Showing posts with label article. Show all posts
Showing posts with label article. Show all posts

Sunday, September 6, 2020

கொரோனாவால் அதிக லாபத்தை ஈட்டும் ZOOM உண்மையில் பாதுகாப்பானதா?

 


கொரோனா வைரஸ் என பொதுவாக அறியப்படும் Covid-19 ஆனால் அதிகம் பரிச்சயமான வார்த்தைகளில்  Zoomஉம் ஒன்றாகும்


கொவிட்-19 தொடர்பில் உலகம் எங்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டினால் மிகவும் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று சூம் (Zoom) என்ற இயங்கலை (Online) வழியான காணொளி கலந்துரையாடல் (Video Conferencing )தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனமாகும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் இல்லங்களில் இருந்தே பணியாற்றிய பணியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், பணி தொடர்பான விவகாரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் சூம் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது.

Covid-19 ஊரடங்கால் பலரும் வீட்டில் இருந்து வந்த நிலையில் Zoom சூம் செயலி உலகமெங்கும் பிரபலமானதாக மாறியது. வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள், வீட்டில் ஓய்வு எடுப்பவர்கள் என அனைவரும் இதனை பயன்படுத்த ஆரம்பித்தனர். 

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அந்த நிறுவனத்தின் வருமானம் 350 சதவீதமாக அதிகரித்தது. அதன் இலாபமோ முன்பிருந்ததை விட 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.

வீட்டிலிருப்பவர்கள் நண்பவர்களுடன் பேசுகின்றவர்கள் அதிகமாக சூம் செயலின் இலவச சேவையையே பயன்படுத்தினர். ஆனால் நிறைய நிறுவனங்கள் சூம் சேவையைப் பெறுவதற்காக ஒப்பந்தம் செய்திருக்கின்றன. 2011ம்ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையகமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சூம் நிறுவனம் 2020 ஜூலை 31 முடிந்த நிதியாண்டில் 185.7 மில்லியன் டொலரை நிகர இலாபமாகப் பதிவு செய்தது.

இது ஓராண்டுக்கு முன்னர் நிலைமையுடன் ஒப்பிடும்போது 3,300 சதவீத கூடுதல் அதிகரிப்பாகும்.

வருமானம் 663.5 மில்லியன் டொலராக அதிகரித்தது. இது 355 சதவீத  உயர்வாகும்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சூம் நிறுவனத்தின் பங்கு விலைகளும்  கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) 28 சதவீதமாக உயர்ந்தன.


ஜூலை மாதம் வரையில் 10 பேர்களுக்கு அதிகமான ஊழியர்களைக் கொண்ட 370,000 நிறுவனங்கள் சூம் சேவைக்கு பதிவு செய்திருக்கின்றன. ஓராண்டுக்கு முன்னர் இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது இது 460 சதவீத   உயர்வாகும்.

சூம் சேவைக்கு 100,000 டொலர்களுக்கும் அதிகமாகக் கட்டணம் செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து தற்போது 988 ஆக இருக்கிறது.

எக்சோன் மொபைல் என்ற மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமும் சூம் சேவைக்குப் பதிவு செய்துள்ள நிறுவனங்களுள் ஒன்றாகும்.

------------------------------------------
Box
இணையத்தில் நாம் பணம் செலுத்தாது இலவசமாக பயன்படுத்தும் உதாரணமாக பேஸ்புக் போன்றவை எமது தனிப்பட்ட விபரங்களை மூன்றாவது தரப்பிற்கு விளம்பரங்களுக்காக விற்றுவிடுவகின்றன. அந்த நிறுவனங்களின் வருமானத்தின் பெரும்பகுதி இதிலேயே தங்கியுள்ளது. அதுபோன்றே சூம் நிறுவனத்திற்கு பணம் செலுத்தி அதன் சேவைகளைப் பயன்படுத்தும் போது இருக்கின்ற பாதுகாப்பு இலவசமாக பயன்படுத்தும் தரப்பினருக்கு இல்லை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். 
..................................



 . சூம் (zoom) என்ற பெயர்கொண்ட இந்த செயலியின் பயன்பாடு Lockdown ஊடரங்கு  காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. அப்படி இந்த செயலியின் என்னதான் இருக்கிறது ? பொதுவாக தற்போது உள்ள நிலமையில் வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்களுடன் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் காணொலிக்காட்சி மூலமும் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதிலும் காணொலிக்காட்சி மூலம் தொடர்புகொள்ளும் போது தற்போது உள்ள செயலிகளின் மூலம் ஒரே நேரத்தில் குறைந்த நபர்களிடம் மட்டுமே பேச முடியும். இதனால் பெரிய அளவில் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது சிரமமாக இருந்து வந்தது. 


இந்நிலையில் தற்போது பிரபலம் ஆகிவரும் சூம் (zoom) செயலி மூலம் ஒரே நேரத்தில் நூறு பேருடன் இணைந்து ஆலோசனை நடத்த முடியும். மேலும் இதில் உள்ள தொழில் நுட்ப வசதிகளும் மற்ற Appகளை காட்டிலும் சற்று அட்வான்ஸாக இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தற்போது இந்த செயலியை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதேபோல் வெளியூர்களில் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பிரிந்துள்ளவர்களை ஒருங்கிணைக்கவும் ,  வகுப்புகள் , உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளையும் நேரலையில் கற்றுக்கொள்ள இது எளிதாக இருப்பதால் இதன் நுகர்வு தற்போது பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. 

 

இந்த செயலியை கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஒரு கோடி பேர் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இதன் பயன்பாடு 20 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் தனது சேவையை வாரிவழங்கினாலும் இதில் தனிநபர் விபரங்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில்  இந்த செயலியை பயன்படுத்தியவர்களின் தரவுகள் சீனாவுக்கு அனுப்பப்படுவதாகவும், மக்களின் வீடியோ அழைப்புகள் Onlineல் கசிந்து வருவதாகவும், மேக் மற்றும் விண்டோஸ் நிறுவனங்கள் தங்களது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளன.


ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுடன், நிறுவன வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்தான விபரங்களை இது போன்ற செயலிகள் மூலம் விவாதிக்கும் போது எந்த அளவில் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை எனவும் வல்லுநர்கள் கருதுகின்றனர். அப்படியென்றால் இந்த செயலியை பயன்படுத்தக்கூடாதா பயன்படுத்தினால் எனது தனிப்பட்ட விபரங்கள் பாதுக்காக்கப்படாதா என்ற கேள்வி நம்முள் எழவே செய்கின்றன. இந்த செயலி மட்டுமல்ல நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் அனைத்து செயலிகளிலுமே தனி விபரங்கள் பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. 

