Showing posts with label Editor's Pick. Show all posts
Showing posts with label Editor's Pick. Show all posts

Thursday, December 17, 2020

கொரோனாக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆறுதல் தருமா?

 




கொரோனா தொற்றுநோயானது சீனாவில் உருவாகி உலகளாவிய ரீதியில் பரவலடைந்து பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல தொடர் ஆராய்ச்சிகளின் பலனாக இதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளதாகவும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து நாம் சற்று ஆறுதல் கொள்ளலாமா என கேட்டால் உடனடியாக இல்லை என தான் கூறமுடியும்.

இதற்கு முன் சில உலகளாவிய தொற்றுக்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது தடுப்பூசிகளால் தான் என்பது மறக்கமுடியாத உண்மை. ஆனால் சின்னம்மை ஒன்றினைத் தவிர உலகளாவிய ரீதியில் முன்றாக தடுப்பூசியின் மூலம் உலகிலிருந்து ஒழிக்கப்பட்ட தொற்றுநோய்கள் எவையுமில்லை. இந்த சின்னம்மை முற்றாக ஒழிக்கப்பட ஏழத்தாழ 100 ஆண்டுகள் எடுத்தது என்பது மற்றய தகவல்.



இந்த தடுப்பூசியின் மூலம் எவ்வாறு பயன்கிடைக்கும் என்பதனை விளங்கிக்கொள்ள தடுப்பூசிகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதும் எமது உடல்  வைரஸ் உடலுக்குள் வந்துவிட்டதாக கருதி எமது உடலில் நோய் எதிர்பு சக்தியினை வழங்க பிறபொருளெரிரியினை உருவாக்கிக் கொள்ளும். பின்னர் உண்மையிலேயே வைரஸ் எமது உடலுக்கு வரும் பொழுது ஏற்கனவே உருவாக்கப்பட்ட பிறபெருளெதிரி வைரசுடன் போராடி அழித்துவிடும். இதனால் நோய் ஏற்படாது தவிர்க்கப்படும் அல்லது நோயின் வீரியம் குறைக்கப்படும். இது ஒரு தனிநபராக கிடைக்கும் நன்மையாகும்.

 சமுதாயமாக கிடைக்கும் நன்மையாதெனில் பெருபாலானவர்கள் தடுப்பூசியினை பெற்றார்களாயின் தடுப்பூசி பெறாதவர் ஒருவருக்கு தொற்று  ஏற்படினும்  தடுப்பூசி பெற்றவர்கள் இடையே இருந்து ஒரு அணையாக செயற்படுவதால் சமூகத்தில் பரவலடைவது தடுக்கப்படும் (Herd Immunity). 



கொரோனா தடுப்பூசியினால் இவ்விரு பயன்களை பெறுவதில் பல சவால்கள் உள்ளன.

1.ஒருவரில் வினைத்திறனான பிறபொருளெதிரியினை உற்பத்தியாக்க தடுப்பூசியானது உரிய தரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இடம் முதல் தடுப்பூசி வழங்கும் இடம் வரை பேண வேண்டும். இதற்கு முக்கியமானது குளிர் சங்கிலி (Cold chain) பேணுதலாகும். இந்த தடுப்பூசிகளைப் பொறுத்தவரை எமது சூழல் வெப்பநிலையை விட மிகக் குறைந்த வெப்பநிலையில் பேண வேண்டும். இது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரை சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே.

2. சமூகத்தில் பரவலடையாமல் தடுக்க (Herd Immunity) பெற குறிப்பிட்ட வீதமானவர்கள் தடுப்பூசியினைப் பெற வேண்டும். உலகளாவிய ரீதியில் மற்றய நாடுகளுடன் போட்டியிட்டு தடுப்பூசிகளை நாம் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும்.

3.வைரஸ் தொடர்ச்சியாக மாற்றமடையாமல் இருக்குமா என்பதும் கேள்விக்குறியே. மாற்றம் மடையுமாயின் தடுப்பூசி ஏற்றல் பலனற்றதாகிவிடும்.

4. இதனால் கிடைக்கும் நிர்ப்பீடனம் எவ்வளவு காலமிருக்கும் என்பதும் இன்றுவரை ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது.

 5. தடுப்பூசி வழங்கலைத் தொடர்ந்து நாடுகளிடையேயான போக்குவரத்துகள் ஆரம்பமாகும் தடுப்பூசிகள் வழங்காத நாடுகளிலிருந்து மீள அறிமுகமாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இவ்வளவு சிக்கல்களும் உள்ளதால் தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பாக நாம் உடனடியாக ஆறுதல் கொள்ள முடியாது என்பதே உண்மை.

