முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சுயசரிதை திரைப்படமான '800'ல் விஜய் சேதுபதி நடிப்பதை உறுதிப்படுத்தி ஒக்டோபர் 13ம் திகதி வெளியான மோஷன் போஸ்டருடன் ஆரம்பித்த சர்ச்சை இன்றைய தினத்தோடு பெரிதும் அடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய தினம் வெளியிட்ட அறிக்கையில் தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் தேவையற்ற தடங்கல் வரக் கூடாது என்பதனால் திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு முரளிதரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.முரளியின் இன்றைய அறிக்கை வெளிவருவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னரே தாம் '800' நடிப்பது நிச்சயம் என விஜய் சேதுபதியை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
'800' படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்து விட்டு எழுந்த பெரும் எதிர்ப்பையடுத்து செய்வதறியாத திணறியிருந்த விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரன் இன்று விடுத்த அறிக்கை கௌரவமாக படத்தில் இருந்து விலகுவதற்கான வாய்ப்பை வழங்கியது என்றால் மிகையல்ல.
முத்தையா முரளிதரனின் திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளாக கடந்த ஜுலை மாதத்திலேயே செய்திகள் வெளிவந்தபோதும் அந்தவேளை எதிர்ப்புகள் வெளியிடப்படவில்லை . ஆனால் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது ஒக்டோபர் 13ம் திகதி உறுதியானபோதே எதிர்ப்புக்கள் வலுப்பெறத்தொடங்கின.
பொதுமக்கள், திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிப்படுத்தப்பட்ட கணிசமான எதிர்ப்பை அடுத்து இந்தத் திரைப்படத்தில் இருந்து உடனடியாக விலக வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருப்பினும் முத்தையா முரளிதரன் என்ற பெரும் விளையாட்டுவீரனை களங்கப்படுத்திவிடக்கூடாது என்ற நாகரிகம் காரணமாக விஜய் சேதுபதி '800' படத்தில் இருந்து வெளியேறும் முடிவை தாமாக அறிவிக்காது தாமதப்படுத்தியிருக்கக்கூடும்
மோஷன் போஸ்டரைப் பார்த்தபோது முரளியின் முகபாவனை மற்றும் உடல்மொழியுடன் கச்சிதமாக பொருந்தியிருந்த விஜய் சேதுபதியை தமது திரைப்படத்தில் தக்கவைப்பதற்கு தயாரிப்பு நிறுவனம் கடும் பிரயத்தனத்தை எடுத்தமை புலனாகும். தயாரிப்பு நிறுவனம் திரைப்படம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி ஓர் அறிக்கையை கடந்த 14ம்திகதி வெளியிட்டிருந்தது.இது ஒரு விளையாட்டு சுயசரிதைப்படம் என்றும் எந்த சமூகத்திற்கும் சார்பாக அரசியல்கருத்துக்களை முன்வைக்கும் படமல்ல என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.
இதன் பின்னர் முத்தையா முரளிதரன் நீண்ட தன்னிலை விளக்க அறிக்கையை கடந்த 16ம்திகதி வெளியிட்டிருந்தார்.
48வயதான முத்தையா முரளிதரன் 1992ம் ஆண்டு முதல் 2011ம்ஆண்டு வரையான தனது சர்வதேச கிரிக்கட் வாழ்வில் சாதித்த சாதனைகளை குறிப்பாக டெஸ்ற் கிரிக்கட்டில் 800 விக்கட்டுக்களைக் கைப்பற்றிய சாதனைகளை எளிதாக யாராலும் முறியடித்துவிடமுடியாது. அந்த சாதனைகளுக்காக அவர் கொண்டாடப்படவேண்டியவர். ஆனால் கிரிக்கட் களத்திற்கு வெளியே அவர் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய நிலைக்கு அவரை தள்ளிவிட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் தொடர்பாக நாம் அவதானமாக இருக்கவேண்டும். அதுவும் நாம் பிரபலம் பெற்றவராக இருப்பின் எமது வார்த்தைகள் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment