Monday, November 30, 2020

மஹர சிறைச்சாலையில் அரங்கேறிய இரத்தக்களரியின் பின்னணி என்ன?

 

                                  பொலிஸ் அதிகாரியிடம் தம் உறவுகளின் நிலையைப் பற்றி வினவும் மக்கள் 

மஹர சிறைச்சாலையில் கலவரம் வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகிய போது என்மனதில் மஹர என்பது ஏதோ கண்டிக்கு  அப்பால் இருப்பது போன்ற ஒரு உணர்வே ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்தது .கண்டியை  சிங்களத்தில் மஹநுவர என்று அழைப்பதால் இப்படி ஒரு தூர உணர்வு ஏற்பட்டதுண்மை .




ஆனால் தேடிப்பார்த்தால் கொழும்பில் இருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தூரத்தில் வடகிழக்கு திசையில் அமைந்திருக்கும் கம்பஹா மாவட்டத்திலுள்ள ஒரு பழமைவாய்ந்த நகரமே மஹர என அறிய முடிந்தது. அங்கு தான் இப்போது பேசுபொருளாக இருக்கும் கலவரம் அரங்கேறி இன்னமும் பதற்றம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. 

நேற்று மாலை நிகழ்ந்த இந்த கலவரத்தில் எட்டு சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 71 பேர் காயமுற்றுள்ளதாகவும் இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மஹர சிறைச்சாலையில் எதற்காக இந்தக்கலவரம் இடம்பெற்றது என்பது தொடர்பாக பல்வேறு விதமான காரணங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இதில் சில முன்னுக்குப் பின்னர் முரணானதாக அமைந்துள்ளன. 

இன்று மாலை ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்றக்கூடிய நோய்கள் மற்றும் கொவிட்-19 தடுப்பிற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சை  மேலதீகமாக ஏற்றிருந்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சனி பெர்ணான்டோ புள்ளேயின் இன்று பாராளுமன்றத்தில் கருத்துதெரிவித்த போது ,இவ்வாறான மோதல்களின் பின்னணியில் பலம் வாய்ந்த சக்தியொன்று செயற்பட்டுவருவதாகவும் அவ்வாறான நபருக்கு வெளியில் இருந்து ஒத்துழைப்பு வழங்கும் நபரை கண்டறிய வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்திருந்தார். 

போதைப் பொருளை ஒழிக்க அரசாங்கம் கொள்கையளவில் செயற்பட்டு வருவதாகவும் போதை பொருள் பாவனையாளர்களை சிறையில் அடைத்துவைக்க நேரிட்டுள்ளதால் 11,000 பேரை மாத்திரமே அடைத்துவைக்கப் போதுமான இலங்கையின் சிறைச்சாலைகளில்  32 ,000 பேரை அடைத்துவைக் க நேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அரசாங்கத்தை அபகீர்த்திக்குள்ளாக்கும் நோக்குடனேயே சிறைச்சாலைக்குள் மோதல் இடம்பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

இதேவேளை இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ஸ ஒருபடி மேலே சென்று மஹர சிறைச்சாலை கலவரம் சர்வதேச சதி நடவடிக்கை என தெரிவித்திருந்தார். கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதும் சிறைச்சாலைக் கலவரம் ( வெலிக்கடை சிறைச்சாலை) இடம்பெற்றது. அவர் ஜனாதிபதியானதன் பின்னரும் சிறைச்சாலைக்கலவரம் நடைபெறுகின்றது பாருங்கள் என காண்பிப்பதற்காக இப்படியான கலவரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

சிறைக்கைதிகளுக்கு குளுசை கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விமல் வீரவன்ஸ இந்த குளுஸையைக்  உட்கொண்டவர்களுக்கு கடும் கோபம் ஏற்படுமெனவும் அப்படிக் கோபம் ஏற்பட்டால் இரத்தம் பார்க்காமல் விடத்தோன்றாது எனவும் அமைச்சர் கதையளர்ந்தார். 

இந்தக் கலவரம் தொடர்பாக ஆராய்ந்துபார்ப்பதற்காக பல்வேறு குழுக்களை அரசாங்கமும் பாதுகாப்பத்தரப்பும் நியமித்துள்ள வேளையில் அரசாங்கம் அமைத்துள்ள குழுக்களில் நம்பிக்கையில்லை சுயாதீன குழுவே நியமிக்கப்படவேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஏற்கனவே கொள்ளளவைத் தாண்டி கைதிகளால் நிறைந்து வழிகின்ற சிறைச்சாலைகளில் கொரோனா நோயாளிகள் அதிகரித்ததால் ஏற்பட்ட பதற்றத்தால் கலவரம் வெடித்தாக சர்வதேச ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டுள்ள போதும் இது உண்மையான காரணமல்ல என அமைச்சர் விமல் வீரவன்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

ஆனால் சிறைக்கைதிகள் மத்தியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தமையால் கைதிகள் மத்தியில் ஏற்பட்ட பதற்ற நிலையே சிறைக்கலவரமாக வெடித்துள்ளமைக்கு முக்கிய காரணம் என அரசாங்கத்தரப்பல்லாத ஊடகங்கள் மற்றும் அக்கறையுடைய தரப்பினரின் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. 

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் சேனக்க பெரேரா கருத்துவெளியிடுகையில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மற்றும் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட கைதிகளை வேறுபடுத்துதல் தொடர்பாக முன்வைத்த கோரிக்கைகள் ஒருமாத காலத்திற்கும் மேலாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் கைதிகள் விரக்தியடைந்திருந்ததாக சுட்டிக்காட்டினார். 



இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய உள்ளடக்கப்படக்கூடிய கைதிகளின் தொகையை விடவும் அதிக எண்ணிக்கையானவர்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சிறைச்சாலைகள் நெருக்கடிமிக்கதாக அமைந்துள்ளமை அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டுவந்துள்ளது.


சிறைச்சாலைகள் அவற்றின் தாங்கும் திறனுக்கு மேலாக அதிக கைதிகளைத் தம்வசம் கொண்டிருப்பதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் இதன்காரணமாக சிறைச்சாலைகளிலுள்ள சிறுகுற்றங்களைப் புரிந்த கைதிகள் அடங்கலாக கணிசமான கைதிகளை விடுவித்து இடநெருக்கடியைக் குறைக்க வேண்டும் எனவும் கடந்த மார்ச் மாதத்திலே மனித உரிமைகள் ஆர்வலர்கள் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய கரிசனைமிக்க இலங்கைப் பிரஜைகள் கூட்டாக  அறிக்கை வெளியிட்டிருந்தனர்.


சிறைச்சாலை திணைக்களத்தில் கிடைக்கக்கூடிய பொதுத் தகவல்களுக்கு அமைவாக 2004ம் ஆண்டில் 20,661ஆக இருந்த  சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு பெப்ரவரியில் 26,403 ஆக அதிகரித்துள்ளது.


2009ம் ஆண்டில் 11,707 சிறைக்கைதிகளுக்கு மாத்திரமே சிறைச்சாலைகளில்  உத்தியோகபூர்வரீதியாக தங்குமிடம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளாந்தம் சராசரியாக சிறைச்சாலைகளில் காணப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 27,823 ஆகும்.


சிறைச்சாலைகள் நிறைந்துவழிவதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் .மனித வளப்பற்றாக்குறை மாத்திரமன்றி இலங்கையின் குற்றவியல் நீதிப்பொறிமுறையில் காணப்படும் குறைபாடுகளும் காரணம் என  இலங்கையின் சிறைச்சாலைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்  முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட ஆய்விற்கு தலைமைதாங்கிய முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டுகின்றார்.


ரிமாண்ட் சிறைச்சாலையில் காணப்படும் அதிகமானவர்கள் பிணை வழங்கியும் கூட அதனைச் செலுத்துவதற்கு வசதியற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.


இதில் ஆகக்குறைந்தபட்சம் 2000ரூபாவை பிணையாக செலுத்தமுடியாமல் சிறையில் தொடர்ந்து இருப்பவர்களும் உள்ளனர் என்பது கவலைக்கிடமானது  குஸல் மென்டிஸ் வாகனத்தைச் செலுத்தியபோது  மிதிவண்டியைச் செலுத்திய முதியவர் பலியானமை அனைவரும் அறிந்தது. ஆனால் ஒரு மில்லியன் ரூபாவை செலுத்திவிட்டு ஒரே நாளில் பிணையில் வெளியில் சென்றார் மென்டிஸ்.


சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் செய்யும் கைதிகள் ( ஆவணப்படம் )

2012ம் ஆண்டில் பிணைக்கான கட்டணத்தைச் செலுத்தமுடியாமல் சிறையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 12,045 ஆக இருந்தது. 2018ல் இந்த எண்ணிக்கை 16 ,111 ஆக மாறியது. குறித்தஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் இது முறையே 42.4 %  மற்றும்  64.8 % ஆக இருந்தது.


 மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளடங்கலாக அக்கறை மிக்க பிரஜைகள் கொரோனா அச்சுறுத்தலின் மத்தியில் சிறைக்கைதிகளைப்பாதுகாப்பது தொடர்பாக மார்ச்சில் எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிறைக்கைதிகளில் ஒரு குறித்த எண்ணிக்கையினரை விடுவித்துள்ள போதும் அது இன்னமும் போதாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.


ஜனாதிபதியின் சட்டத்துறைக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஹரிகுப்தா  ரோகணதீரவின் தகவலுக்கமைய மார்ச் 17ம்திகதி முதல் ஏப்ரல் 4ம் திகதிவரையான காலப்பகுதியில் 2,916 சிறைக்கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


தற்போதைய நிலையில் இலங்கையின் சிறைச்சாலைகளில் 10,000 கைதிகளை மாத்திரமே சுகாதார முறைப்படி உள்ளடக்குவதற்கு வசதிகள் இருந்தாலும் துரதிஷ்ட வசமாக மூன்று மடங்கு அதிகமான கைதிகள் சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டிருப்பது கொரோனா வைரஸ் போன்ற தொற்றுக்கள் விரைந்துபரவ வாய்ப்பாக அமைந்துவிடும் என்பது மட்டுமன்றி இவ்வாறான பதற்ற நிலைகளுக்கும் கலவரங்களுக்கும் வித்திடலாம்  மீள நினைவுறுத்த விரும்புகின்றோம்.



 

துறைமுக திட்டத்திற்கு அஜித் டோவலுக்கு பச்சைக் கொடி காண்பித்தாரா ஜனாதிபதி கோட்டாபய?

 



இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவமிக்கதாக கருதப்படும் கொழும்பு துறைமுக கிழக்கு முனைய உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் சம்மதத்தைப் பெற்றுள்ளதாக நியூஸ் இன் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 



இலங்கையின் பொருளாதார தீர்மானங்களிலும் கேந்திர முக்கியத்துவமிக்க சிந்தனைவெளியிலும் சீனா செல்வாக்குச் செலுத்துகின்றதென்ற புதுடில்லியினதும் வாஷிங்டனதும் எண்ணப்பாடு காரணமாக அதிகரித்துவந்த பதற்ற நிலையை தனது இரண்டு நாள் விஜயத்தின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரால் தணிக்க முடிந்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக விபரமாக குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் இடையிலான கலந்துரையாடல் மிகவும் பயன்மிக்கதாக அமைந்துள்ளதாக கூறப்படுவது முக்கிய விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதை வெளிப்படுத்திநிற்கின்றது. 

தகவலறிந்த வட்டாரங்களின் அடிப்படையில் நீண்டகாலமாக தாமதமடைந்திருந்த இலங்கை ஜப்பான் மற்றும் இந்தியா இடையிலான கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நடத்திச்செல்வதற்குமான முக்கூட்டு உடன்படிக்கை திட்டம்  முன்செல்வதற்கான பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளதாக நியூஸ் இன் ஏசியா இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

2019ம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்ட கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும்  இயக்குவதற்குமான இந்தியா ஜப்பான் இலங்கையுடனான முக்கூட்டு ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டுமென்பதில் ஜனாதிபதி கோட்டபாய மிகவும் அக்கறையுடன் உள்ளதாக உயர் மட்டத்திலிருந்து அறியமுடிவதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தனது இருநாள் விஜயத்தை மேற்கொண்டு நாடுதிரும்ப முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி நேர சந்திப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.




புதுடில்லி திரும்புவதற்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்தியா ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் இலங்கையின் அரசியல் விவகாரங்கள் குறித்தும் வடக்கு கிழக்கு நிலைமைகளையிட்டும் இருதரப்பினரும் கலந்துரையாடியதாக இந்து பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது

கொழும்பு நகரில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதா?



கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சூழ்நிலை எச்சரிக்கை மிகுந்ததாக காணப்படுகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளமை ஆபத்தானதென அரசாங்க மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சுகாதாரத்துறை உயரதிகாரிகள் அது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமென்றும் அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் ஆஸ்பத்திரிகளில் கொரோனா உப கொத்தணிகள் உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி வேலைத்திட்டங்களை மேற்கொள்வது அவசியமென்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் இணைப்புச் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே இது தொடர்பில் தெரிவிக்கையில்; அடிமட்டத்திலிருந்து நோயாளர்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு தொழில்நுட்ப செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடுபவர்களே பொதுச் சுகாதார சேவை பரிசோதகர்கள். எனினும் நாட்டின் சில பகுதிகளில் தமது கட்டுப்பாட்டையும் மீறி கொரோனா வைரஸ் அதிகரிப்பு காணப்படுகின்றதென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இது மிக மோசமான ஒரு நிலையாகும். 

அதனை நிவர்த்தி செய்வதற்கு உடனடி செயற்பாடுகள் அவசியமாகும். குறிப்பாக கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் இவ்வாறான நிலை இருக்குமானால் அந்த நிலைமையை சரி செய்வது சுகாதாரத்துறையில் அதிகாரம் கொண்ட உயர் அதிகாரிகளின் பொறுப்பாகும். பொதுச் சுகாதார பரிசோதகர்களின் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தேவையான வளங்களையும் ஆளணிகளையும் அவர்களுக்கு உடனடியாக பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை அலட்சியம் செய்து விட்டு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது. அதேவேளை ஆஸ்பத்திரித் துறையில் கொரோனா உப கொத்தணிகள் உருவாவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சம்பந்தட்ட அதிகாரிகள் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

 இலங்கையில் ஏற்கனவே 109 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில்  நேற்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ள 7 மரணங்களுடன் இதுவரை 116 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் வெளியான இந்த அறிக்கையின் தமிழாக்கம் வருமாறு


 இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (29) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 109 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7 மரணங்களுடன், இதுவரை 116 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (28) கொவிட்-19 தொடர்பான (தற்போது அறிவிக்கப்பட்ட ஒரு மரணத்துடன்) 1 மரணமும் நேற்று முன்தினம் (27) (தற்போது அறிவிக்கப்பட்ட 3 மரணங்களுடன்) 6 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிவிக்கப்பட்டவர்களில் 4 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குவதோடு, இவர்களில் மூவர் இன்றும் (29), ஒருவர் நேற்றும் (28), மூவர் நேற்றுமுன்தினமும் (26) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர்கள், கொழும்பு 02, கொதட்டுவ, மொரட்டுவை, சிலாபம், அகுரஸ்ஸை, கொழும்பு 13, மருதானை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

110ஆவது மரணம்
கொழும்பு 02 (கொம்பனித்தெரு/ யூனியன் பிளேஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 50 வயதான பெண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அவ்வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (28) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்று காரணமான நியூமோனியா மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய், என அறிவிக்கப்பட்டுள்ளது.