 

தற்போதுள்ள சூழலில் நீங்கள் இந்த Zoom செயலி மட்டுமல்ல எந்த செயலியை பதிவிறக்கம் செய்ய விரும்பினாலும் அந்த செயலியில் குறிப்பிட்டுள்ள தனிநபர் பாதுகாப்பு தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை நன்கு படிக்க வேண்டும், அந்த விபரங்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் அதை பயன்படுத்தலாமே தவிர மற்றபடி அதை தவிப்பதே நல்லது.


Thursday, December 19, 2019

தேர்தல் காலகட்டத்தை தாண்டி அன்றாட வாழ்வியலில் மக்களைப் குழப்பும் போலிச் செய்திகள்


2020ம்ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் இறுதி வாரத்திலேயோ அன்றேல் மே மாத ஆரம்பத்திலேயோ நடைபெறும் வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த ஜனாதிபதித தேர்தலையொட்டிய பிரசாரங்களை அலசி ஆராய்கின்றபோது பெருமளவானவை சமூக ஊடகப் பரப்பிலேயே கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.

2010ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரே இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களைப் பாவிக்கத் தொடங்கினர். அப்போது ஜனாதிபதியாகவிருந்த  மஹிந்த ராஜபக்ஸ வெகுஜனத் தொடர்புகளுக்கான ஓர் பொறிமுறையாக பேஸ்புக் தளத்தை முதலில் பாவிக்கத்தொடங்கினார்.

 உண்மையைக் கூறுவதாயின் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதே இலங்கையில் தேர்தலொன்றில் சமூக ஊடகங்கள் வெளிப்படையான பாத்திரமொன்றை வகித்திருந்தன. அந்த தேர்தல் காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியை சமூக ஊடகங்களில் கணிசமானவர்கள் பின்தொடர்ந்திருந்த போதிலும் கூட அவரது எதிர்த்தரப்பினரோ இலகுவாக அணுகக்கூடிய இணையத்தின் திறந்ததன்மையை பயன்படுத்தி அப்போது அரச ஊடகங்கள் மீதும் சில தனியார் ஊடகங்கள் மீதும் அவர் கொண்டிருந்த இரும்புப் பிடியை முறியடிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டனர்.



கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் தற்போதுள்ள காலப்பகுதியில் தேசிய தேர்தல்களில் சமூக ஊடகம் என்பது பிரதான ஒரு விடயமாக பரிணமித்துநிற்கின்றது. பேஸ்பும் மற்றும் டுவிட்டர் தளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற அரசியல்சாசன நெருக்கடி மிகவும் வித்தியாசமாக கையாளப்பட்டிருக்கும். புpரதமரைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிரானவர்கள் தமக்கானதொரு பொதுமேடையை ஏற்படுத்திக்கொள்வதற்கு சமூக ஊடகங்களே களமமைத்துக்கொடுத்ததை மறந்துவிடமுடியாது என்ற கருத்தை அண்மையில் பிரபல ஊடகவியலாளர் அமந்த பெரேரா தனது கட்டுரையொன்றில் பதிவுசெய்திருந்தார்.


சமூக ஊடகங்களின் வரவு அரசாங்கங்கள் செய்தி மீது கொண்டிருந்த ஒருவிதமான ஏகபோகத்தன்மையை அன்றேல் இரும்புப்பிடியை கணிசமானளவில் தளர்த்துவதற்கு வழிகோலியது.

கடந்தாண்டு அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானபோது அவரது பதவியேற்பு தொடர்பான செய்தி இந்த நாட்டிலுள்ள 21மில்லியன் மக்களுக்கு ஒரு டுவீட் செய்தி மூலமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு நிகழ்வை படம்பிடிப்பதற்கு ஊடகங்கங்களுக்கு ஜனாதிபதி தடைவிதித்த ஒரு நிலைமையை எதிர்கொண்ட ஒரே நாடாக இலங்கையே இருந்திருக்க வாய்ப்புண்டு. அங்கு பிரசன்னமாகியிருந்த அமைச்சர்களும் ஏனையதரப்பினரும் தமது திறன்கைபேசிகளை பயன்படுத்தி வெளியிலுள்ள மக்களுக்கு என்ன நடைபெறுகின்றது என்பதை தெரியப்படுத்தியிருந்தனர்.

திறன்கைபேசிகளோ அன்றேல் டுவிட்டரோ அன்றேல் இவ்விரண்டுமோ இல்லாமல் இருந்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும் எனக் கற்பனை செய்துபாருங்கள்.
அரசியல்சாசன நெருக்கடிக்கு முன்னரும் பின்னரும் அரசாங்கம் சமூக ஊடகங்களைத் முடக்கியதனை நாம் கண்ணுற்றுள்ளோம். திகண கலவரத்தையடுத்து 2018 மார்ச் மாதத்தில் முதலிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்தும் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்தன.
சமூக ஊடகங்களை இலங்கையர்கள் மீது எங்ஙனம் தாக்கம் செலுத்துகின்றது என்பது தொடர்பான உத்தியோகபூர்வமான ஆய்வுகள் இல்லையென்ற போதிலும் இலங்கையிலுள்ள 21 மில்லியன் சனத்தொகையில் 7மில்லியன் மக்கள் அதாவது 30 வீதமானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.என்பது நிருபணமாகியுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்களைக் கொண்ட இசைக்கலைஞர் ஈராஜ் வீரரத்ன தனது பதிவுகளுடாக கோத்தபாயவிற்கு ஆதரவைச் சேர்க்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னெடுத்திருந்தார்.இதேபோன்று இன்ஸ்டகிராம் தளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானர்களை ரசிகர்களாக கொண்டுள்ள இலங்கை மொடல் ஒருவர் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். இன்னுமொரு பிரபல யூடிப் பயனாளர் போலி தேர்தல் பெறுபேறு உட்பட பல்வேறு தில்லுமுல்லுகள் நிறைந்த வீடியோவை வெளியிட்டபோது அதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன. அப்படியான ஆதரவுப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இனிவரும் காலத்திலும் அடிக்கடி வர வாய்ப்புக்கள் உள்ளன.

பொது தளம் என்பது தற்போது இவ்வாறான திருகுதாளங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை கவலைக்கிடமானது. வரவர இத்தகையவர்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அவதானத்தில் வைத்திருப்பதும் அவர்கள் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றி நடக்கின்றனரா என பார்ப்பதும் கடினமாகிக்கொண்டுவருகின்றது.  எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசைகளும் போலியான தேர்தல் பெறுபேறுகளை ஒளிபரப்பமாட்டாது. ஏனெனில் தெளிவான சட்டங்களும் ஒழுங்குகளும் அவர்களுக்கென முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் யார் யூடிப் வீடியோ தொடர்பில் பொறுப்புக்கூறுவது? யூடிப் தளமானது அதில் உள்வாங்கப்படும் வீடியோக்களிலுள்ள விடயதானம் தொடர்பாக எவ்விதமான பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளாத ஒருதளமாகவே நோக்கப்படுகின்றது. இவ்வாறான விடயதானம் என்பது பிரச்சனைக்குரியதாக இருந்தாலும் கூட அதுதொடர்பாக மக்களின் அதிகரித்த முறைப்பாடுகளின் மத்தியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்குள்ளாக ஒரு மில்லியன் பேர் அதனைப் பார்வையிட்டுவிட்டனர் என்பது கரிசனையை ஏற்படுத்துகின்றது.