ஆகவே அனாவசியமாக நடமாடாமல் கைகழுவுதல்இ முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை கையாள்வதே நம்பிக்கை தரும் வழிகளாக இன்றுவரை உள்ளன.

பாதுகாப்பாக இருப்போம் எம்மையும் மற்றவரையும் பாதுகாப்போம்.


                                                ஆக்கம்: டொக்டர்.கோ.றஜீவ்


Wednesday, December 16, 2020

எம்.சி.சி. உடன்படிக்கை விடயத்தில் பொறுமையிழந்தது அமெரிக்கா ? 8983 கோடி ரூபா நிதி மானியம் வாபஸ்!

 எம்.சி.சி. என அறியப்படும் மில்லேனியம் சலேன்ஞ் கோபரேஸன் பணிப்பாளர் சபை இலங்கைகான 8983 கோடி ரூபா (480 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான மானியத்தை திரும்ப விலக்கிக்கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்பினரின் தகவல்களை அடியொற்றி நியூஸ் இன் ஏசியா இணையத்தளம் செய்தி பிரசுரித்துள்ளது.




எம்.சி.சி. உடன்படிக்கையின் கீழ் 5வருட காலப்பகுதிக்கே இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. 

மூன்றுவருடகாலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எம்.சி.சி மானியத்தை வழங்க உடன்பாடு எட்டப்பட்டபோதும் கடும் போக்கு தேசியவாதத்தரப்பினர்களின் எதிர்ப்பை அடுத்து உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதில் தாமதம் காணப்பட்ட நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

நியுஸ் இன் ஏசியா இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள போதும்  இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. 



எம்.சி.சி உடன்படிக்கையானது நிலம் மற்றும் போக்குவரத்து சம்பந்தப்பட்ட இரண்டு திட்டங்களை முன்னெடுப்பதனை முன்னிலைப்படுத்தியிருந்தது. எனினும் இந்த உடன்படிக்கை இலங்கையில் கடும் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்டதுடன் கடும் போக்கு தேசிய வாதிகள் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தனர். 

விவசாயத்திற்கான நிலத்தை விற்பதற்குரிய நிலமாக மாற்றும் நோக்கைக் கொண்டது  இந்த எம்.சி.சி. மானியம் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்படி தற்போதுள்ள முறைமையின் கீழ் இந்த நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமாகவுள்ள 80 சதவீதமான நிலப்பகுதி விவசாயத்திற்காக குத்தகை முறையில் பகிர்ந்தளிக்கப்படும் முறைமை தகர்க்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டது


Sunday, December 6, 2020

சிறைச்சாலை சீர்த்திருந்தங்கள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை மஹர கலவரம் மீளவலியுறுத்துகின்றது - அம்பிகா சற்குணநாதன்

 


மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம்  சிறைச்சாலைகள் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திநிற்பதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார். மஹர கலவரத்தில் 11 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உத்தியோக பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது . இலங்கையின் சிறைச்சாலைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுமார் இரண்டு வருடகாலமாக நடத்தப்பட்ட ஆய்விற்கு அம்பிகா சற்குணநாதனே தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 



இந்த ஆய்விற்காக 200ற்கு மேற்பட்ட சிறைக்கைதிகள் மற்றும் 100ற்கும் அதிகமான சிறைச்சாலை உத்தியோகத்தர்களை  அம்பிகா தலைமையிலான 33 பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் செய்திருந்ததுடன் வேறு பல ஆவணங்கள்  சான்றுகளையும் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மஹர சிறைக்கலவரம் இடம்பெற்று ஒரு சில நாட்களின் பின்னர் பகிரங்கப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Monday, August 17, 2020

ஆட்சியாளர்களுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியைக் கொடுத்த மின்சாரத் தடை! எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கான முன்னெச்சரிக்கை



மக்களது அபிமானத்தையும் ஆதரவையும் பதவியில் இருக்கின்ற அரசாங்கம் தக்கவைப்பதென்பது எவ்வளவு சவாலான விடயம் என்பதை உணர்த்துவதாக இன்றைய தினம் சுமார் 8 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்ட போது வெளிப்பட்ட உள்ளக்குமறல்கள் அமைந்துள்ளன.  