111ஆவது மரணம்
கொதட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 48 வயதான ஆண் ஒருவர், வீட்டில் வைத்து மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்று காரணமான நியூமோனியா, நாட்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு, என அறிவிக்கப்பட்டுள்ளது.

112ஆவது மரணம்
மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த, 73 வயதான ஆண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் இன்று (25) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்றுடன் உக்கிரமடைந்த நியூமோனிய, என அறிவிக்கப்பட்டுள்ளது.

113ஆவது மரணம்
சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், சிலாபம் ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொவிட்-19 நியூமோனியா, என அறிவிக்கப்பட்டுள்ளது.

114ஆவது மரணம்
அக்குரஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான பெண் ஒருவர், கராபிட்டி போதான வைத்தியசாலையில் இருந்து கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவ்வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட சிறுநீரக நோயுடன், கொவிட்-19  நியூமோனி, என அறிவிக்கப்பட்டுள்ளது.

115ஆவது மரணம்
கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 90 வயதான பெண் ஒருவர், கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (29) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

116ஆவது மரணம்
கொழும்பு 10, மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 உடனான நுரையீரல் செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.


Sunday, November 29, 2020

நல்லிணக்கத்தை புறக்கணித்துவிட்டு எதை நோக்கி நகர்கின்றது இலங்கை அரசாங்கம்?

                             உயிர்நீத்த மகனை நினைவுகூரும் அன்னை


'நல்லிணக்கம் என்பது இலங்கையர்கள் விரும்பும் விடயங்களில் மிகவும் கீழ் நிலையில் உள்ளது' இப்படிச் சொன்னவர் வேறுயாருமல்ல இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே .

சிலநாட்களுக்கு முன்னர் இந்தியாவின் BWTVக்கு வழங்கிய மெய்நிகர் நேர்காணலின் போது ' சராசரி இலங்கையர்கள் வேண்டும் ஐந்து விடயங்களாக தொழில் ,வீடு, தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி ,சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவையே தேவையாக உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். 

இது தான் தமிழர்களோ, முஸ்லிம்களோ ,சிங்களவர்களோ வேண்டுகின்ற விடயங்கள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 




நீங்கள் இதில் நல்லிணக்கம் என்பது எங்கே அடங்குகின்றது என்று வினவினால் நல்லிணக்கம் என்பது மிக மிக மிகவும் கீழானதாகவே உள்ளது  என்று குறிப்பிட்ட ஜயநாத் கொலம்பகே, நல்லிணக்கம் என்ற பதம் தேர்தல்களின் போது வாக்குகளை வென்றெடுக்க அரசியல்வாதிகள் பயன்படுத்துமொன்றாகும் என அர்த்தம் கற்பித்திருந்தார். 

நாம் அதிகாரத்தைப் பகிரப்போகின்றோமா என்றும் நீங்கள் வினவியிருந்தீர்கள் . இந்தியாவிலுள்ள மிகச்சிறிய மாநிலத்தைவிடவும் சிறியது.ஒருவேளை கேரளாவின் அளவைக் கொண்டிருக்கக்கூடும். பரப்பின் அடிப்படையில் நாம் மிகவும் சிறிய நாடாகும். அதிகாரங்களைப் பகிர்வது இங்கு மிகவும் உணர்வுபூர்வமான விடயமாக உள்ளது. 

1987ம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் இன்னமும் நடைமுறையில் இருக்கின்றது. 13வது திருத்தத்திலுள்ள பெரும்பாலான சரத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் உள்ளார். மாகாண சபை உள்ளது. மாகாண அரசு உள்ளது. மாகாணங்களுக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு விடயங்கள் மாத்திரமே செய்யப்படாமல் உள்ளன. பொலிஸ் அதிகாரங்களும் காணி அதிகாரமும் மாத்திரமே இன்னமும் வழங்கப்படாது உள்ளன. அவை மாகாணங்களுக்கு ஒருபோதுமே வழங்கப்படமாட்டாது. 13வது திருத்தம் இரண்டு முக்கியமான நோக்கங்களை நிறைவேற்றியதா என கேட்க விரும்புகின்றேன். 13வது திருத்தத்தினூடாக சமாதானத்தை நாட்டில் அடையமுடிந்ததா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதாகும்.

அபிவிருத்தியை அடையமுடிந்ததா என்றால் அதற்கும் பதில் இல்லை என்பதாகவே அமையும் எனவும் ஜயநாத் கொலம்பகே தெரிவித்திருந்தார். 

அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பிலுள்ள இவரது கருத்து நல்லிணக்கம் என்றவிடயத்திற்கு அரசாங்கம் எவ்வளவு குறைவான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது என்பதை புலப்படுத்தி நிற்கின்றது. 


கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும்  நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதாக ராஜபக்ஸ தரப்பினர்  வாக்குறுதிகளை அள்ளிவழங்கியிருந்தனர். ஆனால் ஏற்கனவே கடன்பொறிக்குள் சிக்கி பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த அரசாங்கம் தற்போது கொவிட்-19 தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கத்தால் திக்கித் திணறி நிற்கின்றது.  

பொருளாதார சுபீட்சம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமில்லை . பொருளாதாரம் நலிவுடைந்துவரும் நிலையில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்கனவே வெளிப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கும் நிலையில் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் மற்றும் பாரபட்ச செயற்பாடுகளைக் காண்பித்தே தமது செல்வாக்கை தற்போதைய அரசாங்கம் நிலைநிறுத்த முற்படுகின்றதா என்ற கேள்விகள் ஏற்படுகின்றன. 




இம்முறை நினைவேந்தல்கள் விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்ட கடும் போக்கு நகர்வுகள் நல்லிணக்கத்தை நாட்டில் கட்டியெழுப்ப நிச்சயமாக உதவப்போவதில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்கம் நினைவேந்தல்களை நடத்த அனுமதித்த போது மக்கள் தமது உணர்வுகளை அமைதியாக வெளிப்படுத்தினார்களே தவிர குழப்பங்களை ஏற்படுத்தவில்லை.


நேற்று பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவிற்கும் எம். ஏ. சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்ற பலத்த விவாதம் நல்லிணக்க விடயத்தில் அரசாங்கத்தின் கடும் நடவடிக்கை  இருக்கும் சூழலை கடினப்படுத்தப் போவதனை  உணர்த்திநிற்கின்றது.  

விடுதலைப் புலிகளின் உறுப்பினரான பண்டிதருக்கு எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நினைவஞ்சலி செலுத்த முடியும் என வீரசேகர சபையில் கேள்வி எழுப்பினார்.

பதிலளித்த சுமந்திரன், "'அமைச்சருக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால் என் பெயர் பொது வெளியில் குறிப்பிடப்பட்டதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் நான் வயதான அம்மாவான சின்னத்துரை மகேஸ்வரி என்பருக்காக யாழ் மேல் நீதிமன்றில் நான் ஆஜரானேன். அவரது மகன் 1985 இல் பண்டிதர் என அழைக்கப்படும் அவரது மகனை வருடா வருடம் நவம்பர் மாதத்தில் நினைவு கூர்வது வழக்கம். தனது நினைவு கூரல் உரிமையைப் பாதுகாக்கவென அவர் அந்த வழக்கைப் பதிவு செய்திருந்தார்.

(வீரசேகர இடைமறிக்க) ஆம் அவர் விடுதலைப் புலிகள் தலைவர் தான். ஆனால் பண்டிதர் அந்த அம்மாவினது புதல்வன் கூட. அத்துனை தாய்மாருக்கும் தம் பிள்ளைகளை நினைவேந்தும் உரிமை இருக்கிறது.

அமைச்சர் ஒரு போதும் ஜே.வி.பி-யின் தலைவர் ரோகன விஜயவீரவை ஜே.வி.பி-யின் தலைவர்கள் முழுச் சீருடையில் கொழும்பெங்கும் கொண்டு திரிந்து நினைவேந்துவதைக் குறித்துக் கேள்வி எழுப்பியதில்லை. இதனால் தான் நான் இந்தச் சபையில் நினைவேந்தும் விடையத்தில் கூட தமிழருக்கெதிராகப் இனவாதம் பாய்ச்சப்படுவதைப் பற்றிப் பேசியிருந்தேன்.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, மிகத் தெளிவாக அம்மா தன் மகனை வீட்டில் நினைவு கூருவதற்கு முழுமையான உரிமை இருப்பதாகச் சொல்லியிருந்தார். அம்மா தன் உரித்தை வீட்டில் செயற்படுத்தினார். வீடில்லை அதைக் கொட்டில் என்றே கூற வேண்டும். அம்மா தன் மகனைத் தன் கொட்டிலில் நினைவு கூர்ந்த போது நானும் அவரோடு இணைந்திருந்தேன். அவரருகில் நின்றேன். மகன் எந்தவொரு சீருடையைக் கூட அணிந்திருக்கவில்லை. இது தாயொருவர் தன் மகனை நினைவேந்திய செயற்பாடு. கூட்டாக எவரும் நினைவேந்தலில் முடியாத போதும் எல்லோரும் தனிப்பட்ட நினைவேந்தலில் ஈடுபடலாம் என்பதை என் மனுதாரருக்கு விளக்குமாறு நீதிமன்றம் என்னைப் பணித்திருந்தது.

சரத் வீரசேகரவின் இது வித இனவதாகக் கருத்துக்களால் முழு நாடும் தவறாக வழி நடத்தப்படுகிறது. அதை இச் சபை அனுமதிக்கிறது' என்றார்

இதன் போது ஜேவிபிக்கு நினைவேந்தலை நடத்த அனுமதிக்கும் அரசாங்கம் தமிழருக்கு அதனை மறுக்கின்றது. இறந்தவர்களை நினைவுகூருவதில் கூட தமிழர்கள் மீது பாரபட்சம் காண்பிக்கப்படுகின்றது என்ற கருத்தை சுமந்திரன் ஆணித்தரமாக பதிவுசெய்திருந்தார். 

 விடுதலைப்புலிகள் இயக்கத்தை வேரோடு அழித்துவிட்டோம் என தம்பட்டம் அடிக்கும் ராஜபக்ஸ தரப்பினர் விமானங்களோடும் நவீன படகுகளோடும் ஆட்லறிகளோடும் இருந்த விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் உயிர்நீத்தவர்களின் நினைவுகூரலைத்தடுப்பதன் ஊடாக அடைய நினைப்பதென்ன என்ற கேள்வி பலருக்கும் எழலாம். 

இந்தியா போன்ற பெரும் வல்லரசின் ஆதரவு இருந்தாலேயன்றி இந்த நாட்டில் மீண்டும் பலம் வாய்ந்த ஆயுதப்படையை எந்தவொரு சிறுபான்மை இனமும் கட்டியெழுப்பமுடியாது என்பதை விளங்கிக்கொள்ளும் அறிவு ராஜபக்ஸ தரப்பினருக்கு இல்லாமல் இருக்கப்போவதில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடியினால் நாட்டில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் கடும் அதிருப்தியைச் சமாளிப்பதற்கு  புலிப்பூச்சாண்டியை மீண்டும் கையிலெடுத்துள்ளது. 



தமது உறவுகளை நெருங்கியவர்களை நினைவுகூரத்தடைசெய்து உலகில் உள்ள நியதிக்கு முரணாக நடக்கும் செயற்பாடு எவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் அரசாங்கத்தின் மீது ஏற்படுத்தியுள்ளதோ அதேபோன்று ஜனாஸாக்களைப் புதைக்கும் விடயத்தில் உலகில் ஏறத்தாழ 200 நாடுகள் பின்பற்றும் நடைமுறைக்கு முரணாக அரசாங்கம் காண்பிக்கும் பிடிவாதம் முஸ்லிம்களின் மத்தியில் கடுமையான அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திவிட்டுள்ளது. 

பெரும்பான்மையினத்தவரிடையே பொருளாதாரம் தொடர்பாக அதிகரிக்கும் அதிருப்திநிலையை திசைதிருப்ப நினைவேந்தல் தடை ஜனாஸா எரிப்பு போன்ற விடயங்கள் இன்னமும் எவ்வளவு நாள் கைகொடுக்கும் என்பது கேள்விகுறியாகும். 





இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் நகர்வுகள் குறிப்பாக நல்லிணக்கத்தை கையாளும் விடயத்தில் காண்பிக்கும் அசமந்தப்போக்கு சர்வதேசத்தரப்பையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பது இலங்கையிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகளுடனான கலந்துரையாடல்களின் போது உணரமுடிந்தது. இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பிரித்தானியா  முன்னின்று செயற்பட்டுவரும் விடயம் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளன. கடந்த 24ம் திகதி பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது .இதில் குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் இருந்து விலகியுள்ள நிலையில் புதிய தீர்மானத்தைக்கொண்டுவர பிரித்தானியா செயற்படுகின்றதா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலளித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதை விபரித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல  இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மார்ச் அமர்வில் புதிய பிரேரணையைக் கொண்டுவர பிரித்தானியா செயற்பட்டுவருவதாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

தமிழர்கள் மீதான அன்பினாலும் அக்கறையினாலும் அன்றி தமது சொந்த புவிசார் நலன்களுக்காக இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையை ஜெனிவாவில் மேற்குலக நாடு கொண்டுவரப்போதற்கான சமிக்ஞைகள் பிரகாசமாக தெரிகின்றன.  தமிழர்களையோ முஸ்லிம்களையோ மேற்குலக நாடுகள் தமது நலன்களுக்காக பயன்படுத்துவதைத் தடுத்து இந்த நாட்டில் நிலையான அமைதியையும் பொருளாதார சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப  நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்பதை இந்த அரசாங்கம் உணரவேண்டும். இனங்களுக்கிடையே நல்லிணக்கம் இல்லையேல் நாட்டில் நிலையான சமாதானமோ பொருளாதார சுபீட்சமோ ஒருபோதும் சாத்தியமாகமாட்டாது என்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளதும் உதாரணங்கள் உணர்த்திநிற்கின்றன. எனவே இனியேனும் அரசாங்கம் யதார்த்தத்தை உணர்ந்து நல்லிணக்கத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து செயற்படவேண்டும். 


அருண் ஆரோக்கியநாதன் 

சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஆராயும் சிங்கப்பூர் POFMA சட்டத்தை அறிவோமா?