அண்மையில் கிழக்குமாகாணத்தின் பாணமயில் அமைந்துள்ள முகுது மாகா விகாரை என்ற பௌத்த ஸ்தானத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக ஈராஜ் உட்பட சிலர் பெரும் பிரசாரத்தை சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் மூலம் முன்னெடுத்து சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முற்பட்டனர். ஆனால் பதும் கேனர் என்ற சுயாதீன ஊடகவியலாளர் அங்கு சென்று நேரில் இடத்தைப் பார்வையிட்டு அங்குள்ள பௌத்த தேரரை நேர்காணல் செய்து உண்மையை வெளிப்படுத்தியிருந்தார். அந்த சிலைகள் நிற்கும் நிலையில் வைக்கப்படுவதற்காக தற்போது தரையில் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதே தவிர அவை உடைக்கப்படவில்லை என்பதே அவர் வெளிப்படுத்திய உண்மை. தேர்தல்காலத்தில் இவ்வாறான போலிச் செய்தியின் உண்மையான பக்கம் வெளிப்படுத்தப்படாவிடின் மக்களை அச்சங்களில் குளிர்காய நினைப்பவர்களுக்கு அது அனுகூலமாக அமைந்துவிடும்.

சமூக ஊடகங்களைக் கண்காணித்து பிரச்சனைக்குரிய பதிவுகள் தொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் உறுதியளித்தபோதும் அவர்களால் எதனையும் பெரிதாகச் செய்யமுடியவில்லை. போலிச் செய்திகள் மற்றும் காழ்ப்புணர்வுமிக்க மோசமான பதிவுகளை கண்காணித்தல் மற்றும் அவற்றை நீக்குதல் தொடர்பாக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு பேஸ்புக் நிறுவனத்தினருடன் கலந்துரையாடல்களை நடத்தியபோதும் ஜனாதிபதித் தேர்தலில் பேஸ்புக் மூலமான போலிச் செய்திகளையோ வெறுப்புப் பதிவுகளையோ நீக்க முடியவில்லை. நடைமுறையில் இதனைச் செய்வது எந்தவகையிலும் இலகுவானதாக இருக்கப்போவதில்லை.  விரைவாக இவற்றை இனங்கண்டுபிடிப்பதற்கு உரிய வளங்கள் உள்ளதா என்பது முக்கியவிடயமாகும். பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களைப் பார்க்கும் போது ஏற்கனவே அவை ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான சொற்தாக்குதல்களால் நிறைந்துகிடக்கின்றன. இந்தப்பதிவுகளுக்கு எதிராக எந்தவிதமான வினைத்திறன்மிக்க தடுப்புச் செயற்பாடுகளையும் காணமுடியவில்லை.

கடந்தகாலத்தைப் போன்று அவற்றை இனங்காண்பதும் ஆவணப்படுத்துவதும் மட்டும் போதுமானதல்ல. தற்போது அதனையும் தாண்டிய நகர்வுகளை முன்னெடுப்பதே அவசியமானதாகும்.




அருண் ஆரோக்கியநாதன்

Monday, August 26, 2019

ஜனாதிபதி தேர்தல் வெற்றி கணக்கு!



'தேர்தல்களில் யாருக்கு வாக்களிப்பது எனத் தீர்மானிக்காமல் இருப்பவர்களின் வாக்குகளே வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாகும்.'- அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் இவான் இஸார்




எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பொதுஜன பெரமுணவும் ஜனதா விமுக்தி பெரமுணவும் ( ஜேவிபி) ஏற்கனவே அறிவித்துவிட்டன. ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற இழுபறி ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நீடித்துக்கொண்டே செல்கின்றது. பிரதான கட்சிகளைத் தவிர சுயேட்சையாகவும் நாகனந்த கொடிதுவக்கு போன்றவர்கள் போட்டியிடலாம் என்ற ஊகங்கள் இருக்கின்றன. 



கடந்த தேர்தலிலும் பார்க்க அதிகவேட்பாளர்களைக் கொண்டதாக ஜனாதிபதி தேர்தல்களம் அமைந்தாலும் யார் இறுதியில் வெற்றிபெறுவதற்கு அதிக சாத்தியம் உள்ளதென்பதை கடந்த கால தரவுகளை முன்னிறுத்தி ஆராய்வோம்.

கடந்த தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சியைப் பிரதான கட்சியாகக்கொண்ட புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 5,768,090  வாக்குகளையும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ரத்னாயக்க ஆராச்சிகே சிறிசேன 18.174 வாக்குகளையும் எமது தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட நாமல் அஜித் ராஜபக்ஷ 15,726 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 


2015 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர்
 போட்டியிட்ட கட்சி 
பெற்ற வாக்குகள்
மைத்திரிபால சிறிசேன
புதிய ஜனநாயக முன்னணி
6,217,162
மஹிந்த ராஜபக்ஷ
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
5,768,090  
ரத்னாயக்க ஆராச்சிகே சிறிசேன 
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி
18,174
நாமல் அஜித் ராஜபக்ஷ 
எமது தேசிய முன்னணி 
15,726


கடந்த ஏப்ரல் மாதத்தில் உக்ரேய்ன் நாட்டில் இடம்பெற்ற தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேராத அரசியலுக்கு முற்றிலும் வெளியே இருந்து போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் வொளோடிமிர் ஷெலன்ஸ்கி மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தார். அப்படியானதொரு ஆச்சரியம் அண்மைய எதிர்காலத்தில் இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அரசியல் ஆய்வாளர்களுடனான கலந்துரையாடல்களின் போது உணரமுடிந்தது. L


இலங்கையின் கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களை ஆராய்ந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அன்றேல் அதனைத் தலைமையாகக்கொண்ட கூட்டணி அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அன்றேல் அதனைத் தலைமையாகக்கொண்ட கூட்டணியே வெற்றிபெற்றிருந்தது. இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடத்தில் பொதுஜன பெரமுண இருக்கின்றது.. அந்தவகையில் பொதுஜன பெரமுண தலைமையிலான கூட்டணி அன்றேல் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியிலிருந்து போட்டியிடுகின்ற வேட்பாளருக்கே இறுதி வெற்றிக்கான வாய்ப்பு இருக்கின்றது. 








