Thursday, April 29, 2010

நான்கு வருடத்திற்குள் மூன்றாவது உலகக்கிண்ணம்



இருமாதங்கள் நீண்ட ஐபிஎல் போட்டிகள் தந்த களைப்போ அதனிலும் மகத்தான டுவன்டி டுவன்டி உலகக்கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் தொடர்பான ஆர்வத்தை இதுவரைக்கும் எம்மவரிடையே மழுங்கடித்திருக்கின்றது

மேற்கிந்தியத்தீவுகளில் நாளையதினம் ஆரம்பமாகும் மூன்றாவது டுவன்டி டுவன்டி உலகக் கிண்ண போட்டிகள் இந்தியாவில் இடம்பெற்ற கழகங்களுக்கிடையிலான போட்டிகளிலும் பார்க்க விறுவிறுப்பை தரும் என்பதில் ஐயமில்லை

நாடுகளுக்கிடையிலான போட்டிகள் என்கின்றபோது ஏற்படும் விறுவிறுப்பும் பரபரப்பும் கழக மட்டப்போட்டிகளை பார்க்கிலும் பன்மடங்கு அதிகம்

கழக மட்டப்பபோட்டிகளில் சர்வதேச தரத்திலான சில வீரர்களே அக்கழகங்களில் அங்கத்துவம் வகிப்பர் மாறாக நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் என்று வரும் போது பங்கேற்கும் அனைவருமே சர்வதேசத்தரத்தில் இருப்பர்

அணிக்கு இருபது ஓவர்களைக் கொண்ட போட்டிகள் 2003ம் ஆண்டிலேயே முதன்முறையாக இங்கிலாந்து கிரிக்கட் சபையால் உள்ளுர் கழக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அதற்குள்ளாகவே மூன்றாவது உலகக்கிண்ணப் போட்டிகளைக் காணப்போவது அதற்குள்ள செல்வாக்கைப் பறைசாற்றி நிற்கின்றது

2007ம் ஆண்டில் தென் ஆபிரிக்காவில் முதன் முறையாக இடம்பெற்ற உலகக்கிண்ணப்போட்டிகளில் பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகிய பின்னர் டுவன்டி டுவன்டி போட்டிகளின் பிரபல்யம் வெகுவாக அதிகரித்தது .

இதனைத்தொடர்ந்து கடந்தாண்டு ஜுன் மாதத்தில் இங்கிலாந்தில் இடம்பெற்ற இரண்டாவது டுவன்டி டுவன்டி உலகக்கிண்ண போட்டிகளில் இலங்கை அணியைத்தோற்கடித்து பாகிஸ்தான் அணி வெற்றிவாகை சூடியது.

இரண்டாவது உலகக்கிண்ணப்போட்டிகள் நிறைவடைந்து ஒருவருடமே செல்லும் முன்னர் மூன்றாவது உலகக்கிண்ணப்போட்டிகளை நடத்துவது பணம்சம்பாதித்துவிட வேண்டும் என்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் பேராசையைக் காண்பிப்பதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன

ஆனால் ஏற்கனவே நாடுகளுக்கிடையிலான டெஸ்ற் போட்டிகள் அணிக்கு 50 ஓவர்களைக் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டிகள் ஒருநாள்  உலகக்கிண்ணப்போட்டிகள் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் என்பவற்றால் நிரம்பி வழியும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் அட்டவணையின் ஒழுங்குபடுத்தி போட்டிகள் ஒன்றையொன்று மேலிடாதவாறு நேர்த்தியாக்குவதற்கே இவ்வளவு விரைவாக மூன்றாவது உலகக்கிண்ண டுவன்டி டுவன்டி போட்டிகளை நடத்துவதாக கூறப்படுகின்றது

எது எப்படி இருப்பினும் டுவன்டி டுவன்டி போட்டிகள் ரசிகர்களுக்கு சலிப்பைக் கொடுக்கப்போவதில்லை என்ற உத்தரவாதம் இருக்கும் காரணத்தினால் மூன்றுவருடகாலப்பகுதிக்குள் நடக்கும் மூன்றாவது உலகக்கிண்ணம் நாளைமுதல் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை

இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் டெஸ்ற் கிரிக்கட் விளையாடும் அவுஸ்திரேலியா இங்கிலாந்து தென் ஆபிரிக்கா நியூஸிலாந்து மேற்கிந்தியத்தீவுகள் இலங்கை இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஸிம்பாப்வே ஆகிய பத்துநாடுகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுமாக மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன

கடந்த ஜுன் மாதத்தில் இடம்பெற்ற உலகக்கிண்ணப் போட்டிகள் முதற்கொண்டு இதுவரையான காலப்பகுதியில் எந்த ஒரு அணியுமே பத்து டுவன்டி டுவன்டி சர்வதேச போட்டிகளில்தானும் விளையாடியிராத நிலையில் எந்த அணிக்கு வாய்ப்புக்கள் அதிகம் என்பதை ஊகித்துக் கூறுவது கடினமானது

