மினுவாங்கொடை திவுலபிடிய ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாலை வரை 708பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் கிடைத்த தரவுகளுக்கு அமைய மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் (6 ஆம் திகதி) பிற்பகல் 9.40 மணியளவில் திவுலுப்பிட்டிய கொவிட் 19 (Cluster) கொத்தாக பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 832 ஆகும்.
இதேவேளை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் தற்போது வசிக்கும் பகுதிகளிலிருந்து வௌியேற வேண்டாம் என இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், வீடுகளிலிருந்து வௌியேறுவதை தவிர்க்குமாறும் குறித்த ஊழியர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த நிறுவனத்திலிருந்து கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரைஇ தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு பாரிய அளவில் நோய் குணங்குறிகள் காணப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொற்றுக்குள்ளான அநேகமானவர்களிடம் நோய் அறிகுறி தென்படாமை தாம் எதிர்கொண்ட முக்கிய சவால் என Brandix நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Covid-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது ஊழியர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் முக்கியத்துவம் அளிப்பதுடன், தற்போதைய நிலையில் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவம் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என Brandix நிறுவனம் தெரிவித்துள்ளது.
----
No comments:
Post a Comment