Saturday, October 24, 2020

ஜனாதிபதித் தேர்தல், கொரோனா கோலோச்சலுக்கு மத்தியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஏன் இலங்கை வருகிறார்?



அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ   இலங்கைக்கு   இம்மாதம் 27ம் 28ம் திகதிகளில் விஜயம் செய்வதை  அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளன. 

அமெரிக்காவில் ஜனாதிபதி நவம்பர் 3ம் திகதி நடைபெறவுள்ள நிலையில்  அதற்கு  சில நாட்களே இருக்கும் நிலையிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடும் நிலையிலும் எதற்காக பொம்பியோ இலங்கைக்கு  வருகின்றார் என்ற கேள்வி பல்வேறு தளங்களிலும் எழுப்பப்படுகின்றது. 





அமெரிக்க உயர்மட்டத்தூதுக்குழுவின் விஜயத்தின் முன்பாக  இலங்கையில் முன் ஆயத்தப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக அமெரிக்க துருப்பினரை ஏற்றிவந்துள்ள அமெரிக்க விமானப்படை விமானங்கள் 


வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின்பேரில்தான்  அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மைக் பொம்பியோவின் வருகையின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாட்டின் தலைவர்களுடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு  குறிப்பிட்டுள்ளது. 

சம்பிரயாதத்திற்காகவும் அரசியல் நாகரீகத்திற்காகவும் இப்படியாக அறிக்கைகள் விடுக்கப்படுவது  இராஜதந்திர சேவையை அறிந்தவர்களுக்கு விளங்கும்.  

சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சீன கம்யூனிசக் கட்சியின் மத்திய குழுவின் முக்கியஸ்தருமான யாங் யிசி தலைமையிலான தூதுக்குழு இம்மாத முற்பகுதியில் அவசர விஜயமொன்றை மேற்கொண்டு சென்று சில வாரங்களுக்குள்ளேளே அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் விஜயம் இடம்பெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இதன் போது பொம்பியோ மட்டும் வருகைதரவில்லை மாறாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பரும் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்கக்கது. 

இந்து பசுபிக் பிராந்தியத்தில் புவிசார் வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு முக்கிய கேந்திரஸ்தானத்தில் இருக்கும் இலங்கையில் தமது ஸ்தானத்தை வலுப்படுத்த முனையும் முக்கிய வல்லரசுகள் வெளிப்படையாகவே இலங்கையில் முட்டிமோதும் நிலையில் இந்த விஜயங்கள் இடம்பெறுகின்றன. 

இதன் போது மிலேனியம் சலேஞ்ச் ஒப்பந்தம் உட்பட முக்கிய ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்கு இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. 

அமெரிக்க தூதுவர் இம்மாதத்தில் இலங்கையின் ஆங்கிலப்பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் சீனாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இலங்கையுடனான நகர்வுகளில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் உட்பட கடும் வார்த்தைப் பிரயோகங்களை வெளியிட்டிருந்தார். 

அமெரிக்காவின் உயர் இராஜதந்திரிகடங்கிய தூதுக்குழு வருகை தருவதற்கு முன்பாக  இலங்கை ஆட்சியாளர்களுக்கு தமது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தும் வகையிலான முன்னறிப்பாகவும் அவரது நேர்காணலை நோக்க முடியும்.  மைக் பொம்பியோ, மார்க் எஸ்பர் ஆகிய முக்கிய இராஜதந்திரிகள் இலங்கையின் ஆட்சியாளர்களைச் சந்திக்கும் போது வெறுமனே நினைவுக் கேடயங்களைப் பகிர்ந்துசென்றுவிடப்போவதில்லை. மிகவும் காத்திரமான கசப்பான செய்திகளையும் தாங்கி வருவார்கள் என்பதை  முன்நகரும் அரசியல் போக்கை வைத்து உணர்ந்துகொள்ள முடிகின்றது. 


No comments:

Post a Comment