிலேயே இஸ்ரேலிய படையினர் நடத்தும் தாக்குதல்களின் மிலேச்சத்தனம் இப்படியிருக்கின்றதென்றால் ஐக்கிய நாடுகள் சபைபோன்ற சர்வதேச அமைப்புக்களோ சர்வதேச ஊடகவியலாளர்களோ ஏன் உள்நாட்டு ஊடகவியலாளர்களோ இன்றிய நிலையில்  முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் எந்தளவிற்கு அகோரமானதாக இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே நெஞ்சம் பதைக்கின்றது.

முப்பதாண்டு கால யுத்தத்தின் வடுக்கள் ஆறக் காலம் எடுக்கும்  என அடிக்கடி கூறுவதனாலோ அதன் படி காலத்தின் ஓட்டத்தாலோ  மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களின் வலிகளை இல்லாமல் செய்து இந்த நாட்டில் நல்லிணக்கத்தை அடைந்துவிடமுடியாது . நடுநிலை ஊடகவியலாளர்களினதோ நடுநிலையான உலக அமைப்புக்களினதோ பிரசன்னமின்றி முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது என்பதை உண்மையாக அறிந்துகொள்வதற்கு ஐநா வின் சர்வதேச விசாரணைக் குழுவுடன் ஒத்துழைப்பதும் தாமாக அமைத்துள்ள விசாரணைக்குழுவை சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பதும் முக்கியமானதாகும்.

எமது நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை அடைவதற்கான அர்த்தபூர்வமான முதற்படியாக அமையக்கூடிய இந்த விசாரணைகளை அரசு இதயசுத்தியுடன் அணுகுமேயானால் அடுத்தடுத்த படிகளும் தொடர்ந்து நம்பகத்தன்மை கொண்டவையாகவும் ஆக்கபூர்வமாகமானவையாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.