 




இலங்கையில் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கடந்தவாரம் அறிவித்திருந்தார். இதற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் உரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


சமூக ஊடகங்களால் இனங்களுக்கிடையில் குழப்பத்தைத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கட்டுப்படுத்தப்படுவது அவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன்  இதன் போது தெரிவித்திருந்தார். இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் புதிய சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதனை ஆராய்ந்து இங்கு புதிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்ட சிங்கப்பூர் சட்டம் என்ன ? அது  தொடர்பாக இதுவரை வந்துள்ள விமர்சனங்கள் என்ன என்று தற்போது பார்ப்போம். 

சிங்கப்பூரில் பொய்த் தகவல் பரப்பப்படுவதற்கு எதிரான Protection from Online Falsehoods and Manipulation Act  (POFMA ) பொஃப்மா சட்டம் 2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது 

ஓராண்டுக்கு மேலாக பொதுமக்களிடமிருந்து ஆலோசனை நடத்திய பிறகு இந்த சட்டமூலம் கடந்த 2019  மே மாதம் சட்டமானது. 



புதிய சட்டத்தின்கீழ், இணையத்தில் வலம் வரும் பொய்ச் செய்திக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சர்கள் முடிவெடுக்கலாம்.

அந்தப் பொய்ச் செய்திகளை உடனடியாக இணையத்திலிருந்து அகற்றவோ அல்லது திருத்தம் செய்யவோ அவர்கள் உத்தரவிடலாம்.

இந்த உத்தரவுகளுக்குப் பணியாத தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்.

வேண்டுமென்றே பொய்ச் செய்திகளைப் பரப்புவோருக்குப் புதிய சட்டத்தின்கீழ் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.


சிங்கப்பூரின் பத்திரிகைகளும் ஊடகங்களும் அந்நாட்டு அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்குபவை. பத்திரிகைகளுக்கான சுதந்திரமான சூழல் அந்நாட்டில் கிடையாது.

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின்படி ((WPFI), ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படும் நாடுகளின் பட்டியலில் 180இல் 151ஆவது இடத்தில் இருக்கிறது சிங்கப்பூர். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள் நடந்த கடும் விவாதத்திற்குப் பிறகு இந்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், ' இந்தச் சட்டம், பொய்ச் செய்திகளையும், ட்ரோல்களையும், பொய்யான சமூக வலைத்தளக் கணக்குகளையும், கம்ப்யூட்டர் புரோகிராமிங் (BOT) செய்யப்பட்ட இணையதளப் பக்கங்களின் செயல்பாடுகளையும் தடுப்பதற்கு  மிகவும் உதவியாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.  மேலும் அவர், இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிப்பதுடன், சிறைத் தண்டனையும் வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.



ஆனால் தொழில்நுட்ப வல்லுநர்களும், எதிர்கட்சிகளும், விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும், இந்தச் சட்டத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சட்டம் அரசு அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்குவதாகவும், தங்களுக்கு எதிரான எந்த செய்தியையும், கருத்தையும், இவர்கள் பொய்யான செய்தி எனக் கூறி பல உண்மைகளை வெளிவர விடாமல் செய்துவிடலாம் எனவும் அஞ்சுகிறார்கள். மேலும் இந்தச் சட்டம் எல்லாத் தளங்களிலும் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெ ரிக்கும் ஒரு முயற்சி என்று மிகக் கடுமையா ஆட்சேபித்துள்ளனர்.

இந்தச் சட்டத்தை எதிர்க்கும் கல்வியலாளர்கள்,அந்நாட்டின் கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் முயற்சி இது என்றே கூறுகிறார்கள்.  ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப் போன்ற டெக் ஜாம்பவன்களின் மூலமாகவும், செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியும் இணையதளப் பக்கங்களின் உதவியோடும், மக்களிடம் ஊடக அறிவை வளர்ப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்கின்றனர்.

இந்த பொஃப்மா சட்டம் எப்படி தவறாக பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கு  உதாரணத்தை  கடந்த ஜுன் மாதத்தில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா சுட்டிக்காட்டியிருந்தார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 சூழல் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பால் தம்பையா,  பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பொஃப்மா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகச் சங்கம், சேனல் நியூஸ் ஏஷியா(சிஎன்ஏ) , த ஒன்லைன் சிட்டிசன் ஏஷியா, நியூ நராடிஃப் ஆகியவற்றுக்கு மொத்தம் ஐந்து திருத்த உத்தரவுகளை பொஃப்மா அலுவலகம் பிறப்பித்தது. இதனை ஏற்று சிஎன்ஏவும் என்யுஎஸ்எஸ்ஸும் திருத்தங்களை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  55 வயது பால் தம்பையா திருத்த உத்தரவு கவனத்தை திசை திருப்பக்கூடியது என்றார்.

'மனிதவள அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையை பற்றி நான் பேசியிருந்தேன்' என்று முதலாளிகளுக்கு அனுப்பியிருந்த கடிதத்தை அவர் குறிப்பிட்டார்.

'மனிதவள அமைச்சே அதனை அனுப்பியிருந்தது. மனிதவள அமைச்சும் சுகாதார அமைச்சும் கூட்டாக அக்கடிதத்தை அனுப்பவில்லை. அந்த ஆலோசனைக் குறிப்பில் மனிதவள அமைச்சின் அதிகாரி கையெழுத்திட்டிருந்தார்' என்று கூறி  பால் தம்பையா, இதனால் பொஃப்மா சட்டம் ஏற்றுக் கொள்ளும் வகையில் பயன்படுத்தப்படவில்லை என்று தமக்குத் தோன்றுவதாகத் தெரிவித்தார். முதலாளிகளுக்கு மனிதவள அமைச்சு அனுப்பிய மின் அஞ்சல் குறிப்பில் வெளிநாட்டு ஊழியர்களிடையே மேற்கொள்ளப்படும் கொவிட்-19 சோதனைகள் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையில்லாமலே மேற்கொள்ளப்படுகிறது என்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா கூறியதாக பொஃப்மா அலுவலகம் குறிப்பிட்டிருந்தது.

வெளிநாட்டு ஊழியர்களை மொத்தமாக மருத்துவமனைகளுக்கு கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பினால் முதலாளிகள் தங்களுக்குள்ள 'வொர்க் பாஸ்' சலுகைகளை இழக்க வேண்டியிருக்கும் என்று ஆலோசனைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக அவர் கூறியதாகவும் அது சொல்லியது. இவை இரண்டுமே தவறு என்று 'பொஃப்மா' தெரிவித்திருந்தது.



இணையவெளியில் பரப்பப்படும் பொய்ச் செய்திகளை கட்டுப்படுத்தும்  நோக்குடன் கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் பொஃப்மா சட்டம் மக்களின் கருத்துரிமையில் அநாவசியமாக தலையிடுகின்றது என இதுபோன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் கண்டனங்களும் வெளியாகிவருகின்றன. இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் பொஃப்மா சட்டத்தை உதாரணமாக கொண்டு இலங்கையில் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை வரையவுள்ளதாக கூறியிருப்பது  ஆழ்ந்த கரிசனைகளை ஏற்படுத்துகின்றது. 

இன்று பிரசுரமான ஞாயிறு வீரசேகரிப்பத்திரிகைக்காக அருண் ஆரோக்கியநாதன் எழுதிய கட்டுரை

அலரி மாளிகை முடக்கம் பற்றிய தகவல்கள் ராஜபக்ஸ தரப்பினரிடையிலான விரிசலை வெளிப்படுத்துகின்றதா?



பிரதமரின் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளதாக முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. 

அலரிமாளிகை கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. 

