Thursday, November 23, 2017

பயங்கரவாத தடுப்புச் சட்டம் கட்டாயமாக நீக்கப்படவேண்டும் - மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன்




கேள்வி:

சித்திரவதைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக முறைப்பாடுகள் வந்துகொண்டே இருக்கின்றன. நீங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணைந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக்காலப்பகுதியில் சித்திரவதைகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? 
அது தொடர்பான புள்ளிவிபரங்கள் ஏதேனும் உங்களிடம் இருக்கின்றதா? 

பதில்: எமக்கு தரப்பட்ட புள்ளிவிபரங்களின் படி 30 அதிகாரிகள் குற்றாவளிகளாக இனங்கண்டுகொள்ளப்பட்டுள்ளார்கள். 18 அதிகாரிகள் நிரபராதியாகவும் கண்டறியப்பட்டுள்ளனர். 59 வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கின்றன.  இதனைத் தவிர சித்திரவதையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட  100 அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதாக எமக்கு கூறப்பட்டது. இவற்றையே உங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியும்.



கேள்வி:

இதிலே சில நாட்களுக்கு முன்பாக அஸோஸியேடற் பிரஸ் செய்திச்சேவையால் சுட்டிக்காட்டப்பட்ட சித்திரவதைகளும் உள்ளடக்குகின்றதா?

நீங்கள் கூறும் அஸோஸியேடற் பிரஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குற்றச்சாட்டு;க்கள் இதுவரையில் முறைப்பாடுகளாக எமக்கு வரவில்லை. ஆனால் இந்த முறைப்பாடுகள் எமக்கு மேற்கொள்ளப்பட்டால்  அல்லது அந்த அறிக்கையை தயாரித்தவர்கள் எம்முடன் வந்து தகவல் பரிமாறிக்கொண்டால் நிச்சயமாக அதனை விசாரணைசெய்து  தேவையான நடவடிக்கை எடுப்பது எமது கடமையாகும்.

அண்மையிலே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜுன் லம்பேர்ட் தலைமையிலான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக தாம் கடந்தாண்டு விஜயம் மேற்கொண்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தாம் மிகுந்த கவலைகொண்டிருப்பதாக  குறிப்பிட்டார்கள். இந்த விடயத்திலே மனித உரிமை ஆணைக்குழு என்னசெய்துகொண்டிருக்கின்றது? இதிலே நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?
புயங்கரவாத தடுப்புச் சட்டம் கட்டாயமாக நீக்கப்படவேண்டும். ஏனெனில் அந்தச் சட்டம் வந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கு ஏற்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக அந்தச் சட்டத்தின் கீழ நீதிபதியொருவருக்கு முன்பாக முன்னிலைப்படுத்தப்படாமலே ஒருவர் 18 மாதங்கள் தடுத்துவைக்கப்படலாம். சாதாரண சட்டத்தின் கீழ்; நீதிபதியொருவருக்கு முன்னர் மாத்திரமே ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறமுடியும். அது நீதிமன்றத்தாலும் ஏற்கப்படும். ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உதவிப் பொலிஸ் பரிசோதகர் அன்றேல் அவருக்கு மேலுள்ள அதிகாரிகள்; பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே அந்த ஒப்புதல் வாக்குமூலமானது நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஆகையால் அந்தமாதிரியான ஒரு சட்டம் இருக்கும் நிலையில் அது சித்திரவதை செய்வதற்கு சாதகமான ஒரு சூழ்நிலையை  ஏற்படுத்துகின்றது.  ஏனெனில் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே சித்திரவதை செய்யப்படக்கூடும். ஆகையால் தான்  தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. ஆகையால் அந்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்கு திட்டவட்டமாக உறுதிபடக் கூறியுள்ளது.
இதனை வலியுறுத்தி; நாம் பிரதமமந்திரிக்கு எழுதியிருக்கின்றோம். அத்;தோடு பகிரங்க அறிக்கைகளையும் விடுத்திருக்கின்றோம். எமது இணையத்தளத்தைப் போய் இவற்றை நீங்கள் பார்க்கமுடியும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது பரிந்துரை.



கேள்வி:

கடந்த இரண்டுவருடகால உங்கள் அனுபவத்தின் படி மனித உரிமையைப் பேணுகின்றவிடயத்தில் இந்த அரசாங்கம் உண்மையான உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் காண்கின்றீர்களா? அன்றேல் கண்துடைப்பிற்காக நிறுவனங்களை அமைத்து வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு இருந்துவிடுகின்றதென எண்ணுகின்றீர்களா?

பதில்:

மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் பொறுத்தவரை நாம் ஒரு சுயாதீனமான ஆணைக்குழு. ஆகையால் நாம் சுயாதீனமாகவே செயற்படவேண்டும். சுயாதீனமாகவே செயற்படுகின்றோம். இப்போதுள்ள மாற்றமாக நாம் கண்டதென்னவெனில் தற்போது பேச்சுச்சுதந்திரம் உள்ளது. அரசாங்கத்திலுள்ள குறைநிறைகளை பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கான  சுதந்திரம் உள்ளது.  அதனைத்தவிர அரசாங்கத்தை அல்லது அரசியல்யாப்பை அல்லது மனித உரிமை ஆணைக்குழு போன்ற நிறுவனங்களைக் கூட சீர்திருத்தி அமைப்பது என்பது  சுலபமான காரியமல்ல. ஏனெனில் பத்துவருடகாலம் சர்வாதிகார  அரசாங்கம் இருந்த பின்னணியிலே  ஒரு கலாசாரம் உருவாகும். அதாவது சட்டத்தை மதிக்கத் தேவையில்லை. மனித உரிமைமீறல்களை நாம் இழைக்கலாம் . இழைத்தாலும் சட்டத்திலிருந்து நாம் தப்பிக்கொள்ளலாம்.  ஆகையால் அந்தமாதிரியான கலாசாரத்தை மாற்றுவதென்பது  இலகுவானதல்ல. மனித உரிமை ஆணைக்குழுவைக் கூட  சில பேர் சில அரசநிறுவனங்கள் கூட எதிரியாகவே எம்மைப் பார்க்கின்றனர்.  பார்;க்கூடும். ஏனெனில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கின்றதா என்பதை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்காணித்து  அவை செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டி சரியான வழியில் போறதற்கு  பரிந்துரைகள் வழங்குவதுதான் எமது கடமை.  ஆகையால் நாம் எம்மை எதிரியாகப் பார்க்கவேண்டாம் என்றே நாம் அரச நிறுவனங்களுக்கு கூறுகின்றோம். இலங்கையிலுள்ள அனைவரது மனித உரிமைகளையும் பேணுவதை உறுதிப்படுத்துவதே எமது கடமை. எங்களைப் பொறுத்தவரை எந்த அரசாங்கமும் எப்போதும் எல்லாநேரத்திலும் மனித உரிமைகளை மதிப்பதில்லை. அவர்கள் மதிக்காமல் சட்டத்திற்கு மாறாக செயற்படும் போது கட்டாயமாக நாங்கள் குரல் எழுப்ப வேண்டும். சுட்டிக்காட்டவேண்டும். பரிந்துரைகளை வழங்கவேண்டும்.

'உங்களை எதிரியாகப் பார்க்கவேண்டாம'; என்று கடந்த கேள்விக்கான பதிலில் கூறினீர்கள்.  கடந்த அரசாங்கக்காலத்தில் மனித உரிமைக்காக குரல் எழுப்பியவர்களைத் துரோகியாக  அடையாளம் காட்டிய காலப்பகுதி இருந்தது. தொலைக்காட்சிகளில் முகங்களைக் காண்பித்து இவர்கள் துரோகிகள் எனக்கூறினர். இந்தப் போக்கை எப்படி மாற்றியமைக்கமுடியும்?


இது கடினமான கேள்வி. அரச உத்தியோகத்தர்கள் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மனித உரிமை ஆணைக்குழுவின் கடமைகளிலொன்றாகும். அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கின்றோம். ஆனாலும் அந்த நடவடிக்கைகள் போதாது. ஏனெனில் பத்துவருட காலமாக( மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ) மனித உரிமைகளைப் பற்றிக் கதைத்தால் எமது தேசியப் பாதுகாப்பிற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகக் கருதப்படலாம். அல்லது குழப்பங்களை ஏற்படுத்துகின்ற ஒரு நடவடிக்கையாக கருதப்படலாம். அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதற்கான நடவடிக்கையாகக் கண்டுகொள்ளப்படலாம். ஆகையால் அந்த மாதிரியான கலாசாரத்தை மனநிலையை மாற்றுவதென்பது  இலகுவல்ல. நாம் வந்து இரண்டு வருடத்தில் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.  ஆனாலும் அது இலகுவான விடயமல்ல.



காணாமல்போனோருக்கான அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டம் கடந்தாண்டு ஓகஸ்ற் மாதத்தில் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாள் இழுபறிக்குப் பின்னர் ஜனாதிபதி அந்த சட்டத்தில் கையொப்பமிட்டிருந்தபோது அந்த அலுவலகம் இன்னமும் இயங்குவதைக் காணமுடியவில்லை. இந்த விடயத்திலே உங்களுடைய பார்வை எப்படி இருக்கின்றது?

அந்த அலுவலகத்திற்கு அங்கத்தவர்களை தெரிவுசெய்து நியமிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னர் விளம்பரம் செய்யப்பட்டது. சிவில் நிறுவனங்கள் ஆட்களை பிரேரிக்க முடியும். அல்லது அதில் அங்கத்தவர்களாக விரும்புவோர் விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும்.  அதற்கு பிறகு அரசியல்யாப்பு பேரவை பரிந்துரைகள் வழங்க  அவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதற்கு நியமிக்கப்படும் அங்கத்தவர்கள்  மனித உரிமை விடயங்களில் தேர்ச்சியுள்ளவர்களாகவும் சுயாதீனமானவர்களாகவும்  காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் இணைந்து பணியாற்றியவர்களாகவும் இருப்பது மிகமுக்கியமாகும். ஏனெனில் இது ஒரு புது அமைப்பு  இதன் செயற்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு  அந்த அங்கத்தவர்களின் பங்களிப்பு மிக முக்கிமாகும்.  புpழையான அங்கத்தவர்களை நியமித்தால் அந்த நிறுவனம் இயங்கப்போவதில்லை.  இந்தமாதிரியான நிறுவனங்கள் இயங்குவதற்கு சிலமாதங்கள் சில வேளை ஒருவருடமாவது எடுக்கும். ஏனெனில் பிராந்தியங்களில் அலுவலகங்களைத் திறக்க வேண்டியுள்ளது. தேர்ச்சியான நிபுணர்களைக் கொண்டுவரவேண்டியிருக்கும். சுரியான அங்கத்தவர்களை நியமிப்பதே மிகமுக்கியமானவிடயமாகும்.  அது சரியாக சீராக செயற்படுகின்றதா என்பதை அதற்குப் பின்னர் தான் நாங்கள் எடுக்க முடியும்.





மனித உரிமை ஆர்வலர்கள-; காவலர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக ஐநாவில் கூட முறையிடப்பட்டிருந்தது. அவர்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு  அவர்கள் தொடர்ந்தும் பணியை துணிகரமாக முன்னெடுப்பதை உறுதிப்படுத்துவதற்கு  மனித உரிமைகள் ஆணைக்குழு என்றவகையில் நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பத்து பிராந்தியக் காரியாலங்கள் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் எம்மிடம் வந்து முறைப்பாடு செய்துள்ளனர்.  சுpல வேளைகளில் பாதுகாப்புச் சேவையில் இருப்பவர்கள் எமது அலுவலகங்களுக்கு வந்து தகவல்கள் கேட்கின்றனர் என்று முறைப்பாடுகள் மேற்கொண்டிருக்கின்றனர். அப்படி மேற்கொள்ளும்போது நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றோம். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பானதொரு சூழலை ஏற்படுத்துவதற்காக எம்மால் இயலுமான  அளவு முயற்சிகளை மனித உரிமை ஆணைக்குழு எடுத்திருக்கின்றது. எந்தப்பிரச்சனை இருந்தாலும் தயதுசெய்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு  முறைப்பாடு செய்யுங்கள் என நாம் சிவில் சமூகத்தினர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு கூறுகின்றோம்.  பிராந்தியங்களில் என்ன நடக்கின்றது என்று தெரிந்தால் மட்டுமே  நாம் தேவையான நடவடிக்கை எடுக்க முடியும். எங்களுடைய செயற்பாடு சரியாக இல்லாவிடின் அவர்கள் எம்மிடம் கேள்வி கேட்கலாம். கேள்விகேட்க வேண்டும். ஏனெனில் அது அவர்களின் உரிமையாகும். அப்போதுதான் மனித உரிமை ஆணைக்குழுவும் சரியாக செயற்படமுடியும்.