எனினும் விளையாடிய ஒரு சில சர்வதேசப்போட்டிகளையும் கிரிக்கட் விளையாடும் நாடுகளின் உள்ளுர் கழக மட்டப்போட்டிகளில் வீரர்கள் காண்பித்த ஆற்றல் வெளிப்பாடுகளையும் நோக்குமிடத்து அவுஸ்திரேலியா  இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு வெற்றிவாய்ப்புக்கள் அதிகம் உண்டென்றே கூறவேண்டும்

போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத்தீவுகள் அணி டெஸ்ற் கிரிக்கட்டில் கண்டுவரும் தொடர்வீழ்ச்சிக்கும் 50 ஓவர்கள் போட்டிகளில் அடைந்துவரும் தோல்விகளுக்கும் விடைகொடுக்கவேண்டுமானால் அந்த அணியிலுள்ள அனேக வீரர்களின் ஆட்டப்பாணிக்கு பெரிதும் சாதகமான டுவன்டி டுவன்டி போட்டியினாலேயே சாத்தியம்.

பலம்வாய்ந்த கிரிக்கட் கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கும் தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கும் உலகக்கிண்ணப்போட்டிகள் என்று வந்துவிட்டால் அதிக திறமைகளை வெளிப்படுத்தும் பாகிஸ்தான் அணிக்கும் அனுபவம் வாய்ந்த திறமையான வீரர்களைக் கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் வெற்றிவாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன

இறுதியாக ஒன்றை மாத்திரம் சொல்லியாகவேண்டும் டெஸ்ற் கிரிக்கட் போட்டிகளைப் போன்றோ அணிக்கு 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகளைப் போன்றோ வெற்றி பெறுவதற்கு நீண்டகால அனுபவமும் அனேகமான வீரர்களின் தொடர்ச்சியான திறமை வெளிப்பாடும் டுவன்டி டுவன்டி போட்டிகளுக்கு அவசியமில்லை

 ஒரு சில ஓவர்களில் ஒரிரு வீரர்கள் காண்பிக்கும் அபரிமிதமான ஆற்றல் வெளிப்பாடுகளே டுவன்டி டுவன்டி போட்டிகளில் வெற்றிகளைக் குவிப்பதற்கு போதுமாக இருப்பதனால் அதிகம் அறியப்படாத ஆப்கானிஸ்தான் அயர்லாந்து அணிகள் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல் வெளிப்பாடுகளைக் காண்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

Wednesday, April 28, 2010

சென்னையின் வெற்றி வெறுமனே கிரிக்கட் வெற்றி மாத்திரமல்ல !

பலமானவர்களோடு ஐக்கியமாகிக் கொள்வது வாழ்விற்கு வளம் சேர்க்கும்  என்ற கொள்கை அரசியலுக்கே உரியத்தானதென பலரும் எண்ணுவதுண்டு .

ஆனால் விளையாட்டிலும் இது பொருந்தும் என்பதை அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கட் போட்டிகளைப்பார்த்த போது நான் உணர்ந்துகொண்டேன்

வட இந்தியர்களின் ஆதிக்கம் நிறைந்த இந்திய தொலைக்காட்சிகளாக இருக்கட்டும் வர்ணனையாளர்களாக இருக்கட்டும் விமர்சகர்களாக இருக்கட்டும் பலம்மிக்க அணிக்கே வெற்றிவாய்ப்பென ஆர்ப்பரித்தனர்

கிரிக்கட் போட்டி என்பது இறுதிப்பந்துவரையில் ஆருடம் கூறமுடியாது என நன்கறிந்த விளையாட்டு விமர்சகர்களோடு ரசிகர்கள் கூட இந்தக் கொள்கையில் ஊறிக்கிடந்தனர்

மும்மை இந்தியன்ஸ் அணியே சம்பியனாகும் என மீண்டும் மீண்டுமாக கூறியர்கள் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வாய்ப்புக்களை தட்டிக்கழித்திருந்தனர்

எதிர்பார்த்ததைப்போன்று மும்மை இந்தியன்ஸ் அணியும் எதிர்பாராமல் சென்னை அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவானபோது கூட விரல் விட்டெண்ணக்கூடியவர்களே சென்னைக்கு வெற்றிவாய்ப்புண்டென கூறத்தலைப்பட்டனர்

விரும்பிய அணியை ரசிப்பதும் நேசிப்பதும் தனிப்பட்ட உள்ளுணர்வைப் பொறுத்தது ஆனால் தமது அணிதான் வெற்றிபெறும் என்பது யாதார்த்தத்தை புரிந்துகொள்ளாத விளையாட்டின் போக்கை விளங்கிக்கொள்ளாதவர்களின் நிலைப்பாடு
இராமன் ஆரியன் என்றும் இராவணன் திராவிடன் என்றும் இராமாயணப் பொய்க்கதை புரிந்து ஆரியர்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய வடகத்தேய இந்தியர்கள் கிரிக்கட் விளையாட்டிலும் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கும் நிலையில் இதை அறியாத மாந்தர்களாய் நம்மவரும் எவ்வித ஆய்வும் இல்லாது ஊடகங்களின் கருத்திற்கே எடுபட்டுப்போவது வருந்தத்தக்கது