இம்முறை தேர்தலில் களமிறங்கியிருக்கும் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சட்டத்தரணி சமூக செயற்பாட்டாளர் நாகனந்த கொடித்துவக்கு ஆகியோhர் கடந்த தேர்தலில் சிறிசேனவிற்கு வாக்களித்த தரப்பினரின் வாக்குகளிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அரசியல் விமர்சகர்கள் சுட்டி;க்காட்டுகின்றனர்.  2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேவிபிக்கு 710,932 வாக்குகள் கிடைத்திருந்தன. அநுர குமார திஸாநாயக்க என்ற ஆளுமைமிக்க அரசியல் வாதியின் மீது மக்களுக்கு நம்பிக்கையிருந்தாலும் அவர் சார்ந்து நிற்கின்ற ஜேவிபியிடம் நாட்டின் எதிர்காலத்தை கொடுப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் இன்னமும் தயாராகவில்லை. அப்படிபபார்க்கையில் எதிர்வரும் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்கவால் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைத் தாண்டிப் பெறுவதற்கு வாய்ப்பில்லை. கடந்த 2015பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி 543,944 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் என்று வருகின்ற போது யாரால் இறுதி வெற்றியைப் பெறமுடியும் என்ற எண்ணத்திலேயே அதிகமானவர்கள் வாக்களிப்பதனால் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஜேவிபி பெற்ற வாக்குகளை விடவும் குறைவான வாக்குகள் அநுர குமார திஸாநாயக்கவிற்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போதைய நிலைவரப்படி அநுர குமார திஸாநாயக்கவால் சுமார் ஐந்து லட்சம் வாக்குகளையே அதிகபட்சமாகப் பெறமுடியும் என அரசியல் அவதானிகளின் கருத்துக்கள் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது. 

சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என பேசப்படும் சட்டத்தரணி நாகனந்த கொடித்துவக்கு தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு அதிருப்தி வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய அதிகபட்ச வாக்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் எதிர்வுகூறலாக இருக்கின்றது.


கடந்த தேர்தலில் போட்டியிட்ட வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானமின்றி இருந்தாலும் யார் வரக்கூடாது என்பதில் திட்டவட்டமான முடிவுடன் இருப்பதாக கருத்தாடல்களின் போது உணர்ந்துகொள்ளமுடிகின்றது. மஹிந்த ராஜபக்ஸவிற்காவது ஒரு ஜனநாயக முகம் இருக்கின்றது அவர் மக்களை வசீகரிக்கக்கூடிய ஆகர்ஸியம் மிக்க தலைவர். ஆனால் கோத்தபாய என்று வரும் போது அவரை இராணுவ முகத்துடனே மாத்திரமே மக்கள் பார்பார்கள். கடந்த தேர்தலில் மஹிந்தவிற்கு வடக்கு கிழக்கில் கிடைத்த வாக்குகள் கூட எதிர்வரும் தேர்தலில் கோத்தபாயவிற்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று சுட்டி;காட்டப்படுகின்றது. இலங்கையில் மிக அண்மையில் இடம்பெற்ற தேர்தலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அளவுகோலாக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை பார்க்கின்றபோது அந்த தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த 337,877 வாக்குகள் கிடைத்திருந்தன.  கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 515,963  வாக்குகள் கிடைத்திருந்தன.  நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை முற்றாக நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் காணப்பட்டபோதும் ராஜபக்ஸ தரப்பினர் மீண்டும் வந்துவிடுவார்கள் அப்படி வந்தால் நல்லாட்சியில் காணப்பட்ட நிம்மதியான வாழ்க்கை பறிபோய்விடும் என்ற அச்சம் காணப்படுகின்றது. அந்தவகையில் ராஜபக்ஷவின் கடந்த காலத்தை நினைவூட்டினாலேயே தமிழ் மக்களின் வாக்குகளை மீண்டும் தக்கவைத்துக்கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு உள்ளது.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய தேர்தல்களில் இன்னமும் காத்திரமான சக்தியாக உருமாறவில்லை. ஈபிடிபி அதற்குரிய வாக்குவங்கியை தொடர்ந்து தக்கவைத்துவருகின்றபோதும் அது ஒட்டுமொத்த வாக்களில் வெறுமனே அரைச்சதவீதத்தையும் தொடவில்லை.  

முஸ்லிம் வாக்குகளைப் பொறுத்தவரை 2015ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்களித்த தரப்பினர் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் எழுந்த சூழ்நிலைகளால் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. 

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட சூழல் தேசிய பாதுகாப்பு விடயத்தில் கரிசனையை உருவாக்கிவிட்டுள்ளது. இதனால் தேசியவாதத்தை முன்னிறுத்தும் தரப்பினருக்கு அவர்களில் பெரும்பான்மையான வாக்குகள் அளிக்கப்பட வாய்ப்புண்டு. ஈஸ்டர் தாக்குதலில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள்மத்தியில் அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதும் வெறுப்பு இருந்தாலும் ஒட்டுமொத்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் அதே நிலைப்பாட்டில் இல்லை.

தமிழ் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் 2015ம் ஆண்டு போன்றே இம்முறையும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற எடுகோளின் அடிப்படையில் அநுர குமாரவும் நாகனந்தவும் சுமார் ஆறுலட்சம் வாக்குகளை இந்தக்கூட்டணிக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளில் இருந்து பிரித்துச் சிதறிடித்துவிடுவார்கள் என்ற எடுகோளின் அடிப்படையிலும் நோக்கினால் எவ்வாறு இக்கூட்டணியால் வெற்றிபெறமுடியும் என்பது எமக்கு முன்பாக உள்ள கேள்வியாகும். 

இந்த நிலையில் கடந்த தேர்தலின்  பின்னர் புதிய வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற 12 லட்சம் இளம் வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கப்போகின்றது என்பதும் எதிர்வரும் தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய மிகப்பெரும் காரணிகளில் ஒன்றாகும். இந்தப்புதிய வாக்குகளை ஈர்ப்பதற்கு கட்சிகள் என்ன வியூகங்களைக் கையாளப்போகின்றன என்பதிலேயே தேர்தலின் இறுதி வெற்றி தோல்விகள் தங்கியுள்ளன.  தேர்தலில் வெற்றி பெறுவதென்பது ஒரு கலை.  சிறப்பான முறையில் பிரசார உத்திகளை வகுத்து செயற்படுகின்றவர்கள் மக்கள் அலையை உருவாக்கி இறுதிவெற்றியை தம்வசப்படுத்துவதைக் கண்ணுற்றிருக்கின்றோம். இளம் வாக்காளர்கள் அதிகமாக சமூக வலைத்தளங்களில் உலாவருபவர்களாக உலகின் பல பாகங்களிலும் நடைபெறுகின்ற விடயங்களை உடனுக்குடனே அறிந்துகொள்பவர்களாக இருப்பதனால் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் புதிய வாக்காளர்களான இளம் தலைமுறையினரை ஈர்ப்பதற்கு உதவும். 