Thursday, November 9, 2017

பயங்கரவாத தடைநீக்கத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்-ஜீன் லம்பேர்ட்

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுத் தலைவி ஜீன் லம்பேர்ட் சுடர் ஒளிக்கு விசேட செவ்வி 

நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்.


பயங்கரவாத தடைச்சட்டத்தை தற்போதைய நிலையில் நீங்கி இருப்பார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இன்னமும் எமக்களித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமை தொடர்பில் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். இவ்விடயத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கடும் குரல்கள் எழும் என்பது நிச்சயம். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையை நாம் மிகவும் அவதானதிற்குட்படுத்திக்கொண்டே இருப்போம் என இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவி ஜீன் லம்பேர்ட் தெரிவித்தார். 
கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை விரிவாக ஆராய்ந்த ஐரோப்பிய ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரியில் அறிக்கை சமர்பிக்கவுள்ளநிலையில் இன்னமும்  அவதானம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டிய அவர் 2019ம் ஆண்டில் இலங்கையின் ஜிஎஸ்பி பிளஸ் மீள் பரிசீலனை இடம்பெறவுள்ள நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சூசகமாக கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
ஒக்டோபர் 31ம்திகதி முதல் நவம்பர் 3ம்திகதிவரை  முன்னெடுத்த இலங்கைகக்கான விஜயம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பணிமனையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து சுடர் ஒளிக்கு  அவர் வழங்கிய விசேட செவ்வி பின்வருமாறு:

ஒட்டுமொத்தமாக இந்த விஜயத்தை எப்படிப்பார்க்கின்றீர்கள்?

நாம் இதனை மிகவும் பெறுமதியான விஜயமாகக் கருதுகின்றோம். எங்களைச் சிறப்பாக வரவேற்றனர். நாம் சந்தித்த அமைச்சர்களுடான சந்திப்பின் போது எமக்கு அதிகமான காலப்பகுதி இருந்திருந்தால் நல்லது ஏனெனில் நாம் எமது கலந்துரையாடல்களில் ஆழமாகச் சென்றிருக்க முடியும் இருந்தாலும் அந்த சந்தர்ப்பத்தை வரவேற்கின்றோம ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகைக்கான மதிப்பீட்டுக் காலப்பகுதியில் கூறியவிடயங்களுடன் நோக்கும் போது சில விடயங்களில் அரசாங்கத்திடம் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்பதை எமது கலந்துரையாடல்களின் போது உணர்ந்தோம்.  அவர்களின் திட்டங்கள் என்னவென்பது குறித்து நாம் இம்முறை அறியமுடிந்தது. எனினும் சில விடயங்கள் எமக்கு கரிமனைமிகுந்தாக அமைந்துள்ளன. நாம் கடைசியாக ஒருவருடத்திற்கு முன்பாக இங்கு வந்திருந்தோம். அந்தத்தருணத்தில் மாற்றங்கள் உதாரணமாக கூறுவதெனில்  பயங்கரவாதத்த தடைச்சட்ட நீக்கமானது இந்தக்காலப்பகுதியில் நடைமுறைக்கு வந்திருக்கும் என கடந்தமுறை நாம் நம்பவைக்கப்பட்டோம். அது நடைபெறாமை குறித்து நாம் மிகுந்த கரிசனைகொண்டுள்ளோம். அதுபோன்று குற்றவியல் ஒழுக்கக்கோவையில் மாற்றங்கள் இடம்பெறாமை தொடர்பாகவும் நாம் கரிசனைகொண்டுள்ளோம். அந்தவகையி;ல் சுய பாரபட்சம் இன்னமும் சாத்தியமானது. அதுபோன்ற மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதை நாம் இப்போது காணவிரும்புகின்றோம். ஆனால் அது நடக்கவில்லை.


அரசாங்கம் அடையாளச் சமிக்ஞைகளாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் போன்ற முக்கியமான விடயங்களில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அரசாங்கம் நேரத்தை இழுத்தடிப்பதற்காக செய்கின்றதா அன்றேல் அவர்களிடத்தில் உண்மையான நோக்கம் உள்ளது என்பதை அவர்களுடனான சந்திப்புக்களின் போது நீங்கள் கண்டுணர்ந்தீர்களா?

இன்னமும் உண்மையான நோக்கங்கள் உள்ளதாக நான் கருதுகின்றேன்.  காணமல்போனவர்கள் விவகாரத்துடன் தொடர்புடைய அலுவலகமானது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதைக்கண்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதற்காக வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம். அது மிகவும் முக்கியமானது. ஏனெனில் நான் இங்கு வரத்தொடங்கிய பல வருடகாலப்பகுதியில் அது பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களதும் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவந்துள்ளது.  நல்லிணக்கம் ஒருங்கிணைத்தல் போன்ற விடயங்களில் மென்கொள்கைகளில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதைக் நாம் காண்கின்றோம். அது எவ்வாறு முன்செல்லப்போகின்றது என்பதை காண்பது கடினமானதென நினைக்கின்றேன். ஏனெனில் அது ஒன்று ஒரு கட்டிடமல்ல ( கட்டிடம் எழும்புவதைக் கண்கூடாக காணலாம் ) மாறாக மக்களின் மனப்பான்மை மற்றும் நடத்தைகளை மாற்றுகின்ற விடயமாக அது அமைந்துள்ளது. காணிகளை விடுவிப்பதில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் அது விரைவுபடுத்தப்படுவதைக் காண நாம் விரும்புகின்றோம்.  அது வேகமாக இருக்கவேண்டும் என நான்  எண்ணுகின்றேன். மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் பணிகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் முன்னேற்றம்காணும் சில விடயங்கள் இன்னமும் உள்ளன. இலங்கையிலுள்ள பலரது உணர்வலைகளை நாமும் பகிர்ந்துகொள்கின்றோம். அதாவது மக்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்கும் வகையில் இந்தவிடயங்கள் மிகவேகமாக இருக்கவேண்டும் என நாம் விரும்புகின்றோம்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவற்கு துணைபுரிந்த பலரும் அரசாங்கமானது மு;க்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறியுள்ளமை தொடர்பில் தமது அதிருப்தியையும் விரக்தியையும் வெளிப்படுத்திவருகின்றனர். ஆனால் கடந்த வருடத்தில் வருகைதந்ததற்கும் தற்போது வந்ததற்கும் இடையில் சில முன்னேற்றங்களை நீங்கள் கண்டுள்ளதாக நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் மக்கள் நினைப்பதற்கு முரணானதாக உங்களுடைய கருத்துக்கள் அமைந்துள்ளதல்லவா? இது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

நாம் காணும் சில மாற்றங்கள்  அவை பெரும்மாற்றங்கள்  எனக்கூறவரவில்லை ஆனால் அவை நடக்கின்றன. இது மக்களின் தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும் வருபவையாகும். நீங்கள் மீள் குடியேற்றம் மற்றும் காணிகள் மீண்டும் கிடைக்கப்பெறுகின்றமை போன்ற விடயங்களை நோக்குவீர்களாக இருந்தால்  இது உங்களுக்கு நடந்திருந்தால் நீங்கள் இதனை மிகவும் ஆழமாக உணருவீர்கள்.  ஏனையவர்களும் இது இடம்பெறுகின்றதை என்பதைக் கூறுவார்கள். இது இன்னமும் நடக்கின்றது. நிறுத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதுவே முக்கியமான அளவுகோலாகும். இது நிறுத்தப்பட்டுவிட்டதா? இல்லை. இன்னமும் முன்செல்கின்றதா? ஆம.; இன்னமும் வேகமாக முன்னெடுக்கப்படலாமா? ஆம் ஆம் . அதனையே நாம் நினைவுறுத்தினோம். அரசாங்கம் இதனை உணர்ந்துள்ளதென நான் நினைக்கின்றேன். இன்னமும் பல விடயங்கள் செய்யப்படவேண்டியுள்ளன. மக்கள் தமது வாக்குகளை அளித்தார்கள் ஆனால் தற்போது நம்பிக்கை இழக்கத்தொடங்கியுள்ளனர். எனவே இதுவிடயத்தில் விரைந்து செயலாற்றுங்கள் என்றே நாம் அரசாங்கத்திற்கு கூறினோம்.


ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகைக்கான மதிப்பீட்டின் போது அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கின்ற 27 சாசனங்களுக்கு மேலதீகமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை அரசாங்கம் நிறைவேற்றுவது தொடர்பிலும் நீங்கள் அவதானம்செலுத்திவருவதாக கூறினீர்கள். கடைசியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐநாவின் இரு விசேட அறிக்கையாளர்களும் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று ஏமாற்றத்தை வெளியிட்டிருந்தனர். இந்தவிடயத்தில் உங்களுடைய தூதுக்குழுவின் பார்வை எப்படி உள்ளது?

பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. ஒரு செயன்முறை கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் காணவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை தீர்மானத்திலுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதை நாம் காண்கின்றோம். நல்லிணக்கம் ஒருங்கிணைப்பு போன்ற விடயங்களில் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. காணமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கான ஆணையாளர் வெற்றிடத்திற்காக மக்கள் விண்ணப்பிப்பதையும் நாம் காண்கின்றோம். ஆனால் பொறுப்புக்கூறல் விடயத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனை முன்னெடுப்பதற்கான எவ்வித கட்டமைப்புக்களும் இதுவரையில் ஸ்தாபிக்கப்படவுமில்லை

பாரதூரமான மீறல்கள் இடம்பெற்றால் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை திரும்பப்பெறப்படலாம்-ஜேர்மன் தூதுவர்

கடந்து வந்த பாதைக்கு இலங்கை மீண்டும் திரும்பிவிடக்கூடாது -தென் ஆபிரிக்கத் தூதுவர் ரொபினா பி.மார்க்ஸ்

பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் காணப்படாவிடின்  மக்கள் பொறுமையிழக்கும் அபாயநிலை காணப்படுவதாக  இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தென் ஆபிாிக்கத்துாதுவர் ரொபினா பி. மாா்க்ஸ்  எச்சாித்துள்ளாா்.

கடும்போக்காளா்கள் சமூகத்தில் உள்ள நிலையில் இலங்கை கடந்துவந்த பாதைக்கு மீண்டும் சென்றுவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றாா்.



சுடர்ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களைத் தெரிவித்தார். அவரது நேர்காணல் வருமாறு:




ஜெனிவாவில் அறிக்கையொன்றை விடுத்த அரசாங்கம் உண்மையைக் கண்டறிவதற்காக தென் ஆபிாிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையைப் பின்பற்றப் போவதாக தொிவித்திருந்தது. ஆனால் காலம் செல்லச் செல்ல அவா்கள் காண்பித்த அா்ப்பணிப்பு மங்கிச் செல்வதாகக் காணப்படுகின்றது. இலங்கையில் இருந்த பல துாதுக்குழுக்கள் தென் ஆபிாிக்காவிற்கு சென்றிருந்தன. ஆனாலும் காத்திரமானதாக எதுவும் சாதிக்கப்பட்டதாக தொியவில்லை. அவா்கள் திரும்பவந்ததும் தாம் கற்றுக்கொண்ட விடயங்கள் என்னவென்பது தொடா்பாகவும்  மக்களுக்கு எதுவும் தொிவிக்கவில்லை. இதனை எப்படிப் பாா்க்கின்றீர்கள்? ஏதேனும் உண்மையான முன்னேற்றம் உள்ளதா? இத்தனை அனுபவங்களை பெற்றுக்கொண்டபின்னா் அவா்கள் நடந்துகொண்ட விதம் தொடா்பாக நீங்கள் திருப்தியடைகின்றீர்களா?

( நீங்கள் ஒரு சூழ்நிலையின் நடுப்பகுதியில் இருக்கின்றபோது அதிலுள்ள நகர்வுகளைக் நீங்கள் காண்பது மிகவும் கடினமானதென்பதை நீங்கள் கவனத்தி்ற்கொள்ள வேண்டும். எமக்குாித்தான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நடைமுறையானது 34 வருட கால இன ஒதுக்கல் அடக்குமுறை காலத்தில் என்ன நடைபெற்றது என்ற கதைகளை சொல்லுவதற்கு எமது மக்களுக்கு துணைசெய்கின்ற ஓர் முயற்சியாகும். அந்தவகையில் காலப்பகுதியை வைத்து பாா்க்கையில் எமது நடைமுறை இலங்கையில் இருந்து சற்று வித்தியாசமானதாகும். இரண்டாவதாக நாம் எவ்வாறாக இலங்கையில் இருந்து வேறுபடுகின்றோம் எனில் நாம் பேச்சுவார்த்தை மூலமான சமரச தீர்வைக் கண்டோம். மாறாக உங்கள் விடயத்திலோ ஒருதரப்பினா் வெற்றிபெற்றனா். ஒரு தரப்பினா் யுத்தத்தில் வெற்றிபெற்றனா். எமக்கு அவ்வாறான நிலை காணப்படவில்லை. அந்தவகையில் நீங்கள் முகங்கொடுக்கவேண்டிய பிரச்சனைகள் அன்றேல் சவால்களானது நாங்கள் முகங்கொடுத்த பிரச்சனைகளில் இருந்து மிகவும் வித்தியாசமானதாக காணப்படுகின்றன. நாங்கள் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள்ளாக சிலவருடங்களிலேயே ஒரு பேச்சுவாா்த்தை மூலமான சமரசத் தீர்வை அடைந்த அதேவேளை நீங்களோ ஆயுதங்கள் மௌனிக்கச்செய்யப்பட்டு எட்டு வருடங்களைக் கடந்துள்ளீர்கள்.  தாம் ஒரு உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைக் கட்டமைப்பைக் கண்டறிவதில் அா்ப்பணிப்புக்கொண்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளமை மிகவும் முக்கியமானதென நான் கருதுகின்றேன். அந்த உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையானது சா்வதேச நியமங்கள் தராதரங்கள்  சர்வதேச மனித உாிமை சட்டதிட்டங்கள் போன்றவற்றிற்கு அமைய வேண்டும் என்பதில் நாம் மிகவும் ஆா்வமாகவுள்ளோம். அத்தோடு இலங்கையில் இருந்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் போது ஐக்கிய நாடுகளின் உறுப்புநாடுகள் வழங்கியு்ள்ள பரிந்துரைகளைப் பின்பற்றுவதாகவும் அது அமைந்திருக்க வேண்டும்.  பொறுமையிழப்பது மனித சுபாவம் என நான் நினைக்கின்றேன். அதேவேளை அரசாங்கம் இதுவரையில் போதுமான விடயங்களைச் செய்யவில்லை எனச் சொல்வது என்னைப் பொறுத்தவரையில் கடினமானதாகும். போதுமான விடயங்கள் இன்னமும் செய்யப்படவில்லை என மக்கள் எப்போதுமே உணர்வில் எண்ணுவாா்கள். ஆனால் தற்போதுள்ள முக்கியமான விடயம் யாதெனில் தற்போது உங்களிடம் ஒரு அரசியல் உறுதிப்பாடு காணப்படுகின்றது. கால வரையறை தீர்மானிக்கப்பட்டு முக்கியமான மைல்கல்களை நிலைநிறுத்தி அந்த அரசியல் உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்தக்கூடிய விடயமாக மாற்றியமைப்பதை உறுதிப்படுத்துவது அடுத்த கட்டமாகும். இல்லாவிடின் அரசாங்கம் உண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ளதாக என்பதை அளவிடுவதற்கு அதன் முன்னேற்றத்தை கணிப்பிடுவது மிகவும் கடினமாகும். எம்முடைய பாா்வையில் சில முன்னேற்றகரமான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த தேசிய ஒற்றுமை அரசாங்கமானது இலங்கைக்கு வாய்ப்பிற்கான வழியொன்றைத் திறந்துவிட்டுள்ளது என நாம் எண்ணுகின்றோம். அதேநேரத்தில் மக்கள் பொறுமையிழந்துவருகின்றார்கள் என்பது தொடா்பாகவும் நாம் அறிந்துள்ளோம். முன்னேற்றம் காணப்படாவிடின் அந்த முன்னேற்றம் அறியத்தரப்படாவிடின் அந்த பொறுமையீன்மையானது அதிகரிக்கும் என்பதுடன் வாய்ப்புகளுக்கான சந்தரப்பமானது மென்மேலும் குறைவடைந்து செல்லும். அனேகமான சமூகங்களில் எப்போதுமே கடும்போக்காளா்கள் இருப்பாா்கள். அந்தவகையில் அவர்களின் பொறுமையீனமானது வேறெதும் விடயமாக மாற்றம் பெற்று  கடந்தகாலத்திற்கு இட்டுச்சென்றுவிடாது பாா்த்துக்கொள்ளவேண்டி எச்சாிக்கையுடன் செயற்படவேண்டும். 


நான் உங்களுக்கு முன்னர் தூதுவராக இருந்தவரையும் நேர்காணல் செய்துள்ளேன். அவர் நல்லிணக்க முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் விடயத்தில் தென் ஆபிரிக்காவின் பாடங்களைப் பகிர்ந்துகொள்வதில் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். நீங்கள் அவருடைய வழித்தடத்தில் பயணிக்கின்றீர்களா? அன்றேல் மேசைக்கு புதிதாக ஏதேனையும் கொண்டுவர விரும்புகின்றீர்களா?

ஆம் என்று நான் நினைக்கின்றேன். இந்த நேர்காணலுக்கு நன்றி. நான் எமது தரப்பு கருத்துக்களையும்; திட்டங்களையும் குறிப்பாக தமிழ் சமூகத்துடனும் தொடர்பான திட்டங்களையும் பகிர்ந்துகொள்ளக்கிடைக்கும் வாய்ப்புக்களை எப்போதுமே பாராட்டுகின்றவள். ஏனெனில் பரந்தளவிலான மக்களிடம் எமது கருத்துக்களை கொண்டுசேர்க்க நாம் முயற்சிக்கின்றோம். நாம் அடிப்படை விடயங்களை முயற்சிக்க வேண்டும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். நாம் இலங்கைக்குள்ளும் வெளியேகும் உள்ள தரப்பினருடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அப்போது நாம் முயற்சித்துக்கொண்டிருக்கும் சமாதான முன்னெடுப்பில் அவர்களனைவரும் பங்களிக்க முடியும். எனக்கு முன்னர் தூதுவராக இருந்தவரை விடவும் முன்னோக்கியதாக இந்தக் பயணம் அமைந்துள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு எமது ஜனாதிபதி சூமாவிற்கு இலங்கை அரசாங்கத்தரப்பிடமிருந்து ஆணையொன்று கிடைக்கப்பெற்றிருந்தது. அந்தவகையில் உங்களுடைய முயற்சிகளுக்கு உதவி ஒத்தாசை புரிந்திடவும் விசேடமாக தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிடவும் எமது தற்போதைய துணை ஜனாதிபதி சிறில் ரமபோஷாவை 2013ல் இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக நியமித்திருந்தோம்.  அது முதற்கொண்டு வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதில் நாம் பங்களிப்பை வழங்கிவருகின்றோம். உங்களுடைய சில முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதற்கு நாம் பல வழிகளைக் கண்டுபிடித்துள்ளோம். உங்களுக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புக்களில் கள அனுபவங்களை கற்றுக்கொள்வதற்கான விஜயங்களும் ஒன்றாகும். அரசாங்கத்தைச் சேர்ந்த பல தூதுக்குழுக்கள் தென் ஆபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அமைச்சர்கள் பல்வேறு அரச திணைக்களங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். அதேபோன்று நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பினர் விடுத்த வேண்டுகோளுக்கும் நாம் ஆதரவளித்தோம். அவர்களும் தென்ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்து எவ்வாறாக இரத்தம் சிந்தாமல் ஒரு சமாதானமாக தீர்வை சமரசத்தினுர்டாக கண்டடைவதென்ற விடயத்தில் வழிகாட்டுமாறு கோரியிருந்தனர். 1994ல் எமது ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டபின்னர் 23 வருடங்கள் கழிந்தும் சமாதானமானது இன்னமும் தாக்குப்பிடித்துநிற்கின்றது ஏனெனில் நாம் வலுவானதொரு ஜனநாயக நாடாகும். முன்னாள் ஜனாதிபதி  ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கத்தினதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும்  அழைப்பையடுத்து நாம் மிகவும் தார்மீகரீதியான ஆதரவு நிலைப்பாட்டை வழங்கிவருகின்றோம். அந்த ஆதரவு தொடர்ந்தும் இருக்கும். அண்மையில் ஜனாதிபதி சிறிசேன எமது ஜனாதிபதியிடம் தொடர்பு கொண்டு தென் ஆபிரிக்காவின் விசேட கவனமானது தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்ததையும் நான் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். அதுமாத்திரமன்றி எம்மிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளும்; ஒத்துழைப்பும் தேவைப்படுகின்ற் புதியதொரு பட்டியலையும் அவர் முன்னிலைப்படுத்தியிருந்தார். அந்தவகையில் எமது பணி தொடர்ந்தும் முன்செல்லும்.  






 தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சியில் இழைக்கப்பட்டவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களின் பரிமாணம் மாறுபட்டது. இலங்கையில் இழைக்கப்பெற்ற குற்றங்கள் மிகவும் பாரதூரமானவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரே குறிப்பிட்டிருந்தார்.தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக நிறவெறி ஆட்சியில் இழைக்கப்பெற்ற குற்றங்களுக்காக யாரேனும் தண்டிக்கப்பட்டார்களா? மீண்டும் மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் எனக் கருதுகின்றீர்களா? 

தென் ஆபிரிக்காவில் ஒரே காலகட்டத்தில் பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன.நாம் புதிதாக ஒரு அரசியல்யாப்பை உருவாக்கியிருந்தோம். அரசியல்யாப்பானது கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமிடையிலான பாலமாக திகழ்கின்றது என நான் உங்களின் முன்னைய கேள்விக்கான பதிலின் போதும் தெரிவித்திருந்தேன். மீண்டும் மோதல்கள் ,அநீதிகள் கடந்தகாலத்தில் போன்று நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக அரசியல்யாப்பு அமைந்துள்ளது.ஏனெனில் அரசியல்யாப்பு இனவாதத்தைத் தடைசெய்துள்ளது. அவதூறுப் பேச்சுக்களைத் தடைசெய்துள்ளது. எங்களுடைய அரசியல் யாப்பை நீங்கள் பார்க்கும் போது அதிலுள்ள சம உரிமைச் சரத்துக்களைக் உன்னிப்பாக நோக்குங்கள். நாம் மீண்டுமாக பழைய நிலைக்கு திரும்பாது இருப்பதை உறுதிசெய்வதற்கான கருவியாக அரசியல்யாப்பு இருக்கின்றதென்பதை பறைசாற்றுவதாக அதிலுள்ள சம உரிமைச்சரத்துக்கள் அமைந்துள்ளன.நாம் மீண்டுமாக துயர்படிந்த கடந்தகாலத்திற்கு திரும்பமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் மிகமுக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக அரசியல்யாப்பு உருவாக்கம் அமைந்திருக்கின்றது.


நீங்கள் ஒரு நீதிமன்றத்திற்கு முன்செல்வதோ அன்றேல் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்பாக செல்வதோ கடந்த கால துயரச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறமாட்டாது என்பதை உறுதிப்படுத்தவதற்கு போதுமானதாக அமைந்துவிடாது. நீதியை நிலைநிறுத்தும் நிறுவனங்கள் சீரமைக்கப்படவேண்டுவதும் முக்கியமானதாகும். நீதிக்கட்டமைப்பு பொலிஸ் மனித உரிமை ஆணைக்குழு ஆகியன வலுப்படுத்தப்படவேண்டும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்காக நீதியை கட்டிக்காப்பதற்காக அரசாங்க நிறுவகக் கட்டமைப்பில் புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படவேண்டும்.


தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தமையால் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் என்பன சாத்தியமாயிற்று. ஆனால் இலங்கையில் சிறுபான்மையினரே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தவகையில் தென் ஆபிரிக்க படிப்பினைகள்  எவ்வாறு உதவமுடியும்?


நீங்கள் மோதலில் பாதிக்கப்பட்டவராக இருந்தால் நீங்கள் சிறுபான்மையினராக இருந்தாலோ பெரும்பான்மையினராக இருந்தாலோ நீங்கள் மோதலில் பாதிக்கப்பட்டவரே. மோதல்களின் போது,யாரேனும் உங்களுக்கு எதிராக தீங்கிழைதிருந்தால் ,யாரேனும் உங்கள் உறவினரை கொலைசெய்திருந்தால் ,யாரேனும் உங்கள் உறவினரைக் கடத்திச் சென்றிருந்தால் ,யாரேனும் உங்கள் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால், யாரேனும் உங்கள் சகோதரியையோ தாயாரையோ பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியிருந்தால்  அவை எங்குமே  மாற்றடையப்போவதில்லை.எந்த மோதலின் போதும் அவை ஒரேவிதமானவையாகவே உள்ளன.
தென் ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டமை எம்மைப்பொறுத்தவரையில் அதிர்ஷ்டமிக்கதாக அமைந்தது.தென் ஆபிரிக்காவில் அது எமக்கு உதவியாக அமைந்தது.இந்த விடயங்களை கையாள்வதற்கான மேம்பட்ட வாய்ப்புக்களை அது வழங்கியது.

பெரும்பான்மையினரான தென் ஆபிரிக்ர்களைப் பொறுத்தவரையில் வியந்துபார்க்க கூடியவிடயமாக அமைந்ததென்னவென்றால்  ஆட்சியதிகாரத்திற்கு வந்தவுடன் அவர்கள் அராஜகப்பான்மையுடன் நடந்துகொள்ளவில்லை.அவர்கள் அரசாங்கமமைத்தவுடன் அவர்கள் மன்னிப்பவர்களாக மாறினர். இதனை அனைவரும் எப்போதும் உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு நாட்டில் நீங்கள் பெரும்பான்மையினராக இருந்தால் ஏன் நீங்கள் நல்லிணக்கத்தினை நோக்கி வழிநடத்தக்கூடாது. தென் ஆபிக்காவில் கறுப்பினத்தவர்கள்  வெள்ளையரல்லாதவர்கள் தான் பெரும்பான்மையினர். அவர்களே நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் தலைமைதாங்கிவழிநடத்தியிருந்தனர். பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் தலைமைதாங்கியிருந்தனர். கறுப்பினத்தவர்களிடத்தில் இருந்தே பொறுப்புக்கூறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தென்பிரிக்காவில் உண்மை மறறும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவதற்கு அங்குள்ள கறுப்பினத்தவர்களே காரணமாக அமைந்தனர்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதில் பெரும்பான்மையினர் முன்னின்று செயற்படவேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதில் பெரும்பான்மையினர் முன்னின்று செயற்படவேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். அது மிக முக்கியமான விடயம். அந்த வகையில்  பல சிக்கலான பாடங்களை  தென் ஆபிரிக்காவில் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். பெரும்பான்மையினர் எதிர் சிறுபான்மையினர் போன்ற விடயங்களை இலங்கைககு உசிதமான வகையில் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.நீங்கள் என்ன வேண்டும் என்பதை கூறுகின்ற தகவலாக இந்தப்பாடங்கள் அமையமாட்டாது.மாறாக நீங்கள் அதைப் பார்த்து தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்கள் பல்வேறு துயர்களை எதிர்கொண்டிருந்தபோதும் அந்த துயரங்களை விளைவித்த சிறுபான்மையினரை அவர்கள் மன்னித்தவிடயத்தை மனதில் நிறுத்திக்கொள்ளலாம்.இங்குள்ள பெரும்பான்மையினர் எப்படி சிறுபான்மையினருடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என அந்த அனுபவத்தைக் கொண்டு ஆராயமுடியும். அந்த வகையில் பல வித்தியாசமான படிப்பினைகளை தென் ஆபிரிக்காவிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். தென் ஆபிரிக்காவில் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள். இலங்கையில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினத்தவர்கள் அரசாங்கததையமைப்பார்கள் என நான் நினைககவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட தரப்பினர்  ஆட்சியதிகாரத்திற்கு வந்தமை முன்னோக்கிய பயணத்திற்கு பேருதவியாக அமைந்தது.தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்கள் முன்னோக்கிச்  செல்லவிரும்பினர். நாடு முன்னோக்கிச் செல்வதை அவர்கள் விரும்பினர்.இதற்காக அவர்கள் மன்னிப்புணர்வை வெளிப்படுத்தினர்.இது போன்ற படிப்பினைகளையே நாம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.கடந்த காலத்தில் மிகக் கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை அங்கீகரித்துக்கொண்டு அவற்றைப் பின்னோக்கி வைத்துவிட்டு அனைவரும் முன்னோக்கிச் செல்லமுடியும்.


தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக டெஸ்மண்ட் டுட்டு இருந்தார். ஏனைய அங்கத்தவர்கள்  யார்? அவர்களின் வெளிநாட்டவர்களும் இடம்பெற்றிருந்தனரா?ஆணைக்குழு எப்படி கட்டமைக்கப்பட்டிருந்தது?


ஆணைக்குழுவில் தென் ஆபிரிக்கர்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்தனர். நான் ஒரு நீதிபதியாக இருந்தால் என்னுடைய நாட்டின் அரசியல்யாப்பிற்கு பிரமாணிக்காக உள்ளதாக நான் சத்தியம் செய்யவேண்டும். இன்னொருவருடைய நாட்டில் நான் நீதிபதியாக இருக்க முடியாது. அந்தநாட்டின் நீதிமன்றமொன்றில் போய் நான் அமரமுடியாது.ஆனால் என்னுடைய நிபுணத்துவ ஆற்றலை அந்த நாட்டில் வடிவமைக்கப்படும் பொறிமுறைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளமுடியும். மண்டேலா அனைத்து அரசியற்கட்சிகளுடனும் கலந்தாலோசித்திருந்தார். அவர்கள் அந்த ஆணைக்குழுவிற்கு இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.அது கலந்தாலோசித்தலினூடாக இணக்கங்காணப்பட்ட அணுகுமுறையாக இருந்தது. ஆனால் எமக்கு தொழில்நுட்ப ரீதியாக சர்வதேச நிபுணத்துவ ஆற்றலுள்ளவர்கள் உதவியிருந்தனர். இங்கு  சர்வதேச வழக்குத் தொடுநர்கள் சர்வதேச நீதிபதிகளைக் அழைப்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை நான்  அறிவேன். அரசாங்கம் இது விடயத்தில் எப்படி நடந்துகொள்ளப்போகின்றது என்பதை அவதானிக்கின்றோம். எம்முடைய தென் ஆபிரிக்க அனுவவத்தைப் பொறுத்தவரையில் நீதிபதி முதற்கொண்டு அனைவரும் தென்ஆபிரிக்கர்களாகவே இருந்தனர்.

 உங்களுடைய தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு காலவரையை நிர்ணயிக்கப்பட்டிருந்ததா?
ஆம் நிச்சயமாக அதற்கென ஒரு காலவரையறை இருந்தது. ஆணைக்குழு,1995ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டு 1998ல்  அறிக்கை வெளியிடப்பட்டது.தெட்டத்தெளிவான காலவரையிருந்தது.




தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற உலகப் பொது அபிப்பிராயம் உள்ள நிலையில் நாடுகள் சில தமது புவிசார் நலன்களுக்காக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்க முற்படுவதான எண்ணப்பாடு தமிழ்மக்களிடத்திலே காணப்படுகின்றது. இவர்களுக்கு நீங்கள் கூறுவிரும்பும் செய்தியென்ன?

சர்வதேச சமூகத்திலுள்ள அனைவருமே பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுதிப்பாடாக இருக்கின்றனர் என்பதை மிக முக்கியமாக கூறிவைக்க விரும்புகின்றேன். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எப்படி உணர்கின்றார்கள் என்று அறிந்துகொள்ளாமல் எந்தவொரு நாடும் இருக்கமாட்டாது என நான் நினைக்கின்றேன். சர்வதேச சமூகத்திலுள்ள அனைவரும் இதனை அறிந்துவைத்துள்ளனர். அனைவருமே பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படுவதைக் காண விரும்புகின்றனர்.இதிலே பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு எந்தவகையான பொறிமுறையினை நாம் ஏற்றுக்கொள்ளப்போகின்றேர்ம் என்பதிலேயே சிக்கலுள்ளது.அதுவே கடினமான காரியமாக அமைந்துள்ளது.அதுவே கடினமான காரியமாக அமைந்துள்ளது.எந்த பொறிமுறைக்கு இணக்கம் காணப்பட்டாலும் அதிலே தென்ஆபிரிக்கா தனது பங்களிப்பை வழங்கியது என்பதை அனைத்து சமூகத்தவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.எத்தகைய பொறிமுறை நடைமுறைப்படுத்தாலும் அது பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளில் அக்கறைசெலுத்துவதாக அவற்றிற்கு தீர்வுகாண்பதாக அமையவேண்டும் என்பதை தென்ஆபிரிக்கா உறுதிப்படுத்த விரும்புகின்றது.
இலங்கையில் பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படவேண்டும். அப்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைத்ததாக உணர்ந்துகொள்ளமுடியும் என தென்ஆபிரிக்கா 2011 கூறியதையே 2017லும் கூறுகின்றது.


Wednesday, November 8, 2017

சர்வதேச வலைக்குள் இலங்கை: பொறுப்புக்கூறலை தட்டிக்கழிக்க முடியாத நிலை



இலங்கை அரசாங்கத்தை தாம் தற்போது ஒரு சர்வதேச வலைக்குள் போட்டிருப்பதன் காரணமாக அவர்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாடு இருப்பதாக உலகத்தமிழர் பேரவைத்தலைவர் அருட்தந்தை எஸ். ஜே. இம்மானுவேல் தெரிவிக்கின்றார். 
நீண்டநாட்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம்மேற்கொண்ட அவர் "சுடர் ஒளி'க்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே இந்தக்கருத்துகளைத் தெரிவித்தார்.
கேள்வி தங்களது இந்த விஜயம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்வதாக நான் அறிகின்றேன். தற்போது நீங்கள் வருகை தந்தமைக்கான உண்மையான நோக்கம் என்ன?
பதில் உண்மையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் வருகை தந்துள்ளேன். இதுவரை ஒரு வருடம் இங்கிலாந்திலும், 20 வருடங்கள் ஜேர்மனியிலும் வசித்திருக்கின்றேன். இறுதியாக சுனாமிக்குப் பின் 2005ஆம் ஆண்டு வருகை தந்திருந்தேன். அதற்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு முன்னும் வந்திருந்தேன்.கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு இப்போது வருகை தந்துள்ளேன். 2009 ஆம் ஆண்டு போர் முடிந்தபின்பு நிலைமை மிகவும் கஷ்டமாக இருந்தது.பழைய அரசின் கீழ் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தோம்.
அதாவது, தமிழர்கள் வாழமுடியாத ஒரு நிலை இருந்தது. தனிநபர்களை அமைப்புகளைத் தடைசெய்திருந்தார்கள். நானும் அந்தப்பட்டியலில் இருந்தேன். நான் வர எத்தனிக்கவும் இல்லை.ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த அரசு மாற்றத்துக்கு உட்பட்டிருந்தவேளை நாங்களும் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு வழங்கினோம். அதன்படி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மார்ச் மாதம் 2015 ஆம் ஆண்டு என்னை அழைத்தார். இரண்டாவது முறை ஜேர்மனிக்கு பேர்லின் நகருக்கு வந்திருந்த வேளையும் அழைத்திருந்தார். அவரைப்போன்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் நான் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்றார்கள். தங்களுக்கு விருப்பம் என்றார்கள்.அப்போது நான் ஊடகங்களுக்கு சொன்னேன், இவ்வாறு அழைப்பு வந்திருக்கிறது உண்மைதான். இப்போது தடைகள் நீக்கப்பட்டிருக்கின்றன.
ரியான நேரம் வரும்போது செல்வேன் என்று. இப்போது அண்மையிலே எங்களுடைய இரண்டு வருடங்களிலே சில சில முயற்சிகளை எங்களுக்காக செய்திருக்கிறார்கள். எல்லாம் நிறைவாக முடிந்தது என்று அல்ல. ஆனால், சில முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் சர்வதேச உறவுகளைச் சரியாகச் செய்தார்கள்.பொருளாதார முன்னேற்றங்களை மேம்படுத்தினார்கள். ஆனால் எங்களுக்கு முக்கியமானது தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவேண்டும். அதாவது, நாங்கள் போரில் பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கின்றோம். எங்களுக்கான தீர்வு வரும்வரை நாங்கள் நாடு திரும்பமாட்டோம் என்று கூறியிருந்தோம்.
இப்போது நடந்துகொண்டிருக்கும் முயற்சி மிகவும் கடினமானது. அதாவது, ஒரு நாட் டின் யாப்பைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் இலகுவான காரியமல்ல. இரண்டு தரப்பினருக்கும் இது கஷ்டத்தைக் கொடுக்கின்றது. அது மாத்திரமின்றி, இரு தரப்பினருக்குமிடையில் புரிந்துணர்வு குறைவு. காலங்காலமாக அவர்கள் கூறிவந்த பொய்கள் குவிந்திருக்கின்றன.
இவைகளை உண்மையாக மாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல.அவர்களுக்கு துணையாக இருந்த பௌத்த மதகுருக்களும் பௌத்த தலைவர்களும் இது தங்களுடைய நாடு என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இப்படித்தான் நான் ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றேன்.அவ்வாறான விடயங்களை களைந்து மாற்றத்தைக் கொண்டுவருதல் என்பது கஷ்டம். எங்களுடைய போராட்டத்திலே நான் பிடித்த வழி என்னவென்றால் உண்மை, நீதி, நேர்மை, பொறுப்புகூறுதல். என்பனவாகும்.
நாங்கள் போரிலே பெருந்தொகை யான மக்களை இழந்தவர்கள் என்றாலும் இலங்கையில் வாழத்துடிக்கின்ற மக்களுக்கு வாழ வழிவகைகளைச் செய்யவேண்டும். என்பதற்காக நாங்கள் ஒரு நல்லிணக்க செயற்பாட்டில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வெளிநாடுகளிலே உலக தமிழர் பேரவையின் தலைவராக பல நாடுகளுக்கும் நான் சென்று கடந்த 7ஆண்டுகளாக கடினமாக வேலை செய்திருக்கின்றேன். அத்தோடு ஜெனிவாவில் 25 ஆண்டுகளைப் பூர்த்திசெய்துவிட்டேன். இப்போது நாங்கள் இலங்கை அரசை ஒரு சர்வதேச வலைக்குள் போட்டிருக்கின்றோம். எங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய நிலை இருக்கின்றது.இது எங்களுடைய சரித்திரத்திலே போர் வரலாற்றிலே ஒரு முக்கியமான கட்டமாக அமைந்திருக்கின்றது. எனக்கும் ஒரு முக்கிய கட்டம் முடிந்தது. அதாவது, சர்வதேசத்தின் உதவியை சம்பாதிப்பதற்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. ஏனெனில், 27 நாடுகள் புலிகளைத் தடைசெய்தன . 20 நாடுகள் ராஜபக்ஷவுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து போரை ஊக்குவித்தன.
இப்போதுதான் சர்வதேச நாடுகள் தமிழர்களை மனிதர்களாக, உரிமையுள்ளவர்களாகப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. அவர்கள் விட்ட பிழை நிறைய இருக்கின்றது. ஏன் ஐக்கிய நாடுகள் சபை கூட நிறைய பிழைகளை விட்டிருக்கின்றது. அதை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம். இப்போது அந்த நாடுகள் எங்களுடைய பிரச்சினைகளை உணர்ந்தவையாக உள்ளன.
சர்வதேச மனித உரிமை ஆணையாளர் ஹசைனை நான் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் உலகத் தமிழர்பேரவை மாநாட்டில் சந்தித்திருந்தேன்.இவ்வாறு நாங்கள் செய்த முயற்சியின் விளைவாக இலங்கை அரசு பொறுப்புக்கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகின்றது.
இதிலிருந்து தப்பித்துக்கொள்வது மிகவும் கடினம். சிங்களவர்களும் பௌத்த பிக்குகளும் காலாகாலமாய் போதித்து வந்த போதனைகளுக்கு இது ஒரு பெரிய பிடியாக இருக் கிறது. தமிழர்களைப் பொறுத்தமட்டில் இலங்கை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அத்தகைய முயற்சிகளை மெதுவான முறையிலேயே எடுத்து வருகின்றது. ஆனால், அதற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏனெனில், தமிழர்களாகிய நாங்கள் சிங்களவர் களின் காலில் விழுவதல்ல. ஆனால், ஒரு யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக எங்களுக்கு வேண்டிய தீர்வான சுயகௌரவத்துடன் கூடிய அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் ஒரு பாகமாகவே இந்த யாப்பு திருத்தம் மேற்கொள்ளப் படுகின்றது.
ஆனால், தமிழர்களைப் பொறுத்தமட்டில் ஒரு நம்பிக்கையில்லாத நிலை காணப்படுகிறது. சிங்களத் தலைமைகள் தமிழர்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள் என்று. ஆனால், ஒருநாளும் அவ்வாறான ஒரு இயல்பை வளர்த்துகொள்ளாதீர்கள். இது முற்றிலும் தவறு. எதிலும் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையில்லாமல் போராட முடியாது. எனவே, நம்பிக்கை உடையவர்களாக எமது முயற்சிகளை இதய சுத்தியுடன் செயற்படுத்துங்கள். சர்வதேசம் எங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.
அவர்கள்தான் எங்களை பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தியிருந்தார்கள். இன்று அவர்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய சக்தியை அமுக்கத்தை நாங்கள் இலங்கை அரசின் மீது திணிக்கவேண்டும். எனவே, எங்களுடைய கையில் இருக்கின்ற மிக முக்கியமான சக்தி சர்வதேசத்தின் கண்காணிப்பாகும். அதை நாங்கள் சரியான முறையில் பாவிக்க வேண்டும். அதேவேளை, இரண்டு பக்கமும் யோசிக்க வேண்டும். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் தேர்தலை வைத்துக்கொண்டு நாடு இரண்டாகப் பிரிக்கப்படப்போகின்றது என அவர்களைக் குழப்புகிறார்கள்.
அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஒரு நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன். அதில் தெளிவானது என்னவென்றால், சமஷ்டி என்ற சொல்லை முதன் முறையாக இலங்கையில் பாவித்தது எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவாம். இது 1927ஆம்ஆண்டு நடந்துள்ளது. அவர் மலையக சிங்களவர்கள் கண்டிய சிங்களவர்கள் என்று பிரிப்பதற்காகத்தான் இதனை அறிமுகப்படுத்தியிருந்தார்.
ஆனால், அப்போது எவரும் இது தொடர்பாக எதையுமே தெரிவிக்கவில்லை. ஆனால், 1949 ஆம் ஆண்டு தமிழிலே செல்வநாயகம் சமஷ்டி ஆட்சி என்று தொடங்கி தமிழரசுக் கட்சியாக ஆரம்பமான பின் எல்லோருக்கும் அவ்வார்த்தை பிடிக்கவில்லை. ஆனால், உண்மையில் சமஷ்டியில் எந்த பிரிதலும் வரப்போவதில்லை.
உண்மையிலேயே சமஷ்டி ஆட்சி அதிகாரப்பகிர்வு என்று பேசிக்கொண்டு போகும்போது 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்திலே சிங்களவர்களுக்குப் புரிந்துவிட்டது இவர்கள் அதாவது, தமிழர்கள் நாட்டைப் பிரிக்கத்தான் போகிறார்கள் என்று ஊறிவிட்டது. சமஷ்டி என்ற வார்த்தைக்கு இதுவரையில் சிங்களத்தில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் சமஷ்டி என்று கூறும்போது அதன் நன்மை, நோக்கம் என்னவென்று ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். ஆனால், சிங்களவர்கள் அவ்வாறு யோசிப்பது கூட இல்லை. அதனால் நான் அந்த பல்கலைக்கழக விழாவுக்கு வருகை தந்திருந்த சிங்கள மாணவர்களுக்கு சொன்னேன், தயவு செய்து இனியாவது சமஷ்டி என்றால் என்னவென்று உங்களுடைய மக்களுக்குத் தெளிவுப்படுத்துங்கள் என்று.
மனிதர்களாக சமத்துவத்துடன் அனைவருடனும் வாழவேண்டிய ஓர் அமைப்புத்தான் சமஷ்டி.அது உலகம் முழுவதும் இருக்கிறது.அதைத் தொடக்கிவைத்தவரும் பண்டாரநாயக்கதான். ஆகையினால் நல்ல கருத்துகளை எடுங்கள். எனவே பிழை யாக கருத்துகளை பரப்புவதை நிறுத்தவேண்டும்.இவ்வாறான ஒரு நேரத்தில்தான் புத்திஜீவிகள் சரியான ஒரு விளக்கத்தைக் கொடுத்து அந்தநிலையில் இருக்கின்ற மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறான ஒரு அடிப்படையில்தான் நான், இறைவன், மதங்கள் எங்களுடைய நாட்டின் பிரச்சினைகள் என்ற தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஒரு பேச்சை நடத்தியிருந்தேன். மதங்களைப் பற்றிப் பேச அதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேச எனக்கு சக்தியிருக்கிறது.