இன்று மதியம் 12.30 மணியளவில் நாடுமுழுவதும் தடைப்பட்ட மின்சாரம் படிப்படியாக  நாடு முழுவதும் வழமைக்கு திரும்பியபோது சுமார் 8.30 மணி இருக்கும். 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 8 மணி நேரத்திற்கு மேலாக நாடுதழுவிய மின்சார தடை ஏற்பட்டதன் பின்னர் இவ்வாறான நாடுதழுவிய தடை ஏற்படும் முதலாவது சந்தர்ப்பமாக இன்று ஏற்பட்ட தடை பதிவாகியுள்ளது  

அதுக்குள் மக்கள் அரசாங்கத்தில் இருப்பவர்களை கடுமையாக விமர்சித்தும் நகைச்சுவையாக கேலிபண்ணியும் தரக்குறைவாக வார்த்தைகளை  வெளிப்படுத்தியும் சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களைப் பதிவிட்டிருந்ததைக் காணமுடிந்தது. 

ராஜபக்ஸக்கள் மீது குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய மீது அபரிமீதமான நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் வைத்தே பெருமளவான மக்கள் இம்முறை வாக்களித்தார்கள். வினைத்திறன் மிக்கவர் என்பதும் இந்த நம்பிக்கைக்கு  காரணமாகும். புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்று ஐந்து நாட்களில் இப்படியான முழுமையான மின்சார தடை நாடு முழுவதும் ஏற்பட்டமை சற்றும் எதிர்பாராது என்பதோடு எச்சரிக்கை மணியாகவும் ஒலித்திருக்கும். 



முற்று முழுதாக இன்றைய மின்சாரத் தடைக்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறாக மாத்திரமே இருக்கக்கூடும் .அரசாங்கத்திற்கும் இதற்கும் எவ்விதமான காரணமும் இல்லாதிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் மக்கள் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகங்களைப்பார்க்கையில் எவ்வளவு விரைவாக மக்கள் அதிருப்தியுறுகின்றனர் என்பதை அவதானிக்க முடிகின்றது.

 மைத்திரி-ரணில் ஆட்சியின் போது ஏற்பட்ட அனைத்து தவறுகளுக்கும் அந்த அரசாங்கமே பொறுப்பு என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ராஜபக்ஸக்கள் தலைமையிலான பொதுஜன பெரமுணவினர் விமர்சனங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து ஏற்படுத்திய வடிவம் அவர்கள் மீதே திரும்ப வாய்ப்புள்ளது என்பதற்கான ஒரு ஆரம்ப அடையாளச் சமிக்ஞையாக கருத முடியும். 


புதிய அரசாங்கம் ஒன்று ஆட்சி பீடம் ஏறிய பின்னர் முதல் ஆறுமாத காலத்திற்கு அதன் தேனிலவுக் காலம் என்பார்கள். இந்தக்காலப்பகுதியில் மக்களின் அபிமானமும் ஆதரவும் அபரிமீதமாக அரசாங்கத்தின் மீது இருக்கும் என்பதே இப்படிக் கூறுவதற்கான காரணம் .அந்த எண்ணப்பாடும் தற்போது மாறிவருகின்றது என்பதற்கு இன்றைய தினம் மின்சாரம் தடைப்பட்ட போது மக்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன. 

அதிகாரத்திற்கு வருவதற்காக அள்ளிவழங்கிய வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றத்தவறினால் மக்களின் நலன்சார் விடயங்களில் வினைத்திறனுடன் செயற்படாது போனால் ஆட்சியில் இருப்பவர்கள் ராஜபக்ஸகளேயானலும்  கடுமையான  அதிருப்திக்கு முகங்கொடுக்க நேரிடுவது மட்டுமன்றி விமர்சனங்களுக்கும் வெறுப்புக்களுக்கும் ஆளாக நேரிடும் என்பதை இன்றைய மின்சாரத்தடை பிரதிபலிப்புக்கள் எடுத்துணர்த்துகின்றதென்றால் மிகையாகாது. 

சமூக வலைத்தளங்களில்  வெளியிடப்படும் கருத்துக்களை வைத்து மாத்திரமே ஒரு விடயதானம் பற்றி முடிவிற்கு வந்துவிடமுடியாது. ஆனால் பலம்பொருந்தியவர்களாக தோற்றம் காட்டுகின்ற ராஜபக்ஷக்கள் ஆட்சியிலே அச்சமின்றி கருத்துக்களை வெளிப்படுத்துகின்றவர்களின் எண்ண வெளிப்பாடுகளை ஓர் அளவுகோலாக எடுத்துக்கொண்டால் கடுமையான சவால்களை இவ்வரசாங்கம் எதிர்நோக்கவேண்டியேற்படும் என்பது திண்ணம்.