Tuesday, October 6, 2020

மினுவங்கொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியது

 


மினுவங்கொட தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 13 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் இன்றுவரை கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளது.

திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து அந்தப் பெண்ணின் தொழிற்சாலையில் பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், அவர்கள் சந்தித்தவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேருக்கு PCR பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் Covid – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் சிகிச்சை முறைகளை பலப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இன்று (05) விசேட கலந்துரையாடலொன்று சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்திய திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், ஆய்வுகூடங்களில் தற்போது முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனையை 24 மணித்தியாலங்களும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்திற்கு வௌியே வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு எடுக்கக்கூடிய துரித நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

* மாவட்டங்களிலுள்ள Covid சிகிச்சை நிலையங்களில் சுகாதார சேவைகளை விரிவாக்குதல்



* சுகாதார ஊழியர்களை ஈடுபடுத்துதல்


*அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்


* வைத்தியசாலைகளில் வௌிநோயாளர் பிரிவுகளில் வழங்கப்படும் சிகிச்சைகளை வலுப்படுத்துதல்


* மாதிரி பரிசோதனைகளை விரிவாக்குதல்


* நோயாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு இடையிலான தொடர்புகளை ஆராய்தல்


* தனிமைப்படுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.​

மினுவங்கொட வைத்தியசாலை மற்றும் இரணவில Covid சிகிச்சை நிலையம்இ கம்பஹா மாவட்டத்தில் Covid-19 நோயாளர்களுக்கான சிகிச்சை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Covid –  19 நோயாளர்கள் என சந்தேகிக்கப்படுவோரை அனுமதித்து பரிசோதிப்பதற்கு கம்பஹா வைத்தியசாலையைப் பயன்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளின் ஊழியர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் இந்தக் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கம்பஹா மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் Covid – 19 சிகிச்சைகளை கண்காணித்தல் மற்றும் பலப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் விசேட அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் முன்னெடுக்கப்படும் PCRபரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பரிசோதனைகளை முன்னெடுக்கும் சுகாதார ஊழியர்களுக்கு ​தேவையான பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்களை பற்றாக்குறையின்றி பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் இதன்போது சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 

எவரேனும் ஒருவருக்கு காய்ச்சல், தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் 24 மணித்தியாலங்களும் இயங்கும் சுவசெரிய சுகாதார ஆலோசனை சேவையை 1999 என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு சுகாதார ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment