Thursday, October 15, 2020

தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் இலங்கையில் இறுக்கமடையும் சட்டங்கள்

 



இலங்கையில் கடந்த இரு வாரங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் புதிய தனிமைப்படுத்தல் சட்டங்களை உள்ளடக்கிய வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி கைச்சாத்திட்டுள்ளார்.

மக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பாதுகாப்பு முறைமைகளை இந்த வர்த்தமானி உள்ளடக்கியுள்ளது.

சட்டங்களை மீறுவோருக்கு எதிராக 10,000 ரூபாவை விட அதிகரிக்காத அபராதம் விதிப்பது, 6 மாத சிறைத்தண்டனை என்பவற்றில் ஒரு தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் நீதிமன்றத்தினால் வழங்க முடியும்.

வர்த்தக நிலையங்களிலும் சேவை நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகளும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சேவை நிலையங்களுக்குள் அல்லது வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் போது அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

இருவருக்கு இடையில் ஒரு மீட்டருக்கு குறையாத சமூக இடைவௌி பேணப்படவேண்டும்.

சேவை நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் முன்னர் ஊழியர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட வேண்டும்.

சேவை நிலையங்களுக்குள் பிரவேசிப்போரின் தகவல்கள் அடங்கிய பதிவேடு முறையாக பேணப்படவேண்டும் போன்ற விடயங்கள் இந்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் 49 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டதாக Covid-19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஏனைய 36 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சந்தித்தவர்களாவர்.

இதன் பிரகாரம் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 1770 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் 5,219 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 1,826 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 8 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை வேளையில் 21 மாவட்டங்களில் இருந்து கொரோனா நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை.

தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.




No comments:

Post a Comment