கேள்வி: அருட்தந்தை அவர்களே நீங்கள் இப்படிக் கூறுகின்றபோதிலும் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்திருந்த கருத்தை நான் இங்கே முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.இலங்கையைப் பொறுத்தவரையிலே பொறுப்புக் கூறல் விடயத்திலே எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் நீங்கள் இப்போது கூறியிருக்கும் விடயம் என்னவென்றால் அரசை முழுமையாக நம்பாமல் இருக்கமுடியாது. ஆனால் இப்போது ஜெனிவா பிரேரணை நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் கால அவகாசம் கொடுத்தும் பல மாதங்கள் உருண்டோடி விட்ட நிலையில் தென்பகுதியில் இடம்பெறும் அரசியல் சவால்களை வைத்துக்கொண்டும் அரசு எந்தவகையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத நிலையில் எப்படி இந்த அரசை நம்ப முடியும்? எமது கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் யாவும் அநீதிகளாக இருக்கும்போது நாம் எப்படி நம்பிக்கை கொள்ள முடியும்?.
பதில்: உண்மைதான்; கஷ்டம்தான். எங்களுடைய நீண்டகால அனுபவம் தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றது. இவர்களை நம்பினால் ஏமாற்றம்தான் மிஞ்சும். எத்தனையோ ஒப்பந்தங்களைச் செய்து கிழித்தெறிந்திருக்கிறார்கள். அது உண்மை. நான் மறுக்கவும் இல்லை;மறைக்கவும் இல்லை.இவ்வாறான தகவல்களை நான் என்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கின்றேன். அநீதி எங்கள் வாழ்வில் நீண்டகாலமாக தொடர்கின்றது.எங்களுடைய வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை. அதன் அடிப்படையில் எங்களுடைய தமிழ் மக்கள் வேறு எவரையும் நம்பமுடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தீர்வு கிடைப்பதற்கு ஓரளவேனும் நம்பிக்கையிருந்தால்தான் முன்னோக்கிச் செல்லலாம். விரக்தியில் ஆரம்பித்தோம் என்றால் ஒன்றுமே நடைபெறாது.அவர்கள் எமக்கு நிறைய விடயங்களை செய்துகொடுக்கவேண்டும்.
வெளிநாட்டவர்கள் அவதானிப்பது போல அவர்கள் ஆமை வேகத் திலேயே தான் செல்கிறார்கள். முக்கியமான விடயங்களைப் பின்தள்ளிக் கொண்டு போகிறார்கள். காரணம் அவர்கள் சிங்கள மக்களின் கருத்துகளைக் கேட்டுக் கொண்டு அதன்படி நடந்துகொள் கிறார்கள். கஷ்டங்கள் நிறைய இருக்கின்றன. அதனை நான் நேரடியாக அரசதலைவர் சிறிசேன விடம் தெரியப்படுத்தியிருக்கின்றேன். நான் தமிழ் மக்களுக்காக தான் பேசிக்கொண்டிருக்கின்றேன். ஆனால், நீங்கள் சிங்கள மக்களின் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டுதான் எல்லாம் செய்கிறீர்கள்.எனவே, இது கடினமான ஒரு விடயம்தான்.அவர்களும் இன்றுவரை எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
வெளிநாட்டினர் அதை திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தவேண்டும். தொடர்ந்து இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அது நீடிக்கவேண்டும் என்றால் அவர்கள் நிச்சயம் பொறுப்புக்கூறவேண்டும். எவ்வாறு பொறுப்புக்கூற போகிறார்கள் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. பார்ப்போம் எவ்வாறு கூறுகிறார்கள் என்று.
தமிழ் மக்களுக்கு நான் கூறுவது ஒன்றுதான். ஆமாம் நாங்கள் உண்மையில் ஏமாற்றப்பட்டமை உண்மைதான். இம்முறை எங்களுக்கு தனித்துவமான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனைத் தவறவிட்டால் அது எங்களுக்கு இனி கிடைக்காது. நாங்கள் அதிகமாக கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால், அடுத்தது என்ன? என்பதுதான். எனவே நாம் இந்தச் சந்தர்ப்பத்துக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை நிச்சயமாக கட்டாயமாக கொடுக்கவேண்டும். சிலநேரம் தோல்வியில் கூட முடியலாம். ஆனால், நாங்கள் விலகிக்கொண்டால் அதற்குப் பிறகு சர்வதேசம் எங்களுக்கு ஒன்றுமே செய்யாது. அதற்குப் பிறகு எமக்காக பேச எவரும் இல்லாமல் போவார்கள்.
எனவேதான் நாம் சர்வதேசத்துடன் சேர்ந்து கொடுக்கக் கூடிய ஒத்துழைப்பை மெல்ல மெல்லக் கொடுக்கின்றோம். அதனையிட்டு விமர்சனம் செய்யும்போது குழப்பிக் கொள்ளக்கூடாது. தேவையில்லாத விமர்சனங்களைச் செய்துகொண்டு அதனைத் தூக்கியெறிந்துவிடக்கூடாது.அதனால் யாதார்த்தமாக நம்பிக்கை இழக்காது நாங்கள் நின்று பேசவேண்டும். உலகமும் அதற்கு ஒரு சாட்சியாக இருக்கின்றது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி: அருட்தந்தை அவர்களே, நீங்கள் வழங்குவது விமர்சனத்துடன் கூடிய தமிழர்களுக்கான ஆதரவு. ஆனால், இந்த அரசானது சமிக்ஞைகளாக, அடையாளங்களாக ஒரு சில விடயங்களைச் செய்திருக்கின்றது. ஆனால், காத்திரமான முக்கியமான விடயங்களிலே பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், அரசியல் தீர்வு போன்ற விடயங்கஎளிலே அரசியல் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. உதாரணமாக, இந்த அரசயாப்பிலே சமஷ்டி இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்ற நிலையிலே அது தொடர்பான கருத்துகள் வெளிவரும் நிலையிலே தென்பகுதியில் இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படும்போது ஜனாதிபதி, பிரதமர் அனைவருமே கூறுகிறார்கள். இது ஒற்றையாட்சி என்று.இவ்வாறு ஒரு சிறிய எதிர்ப்பு வந்தால் கூட அப்படியே சரணாகதி அடைகின்ற நிலையில் எதிர்ப்பைப் பதிவுசெய்கிறார்கள்.இப்படியிருக்கும் நிலையிலேயே கடந்த காலத்தில் இல்லாத உறுதிப்பாடு இன்றைய நிலையிலே இருப்பதாக நீங்கள் உணர் கிறீர்களா?
பதில்: கடந்த காலத்தில் இல்லாத அவ்வாறான உறுதியான நிலைப்பாடு இப்போது இருப்பதாக நான் கூறமாட்டேன். இல்லை வரவும் முடியாது.முயற்சி எடுக்கின்றார்கள் என்றுதான் சொன்னேன். எங்களுடைய பக்கத்தை நாங்கள் சரியாக எடுத்துச்செல்ல வேண்டும். நாங்கள்தான் குழப்பிவிட்டோம் என்ற பெயர் வந்துவிடக்கூடாது என்று தான் நான் சொல்கின்றேன். ஐக்கிய நாடுகள் அவர்களுக்கு பிறப்பித்திருக்கும் பிடி மிகவும் வலிமையானது.
அதிலிருந்து வெளிவருவதற்காக அவர்கள் பல்வேறான வியாக்கியானங்களைச் செய்கிறார்கள்.அதைப் பார்த்து தமிழர்கள் ஏமாந்துவிடக் கூடாது. எம் பக்கத்தில் நாம் ஒற்றுமையாக நிற்போம். நீங்கள் தெரிவுசெய்த தலைவர்கள் மேல் நம்பிக்கை வையுங்கள் என்றுதான் நான் சொல்வேன். அதிலும் குறிப்பாக, புலம்பெயர்ந்த மக்கள் இவ்வாறான விரக்தி நிலைக்குச் சென்றுவிடக் கூடாது.
புலம்பெயர்ந்தவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இந்நாட்டில் இருப்பவர்கள்தான் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். என்னுடைய நம்பிக்கை என்னவென்றால் எப்படியாவது போராடியேனும் ஒரு தீர்வைப் பெற்றுத்தரவேண்டும் என்பது தான்.எனவே தரமான விமர்சனங்களை முன்வையுங்கள். தேவையற்ற விவாதங்கள், விமர்சனங்கள் தேவையற்றவை. எல்லோருடைய ஒத்துழைப்பும் தேவை. எனவே, அதற்கேற்ற வகையில் ஒரு சரியான தீர்வை நோக்கிச் செல்வோம்.
கேள்வி: அருட்தந்தை அவர்களே, இந்த புலம்பெயர் தமிழர்கள் அரசின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கு செய்த பங்களிப்பை எப்படி கூறுவதென்றால் இந்த யுத்தத்திலே மிலேச்சைத்தனமான முறையிலே புலிகளைத் தோற்கடித்த அரசு, தமிழ் மக்களையே ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்துவிட்டது என்று அந்த ஒரு நினைப்பிலே மிதந்துகொண்டிருந்தபோது தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து, இந்த அரசுக்கு மேலே சர்வதேசத்தின் பார்வையை திருப்புவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் புலம்பெயர்ந்தவர்கள். அப்படி புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளில் உங்களுடைய அமைப்பு போன்றவற்றின் தடை நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், சில அமைப்புகளின் தடை நீக்கப்படவில்லை. இப்படியான ஒரு சூழ்நிலையிலே இந்த அரசு எதையாவது செய்தாவது சர்வதேச அழுத்தத்தில் இருந்து வெளிவர முயன்றுகொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இங்கே வருகை தந்தது இந்த அரசுக்கு ஒரு முட்டுக்கட்டை கொடுப்பதுபோல அல்லது உதவிக்கரம் நீட்டுவதுபோல அமைந்துவிடாதா?
பதில்: இல்லை. ஒருபோதும் இல்லை. எங்களை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கியபோது நான் சொன்னது மற்றவர்களின் பெயரும் உடனடியாக நீக்கப்படவேண்டும். இதைப் பற்றி அண்மையிலும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். நான் இங்கு வந்துபோவது புலம்பெயர் மக்களுக்கும் ஒரு ஆறுதலைக் கொடுக்கட்டும். நான் 36 வருடங்களாக மலையகத்தின் நுவரெலியாவின் தோட்டபுற மக்களின் கல்விக்கு ஒரு அமைப்பை இயக்கி வருகிறேன். "சென் பீட்டர்ஸ் வுமன்' என்ற அமைப்பு 36 ஆண்டுகளாக பெண்களுக்காக செயற்பட்டு வருகின்றது. அதைத்தவிர, வவுனியாவிலும் வாழ் பெண்களுக்காகவும் 6 வருடங்களாக ஓர் அமைப்பை நடத்தி வருகின்றேன்.என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துகொண்டுதான் இருக்கின்றேன். புலம்பெயர்ந்த மக்களும் செய்கிறார்கள். இன்னும் அதிகமாக இத்தகைய உதவிகளைச் செய்யவேண்டும்.
கேள்வி: அருட்தந்தை அவர்களே நீங்கள் குருத்துவ பணியில் பல ஆண்டுகள் இருந்து உங்களது 80 வயதைத் தாண்டிவிட்டீர்கள்.இப்போது இந்த புலம்பெயர் தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?எமது போராட்டம் தொடர்பிலே நீங்கள் உங்கள் அடிமனதில் இருந்து சொல்ல விளைகின்ற செய்தி என்ன?
பதில்: புலம்பெயர் மக்களின் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் நான் நன்றாக அவதானித்து வந்துள்ளேன்.எனக்கு ஜேர்மனியுடன் 50ஆண்டுகள் தொடர்பு. அங்கு பல பல்கலைக்கழகங்களில் படிப்பித்திருக்கின்றேன்.ஆகையினால் 1983ஆம் ஆண்டுக்குப் பின் புலம்பெயர்ந்த மக்கள் எல்லோரையும் நான் நன்கு அறிவேன். இன்றைய சந்ததிகளைப் பொறுத்தமட்டில் இரண்டாம் மூன்றாம் சந்ததியும் வந்துவிட்டது.
இப்போது எல்லோரும் வசதி வாய்ப்புடன் இருக்கிறார்கள். அவர்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுடைய பிள்ளைகளை சரி நம் மக்களுக்கு சேவை செய்ய அனுப்பிவைக்க முடியும். அண்மையில் எமது குளோபல் தமிழ் போரம் அமைப்பின் ஊடாக 18 மருத்துவர்களை லண்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வரவழைத்து எம்முடைய தோழமையை காட்டுவதற்காக தென்பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைசெய்ய வைத்தோம். அவர்கள் இரண்டு வாரம் இங்கு சேவையாற்றியிருந்தார்கள்.
ஊடகங்களிலும் அது வெளிவந்திருந்தது.இது ஓர் அடையாளமாகும். ஆகவே உறவை வளர்க்கவேண்டும் என்பது ஒன்று. இரண்டாவது மக்களைக் குழப்பும் செய்திகளைப் பரப்பக்கூடாது. தவறான தகவல்களைப் பரப்புவதன் காரணமாக இருபுறமும் குழப்பம்தான் ஏற்படும்.இந்த மண்ணைக் காக்க நம்மக்களைக் காக்க ஒரு தீர்வுக்காகப் பாடுபடுவோம்.போரிலே பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்திருக்கிறோம். இப்போது ஒரு தீர்வுக்காக எப்படியாவது போராடுவோம்.
கேள்வி: விடுதலைப் புலிகளின் கொள்கைகள் சமகாலத்துக்கு எந்த வகையில் பொருத்தமாக அமைந்திருக்கின்றன?புலம்பெயர் மக்கள் இன்னமும் அதிலே பற்றுறுதியோடு இருப்பது எமது எதிர்காலத்துக்கு நல்லதாக அமையுமா?.
பதில்: போர் முடிந்த பின்பு வந்தவர்கள் ஒரு மாதிரியாக வேறு வகையான வாழ்வைக் கண்டுவிட்டார்கள்.வெட்கக்கேடான ஒரு விடயத்தை இப்போது கூறுகின்றேன்.போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மக்களுக்காக உயிரைத் தியாகம்செய்த இளைஞர்களைப் பார்த்து தமிழ்மக்கள் கைகளைத் தட்டினார்கள். ஆனால் இன்றைக்கு அதே தமிழினம் போர் முடிந்த பின்பு அவர்களுக்கு வாழ்வளிக்காமல் தள்ளி வைக்கின்றது. வாழ வழியில்லாமல் இருப்பவர்களுக்கு நாங்கள் ஏதாவது செய்யவேண்டும். எவராக இருந்தாலும் சரி நமக்காக வாழ்ந்தவர்களுக்காக நாம் எதையாவது செய்யவேண்டியது அவசியமாகும்.
கேள்வி: அருட்தந்தை அவர்களே தற்போதுள்ள தமிழ் தலைமை இருக்குமானால் தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்குறைந்த உரிமைகள்கூட கிடைக்காது என்ற பொருளில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.இப்போதிருக்கின்ற தமிழ்த் தலைமை மீது உங்களுக்கு எந்தளவு நம்பிக்கை இருக்கின்றது?அவர்கள் ஓர் உண்மையான இதய சுத்தியுடன் செயற்படுகிறார்கள் என்று நினைக்கின்றீர்களா?
பதில்: ஜனநாயகத்தில் அவ்வாறான குறைகள் இருக்கத்தான் செய்யும்.நான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு என்னை விற்றவன் அல்லன்; ஒத்துழைப்பு கொடுக்கின்றேன்; அவர்களுடைய முயற்சிகளுக்கு நான் முழு ஒத்துழைப்பும் வழங்குவேன்.
கேள்வி: நீங்கள் ஜனநாயகத்தைப் பற்றிக் குறிப்பிட்டதில் அதில் சாதக,பாதக விடயங்கள் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதுபோன்று நமது தமிழ் தரப்பு தற்போதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது ஒரு சாராருக்கு அதிருப்தி இருக்கின்றது. இந்த நிலைமையிலே தமிழருக்கு ஒரு மாற்றுத் தலைமை தேவை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பாக உங்களுடைய பார்வை எப்படி இருக்கின்றது?
பதில்: உள்நாட்டு அரசியலைப் பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை.உள்நாட்டு அரசியலில் இறங்கவும் மாட்டேன்.என்னுடைய பார்வையில் இப்போது இருக்கின்ற தலைமைத்துவம் இவர்கள்தான். மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். அந்த மக்க ளால் தெரிவுசெய்யப்படாதவர்களும் தோல்வியுற்றவர்களுமே மாற்றுத் தலைமை வேண்டுமென கதைக்கின்றார்கள்.அதற்கு என்ன செய்ய முடியும்? மற்றொரு வகையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்குத் தேவையானவற்றை செய்வதில்லை. அது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். நான் யாழ்ப்பாணத்தில் இருந்துதான் வருகின்றேன். ஆனால் யாழ்ப்பாணத்தின் முன்னேற்றம் அவ்வளவு தூரம் திருப்தி அளிப்பதாய் இல்லை. நான் மற்றவர்களைக் குறைகூற விரும்பவில்லை. இப்போதிருக்கின்ற தலைமைத்துவம் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றது என்பது உண்மை.