ஆகமொத்தத்தில் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியென்பது புதிய வாக்காளர்களை தம்வசப் படுத்துவதிலேயே தங்கியிருக்கப்போகின்றது என்பது திண்ணம்.

அருண் ஆரோக்கியநாதர்


Wednesday, August 14, 2019

கோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா?


அருண் ஆரோக்கியநாதர்

பலரும் எதிர்பார்த்ததைப் போன்றே பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவது பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு மல்லிகைப் பூ தெளித்த மலர்ச்சாலையாக இருக்குமா ? அன்றேல் முட்கள் நிறைந்த கடினப்பாதையாக இருக்குமா ? என்ற கேள்வி சிறுபான்மை மக்கள் மத்தியில் எழுவதில் ஆச்சரியமில்லை. 

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை ஒரு அளவுகோலாக வைத்து எதிர்வரும் தேர்தலை நோக்கினால்  ராஜபக்ஸ தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால்  பல விடயங்கள் ஒன்றுகூடிவரவேண்டியது அவசியமாகும்.



2015ம் ஆண்டு தேர்தலின் போது இலங்கையின் பெரும்பான்மையினராக விளங்கும் பௌத்த சிங்கள (70% ) மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற போதும் மஹிந்த ராஜபக்ஸவினரால் தேர்தலை வெல்ல முடியவில்லை. அந்த தேர்தலில்  சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்ற அதேவேளை மஹிந்த ராஜபக்ஸவால்  5,768,090 (47.58%)வாக்குகளையே பெறமுடிந்தது.

ஏப்ரல் மாதத்தில்  இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து  சிங்கள பௌத்த தேசியவாதம் நாட்டில் அலையாக உருவெடுத்த நிலையில் சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கை ராஜபக்ஸ தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு சிங்களவர்கள் மத்தியில் அதிகமாக இன்னமும் இருக்கின்ற நிலையில்  சிங்கள மக்களில் 80 சதவீதமானவர்கள்  கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்குமிடத்து அவர் வெற்றிபெறுவதைத் தடுத்துவிடமுடியாது. ஆனால் சிங்கள மக்களிலும் ஜனநாயகத்தை மதிக்கின்ற உண்மையையும் பொய்மையையும் பிரித்தறியும் அறிவுடைய கணிசமானவர்கள் உள்ளனர்.  இந்த நிலையில் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வெள்ளைவான் கோத்தபாயவிற்கு வாக்களித்திட முன்வருவது சாத்தியமில்லை.

எதிர்வரும் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்து அவர்களின் தேசிய உணர்வை என்பதிலும் துவேச உணர்வை  தூண்டிவிடும்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். இதன் மூலம் சிங்கள மக்களில் பெருமளவானோரின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருக்கலாம் . அது நடந்தால் கோத்தபாய சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே வெற்றிபெற்றுவிடலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று மூன்றுமாதங்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ள நிலையிலும் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. 

சிறுபான்மையினரிடையே குறிப்பாக தமிழ் மக்களிடையே கோத்தபாய என்ற பெயரைக் கேட்டாலே அச்சம் அவர்களை ஆட்கொள்வது இயல்பானது. இதற்கு அவரது காலத்தில் அரங்கேறிய வெள்ளைவான் கடத்தல் படுகொலைகள் இறுதிப்போர் கொடூரங்களை நினைத்தாலே போதுமானது. அவ்வாறானவரை தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை.

  ராஜபக்ஸவினரோடு இணைந்துநிற்கின்ற சில தமிழ் கட்சிகளுக்காக சில ஆயிரம் வாக்குகள் வேண்டுமானால் கிடைக்கக்கூடும். ஆனால் அது இறுதிவெற்றிக்குத் தேவையான ஆதரவாக பரிணமிக்க வாய்ப்பில்லை. மற்றைய முக்கிய வாக்குவங்கியான முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து அரங்கேறிய அடாவடி நடவடிக்கைகளும் வெறுப்புப்பிரசாரங்களும் அவர்கள் மத்தியில் இன்னமும்  வேதனைநிறைந்ததாகவும் விரக்தியைத்தருவதாகவும் அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர்களது வாக்குகளும் கோத்தபாயவிற்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெறும் நோக்குடன் கோத்தபாய முஸ்லிம் கட்சிகள் சிலவுடன் உடன்படிக்கைக்கு செல்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.


அதேபோன்று  வடமாகாணத்தின்  முன்னாள் முதலமைச்சர் உட்பட சிலரை வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை உடைக்கும் திட்டத்தை ராஜபக்ஸதரப்பினர் வகுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அவர்களின் எண்ணம் ஈடேறினாலும் அது சில ஆயிரம் வாக்குகளையே சிதறடிக்கக்கூடும் . 

இப்படிப் பார்க்கையில் கோத்தபாய ராஜபக்ஸவின் ஜனாதிபதி கனவு நிறைவேறுவதற்கு இன்னமும் பல தடைகளைத் தாண்டியாகவேண்டியுள்ளது. 

ஒரு வீரனுக்கு அழகு இறுதிவரை போராடிப்பார்ப்பது. கோழைதான் உண்மையாக தோற்றுப்போகுமுன்பே தோல்விப்பயத்தில் தோல்வியை ஒப்புக்கொள்பவன்.  கோத்தபாய ராஜபக்ஸவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுண அறிவித்த பின்னரே ஏதோ அவர் ஜனாதிபதியாக தெரிவாகிவிட்டதாக  அனேகமான ஊடகங்களும் அடிவருடி அரசியல்வாதிகளும் காவடியெடுத்து ஆலவட்டம் வீசுகின்றதைக் காணமுடிகின்றது.

 2015ம் ஆண்டில்  நாட்டின் அரச இயந்திரம் பாதுகாப்பு படைகள் ஊடகங்கள் என அனைத்து முக்கிய விடயங்களும் கைவசம் இருந்தபோதும்  ராஜபக்ஸ தரப்பினர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட  மக்களின் ஆதரவோடு தோற்கடிக்கப்பட்டனர். அதேபோன்று கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி முதல் 52 நாட்களுக்கு அரங்கேறிய  அரசியல் சதி  நடவடிக்கையும் ஜனநாயகத்தின் மீது அசையா நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவோடு முறியடிக்கப்பட்ட வரலாறுகள் நம் கண்முன்னே நிழலாடுகின்றன. உண்மையாவே ஜனநாயகப்பற்றுணர்வோடு செயற்படும் இடத்து எதிர்வரும் தேர்தலிலும் ஜனநாயகத்திற்கு ஆதரவான  சக்திகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் முற்றுமாய் அற்றுப் போய்விடவில்லை என்பது திண்ணம்.