இருந்த போதும் அலரிமாளிகையோ பிரதமரின் அலுவலகமோ முடக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் பிரதமரின் ஊடகத்துறை செயலாளர் ரொஹான் வலிவிட்ட  அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

அமைச்சுகள் மற்றும்  பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகள் தற்போது கடமைக்காக அழைக்க்பபடுவதாகவும் பஸில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியும் அலரி மாளிகையில் இருந்து இயங்கிவருவதாகவும் ரொஹான் வெலிவிட்ட  அறிக்கை மேலும் தெரிவித்திருந்தார்.

எனினும் இன்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இந்த அறிக்கை தொடர்பாக பஸில் ராஜபக்ஸ கருத்துவெளியிட்டுள்ளார். வலிவிட்டவின் ஊடக அறிக்கை சரியானதான என சண்டே டைம்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள  பஸில் ராஜபக்ஸ " அது முற்று முழுதான பொய். அலரிமாளிகை முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள எனது அலுவலகங்களை என்னால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை நீங்கள் கண்டறியவேண்டுமானால் நீங்கள் யாரையேனும் அனுப்பிவைக்க முடியும் அந்த இடம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. பணிக்கு சமூகமளிக்காதிருக்குமாறு பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்."





" ஊடகசெயலாளர் ( வெலிவிட்ட) தாம் என்ன செய்கின்றார் என்பது அவருக்கே தெரியாது. பொய்களைக்கூறுவதன் மூலம் அவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அதிகமான சங்கடத்தையும் கெட்டபெயரையும் ஏற்படுத்துகின்றனர். என்னைப்பற்றி அவர்கள் கூறியதும் பொய்யானதாகும். அப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி கிடையாது. இந்த விடயங்களை பிரதமர் மறைக்க முனைபவரல்ல .அவர் வெளிப்படையாக எவ்வேளையும் இருக்க நினைப்பவர். நாம் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதுடன் மக்களிடம் இருந்து உண்மையை மறைக்க முனையக்கூடாது. உண்மையைச் செல்வதில் தவறென்ன உள்ளது? முடக்கம் காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் அலரிமாளிகையிலுள்ள தம்முடைய அலுவலகத்திற்கு செல்லவில்லை"என பஸில் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார். 

சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன்  இல்லாவிட்டாலும் அவரது தரப்பினருடன் புரிந்துணர்வீன்மையையும் ஒருவித விரிசலையும் கொண்டிருப்பதை புலப்படுத்திநிற்கின்றது. 


மாற்றங்களைக் கணக்கெடுக்காமல் பொருளாதாரத்தை எதிர்வுகூறுவதா ? சர்வதேச நிறுவனத்தைச் சாடும் இலங்கை அரசு

 



இலங்கையின்  பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் புதிய அரசாங்கத்தின் வலுவான கொள்கைக் கட்டமைப்பை அடையாளம் காணத் தவறியதால், தரமிறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நிதியமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

நீண்டகால கடன் Fitch மதிப்பீட்டின் (Fitch Ratings) பிரகாரம் C.C.C வரை தரமிறக்குவது தொடர்பில் நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் புதிய அரசாங்கத்தின் வலுவான கொள்கைக் கட்டமைப்பை அடையாளம் காணத் தவறியதால், தரமிறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நிதியமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடன் தொடர்பில் 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகள் குறித்து Fitch நிரல்படுத்தலில் கவனத்திற்கொள்ளப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிதி நிலைமையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் அதன் எதிர்கால நிதி மதிப்பீட்டை விட பின்தங்கியுள்ளதாக பிட்ச் தரப்படுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் Fitch  தரவரிசையில் பாரபட்சமற்ற அணுகுமுறையைக் காட்டுகின்றன.

எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு உறுதிபூண்டுள்ள மாற்றுத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் சரியான கவனம் செலுத்தவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடன் அபாயத்தைக் காரணம் காட்டி இலங்கையை B-Negative மதிப்பீட்டிலிருந்து C.C.C மதிப்பீட்டிற்கு Fitch தரவரிசை நேற்று தரமிறக்கியது.

Saturday, November 28, 2020

காணாமலாக்கப்பட்டடோருக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் யாவை?

 


காணாமல்போன ஆட்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலொன்றை வெளியிட்டுள்ளதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. 

குறித்த விபரங்களை கொழும்பிலுள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மன்னார் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் பார்வையிட முடியுமென அவ்வலுகலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு நேரடியாக கிடைத்த முறைப்பாடுகள், மாவட்ட செயலகங்கள் ஊடாக பெறப்பட்டு பின்னர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாடுகள், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் பேரில் ஆயுதப்படையினரால் வழங்கப்பட்ட போரில் காணாமல்போன படையினரின் விபரம் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் வசிக்கும் காணாமல் போனோரின் உறவினர்களிடம் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்தவகையில் குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தகவல்களை காணாமல்போனோரின் உறவினர்கள் மீளாய்வு செய்வதுடன், ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் அவற்றை அறிவிக்குமாறு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அறிக்கையை தெளிவாக வாசிக்க 


we.tl/t-bwPQ8yHU27

பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ள கைதிகள் பட்டியலில் அரசியல் கைதிகள் உள்ளனரா?

 



கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய உரித்துடைய  கைதிகளின் பட்டியலை வழங்குமாறு சிறைச்சாலைத்திணைக்களம் அனைத்து சிறைச்சாலைகளிடமும்  கோரியுள்ளது.

சிறுகுற்றங்களுக்காக சிறைவைக்கப்பட்டுள்ளவர்களே இந்த பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட தகுதியானோர் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகாரணமாக 800ற்கும் மேற்பட்ட கைதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


100ஐத் தாண்டியது இலங்கையில் கொரோனா மரணங்கள் :இறந்தவர்கள் பற்றியவிபரங்கள் உள்ளே

 


இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐத்தாண்டியுள்ளது.  இன்று வெள்ளிக்கிழமை மட்டும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை நூறைக் கடந்து 107ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு, உயிரிழந்தவர்களில் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (26) கொவிட்-19 தொடர்பான (தற்போது அறிவிக்கப்பட்ட இரு மரணங்களுடன்) 3 மரணங்களும் நேற்று முன்தினம் (25) (தற்போது அறிவிக்கப்பட்ட 3 மரணங்களுடன்) 5 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிவிக்கப்பட்டவர்களில் 4 பெண்களும் 4 ஆண்களும் உள்ளடங்குவதோடு, இவர்களில் இருவர் இன்றும் (27) இருவர் நேற்றும் (26) மூவர் நேற்றுமுன்தினமும் (25) ஒருவர் கடந்த திங்கட்கிழமையும் (23) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர்கள்இ கொழும்பு 13, 09, 10, 15, 02, 10, 13 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, ஒருவர் வெலிக்கடை மெகசின் சிறையில் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



100ஆவது மரணம்

கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 87 வயதான பெண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த திங்கட் கிழமை (23) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்று காரணமான மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.


101ஆவது மரணம்

கொழும்பு 09, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 54 வயதான பெண் ஒருவர்இ மஹரகமை அபேக்‌ஷா வைத்தியசாலையில் வைத்து கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்துஇ ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவ்வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம்இ புற்றுநோயுடன் உக்கிரமடைந்த கொவிட்-19  தொற்று எனஇ அறிவிக்கப்பட்டுள்ளது.


102ஆவது மரணம்

கொழும்பு 10, மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான பெண் ஒருவர் வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.


103ஆவது மரணம்

கொழும்பு 15, (மோதறைஃமட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த, 36 வயதான ஆண் ஒருவர்இ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்துஇ கொவிட்-19 தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து IDHவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட நுரையீரல் நோயுடனான கொவிட்-19  தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.