கேள்வி: அருட்தந்தை அவர்களே..... நீங்கள் ஒரு மாத காலப்பகுதியை வடக்கிலே செலவிட்டிருக்கின்றீர்கள். அங்கு காணிப் பிரச்சினை, காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் தொடர்பாகப் போராடுவதைப் பார்த்திருப்பீர்கள்.இவற்றைப் பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றியவை என்ன?
பதில்: நான் உள்நாட்டுக்கு வந்து மட்டுமல்ல, வெளிநாட்டில் இருந்தபடியும் அவதானித்துக்கொண்டிருந்தேன்.மிகவும் வருத்தப்படக்கூடிய விடயம் அவர்களுடைய காணி கொடுக்கப்படாதது மற்றும் காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை வழங்காமை என்பனவாகும். இது பெரிதும் மனவருத்தத்திற்குரியது.
ஆனால், இந்தக் குறுகிய காலத்துக்குள் நான் யாரையும் சந்திக்க செல்லவில்லை. ஆனால் அவர்கள் கேட்பதற்கு ஆவனசெய்ய வேண்டும்.போராட்டங்கள் தேவை. ஆனால் சிலர் தங்களுடைய நோக்கத்துக்காக போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டக்கூடாது. அது மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் இப்போது கலாசார சீரழிவுகளும் பரவி வருவதை அவதானிக்க முடிகின்றது.
தொடக்கத்தில் நாங்கள் இராணுவத்தைத்தான் குறை கூறியிருந்தோம். ஆனால், இன்று ஏதேதோ ஒழுக்கக்கேடுகள் பதிவாகின்றன.இவற்றை ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியமானது. போர் நடைபெற்ற காலத்திலே ஒரு ஆள்தான் பிரபாகரன். ஆனால், போர் முடிந்த பிறகு எல்லோரும் பிரபாகரன்களாகி விட்டார்கள். இப்போது இருக்கின்ற அமைப்புகள் பந்தயம் ஒடுவதுபோல் ஓடாமல் கால்பந்தாட்டம் ஒடுவது போல ஓடவேண்டும் என்றார்.
எங்களுடன் இணைந்துகொண்டு இவ்வாறான தகவல்களை வழங்கிய அருட்தந்தை அவர்களுக்கு எமது நன்றிகள்.
நேர்காணல்-அருண் ஆரோக்கியநாதர்

Wednesday, August 23, 2017

இம்முறை அரசியல்யாப்பை உருவாக்கத்தவறின் அந்தோகதி! -கலாநிதி ஜயம்பதி கவலை



அரசியல்யாப்பை உருவாக்கம் பணிகளை பூர்த்திசெய்து புதிய அரசியல்யாப்பை இந்த அரசாங்கம் முன்வைக்கத்தவறும் பட்டத்தில் எதிர்காலத்தில் புதிய அரசியல்யாப்பை உருவாக்குவது என்பது மிகவும் கடினமானதாக அமையும் என அரசியல்யாப்பு வழிநடத்தும் குழுவின் தலைவரும் அரசியல்யாப்பு நிபுணருமான கலாநிதி. ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவிக்கின்றார். வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தின் அங்கத்தவர்களுடன் இன்று காலை நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அரசியல்யாப்பை இந்த நாடாளுமன்றம் உருவாக்கத்தவறும் பட்சத்தில் அதுமிகவும் கடினமானதாக அமையும். 23. 28 நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும் என்பது தொடர்பில் பெரும்பாலான மக்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தனர் . அவர்களின் எதிர்பார்ப்பு மதிக்கப்படாவிடின் மக்கள் இந்த அரச கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழப்பார்கள்.  அதிகாரப்பகிர்வு விடயத்தைப் பார்த்தீர்களாயின் தற்பேதைய நிலையில் தமிழர் தரப்பானது மிதவாத மற்றும் நியாயமான நிலைப்பாடுடையதாகவும்  காணப்படுகின்றது. இந்த விடயத்தில் ஒரு உடன்பாட்டிற்கு வரத்தவறும் இடத்து இது அவர்களின் மிதவாத ஸ்தானத்தை பலவீனப்படுத்துவதாக அமையும். வடக்கிலும் தெற்கிலும் கடும்போக்காளர்களின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதாக அமையும். தமிழ் மக்கள் ஆயுத்த்தை மீண்டும் கையிலெடுப்பார்கள் என நான் நினைக்கவில்லை. அவர்கள் பெரும் பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அரசியல்யாப்பு விடயத்தில் உடன்பாட்டை எட்டத்தவறும் பட்சத்தில் அது கடும்போக்காளர்களுக்கே துணையாக அமையும். வடக்கில் தமிழர்“ விடுதலைக்கூட்டணி ஒதுக்கப்பட்டது போன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒதுக்கப்படும்

Wednesday, January 18, 2017

சர்வதேச நியமங்களின் படி மாற்று 'பயங்கரவாத' சட்டம் வேண்டும்; ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து




தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள சட்டமானது சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டுமென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியமான கரிசனையாக அமைந்துள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங்-லை-மார்க் தெரிவிக்கின்றார்.

2010ம்ஆண்டில் இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நிறுத்தப்பட்டபோதும் இவ்விடயமே முக்கியமாக ஆராயப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.


இலங்கைக்கு மீண்டுமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு பரிந்துரைதுள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தீர்மானம் தொடர்பில் இணங்குவதா இல்லையா என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றமும் ஐரோப்பிய பேரவை அமைச்சர்களும் தீர்மானித்த பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் எனக்குறிப்பிட்ட அவர் எதிர்வரும் மார்ச் 12ம்திகதி அன்றேல் மே 12திகதி இதுதொடர்பிலான இறுதிமுடிவு தெரிந்துவிடும் எனவும் அவர் விளக்கமளித்தார். 


இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்குதற்கு ஆதரவாக ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில் இலங்கையிலுள்ள ஊடகமொன்றிற்கு வழங்கிய முதலாவது செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 






இலங்கையின்  பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக ஏற்றுமதித்துறைக்கு மிகவும் முக்கியத்துவமானதொன்றாக காணப்படுகின்ற ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு சாதகமான முறையில் ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரைசெய்துள்ளது. இந்தத்தருணத்தில் இலங்கைக்கு ஆதரவாக ஏன் ஆணைக்ழுவானது பரிந்துரை செய்தது எதற்காக? 


இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆதரவாக பரிந்துரை செய்துள்ளது, இது நடைமுறையின் முடிவிடமல்ல. புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பல்வேறு விடயங்களில் நடைமுறைக்கிட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம் நல்லாட்சி மற்றும் பேண்தகு அபிவிருத்தி விடயத்தில் காணப்பட்ட முன்னேற்றங்களுடன் இந்த ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான தீர்மானம் தொடர்புபடுத்தி நோக்கப்பட்டது. தற்போதைய தறுவாயில் இலங்கைக்கு மீண்டுமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்கமுடியும் என பரிந்துரைக்க ஆணைக்குழு தீர்மானித்தமைக்கான காரணங்களாகும்.

கடந்த வருடம் முதல் உண்மையில் அதற்கு முந்திய வருடம் முதற்கொண்டு இலங்கை மறுசீரமைப்பு பாதையில், நல்லாட்சியின் பாதையில், நல்லிணக்கத்தின் வழிமுறையிலும் மனித உரிமைகள் மட்டுமன்றி பேண்தகு அபிவிருத்தி மற்றும் தொழிலாளர் தராதரம் தொடர்பான பல சர்வதேச சாசனங்களை அங்கீகரித்து அவற்றை நடைமுறைக்கு இடுவதற்கு எடுத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் அவதானமான ஐரோப்பிய ஆணைக்குழுவின் மதிப்பீட்டுடன் தொடர்புடையதாகவே இலங்கைக்கு மீளவும் ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கவேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது




மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளமைக்கும் உண்மையிலேயே அது நடைமுறைச்சாத்தியமாவதற்கும் இடையிலுள்ள நடைமுறைக் காலப்பகுதியாது?

 நாம் தற்போது முதலாவது கட்டத்தில் தான் இருக்கின்றோம். ஆனால் இது முக்கியமான கட்டம் ஏனெனில் இந்த சாதகமான பரிந்துரை இல்லாவிட்டால் அடுத்த கட்டத்தை நோக்கி நகரமுடியாது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுடன் இணங்கிச் செல்வதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கும் ஐரோப்பிய பேரவை அமைச்சர்களும்( EU Council of ministers ) இன்னமும் இரண்டு மாதங்கள் உள்ளன. இந்தக்காலப்பகுதியில் அவர்களுக்கு இன்னமும் சந்தேகம் இருக்குமிடத்து அவர்கள் மேலும் இரண்டு மாதங்கள் கால அவகாச நீடிப்பைக் கோர முடியும். அந்தவகையில் இந்த நடைமுறையின் ( இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்குவதா இல்லையா) முடிவானது மார்ச் மாதம் 12ம்திகதி இடம்பெறலாம். இல்லாவிடின் மேலும் இருமாதம் கால அவகாலம் கோருமிடத்து மே மாதம் 12ம்திகதி இந்த நடைமுறை முடிவிற்கு கொண்டுவரப்படலாம்.

இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்தமை தொடர்பான அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் மனித உரிமைகள் விடயம் உட்பட முக்கிய விடயங்கள் சிலவற்றின் மீது கரிசனைகள் காணப்படுவதாகவும் அரசாங்கம் இன்னமும் செய்யவேண்டியுள்ளது எனச்சுட்டிக்காட்டியுள்ளீர்கள்? அரசாங்கம் உங்கள் கரிசனைகள் விடயத்தில் நடவடிக்கை எடுக்கும் என்பது தொடர்பில் எவ்வளவு நம்பிக்கையுடையவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள்?