Sunday, February 18, 2018

மலர்ந்துள்ள பூமொட்டு ஆட்சிக்கவிழ்ப்பிற்கான அத்திவாரமா?


2016ம் ஆண்டு டிசம்பர் 28திகதி வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை நடத்திய மஹிந்த ராஜபக்ஸ 2017ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதாக திடசங்கற்பத்தோடு கருத்துவெளியிட்டிருந்தார். அப்போது  அவரது கருத்தை பதவியில் இருந்து தோற்கடிக்கட்ட நாட்டுத்தலைவரின் நப்பாசை என்று எண்ணியர்கள் பலருண்டு. இதிலே ஊடகவியலாளர்கள் பலரும் அடங்குவர். ஆனால் 2017ம் ஆண்டு கடந்து அதிககாலம் செல்லும் முன்பாகவே ஆட்சிக்கவிழ்ப்பிற்கான அத்திவாரம் போடப்பட்டுவிட்டதை மலர்மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஸ ஆதவு பொதுஜன பெரமுண கட்சியானது நேற்று சனிக்கிழமை (பெப்ரவரி 10ம் திகதி) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஈட்டியுள்ள அமோக வெற்றி கோடிட்டுக்காட்டுகின்றது.

அடுத்து நடக்கப்போவது என்ன? 

உள்ளூராட்சி சபைத்தேர்தலில் பெற்றுள்ள பெரு வெற்றியை அடுத்து மஹிந்த தரப்பினர் வெறுமனே உள்ளூரட்சி மன்றங்களை அபிவிருத்திசெய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள். மாறாக இதனை ஒரு ஏவுதளமாகக் கொண்டு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பீரங்கித்தாக்குதல்களை தொடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.  மஹிந்த ராஜபக்ஸ தரப்பு நிச்சயமாக பிரதமர் பதவியை பெறுவதற்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கும் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் சாத்தியமே அதிகமாக உள்ளது.  மஹிந்த தரப்பிற்கு ஆதரவாக தற்போது 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் தானே உள்ளனர். அப்படியிருக்கையில் எப்படி பிரதமர் பதவியைக் கைப்பற்றுவது சாத்தியமாகும் என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பு வெற்றிபெற்ற விதமும் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவும் அடுத்துவரும் நாட்களில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பை நோக்கி பலரும் செல்வதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மூழ்கின்ற படகில் சவாரி செய்வதற்கு எவருமே விரும்பமாட்டார்கள் தம்மைக் கரைசேர்க்கக்கூடிய படகிலே சஞ்சரிக்கவே விரும்புவார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. அந்தவகையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தாம் வெற்றிபெறக்கூடிய அணியி;ல் இருக்கவே பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புவார்கள். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்கள் அந்தவகையில் முதற்கட்டமாக அடுத்துவரும் நாட்களிலேயே மஹிந்தவின் மடியிலே சரணடைந்துவிடுவதை பார்க்க முடியும். அவர்களைப் பொறுத்தவரையில் கட்சியின் ஒற்றுமையையும் எதிர்கால நலன்களையும் கருத்தில் கொண்டே இந்த முடிவிற்கு தள்ளப்பட்டு விட்டதாக எளிதாக காரணத்தை கூறி தமது செயலை நியாயப்படுத்தக் கூடும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது ஒட்டுமொத்தமாக பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 95ஆக இருக்கும் நிலையிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 106 ஆக இருக்கின்ற நிலையிலும் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளவும் அதன் மூலமாக அரசாங்கத்தை அமைப்பதற்கும் தனியே சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் எடுத்தால் போதுமானதன்று. இந்நிலையில் தற்போதுள்ள ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரை எடுக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்படும். உள்ளூராட்சி தேர்தலில் ஈட்டிய அபார  வெற்றியானது மஹிந்த தரப்பினருக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரை தம்பால் கவர்ந்திழுப்பதற்கான ஊக்கியாக அமையும். 2014ம் ஆண்டில் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஹரின் பெர்ணான்டோவை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி பெற்ற வெற்றியானது எப்படி 2015 ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் ஓகஸ்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிகளுக்கு களமமைத்ததோ அவ்வாறே 2018ம் பெப்ரவரியில் இடம்பெற்றுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றியானது 2020ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் கட்சிகளின் வெற்றிப்பாதையை தீர்மானிக்க பெரும் வாய்ப்புண்டு என்றால் மிகையல்ல.


இந்தத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய செய்தி யாது?

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் பெரும் எண்ணிக்கையானவர்கள் தமது தலைவன் மஹிந்த ராஜபக்ஸவே என நம்புவது துலாம்பரமாகியுள்ளது. மைத்திரிபால சிறிசேனவை தமது தலைவனாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. 

இம்முறை தேர்தலில் தமது முக்கிய பிரசார விடயங்களாக மஹிந்த தரப்பு தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அதிக அதிகாரங்களைக் கொடுத்து நாட்டைப் பிளவுபடுத்த முற்படுகின்றது என்பதும் எவ்வித அபிவிருத்தியும் செய்யாமல் நாட்டை பொருளாதார அதளபாதாளத்தில் தள்ளுகின்றது என்பதையுமே முன்வைத்திருந்தது. இவற்றை பெரும்பாலான சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளமையை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றது. இவற்றைவிடவும் முக்கியமானதாக போரிலே வெற்றிபெற்ற அரச படைத்தரப்பை பொறுப்புக்கூறல் பொறிமுறைகளூடாக இந்த அரசாங்கம் பழிவாங்க முற்படுகின்றது என்ற மஹிந்தவின் வாதத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இதனை நோக்க முடியும். 