திராவிடர்கள் என்றால் குறிப்பாக தமிழர்கள் என்றாலே கறுப்பர்கள் கீழ்த்தரமானவர்கள் என ஒதுக்கும் ஆரியக்கூத்தாடிகள் கிரிக்கட் மூலமாக தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்சிகளை அனுமதித்துவிடக்கூடாது

ஆரியத் திராவிடப் பாகுபாடு இன்னமும் தலைவிரித்தாடும் இந்தியத்தேசத்தில் திராவிட  பூமியைச் சேர்ந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் ஆகியமை வெறுமனே கிரிக்கட் வெற்றி மாத்திரமல்ல அது ஆரிய ஆதிக்க வெறிக்கெதிரான வெற்றியாக கொள்ளப்படவேண்டும்

Tuesday, April 27, 2010

மனித வாழ்வில் இயற்கையின் இறைமையை நிலைநிறுத்திய நிகழ்வு

நாகரீகம் நோக்கிய தேடலில் மனிதத்தை தொலைத்துக்கொண்டு தினமும் பதற்றத்தோடு பயணித்துக்கொண்டிருக்கும் மனித வாழ்வில் இயற்கையின் இறைமையை நிலைநிறுத்திய நிகழ்வு கடந்த வாரத்தில் உலகில் நிகழ்ந்தேறியிருந்தது

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினால் எதைவேண்டுமானாலும் சாதித்துவிடமுடியும் என்ற மேற்கத்தேய சிந்தனையை நிந்தனை செய்யும் வகையில் இயற்கையின் மேலாதிக்கம் உணர்த்தப்பட்டிருந்தது

ஐஸ்லாந்து என்ற பனிபடர்ந்த நாட்டில் உறங்கிக்கிடந்த எரிமலை குமுறிச் சீற்றமெடுத்ததில் வெளியான சாம்பல்புகையால் உலகமே ஒருவாரகாலத்திற்கு ஸ்தம்பித்துப்போயிருந்ததென்றாலும் மிகையல்லவே

ஆதியிலே இயற்கையோடு ஒன்றித்த வாழ்க்கையை வாழ்ந்த மனிதன் கைத்தொழிற்புரட்சிக்குப்பின்னால் யந்திரக்களோடு ஒன்றி;த்த வாழ்க்கைக்கு மாற்றிக்கொண்டானோ அன்று முதலாக இயற்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அருகிச்செல்லத்தொடங்கிவிட்டது

இயற்றை அன்னை வழங்கும் சமிஞ்கைகளை புறந்தள்ளி இயற்கையின் சமநிலையை குலைப்பதிலும் செயற்கை வாழ்வில் பெருமை கொள்வதிலும் குறியாய் இருக்கும் பெரும்பாலான மனிதர்களின் வாழ்விற்கு உண்மை உரைத்திடும் பதிவுகளாய் இயற்கை அவ்வப்போது அழுத்தமாக ஆணித்தரமாக உண்மையை பறைசாற்றிடத்தவறுவதில்லை

பணம் வாழ்விற்கு இன்றியமையாதது ஆனால் பணமே வாழ்வென்று  வாழ்ந்திடும் நம்மவர்களுக்கும் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும்

ஐஸ்லாந்து எரிமலை கடந்த வாரத்தில் உலக பொருளாதாரத்திற்கு ஐந்துநாட்களில் ஏற்படுத்திய நஷ்டம் ஒன்றல்ல இரண்டல்ல பதினேழாயிரம்  கோடிகள் ஆனால் அதைவிடவும் எத்தனையெத்தனையோ நிகழ்ச்சி நிரல்களையெல்லாம் அந்த எரிமலை முடக்கிப்போட்டது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே வெளிச்சம்

மனித வாழ்வு நீர்க்குமிழி போன்று குறுகியது என நான் வாசித்ததுண்டு அந்த மனித வாழ்வை வர்ணமயப்படுத்துவது நமது கைகளிலேயே உள்ளது

உழைப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு என்று மகிழ்ச்சியை தாமதப்படுத்திக்கொண்டே சென்றிடாது தினமும் வாழ்வியல் பயணத்தில் இயற்கையோடு ஒத்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் இயற்கையை ரசிப்பதன் மூலம் இயற்கை தொடர்பாக ஆராய்ந்து அறிவதன் மூலம் அதன் பால் வியந்து நிற்பதன் மூலம் நாம் எம் வாழ்வை அர்த்தப்படுத்திக் கொண்டுவிடமுடியும்

எரிமலை என்பது அழிவின் வடிவமாக பெரும் பாலும் நோக்கப்பட்டபோதிலும் அந்த எரிமலைக்குள் புதையுண்டுள்ள அழகினை ரசித்திடும் பக்குவமும் எம்மிடையே இருந்திடவேண்டும்