முதலில் நீங்கள் இந்த நடைமுறை ( இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கும் நடைமுறை) தொடர்பாக நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். நடைமுறையின் படி இலங்கைக்கு மீண்டுமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான காலம் கனிந்துள்ளது என ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவானது பரிந்துரைத்துள்ளது. இருந்தபோதிலும் இது ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தினாலும்  ஐரோப்பிய ஒன்றிய பேரவையின் அமைச்சர்களாலும் மீள் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படவேண்டியுள்ளது. இது உண்மையில் அர்த்தப்படுத்துவது யாதென்றால் அனைத்து கரிசனைகள் விடயத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டாகிவிட்டது என்பதாகிவிடாது. ஆனால் இந்த விடயங்களில் போதுமான முன்னேற்றங்கள் எய்தப்பட்டுள்ளன. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்கிய பின்னரும் கூட இந்த முன்னேற்றங்கள் கண்காணிக்கப்படவேண்டியவையாக அமைந்துள்ளன. அந்தவகையில் இது தற்போதும் முன்செல்கின்ற நடைமுறையாகும். இது அடுத்துவரும் ஆண்டுகள் பலவற்றிலும் தொடர்ந்திருக்கும். வரிச்சலுகைகள் நடைமுறையில் இருக்கும் வரையில் கண்காணிப்பு இருந்துகொண்டிருக்கும். அந்தவகையில் அரசாங்கம் ( வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்புக்கள் தொடர்பில்) நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக காலமும் அழுத்தமும் கையாளப்படுதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த அரசாங்கம் எம்மிடம் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்புக்களை நிறைவேற்றும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். 


ஆனால் அண்மைக்காலமாக அரசாங்கம் வெளிப்படுத்திவருகின்ற கருத்துக்களானது அளிக்கப்பட்ட உறுதிமொழிகள், வெளிக்காண்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புக்களில் இருந்து பின்வாங்குவதாக அன்றேல் நேர்மறையாக காணப்படுகின்றதே. குறிப்பாக பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கத்திலுள்ளவர்கள் முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனவரியில் வரைவு யாப்பு சமர்பிக்கப்படு;ம் என அரசாங்கம் உறுதியளித்திருந்தபோதும் தற்போது அதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமைகளை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

இலங்கைக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வெளிப்படுத்தப்படுகின்ற எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக நாம் அரசாங்கத்திடம் அதிகமாக கலந்துரையாடல்களை நடத்திக்கொண்டிருக்கின்றோம். நீங்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக குறிப்பிட்டீர்கள். உண்மைதான் நாங்கள் முன்னேற்றமானது காலம் கடந்தன்றி விரைவாகவே வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பைக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இது ஒரு சிக்கலான நடைமுறை என்பதையும் நாம் புரிந்துகொள்கின்றோம். இங்கிருப்பது ஒரு கூட்டணி அரசாங்கம் அவர்கள் மக்கள் முன்னர் பகிரங்கமாக செல்லும் முன்னர் சில சூழ்நிலைகளை அவர்கள் சந்தித்து சரிசெய்யவேண்டிய நிலை காணப்படுகின்றது. இன்னமும் செய்யப்படவேண்டிய விடயங்களில் பார்க்க தற்போதைய நிலையில் அதிகமான முன்னேற்றங்கள் எமக்கு தென்படுகின்ற எதனைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்த மதிப்பீட்டை ஆணைக்குழுவான 27 சர்வதேச சாசனங்களின் (International convetions) அடிப்படையிலேயே எடுத்துள்ளது. இந்தக்கட்டத்தில் இலங்கைவிடயத்தில் பாதகமாக அன்றி நிலைமைகள் நன்றாக இருக்கின்றன என்ற காரணத்தினாலேயே ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது. 



கடந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். அதன்போது இலங்கையில் மனித உரிமைகள் நல்லாட்சி சட்டத்தின் ஆட்சி போன்ற விடயங்களில் பல்வேறு கரிசனைகளை வெளியிட்டிருந்தனர். அந்த விஜயம் இடம்பெற்று மூன்று மாதங்களில் எப்படி இப்படியொரு தீர்மானத்தை ஐரோப்பிய ஆணைக்குழு எடுத்தது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?


நான் சரியான முறையில் நினைவுகூருமிடத்து கடந்த ஒக்டோபரில் விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவும் அந்தவகையிலேயே முன்செல்வதைக்காண விரும்புகின்றது என நான் நினைக்கின்றேன். அரசாங்கம் சரியான தடத்தில் பயணிக்கின்றதா என பல்வேறு விடயங்களில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆணைக்குழுவானது மதிப்பீட்டை மேற்கொண்டிருந்தது. அனைத்துமே எவ்வித குறைகளுமற்று நேர்த்தியாக உள்ளதென எவருமே கூறவில்லை. இந்த நடைமுறையின் நோக்கமும் அதுவல்ல. முக்கியமான விடயங்களில் குறிப்பிடத்தக்க தோல்விகள் இல்லையென காண்பதே நோக்கமாகும். மதிப்பீடுகளின் அடிப்படையில் முக்கியமான விடயங்களில் எவ்வித தோல்விகளும் இல்லை என்பதை ஆணைக்குழுவானது தீர்மானித்தது. அதேவேளை மேலும் முன்னேற்றம் காணப்படவேண்டும் எனவும் அது பரிந்துரைத்துள்ளது. தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றம் வேறு கோணத்தில் இதனை நோக்கலாம். மேலும் பலவிடயங்கள் செய்யப்படவேண்டும் என கருதலாம். அடிப்படையில் நோக்குகையில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு போதுமான முன்னேற்றத்தை இலங்கை காண்பித்துள்ளது என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும். ஜிஎஸ்பி பிளஸ் மீண்டும் வழங்கப்படுமிடத்து அதனை கண்காணிப்பதற்கு மிகவும் கடுமையான கண்காண்காணிப்பு பொறிமுறையானது நடைமுறைக்கிடப்படும் என்பதை நான் கூறிவைக்க விரும்புகின்றேன். முன்னேற்றம் தொடர்;ச்சியாக ஈட்டப்படுகின்றதா இல்லையா என்பதை உறுதிசெய்வதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு இடம்பெறும். நாடாளுமன்ற தூதுக்குழுவினர் வந்தபோது பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள சட்டம் தொடர்பாக அவர்கள் கடுமையான கரிசனைகளைக் கொண்டிருந்தனர். அத்தோடு குற்றவியல் ஒழுக்கக் கோவை (உசiஅiயெட உழனந ழக pசழஉநனரசந) தொடர்பிலுமம் கரிசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அப்போது வெள்ளைக்காகிதமே இருந்தது. அரசாங்கத்திடமிருந்து எவ்வகையான உறுதிமொழிகளும் அர்ப்பணிப்புக்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அப்போது பாரதூரமான கரிசனை இ;வ்விடயத்தில் காணப்பட்டது. இதன்காரணமாகவே அந்தநேரத்தில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் சற்றே காரமானதாக விமர்சனத்திற்குரியதாக இருந்தது. அதன்பின்னர் பிரதமர் பிரசல்ஸிற்கு வந்தவேளையில் தெளிவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பயங்கர வாத தடைச்சட்ட விடயத்தில் எதிர்காலத்தில் வரையப்படும் சட்டமானது சர்வதேச மனித உரிமை நியதிகளுக்கு அமைவாக காணப்படும் என உறுதிவழங்கியிருந்தார். 




இது இந்த நடைமுறையின் முடிவல்ல என்று நான் ஏற்கனவே உங்களிடம் கூறினேன். இது ஒரு படிக்கட்டு மாத்திரமே. இந்த ஒரு படி நகர்வானது ஐரோப்பிய ஆணைக்குழுவின் மிகவும் அவதானமான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இடம்பெற்றுள்ளது. நீங்கள் ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினரின் விஜயத்தை குறிப்பிடுகின்றீர்கள். ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுடன் இணங்கிச் செல்வதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியது அவர்களுக்குரிய பொறுப்பாகும். ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுடன் இணங்காதிருக்க அவர்கள் முடிவெடுத்தால் அது பிரச்சனையாகும். இருந்தபோதும் ஐரோப்பிய பாராளுமன்றமும் கூட நடைமுறையில் நம்பிக்கை வெளிப்படுத்தும் என நான் நம்புகின்றேன். 


கடந்த நவம்பர் மாதத்தில் யஸ்மின் சூக்காவின் உண்மைக்கும் நீதிக்குமான நிகழ்ச்சித்திட்டத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இன்னமும் சித்திரவதையும் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக ஆணித்தரமானமுறையிலே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.  இந்த நிலையிலே ஐரோப்பிய ஆணைக்குழுவின் தீர்மானமானது குழப்பகரமானதாக அமைந்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அவதானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கைகழுவிவிடுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக உடனடியாக சட்டமொன்று கொண்டுவரப்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து நான் முன்னரும் குறிப்பிட்டிருந்தேன். ஏனெனில் 2010ம் ஆண்டில் ஜிஎஸ்பி வரிச்சலுகையானது விலக்கிக்கொள்ளப்படுவதற்கான முக்கியமான காரணங்களிலொன்றாக இது அமைந்திருந்தது. இந்த சட்டமே பல்வேறு துன்பகரமான முறையற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு வழிசமைத்தது. இதன் காரணமாகவே புதிய சட்டமானது சர்வதேச மனித உரிமைத்தராதரங்களுடன் ஒன்றியதாக அமையவேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். நான் பிரதமரைச் சந்தித்தபோது யாதார்த்தத்துடன் இணைந்ததான பொறிமுறையொன்றை உள்ளடக்குவது பற்றி எனது யோசனைகளை சமர்ப்பித்திருந்தேன். பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுயாதீன மீள்பரிசீலனையாளர் நியமனம் குறித்து அவதானம் செலுத்தினோம். நாட்டிலுள்ள அனைத்து வழக்குகளின் முறைப்பாடுளையும் பார்வையிடுவது அதுதொடர்பில் நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைகளைச் செய்வது அத்தோடு பொது அறிக்கைகளi தயாரிப்பது போன்ற விடயங்களை அவரால் செய்யக்கூடும். இது தவறான நடைமுறைகiளை கையாள்வதற்கான மிகவும் வலுவான பொறிமுறையாக இருக்கும் என நாம் உணர்கின்றோம். அத்தோடு அரசாங்கமானது புதிய நல்வழிமுறைகள் கோவையை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நான் யோசனை முன்வைத்திருந்தேன்.


உங்களின் கருத்துக்களை நோக்குமிடத்து இலங்கை அரசாங்கமானது பல்வேறு விடயங்களில் முன்னேற்றங்களைக் காண்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றீர்கள். ஆனால் புதிய அரசியல்யாப்பு உருவாக்கம் அரசியல் தீர்வு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாடு போன்ற விடயங்களில் இலலங்கை அரசாங்கம் இன்னமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பிக்கவில்லையே. இந்த எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றும் என்பது தொடர்பில் எத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்கள்?





இந்த நாடு மிகவும் கடினமான கடந்தகாலத்தை கடந்து போயுள்ளது என்ற விடயம் எம் அனைவரது உள்ளங்களிலும் பதிவாகியுள்ளது. ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்றது முதலாக தீவிரமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதை நாம் கவனத்திலெடுத்துள்ளோம். வெறுமனே அர்ப்பணிப்பு மாத்திரமன்றி காத்திரமான நடவடிக்கைகள் பலவும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதலாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பிக்கையை நம்மத்தியில் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. புதிய அரசியல்யாப்புவிடயத்தில் நியாயமான பெறுபேறு கிடைக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம். மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில் நியாயமான முடிவு எய்தப்படவேண்டும்.  ஏனெனில் இந்த வழிமுறையானது இலங்கையில் நின்று நிலைக்கும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் உறுதிப்படுத்தும் என நாம் நம்புகின்றோம். இந்தத் தருணத்தில் எமக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகளையும் அர்ப்பணிப்புக்களையும் அரசாங்கம் நிறைவேற்றமாட்டாது என நம்புவதற்கு என்னைப்பொறுத்தவரையில் எந்தக்காரணமும் கிடையாது. நாங்கள் எதிர்பார்ப்பதைப் போன்று சில விடயங்கள் விரைவாக முன்னகராமல் இருப்பது தொடர்பிலும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமை குறித்தும் நான் அறிந்துள்ளேன். ஆனால் தற்போது முன்னெடுக்கப்படும் நடைமுறையிலும் இறுதியாக அடையக்கூடிய பெறுபேற்றிலும் நான் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளேன். 






​​==========================================​