104ஆவது மரணம்

கொழும்பு 02 (கொம்பனித்தெரு/ யூனியன் பிளேஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, 83 வயதான ஆண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19  தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.


105ஆவது மரணம்

கொழும்பு 10 (மருதானைஃமாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர், வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நீரிழிவுஇ நாட்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கொவிட்-19  தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.


106ஆவது மரணம்

கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர் வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட நுரையீரல் நோய் மற்றும் ஆஸ்துமாவுடன் உக்கிரமடைந்த கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.


107ஆவது மரணம்

வெலிக்கடை, மெகசின் சிறைச்சாலையில் இருந்த 70 வயதான ஆண் ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்றுமுன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் உக்கிரமடைந்த சிறுநீரக தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.



Friday, November 27, 2020

ஈரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி படுகொலையால் பதற்றத்தில் மத்தியகிழக்கு

 


மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்திற்கு வித்திடும் வகையில் ஈரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி Mohsen Fakhrizadeh மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   

அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள இரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸரீஃப், இது ஒரு நாட்டின் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என்று தெரிவித்துள்ளார்.

இரானிய அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கருதுகின்றன.

மேலும், மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை, 'இரானிய வெடிகுண்டு உலகின் தந்தை' என்று ராஜீய அதிகாரிகள் அழைப்பதாகவும் கூறப்படுகிறது.

இரான் அரசு அதன் அணுசக்தி மேம்பாட்டுக்காக யுரேனியம் செறிவூட்டலை பெருக்கி வருவதாக வல்லரசு நாடுகள் கவலை வெளியிட்டு வந்த நிலையில், அந்நாட்டின் அணுசக்தி தலைமை விஞ்ஞானி கொல்லப்பட்டிருக்கிறார். செறிவூட்டப்பட்ட யுரேனியம், அந்நாட்டின் அணுசக்தி சிவில் திட்டங்களுக்கு மட்டுமின்றி ராணுவ அணு ஆயுத திட்டங்களுக்கும் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது.

ஆனால், அமைதி பயன்பாடுக்கு மட்டுமே தமது அணுசக்தி திட்டம் உள்ளது என்று இரானிய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

2010-2012ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவற்றின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக இரான் குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் இரானிய அணுசக்தி திட்டம் தொடர்பாக நிகழ்ச்சியொன்றில் பேசியபோது, ஃபக்ரிஸாதேவின் பெயரை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு குறிப்பிட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

என்ன நடந்தது?

ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டது தொடர்பாக இரானிய பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படிஇ இரானிய அணுசக்தி அமைச்சகத்தின் அங்கமான ஆராய்ச்சி அமைப்பின் தலைமை விஞ்ஞானியான ஃபக்ரிஸாதே சென்ற வாகனத்தை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இலக்கு வைத்ததாக கூறப்பட்டுள்ளது.



'பாதுகாவலர்களுடன் வாகனத்தில் சென்ற அவரையும் அவரது காவலர்களையும் இலக்கு வைத்த தீவிரவாதிகள்இ அனைவரையும் சுட்டுத்தள்ளினார்கள். ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஃபக்ரிஸாதேவை கொண்டு சென்றபோதும் அவரை உயிர் பிழைக்க வைக்கும் மருத்துவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. அதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்து விட்டதுஇ' என்று இரானிய பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை ஃபக்ரிஸாதே சென்ற கார் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்சார்ட் நகரில் கார் வெடிப்பு சத்தம் கேட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


'இரானின் தலைசிறந்த விஞ்ஞானியை தீவிரவாதிகள் கொன்று விட்டனர்இ' என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஸாரிஃப் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

'கோழைத்தனமான இந்த தாக்குதல் பின்னணியில் இஸ்ரேலின் பங்கு இருப்பதற்கான வலுவான அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் போரை விரும்பும் சூழ்ச்சியாளர்களின் நோக்கம் அதில் தெரிகிறதுஇ' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒரு நாடு கட்டவிழ்த்த பயங்கரவாத செயலை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் ஸாரிஃப் அழைப்பு விடுத்துள்ளார்.


மொஹ்சென் ஃபக்ரிஸாதே யார்?

இரானிய அணுசக்தித்துறையில் தனித்துவம் வாய்ந்த சிறந்த விஞ்ஞானி ஃபக்ரிஸாதே. இரானிய புரட்சிகர ராணுவப்படையின் உயரதிகாரியாகவும் அவர் விளங்கினார்.


இரானிய ஆயுத திட்டங்களின் சக்திவாய்ந்த மூளையாக ஃபக்ரிஸாதே இருந்தார் என அவரை மேற்கத்திய பாதுகாப்பு படைகளின் வட்டாரங்கள் அழைத்தன.


2018ஆம் ஆண்டில் இஸ்ரேல் திரட்டிய ரகசிய ஆவணத்தின் அடிப்படையில்இ இரானிய அணு ஆயுத திட்டங்களை உருவாக்கியதே ஃபக்ரிஸாதே என்று தெரிய வருகிறது.


இரானிய அணு ஆயுத திட்டத்தின் தலைமை விஞ்ஞானி ஃபக்ரிஸாதே. இந்த பெயரை நினைவில் கொள்ளுங்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு வெளிப்படையாகவே அவரது பெயரை நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.


2015ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், இரண்டாவது உலக போரின்போது முதலாவது அணு ஆயுதங்களை தயாரித்த ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெமருடன் ஃபக்ரிஸாதே ஒப்பிடப்பட்டிருந்தார்.


இந்த நிலையில், அவரது படுகொலை தொடர்பான தமது கருத்தை இன்னும் இஸ்ரேல் வெளியிடவில்லை.

நன்றி :பிபிசி உலகச் சேவை

வடக்குக்கு வழங்கும் அவதானத்தை தெற்கின் மீதும் தாருங்கள்- இந்தியாவிடம் கோரிய இலங்கை



 வடக்குக்கும் மத்திய மலைநாட்டிற்கும் வழங்கிவருகின்ற அவதானத்தை இந்தியா சிங்களவர்கள் அதிகமாக வாழும் தென்பகுதிக்கும்  வழங்கவேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இலங்கைக்கு இன்றையதினம் விஜயம் செய்திருந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சந்தித்த போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


இந்தியா வடக்கிலும் மத்திய மலைநாட்டிலும் பாரியளவிலான வீடமைப்புத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. இதனை தென்பகுதியிலும் இந்தியா செய்யமுடியும் என்று பிரதமர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அவர் தென்பகுதிக்கும் அத்தகைய திட்டத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று கூறினார்.

பதில்பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து புதிய பொலிஸ்மா அதிபரான சீ.டி. விக்ரமரத்ன!

 



இலங்கையின் 35ஆவது பொலிஸ் மாஅதிபராக, சீ.டி. விக்ரமரத்ன இன்று (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதில் பொலிஸ் மாஅதிபராக சுமார் இரண்டு வருடங்களாக பணியாற்றிய, சீ.டி. விக்ரமரத்ன, 1986 இல் பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக சேவையில் இணைந்ததோடு, பொலிஸ் திணைக்களத்தில் 34 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட, பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் இடத்திற்கு, பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன அந்த பதவியில் சுமார் ஒரு வருடம் ஏழு மாதங்கள் பணியாற்றினார்.அதற்கு முன்பாக 13 தடவைகள் வெவ்வெறு சந்தர்ப்பங்களில் பதில் பொலிஸ்மா அதிபராக  பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



ஏற்கனவே காணப்பட்ட அரசியலமைப்பிற்கு அமைய, பொலிஸ் மாஅதிபரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாத நிலையில், தற்போது கொண்டுவரப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய, சீ.டி. விக்ரமரத்னவை பொலிஸ் மாஅதிபராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பரிந்துரையை, பாராளுமன்ற பேரவை அங்கீகரித்திருந்தது.