தேர்தலுக்கு  நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து ஊழல் மோசடிவிடயத்தில் காத்திரமான செயற்பாட்டை எதிர்பார்த்தவர்கள் ஏதுமே உருப்படியாக நடக்கவில்லை என்ற ஏமாற்றமும் அவர்களுக்கு எதிரான விரக்தி வாக்குகளாக விழுந்துள்ளதை உணர்ந்துகொள்ளமுடிகின்றது. அதனிலும் பிணைமுறி மோசடி விடயத்தில் அரசாங்கத்தின் மீது குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் மீது மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளதை தேர்தல் முடிவுகள் உணர்த்திநிற்கின்றது. ஊழலை ஒழிப்போம் என பதவிக்கு வந்தவர்களே ஊழலில் ஈடுபடுவதை மக்களால் சகித்துக்கொள்ளமுடியவில்லை.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கைப் பொறுத்தவரையில் கடந்தபல தேர்தல்களில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றிவாகைசூடி ஏறத்தாழ ஏகப்பிரதிநிதிகளாக  பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அதன் அரசியல் பாதையை செப்பனிடவேண்டும் என்ற செய்தியை மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழர்களின் அரசியல் வாழ்வியலில் ஆக்கபூர்வமான வகிபாகத்தை வகிக்க வேண்டும் என மக்களால்விரும்பிக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பமாகவும் இதனை நோக்கமுடியும். சுரேஷ் பிரேமச்சந்திரனைப் பொறுத்தவரையில் தனது அரசியல் எதிர்காலத்தை  அவர் அணுஅணுவாக ஆராயவேண்டிய நிலைமையை தேர்தல் முடிவு பிரதிபலிக்கின்றது. நெருக்கடியான போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட்ட ஆனந்தசங்கரியை தமிழ் மக்கள் எப்போதோ நிராகரித்துவிட்ட நிலையில் அவரோடு கூட்டுவைத்துக்கொண்டமை சுரேஷ் பிரேமச்சந்திரனின் அரசியல்ஞானத்தையே கேள்விக்குட்டுத்துகின்றது. தமிழ் மக்களும் இதனை வாக்குகளால் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.



காத்திருக்கும் சவால்கள் 

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுவிட்டோம் என்பதற்காக நினைத்தபடி மஹிந்த தரப்பினரால் செயற்படமுடியாது. ஜெனிவா சவாலை எதிர்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தேவையாக உள்ளநிலையில் அவரை வெறுமனே ஒரங்கட்டிவிடமுடியாது யாதார்த்தநிலை உண்டு. தமிழ் மக்களே விட்டாலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஜெனிவாவை மேற்குலக நாடுகள் துரும்பாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளமையால் அரசியல் களத்தில் ரணிலின் பிரசன்னத்தை வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது. 

எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் மல்லிகைப் பூ தெளித்த மலர்ச்சாலையாக அது இருந்தவிடமாட்டாது மாறாக முட்கள் நிறைந்த பாதையாகவே இருக்கும். குறிப்பாக கடன் சுமை என்பது இலங்கையால் தாங்கிக்கொள்ளமுடியாத நிலையை எட்டியிருக்கின்றது. அரச ஊழியர்களுக்கு மாதாந்தச்சம்பளம் கொடுப்பதற்கே உள்நாட்டு வெளிநாட்டு கடன்களைப் பெறவேண்டிய நிலை உள்ளது என்றால் நிலைமையின் பாரதூரம் விளங்கும். லாபம் தராத பாரிய கட்டுமானங்களில் முதலீடுகளைச் செய்ததன் பிரதிபலனாக அதற்காகப் பெற்ற கடன்களைத்திருப்பிச் செலுத்தும்வதில் கடும் சவால்கள் காணப்படுகின்றன. இலங்கையின் ஒட்டுமொத்த கடன்களின் உண்மையான விபரம் என்ன என்று தெரியவில்லை என கணக்காய்வாளர் நாயகம் கடந்தவாரத்தில் கூறியிருந்தார். இதுவரை மதிப்பிடப்பட்ட தொகைக்கு அமைய 10 ரில்லியன்களாக கடன்களின் தொகை அமைந்துள்ளது. அதாவது பத்து லட்சம் கோடிகள் என்பதாக அந்த தொகை அமைந்திருகின்றது. அரச வருமானத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை கடன்களை வட்டியுடன் மீளச் செலுத்துவதற்கே செலவிட வேண்டிய நிலைமை காணப்படுகின்றதால் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். 

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு மட்டுமன்றி உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம் ஆகியவற்றிடம் இருந்து பெற்ற கடன்களுக்காகவும் பொருளாதார, நிதிநிலை, நிர்வாக, அரசியல்யாப்பு மறுசீரமைப்புக்களை முன்னெடுக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இவற்றை யாராலும் தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு புதிதாக அனைத்தையும் ஆரம்பிப்போம் என்று கூறமுடியாது.  



ஏகலைவன்

Sunday, January 28, 2018

சாக்கடை அரசியலில் மூழ்கிப்போகும் எதிர்பார்ப்புக்கள்



'அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரியும் இல்லை' ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவான 96 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தனித்து ஆட்சியமைக்கத்தயார் தயார்' - இரத்தினபுரியில் தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் ஜனவரி 27ம் திகதி ஜனாதிபதி ஆற்றிய உரை

'அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை' – கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் ஜனவரி 26ம்திகதி நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி 

என்னுடைய பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றது எனப் பலரும் அறிய விரும்புகின்றனர். அவர்களுக்கு என்னிடம் பதிலொன்றுள்ளது. ஊழல் அரசியல்வாதிகளும் கொலையாளிகளும் கள்வர்களும் நீதியின் முன்பாகக் கொண்டுவரப்படும் நாளிலேயே என்னுடைய பதவிக்காலம் நிறைவடைகின்றது. – தனது டுவிட்டர் சமூகத்தளத்தில் ஜனவரி 18ம்திகதி ஜனாதிபதி 

கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சுக்களையும் அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் உற்றுநோக்குகின்றபோது வித்தியாசமான போக்கு எதிரொலிப்பதை அரசியல் களத்தை பின்தொடர்பவர்களால் மட்டுமன்றி அவ்வப்போது செய்திகளைப் பார்க்கின்றவர்களால் கூட உணர்ந்துகொள்ளமுடியும். 
ஜனாதிபதியின் தொனியிலும் போக்கிலும் ஏன் இந்த மாற்றம் என்று பலரும் அங்கலாய்ப்பது இயல்பானதே! 2015ம் ஆண்டில் உயிரச்சுறுத்தலின் மத்தியில் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தால் ஏற்பட்ட முக்கியமான எதிர்பார்ப்புக்கள் கானல் நீராகப் போய்விடுமா என்பதே அங்கலாய்ப்பிற்கான முக்கியகாரணமாகும். 

பெப்ரவரி 10 ம்திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்காகக்கொண்டே ஜனாதிபதி இவ்வாறான அதிரடிக்கருத்துக்களை வெளியிட்டுவருகின்றார் என்பது பரவலான அபிப்பிராயமாக இருந்துவருகின்றது. 

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக மைத்திரி மற்றும் மஹிந்த அணிகளாக பிளவுபட்டுக்கிடக்கும் நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் முதலாவது இடத்தினைப் பெறும் எனற நிலையில் எப்படிப்பட்டாயினும் தனது அணியின் வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டுவிடவேண்டும் என்ற முனைப்போடு ஜனாதிபதி சிறிசேன கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாகவே அரசியல் விமர்சகர்களில் சிலர் கூறுகின்றனர். 