Thursday, November 26, 2020

இலங்கைவரும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார் !

 




இவ்வருடத்தில் இலங்கைக்கு இரண்டாவது தடவையாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று வெள்ளிக்கிழமை  (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வருகை தருவதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.

மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹ்மட் தீதியும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

இவ்வாறான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த 2014 இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த விஜயத்தின் போது இந்திய தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் இழுபறியில் உள்ள கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பாக பிரஸ்தாபிப்பார்  என எதிர்பார்க்கப்படுவதாக நியுஸ் இன் ஏசியா செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்புத்துறைமுகத்தில் சீனாவின் பிரசன்னம்  உள்ள நிலையில்  தேசியப்பாதுகாப்பை முன்னிட்டு கிழக்கு முனையம் அவசியம் என இந்தியா கருதுகின்றது எனவும் அந்தச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு துறைமுகத்தின் 70சதவீதமான வர்த்தக நடவடிக்கைகள் இந்தியாவிற்கு செல்லும் கப்பல்களை சரக்குகளைக் கையாள்வதில் தங்கியுள்ள நிலையில் இந்தியா வர்த்தக ரீதியிலும் கிழக்கு முனையத்தில் கவனம் செலுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 


சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற எத்தியோப்பிய பிரதமர் ஐநாவின் எச்சரிக்கையையும் மீறி போர்ப்பிரகடனம் !

 


2019ம் ஆண்டில் சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் எத்தியோப்பிய பிரதமர் அபீ அஹமட். ஆனால் 2020ம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் எச்சரிக்கையையும் மீறி போர்ப்பிரகடனம் செய்திருக்கின்றார். 

எத்தியோப்பியாவின் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF - Tigray People's Liberation Front) மற்றும் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்துக்கு இடையிலான பிரச்னை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அங்குள்ள மெக்கெல்லி நகரில் இறுதி கட்ட ராணுவ நடவடிக்கையை அறிவித்திருக்கிறார் அந்நாட்டுப் பிரதமர் அபீ அஹமட். 

டீக்ரே போராளிகள் சரணடைய அரசு கொடுத்த அவகாசம் புதன்கிழமையோடு முடிந்து விட்டது.

இந்த நிலையில்இ அங்குள்ள செல்போன், இன்டர்நெட் சேவைகள் என எல்லாமே துண்டிக்கப்பட்டு இருப்பதால், களத்தில் உள்ள தாக்குதல் நிலவரத்தை பிபிசியால் உறுதிப்படுத்த இயலவில்லை.

பிரதமர் அபீ அஹமட் நிலைப்பாடு யாது ?



டீக்ரே மக்கள் இயக்கத்துக்கு எதிராக, ஐந்து லட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கும் மெக்கெல்லி நகரில் தாக்குதலை நடத்த, எத்தியோபியாவின் ராணுவத்துக்கு பிரதமர் அபீ அகமட் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

மக்களைக் காக்க அக்கறை கொள்ளப்படும் அதேவேளை, மெக்கெல்லியில் சேதாரங்களைக் கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும் என அவர் கூறி இருக்கிறார்.

இதனால் மெக்கெல்லி மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் மக்கள், ஆயுதங்களை விட்டு விட்டு, வீட்டில் இருக்குமாறும், ராணுவ இலக்குகளில் இருந்து தொலைவில் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ராணுவ நடவடிக்கையின்போது வரலாற்று சிறப்புமிக்க தலங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்படாது என்றும் அபீ அகமது கூறியிருக்கிறார்.


டீக்ரே மக்கள் இயக்கம் என்ன சொல்கிறது?



டீக்ரே பகுதியில் வலுவான பிராந்திய கட்சியின் தலைவரான டெப்ரெட்சியன் கெப்ரெமீக்கெல், 'எங்கள் பிராந்தியத்தை நிர்வகித்துக் கொள்வதற்கான உரிமையைப் பாதுகாக்க, டீக்ரே வீரர்கள் இறக்கவும் தயாராக உள்ளார்கள்' என கூறியுள்ளார்.

இந்த போராட்டங்கள், ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டும் அத்துடன் அந்த பிராந்திய பகுதியில் ஒரு நிலையற்றதன்மைக்குத் தள்ளும் என்று உதவிக் குழுக்கள் அஞ்சுகின்றன.

இந்த நிலையில் ஆப்பிரிக்க யூனியன் பிரதிநிதிகள், அபீ அகமட்டைச் சந்திக்கும் நோக்கில் எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு வந்துள்ளனர்.

எப்படிப் பார்த்தாலும், அவர்கள் டீக்ரே பகுதிக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல, சமாதான பேச்சுவார்த்தைகள் வரவேற்கப்படவில்லை என்றும், எத்தியோப்பியாவின் விவகாரத்தில் தலையிடுவது சட்டப்படி தவறு எனவும் எத்தியோப்பியா தரப்பில் கூறப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

600 மக்களின் படுகொலைக்குப் பின், டீக்ரே இளைஞர் குழு ஒன்று இருப்பதாக, எத்தியோப்பிய அரசு நியமித்த மனித உரிமைகள் குழு குற்றம்சாட்டி இருக்கிறது.

ஆனால், டீக்ரே மக்கள் இயக்கம் அதை மறுத்து இருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் ஒரு சர்வதேச பக்கசார்பற்ற விசாரணைக்கும் அந்த இயக்கம் அழைப்பு விடுத்து இருக்கிறது.

                                   இவர்களுக்கு மத்தியில் என்ன பிரச்சனை?



டீக்ரே மக்கள் இயக்கம் தான், 2018-ல் அபீ அஹமட் அதிகாரத்துக்கு வரும் முன்பு வரை வலுவான அரசியல் சக்தியாக இருந்தது. இந்த அமைப்பு பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.

ஜூன் 2020-ல்இ கொரோனாவை காரணம் காட்டி, அபீ அஹமட் தேர்தலை ஒத்திவைத்ததால் பிரச்னை மோசமடைந்து விட்டது.

எத்தியோப்பியாவின் மத்திய அரசு, ஆள்வதற்கான தகுதியை இழந்துவிட்டது என டீக்ரே மக்கள் இயக்கத்தினர் கூறுகிறார்கள்.

கடந்த செப்டம்பர் 2020-ல், திக்ரே மக்கள் இயக்கத்தினர், தாங்களே ஒரு தேர்தலை நடத்தினார்கள். அதை ஆளும் மத்திய அரசு சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டது.

கடந்த 4ஆம் திகதி எத்தியோப்பிய பிரதமர் டீக்ரே மக்கள் இயக்கத்துக்கு எதிராக தாக்குதலை அறிவித்தார். எத்தியோப்பிய ராணுவத்தின் வடக்கு தலைமையகமான மெக்கெல்லியை இலக்கு வைப்பதாகக் கூறி இந்த தாக்குதலுக்கு அவர் உத்தரவிட்டார்.

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தினரில் பெரும்பாலானவர்கள், துணை ராணுவப் படையில் இருந்து வந்தவர்கள். இவர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்கள். சுமாராக 2,50,000 பேர் அதில் இருக்கிறார்கள். டீக்ரே இயக்கத்தில் படை பலம் அதிகமாக இருப்பதால் இந்த பிரச்னை நீண்ட காலத்துக்கு நீடிக்கலாம் என்றும் இதில் ஏராளமான சேதாரம் ஏற்படலாம் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.

நன்றி : பிபிசி செய்திச் சேவை