உள்ளூராட்சித் தேர்தலில் மைத்திரியின் அணியை விடவும் மஹிந்த ராஜபக்ஸவை தலைவராக வரிந்துகட்டிக்கொண்டு பூமொட்டுச் சின்னத்தில் களமிறங்கும் தரப்பினர் இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டால் மைத்திரி மீதான அழுத்தங்கள் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. 

நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவும் செயற்படுகின்ற நிலையிலேயே அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மஹிந்த அணியின் பக்கமாக சாய்கின்றபோது தேர்தலூடாக மஹிந்தவின் பலம் உறுதிசெய்யப்படுமிடத்து மேலும் அதிகமானோர் சிறிசேனவின் பக்கத்திலிருந்து மஹிந்த பக்கமாக வெளிப்படையாக தாவத்தொடங்கிவிடுவர். 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்காத நிலையிலும் உயர் நீதிமன்றம் தற்போதைய ஜனாதிபதிப் பதவிக்காலம் ஐந்துவருடங்கள் மாத்திரமே எனத் தெளிவுபடுத்தியுள்ள நிலையிலும் ஜனாதிபதி சிறிசேன வெறுமனே நொண்டி வாத்து போன்றதொரு ஜனாதிபதியாகவே இருக்க நேரிடும் என்பதால் அவரது கட்சியினரே அவரைப் பொருட்படுத்தாமல் நடந்துகொள்ளும் சூழு;நிலை ஏற்படலாம்.; 

ஜனாதிபதிப் பதவியை 2015ம் ஆண்ட ஜனவரி 9ம் திகதி ஏற்றபின்னர் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையின் போது தாம் மீண்டுமாக ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்ததன் மூலம் பல்வேறுமட்டங்களிலிருந்தும் பெருந்திரளானவர்களை தம்பால் திரும்பிப்பார்க்கவைத்த ஜனாதிபதி சிறிசேன கடந்த சிலவாரகாலமாக செயற்படும் விதமும் தெரிவிக்கும் கருத்துக்களும் அவர்மீது கணிசமானவர்கள் மத்தியில் வெறுப்பைத் தோற்றுவிக்கவைப்பதாகவும் அனேகமானவர்கள் மத்தியில் அவரது நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புவதாகவும் அமைந்துள்ளன. 

மீண்டுமாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை பதவியில் தொடர எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் பதவியேற்ற ஆரம்பகாலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசிய ஜனாதிபதி இன்றோ தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் அரசியலில் இருப்பேன். ஊழல் அரசியல்வாதிகளை நீதிக்கு முன்கொண்டுவந்த நாளிலேயே தமது பதவிக்காலம் முடிவடைகின்றது எனக் தெரிவிக்கும் கருத்துக்கள் அவர் தற்போதைய ஐந்துவருடங்களுக்கு மேலாகவும் அதிரகாரத்தில் இருக்க ஆசைப்படுவதை துலாம்பரமாக்குகின்றது.
 'அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை' ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவான 96 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தனித்து ஆட்சியமைக்கத்தயார்' என நேற்று இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறிய கூற்றானது உள்ளூராட்சித் தேர்தலை இலக்காக் கொண்ட பிரசாரம் அல்ல என்பதும் மாறாக உண்மையாகவே ஐக்கியதேசியக் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகித்தனிவழி செல்வதற்கு தயாராகிவிட்டதனையே உணர்த்திநிற்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பினரை நேரடியாகத் தாக்கி அதிலும் மஹிந்தவின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எதனையும் இதுவரையில் எடுக்காமல் அனைத்து தவறுகளுக்கும் ஐதேகவே பொறுப்பேற்க வேண்டும் இதே பாங்கில் கருத்துக்களை வெளியிடுவதும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் அக்கட்சியுடனான விரிசலை அதிகரிக்கவே வழிகோலும். ஐக்கிய தேசிய கூட்டணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட கைச்சாத்திடப்பட்ட நல்லாட்சி அரசாங்க கூட்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம்திகதியுடன் நிறைவிற்கு வந்துவிட்ட நிலையில் இரு கட்சிகளையும் தொடர்ந்தும் அரசாங்கத்தில் ஒன்றிணைத்து வைத்திருப்பதற்கான எழுத்துமூல உறுதிப்பாடு இல்லை என்றாகிவிட்ட நிலையில் தேர்தலின் பின்னர் அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன உட்பட சில முக்கிஸ்தர்கள் கூறிய கருத்துக்கள் நிஜமாகவதற்கு சாத்தியமில்லை என்பதையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலமாக வெளிப்படுத்திவரும் ஆக்ரோஷக் கருத்துக்கள் வெளிப்படுத்திநிற்கின்றன. 

அரசியல் என்பது ஒரு சாக்கடை அதற்குள் ஒரு முறை மூழ்கிவிட்டால் அவர்களை நம்பிவிடக்கூடாது என்ற கசப்பான உண்மையை இலங்கை வாக்காளர்கள் மீண்டுமாக உணர்ந்துகொள்ளும் துர்ப்பாக்கிய நிலையின் விளிம்பில்நாம் நின்றுகொண்டிருக்கின்றோம். படுகொலைகளைப் புரிந்தவர்கள் சர்வாதிகள் போன்று ஆட்சி செய்தனர் நாட்டை மோசமாகக் கொள்ளையடித்தனர் எதிர்காலச் சந்ததியினரை அழிவுக்குள் தள்ளுகின்றனர் என அடுக்கடுக்காக ராஜபக்ஸ தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இன்று  பதவியைத் தக்கவைப்பதற்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக கூறும் கருத்துக்களைப் பார்க்கின்றபோது மனச்சாட்சியுள்ள குடிமக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவர் என்பது திண்ணமாகும். 

பதவியை பொருட்டாகக் கருதவில்லை அதிகாரத்தை தூக்கியெறியத் தயார் என்று கருத்துக்களும் எளிமையான செயற்பாடுகளுமே ஜனாதிபதி சிறிசேனவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவைக் கொண்டுவரக்காரணமாக இருந்தது. ஆனால் அதிகாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கும் ஆட்சியில் நிலைத்திருப்பதற்கும் அவர் தீர்மானித்தால் மக்களிடமிருந்து அந்நியப்படும் ஏதுநிலை ஏற்படும். ஆக மொத்தம் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இவரும் வழமையான அரசியல்வாதிதான் என்பதை உறுதிசெய்வதாகவே ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றனவென்றால் மிகையல்ல. 

ஆதவன் இணையத்தளத்தில் 2018 ஜனவரி 28ம்திகதி பிரசுரமானது